யானையை நடனமாட அழைக்கும் டிராகன்

கல்வான், ஹாட் ஸ்பிரிங்கிஸ் மற்றும் பாங்காங் டிஎஸ்ஓவில் டிராகனும், யானையும் ஒன்றையொன்று உற்றுப்பார்த்துக்கொண்டு நிற்கின்றன.

By: Updated: June 18, 2020, 07:18:20 AM

ப.சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர்

கடந்த ஆறு ஆண்டுகளில் பலமுறை சந்தித்துக்கொண்டபோதிலும், திரு.ஷியுடன் பேசியதில், குறிப்பிட்டு கூறுமளவிற்கான வெற்றிகரமான எதையும் மோடி சாதித்துவிடவில்லை.

கடந்த வாரம் நாம் இந்தியாவின் புவியியல் குறித்து அதிகம் கற்றோம். கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங்க் ஏரி, கோக்ரா போன்ற தெரியாத பெயர்கள் அத்தனையும் தொலைக்காட்சி வழியாக நம் வீட்டின் வரவேற்பறைக்கே வந்தன.

இது ஒரு ஊடுருவல்

இந்திய – சீன உறவின் தற்போதைய நிலைக்கு, பாங்காங்க் டிஎஸ்ஓவில் மே 5ம் தேதி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் ஏற்பட்ட மோதல் காரணமாக இருக்கலாம். சீனப்படைகள் எல்லையில் இருந்ததை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும், கீழ்காணும் உண்மைகள் இருக்கவே செய்கின்றன.

Ø பெரியளவிலான சீனப்படை, கல்வான், ஹாட் ஸ்பிரிங்க்ஸ், பாங்காங்க் டிஎஸ்ஓ மற்றும் லடாக்கில் கோக்ரா மற்றும் சிக்கிமில் நகு லா போன்ற இந்திய பகுதிகளில் அதிகளவில் குவிக்கப்பட்டது.

Ø லடாக்கின் கல்வான் மற்றும் சிக்கிமின் நகு லாவும், கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய அல்லது பிரச்னைக்குரிய பகுதிகளாக இருந்ததில்லை. சீனா பகுதிகள் தொடர்பான சர்ச்சையை பெரிதாக்கிவிட்டது.

Ø சீனா அதன் பகுதிகளில் பெரியளவிலான மிகுதியான பரபரப்பை காட்டி வருகிறது. அதற்கு ஈடாக இந்தியாவும் அதன் பகுதிகளில் அதையே செய்து வருகிறது.

Ø முதன் முறையாக ராணுவ தளபதிகள் மூலம் இருதரப்பு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது. இதுவரை இரண்டு வெளியுறவு தூதர்கள் அல்லது சிறப்பு பிரதிநிதிகள் மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

முழுமையான போர் அல்ல

சீனா அல்லது இந்தியா, இந்த நேரத்தில் எல்லை பிரச்னையை மோசமடையச் செய்யவே விரும்புகிறது என்பதை நம்புவது கடினமாகத்தான் உள்ளது. இந்த சர்ச்சைகள் மெக்மோகன் கோடு போடப்பட்ட காலத்திற்கு பின்னோக்கி அழைத்துச்செல்கின்றன. அது 1962ல் முழுமையான போராக வெடிப்பதற்கு காரணமாக இருந்தது. அவ்வப்போது இரண்டு நாட்டுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வந்தது உண்மைதான், ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளும் பல்வேறு ராணுவம் அல்லாத சவாலை எதிர்கொண்டதில்லை. இரண்டு நாடுகளும் தற்போது கோவிட் – 19 பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றன. 2020/2021ல் இரண்டு நாடுகளும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அச்சத்தில் உள்ளன. இரு நாடுகளிடையே அமைதி, நிலையான மற்றும் சமமான உறவை பேணுவோம் என்று உறுதியளித்துள்ளதால், அவர்களுக்கு உலகில் கிடைத்துள்ள நன்மைகளை இழப்பதற்கு இரண்டு நாடுகளும் விரும்பவில்லை.

இதற்கிடையில், சீனா, அதன் ராணுவம் 1962ம் ஆண்டு இருந்ததைவிட 2020ல் பலம் வாய்ந்ததாக உள்ளது என நம்புகிறது. 1962 ஐபோலன்றி, 2020ல் இரண்டு நாடுகளிடையே போர் ஏற்பட்டால், சரியான வெற்றியாளரை அது தெளிவாக காட்டவில்லை. சீனாவின் தற்போதை நடவடிக்கைகளை சீன நிபுணர்கள் ஊக்குவித்தாலும், இந்தியாவுடனான முழுமையான போரை அது துவக்க முடியாது.

ஜூன் 6ம் தேதி பேச்சுவார்த்தைகள் நடந்தன. முடிவில் இரு தரப்பினரும் தனித்தனியாக அறிக்கைவிடுத்தனர். அதில் வேறுபாடுகள், தகராறுகளாகிவிடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது முக்கிய பொதுவான அம்சமாக இருந்தது. எனவே வேறுபாடுகள் உள்ளன. அவை மே 5ம் தேதிக்கு முன்னதாகவும் இருந்துள்ளன. அண்மை வாரங்களில் அல்லது மாதங்களில் என்ன நடந்தது என்றால், சீன படைகளின் ஊடுருவல் இந்திய எல்லைக்குள் அதிகரித்து, அதன் எல்லையை விரிவாக்கி, கால்வான் மற்றும் நகு லா போன்ற பகுதிகளை உள்ளடக்கி, கடந்த காலங்களிலிருந்து எந்த மாற்றமும் இல்லை என்பதுபோல் சித்தரிக்கிறதா?

சாதாரண மக்களுக்கு கூட சில பிரச்னைகள் தெளிவாக தெரிகிறது. 2018ல் வுகானில் மற்றும் 2019ல் மகாபலிபுரத்தில் சந்தித்தபோது, பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஷியும் நல்ல உறவை வளர்க்கவில்லை. திரு மோடி ஆரத்தழுவிக்கொள்ளாத ஒரே தலைவர் திரு.ஷி ஆவார். கடந்த ஆறு ஆண்டுகளில் பலமுறை சந்தித்துக்கொண்டபோதிலும், திரு.ஷியுடன் பேசியதில், குறிப்பிட்டு கூறுமளவிற்கான வெற்றிகரமான எதையும் மோடி சாதித்துவிடவில்லை. இந்தியா, வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஆதாயத்தை பார்த்தது. சீனா பரிவர்த்தனையோடு நின்றுவிட்டது. ஆனால், ஒன்றும் சம்பாதிக்கவில்லை. இந்தியா அதன் கொல்லைபுறத்தை பாதுகாக்க வேண்டும் என எண்ணியது. ஆனால், சீனா, இந்தியாவின் முற்றைத்தை கூட அதன் கொல்லைப்புறமாக கருதவில்லை. பொருளாதார கூட்டணியையும் கடந்து, அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக நேபாளத்துடன் நெருங்கியுள்ளது. இலங்கையுடன் பொருளாதார ஆதாயங்களை பெறுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் நிலையை இந்தியா இழந்துவிட்டது. இந்தியா மாலத்தீவுகளின் நம்பிக்கையை பெற்றுள்ளது. ஆனால் சீனாவுக்கு இன்னும் கொடுக்கவில்லை. தென் சீனக்கடலில், சீனாவின் பிரத்யேக உரிமை கோரலையும், சர்வதேச கடற்பரப்பில் சுதந்திரமாக வலம் வருவதை வலியுறுத்துவதையும் இந்தியா மறுக்கிறது. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட அதனிடம் சவால்விட்ட அனைவரையும் புறக்கணித்ததுபோல், இந்தியாவையும் புறக்கணித்தது.

டோக்லாம் அல்லது டெப்சாங்

தற்போதைய இந்த சர்ச்சைக்கு அமைதியான தீர்வு என்றால் அது என்னவாக இருக்க முடியும்? மே 5ம் தேதியைப் போல் முன்பிருந்தைதைபோல் மறுசீரமைப்பு செய்யவே இந்தியா விரும்புகிறது. அது மேலும் ஒரு டெப்சாங் (2013) நிகழ்வை போன்றதாகும். [நான் கவனமாக, டோக்லாமை(2017)விட டெப்சாங்கை தேர்ந்தெடுப்பேன், அதற்கான காரணங்கள் என்ன என்பது ராணுவ கட்டமைப்புகளுக்கு தெரியும்.] சீனாவின் அதிகாரப்பூர்வமான சூழல் நிலையான மற்றும் கட்டுப்படுத்தமுடிந்தளவில் உள்ளது என் பார்வையில் முந்தைய நிலைக்கு எதிராக உள்ளதைப்போல் தோன்றுகிறது. முந்தைய நிலையே தொடர்ந்தால் சீனா மகிழ்ச்சியடையும், முந்தைய நிலை மறு சீரமைக்கப்பட்டால் அது மகிழ்ச்சியடையாது. எனது வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். கல்வான், ஹாட் ஸ்பிரிங்கிஸ் மற்றும் பாங்காங் டிஎஸ்ஓவில் டிராகனும், யானையும் ஒன்றையொன்று உற்றுப்பார்த்துக்கொண்டு நிற்கின்றன.

பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர், படைகளை பரஸ்பரம் திரும்ப அழைத்துக்கொள்வதை இந்தியா சுட்டிக்காட்டியது. ஆனால், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளின் சர்ச்சை இன்னும் நிறுத்தப்படவில்லை.

திரு.ஷி மற்றும் திரு,மோடி இருவருக்கும் ஒரு பொதுவான குணம் உள்ளது. இருவரும் தோற்கடிக்க முடியாத தலைவர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் இருவருமே உள்நாட்டு விமர்சனங்களை புறக்கணிக்கின்றனர். ஆனால், விமர்சனங்கள் இரண்டு நாட்டிலும் எழுகின்றனர். திரு.மோடி அடுத்த நான்காண்டுகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறார். பொலிட்பீரோ உள்ளவரை மட்டுமே திரு.ஷிக்கு பாதுகாப்பு மற்றும் பிஎல்ஏ(People’s liberation army) அவரை ஆதரிக்கும். இரு தலைவர்களுக்கும் வெவ்வேறு விதிமுறைகள் உள்ளன. எந்த பிரச்னை என்றாலும், நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை அரசு பெறும் பாரம்பரியம் இந்தியாவில் உள்ளது. அந்த பிரச்னை இந்தியா – சீன போராக இருப்பின் மோடி அரசுக்கு அதே முழு ஆதரவு கிடைக்கும். அதுபோன்ற சூழலில் விளைவுகள் எதுவாயிருப்பினும், பிரதமருக்கு ஒரு வேண்டுகோள், அவர் வெளிப்படையாகவும், தேசம் முழுமைக்கும் உண்மையை தெரிவிக்கவேண்டும்.

மர்மமான விளையாட்டு ஒன்றை சீனா ஆடத்துவங்கிவிட்டது. மர்மத்தில் ஒரு புதிர் மூடப்பட்டிருக்கும். அது புரியாததாயிருக்கும்.

இக்கட்டுரையை எழுதியவர் ப.சிதம்பரம், முன்னாள் மத்திய நிதியமைச்சர்.

தமிழில்: R. பிரியதர்சினி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:India china border issues lac ladakh p chidambaram

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X