ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகளுக்கு இடையே இனி கற்க பழக வேண்டும்

online classrooms : ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள், இரண்டும் உணர்வு மற்றும் சமூக கற்றல் இரண்டோடும் பொருந்தியிருக்க வேண்டும்

கடைசி குழந்தை வரை சென்றடையக் கூடிய கற்பித்தல் முறையை பள்ளிகள் பின்பற்றாவிட்டால், ஒரு தலைமுறையே கல்வியற்ற இளைஞர்களை அது உருவாக்கிவிடும் பிரச்னையை நாம் எதிர்கொள்ள நேரிடும்.

அமீதா முல்லா வாட்டால், கட்டுரையாளர்.

குழந்தைகள் படிக்கும் விதத்தில் இந்த கோவிட் – 19 தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. டிஜிட்டல் மயக்கல், உலகம் முழுவதும் பள்ளிகளில் ஆன்லைனில் கற்றல், கற்பித்தல் என்ற புதிய முறையை கொண்டுவந்துள்ளது. கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய அனைவருக்கும் புதிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளை உருவாகியிருக்கிறது என்பது உண்மைதான். நாம் தற்போது நிச்சயமற்ற நிலையில் தான் இருக்கிறோம். பழைய மாதிரிகளிலேயே இயங்கும் பள்ளிகள், தங்களின் பழக்கங்களை, அடுத்த தலைமுறை மாணவர்களின் வளர்ச்சிக்கு, சமமாக உதவும் வகையில், மாற்றிக்கொள்ள விழைவது, சலுகை பெற்றவர்களுக்கு உதவுமா அல்லது விளிம்பு நிலை ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கும், மாற்றுத்திறனாளர்களுக்கும் உதவும் வகையில் இருக்குமா?

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

ஒற்றைப்பாதையில் நடைபெற்று வந்த கற்பித்தல், தற்போது விரிவடைந்து, நாம் எவ்வாறு ஆன்லைன் வகுப்புகளுக்கும், நேரடி வகுப்புக்களுக்கு இடையில் செல்ல வேண்டும் என்பதை புரிந்துகொள்ளவேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது. திடீரென, வகுப்பறையில் பாடம் கற்பித்த ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களுக்கு, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கற்றுக்கொடுக்க படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில், ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுடன் தொடர்புகொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தாலும், மறுபுறம் அவற்றிற்கு சில எல்லைகள் உள்ளது. இதனால் சமமின்மை என்பது அலைவரிசையிலோ, சாதனத்திலோ மட்டுமல்ல, நிறைய பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு உதவுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

கடைசி குழந்தை வரை சென்றடையக் கூடிய கற்பித்தல் முறையை பள்ளிகள் பின்பற்றாவிட்டால், ஒரு தலைமுறை கல்வியற்ற இளைஞர்களை அது உருவாக்கிவிடும் பிரச்னையை நாம் எதிர்கொள்ள நேரிடும். இது சமூகத்தில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். கல்வியின் தரம் தொடர்ந்து சரிபார்க்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தொழில்நுட்பத்தை அதிகளவில் கல்வியை புகுத்துவதும், கல்வியில் இருந்து சில குழந்தைகள் வெளியேறுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

கல்விக்கு வால்டார்ப் கருத்தை எடுத்துக்கொண்டால், புதிய தொழில்நுட்பங்கள், பழைய உண்மைக்கு மாற்றாகும் அல்லது எவ்வித விளைவுகளுமின்றி அவற்றை மாற்றிவிடும் என்று நினைப்பதில்தான் ஆபத்து உள்ளது. இயற்கையுடனான அனுபவம், தினசரி நடவடிக்கைகள், சமூகத்துடனான உரையாடல் மற்றும் கற்பனைத்திறனை வளர்க்கும் கல்வி ஆகியவை திரைநேரத்தை அதிகரித்து, குழந்தையின் வளர்ச்சியை குறைக்கும். ஐம்புலன்கள் வழியாகவும் கற்றல் என்பது அவசியமான ஒன்றாகும். சூழலில் உள்ள உண்மைத்தன்மை மற்றும் மற்றவர்களுடனான கலந்துரையாடல் என குழந்தைகள் கல்வி கற்கும் சூழல் இருக்கும்போதுதான் அவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் மேலெழும்பும்.

மனிதர்கள் மற்றும் கலாச்சாரத்தின் வெளிப்பாடுகள் மற்றும் அனுபவங்கள் குழந்தைகளுக்கு பள்ளியில்தான் அதிகளவில் கிடைக்கின்றன. வகுப்பறைகள் வாழுமிடங்கள், அவற்றை பல வழிகளில் மாற்றியமைத்துக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவத்தை தரக்கூடிய பள்ளியை ஒரேவிதமான ஆன்லைன் மாதிரியை பின்பற்ற வலியுறுத்தினால், அது பன்முகத்தன்மை, அனைத்தும் ஏற்றுக்கொள்வது மற்றும் கருத்து வேறுபாடுகள் போன்றவற்றை சிதைக்கும். இவை கல்விக்கு மிகமிக அவசியம். கல்வி உரிமை இருந்தபோதிலும், நிறைய தனியார் பள்ளிகளில், சமத்துவமும், நியாமும் இல்லாமல் உள்ளது. நாடு முழுவதும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளான 12 சதவீத மாணவர்களே அப்பள்ளிகளில் கல்வி கற்கின்றனர். ஆனால், அவர்களுக்கு 25 சதவீதம் உரிமை உள்ளது. டெல்லியில் இதுபோன்ற மாணவர்கள் பலர் கல்வியை கைவிட்டுவிட்டனர். வசதிகள் இல்லாததாலோ அல்லது அவர்களின் பெற்றோர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பியதாலோ இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. அவர்களின் சமூக பொருளாதார நிலைகளால் அவர்கள் அப்படியே விடப்படுவார்கள்.
நாட்டில் ஏழ்மை நிலை ஏற்படும்போது, கல்விக்கு நிதி உதவியளிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவமளிப்பதில்லை. மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவச பிராட்பேண்ட் மற்றும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் அல்லது சூம் அல்லது கூகுள் பிளாட்பார்ம் போன்ற மாணவர்களும், ஆசிரயர்களும் பயன்படுத்தக்கூடிய செயலிகளை உருவாக்க வேண்டும். இது பொருளாதார சுமைகளை குறைக்கும். இந்த செயலிகள் வித்யாதான் மற்றும் இபாத்சாலா போன்ற கல்வி நிகழ்ச்சிகளுடன் இணைக்கப்படவேண்டும். அவை வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துரதிஷ்டவசமாக, பல மில்லியன் குழந்தைகள் இன்று கல்வி கற்க முடியாத ஆபத்தில் உள்ளனர். அவர்கள் வாரம், மாதம் அல்லது ஓராண்டு கல்வியை கூட இழக்க நேரிடும். இதன் பாதிப்பு பத்தாண்டுகள் கழித்துதான் தெரியவரும். அப்போது அதிகளவிலான இளைஞர்கள் பள்ளிகளிலும் இருக்க மாட்டார்கள். வேலைகளிலும் இருக்க மாட்டார்கள்.

சமத்துவமற்றதாக இருக்கும் என்பதால், துவக்கப்பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என சில மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. அனைவருக்கும் கிடைக்காத கல்வி, ஒருசிலருக்கு மட்டும் கிடைக்கக்கூடாது என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள். எனில் அனைவரும் படிக்காமல் இருக்க வேண்டுமா? வாய்ப்புள்ளவர்கள், ஏழை மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் என அனைவரும் சமமாக கற்கும் வகையிலான கல்வி முறைகளை அரசுகள் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கும், அவர்களின் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். பேரிடர் அனைவரையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிலும் ஏழை குடும்பத்தினருக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் உணரவேண்டும்.

கல்வியாளர்கள் தங்களுக்கு தெரிந்த அனைத்தையும், அனைத்து மாணவர்களுக்கும் நேர்மையாக கற்றுக்கொடுக்க வேண்டும். சிந்தனையை வளர்க்கும் பழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். கற்றலுக்கு யாரும் காப்புரிமை பெறமுடியாது. இந்த பரஸ்பரம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அடங்கிய பழக்கத்தை உருவாக்கும்.

இந்த தொற்று கல்வித்துறையில் ஆழப்பதிந்துள்ள சில பிரச்னைகளை காட்டியுள்ளது. அது எதிர்பாராத சவால்களை கல்வியாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது. அதில், பெரும்பாலும் விடப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். ஆன்லைன் கல்வி குறித்தே முழு கவனமும் உள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எவ்வாறு கல்வி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு இதுவரை வரவில்லை. இபாத்சாலா மற்றும் ஸ்வயம் உள்ளிட்ட கல்வி வழங்கும் தளங்களில் கூட சிறப்பு குழந்தைகளுக்கான எவ்வித தனிப்பட்ட வசதிகளும் கிடையாது. சில முற்போக்கான பள்ளிகள் உள்ளடங்கிய கற்றல் வசதியை சுதந்திரமாக செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எனினும், இதுபோன்ற குழந்தைகளுக்கு தொலைதூர, திறந்த வெளி அல்லது வீட்டிலிருந்தே கற்கக்கூடிய வாய்ப்பு இல்லை. தேசியளவில், தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்தி தெளிவான கருத்துக்களுடன், விரிவான பார்வையை வளர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதில் மனிநேயமும் சேர்ந்திருக்க வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள், இரண்டும் உணர்வு மற்றும் சமூக கற்றல் இரண்டோடும் பொருந்தியிருக்க வேண்டும். இது உளவியல் பாதுகாப்பு வலைக்கும், சிந்தனை திறனை வளர்ப்பதற்கும், சமூக மோதல்களை குறைப்பதற்கும், பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை ஊக்குவிப்பதற்கும் மற்றும் கேள்விகேட்கும் திறனை உருவாக்கவும் உதவும். படித்த குழந்தைகள் முதன்மை மதிப்பீடுகள், கற்றல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை முன்னெடுத்துச்செல்வார்கள். அவற்றை பாதுகாக்கவும் செய்வார்கள். இது முழுமையான, மற்றவர் மீதான பரிவுடனான மற்றும் மாற்றியமைக்கத்தக்க வகையிலான ஆன்லைன் கல்வியால் மட்டுமே நடக்கும். இது பாரபட்சமின்றி சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

இக்கட்டுரையை எழுதியவர் புதுடெல்லியில் உள்ள ஸ்பிரிங்டே பள்ளி முதல்வர் ஆவார்.

தமிழில்: R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close