Advertisment

பாலியல் கொடுமைகளை வேரறுக்க போதை ஒழிப்பு அவசியம்

நாட்டில் நிலவும் போதை பொருள்களின் புழக்கத்தை வெகுவாகக் கட்டுப்படுத்த வேண்டும். பாலியல் குற்றவாளிகள் தப்பிக்காமல் இருப்பதற்கு நாட்டு மக்களின் கூட்டுப்போராட்டமும் விழிப்புணர்வும் பேரியக்கமாக மாற வேண்டும்.

author-image
WebDesk
New Update
Sexual harassment case Kerala

கட்டுரை: முனைவர் கமல. செல்வராஜ், அருமனை.

Advertisment

நம் நாட்டின் வரலாற்றில், மன்னராட்சி காலத்திலிருந்து ஒரு நாட்டின் அழிவுக்கும், ஆட்சியின் முடிவுக்கும் முக்கிய காரணிகளாக விளங்குபவை மண்ணாசையும் பெண்ணாசையும் என்பதை புராணங்கள் தொடங்கி காப்பியங்கள் வரை தெளிவுப்படுத்துகின்றன.

அதன் நீட்சி தற்கால மக்களாட்சியிலும் தொடர்கதையாகயுள்ளது என்பதற்கு, சமீபக் காலமாக நம் நாட்டில் அரங்கேறி வரும் பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகள் சாட்சியாகின்றன.

பகுத்தறிவைப் பெறுவதற்குப் பள்ளிக்குச் செல்லும் பச்சிளம் குழந்தைகளிலிருந்து, வேலைக்குச் செல்ல ரயிலில் பயணிக்கும் பெண்கள் வரை பாலியல் பலாத்காரத்தால் பாழ்படுவதும் பலியாவதும் மலிவாகியுள்ளன.

தற்போது, இந்த எல்லைக் கோடுகளைத் தாண்டி, கொடும் நோயாலும் பெரும் விபத்தாலும் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்போரை, இறைவனுக்கு அடுத்தபடியாக, இரவு, பகல் பாராமல், சிகிச்சையளித்து பாதுகாக்கும் பணியில், தங்களை அர்பணித்துக் கொண்டிருக்கும் மருத்துவத்துறையைச் சார்ந்த மருத்துவர்கள் மீதும் தொடங்கியுள்ளது.

ஆரம்பக் காலங்களில் பாலியல் பலாத்காரங்களை வெளியேச் சொன்னால் அவமானம் எனக் கருதி, பாதிக்கப்படுபவர்கள் அதை வெளிக்கொணராமல் தங்களுக்குள்ளே மூடிமறைத்தனர். அது, இதுபோன்ற ஈனச் செயலைச் செய்த பாதகர்களுக்குச் சாதகமாக மாறியது. இப்பொழுதெல்லாம், மூடிமறைப்பதற்கு முன்புபோல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தது போன்ற சம்பவங்களல்ல, நாடெங்கும் நித்திய சம்பவங்களாக மாறியுள்ளன.

மணிப்பூரில் கடந்த ஓராண்டு காலமாக, இனக்கலவரம் என்ற பெயரில் பெண்கள் மீது அரங்கேறி வரும் பாலியல் அத்துமீறல்கள்; மேற்குவங்கத்தில் இரவு நேரத்தில் மருத்துவமனையில் பணியிலிருந்த பயிற்சி மருத்துவர் கூட்டுப் பலாத்காரக் கொலை; மஹாராஷ்டிராவில் பள்ளிக் கழிவறையில் நான்கு வயது சிறுமியருக்கு ஏற்பட்டிருக்கும் தாங்க முடியாத பாலியல் கொடுமை; இப்படி பட்டியலிட்டால் இன்னும் பல பல...

ஏன் இந்த இழிச்செயல்? யார் இதற்குப் பொறுப்பு? என்பதையெல்லாம் ஆய்ந்தறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவற்றிற்கு முழுமுதல் காரணமாக இருப்பது, நாடு முழுவதும் வெகு இலகுவாகக் கிடைக்கும் விதவிதமானப் போதைப் பொருள்கள். இவை வகுப்பறையிலிருந்தே  மாணவர்களை வழிமாற்றி விடுகிறது. இளைஞர்களை மாஃபியா கும்பல்களிடம் மண்டியிட வைக்கிறது. வழிபோக்கனையும் வழிபறி கொள்ளையனாக்குகிறது.

அடுத்ததாக நம் நாட்டிலுள்ள நீதிமன்றங்கள். குற்றவாளிகளுக்குக் காலம் தாழ்ந்து கொடுக்கப்படும் இலகுவானத் தண்டனைகள். பாலியல் குற்றங்கள் உண்மையென கையும் களவுமாகப் நிரூபிக்கப்பட்டால், விசாரணை என்ற பெயரில் காலதாமதம் ஏற்படுத்தாமல் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கும் கடுமையான சட்டத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

இவற்றிற்கு அப்பாற்பட்டு அரசியல் தலையீடு. இம்மாதிரி குற்றவாளிகள் தங்களின் அரசியல் அல்லது ஆட்சியாளர்களின் பின்புலத்தால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். அதை உறுதி செய்யும் விதத்தில் தற்போது, மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர் கூட்டுப்பலாத்கார கொலை நடந்துள்ளது. இந்த வழக்கில் அம்மாநில அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்பதை உணர்ந்த உச்ச நீதிமன்றம் நேரடியாகக் களத்தில் இறங்கி, மருத்துவர்கள் பாதுகாப்புக்காக வழிமுறைகளை உருவாக்க 10 பேர் அடங்கிய தேசிய பணிக்குழுவை அமைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும்.

பள்ளிக் குழந்தைகளிடமும் பணிபுரியும் இடங்களில் பெண்களிடமும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ஈனர்களை உடனடியாக அவர்கள் வகிக்கும் பணியிலிருந்து நிரந்தரப் பணிநீக்கம் செய்ய வேண்டும். அவர்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய எவ்விதச் சலுகைகளும் வழங்கக் கூடாது.

நாட்டில் நிலவும் போதை பொருள்களின் புழக்கத்தை வெகுவாகக் கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற குற்றவாளிகள் தப்பிக்காமல் இருப்பதற்கு நாட்டு மக்களின் கூட்டுப்போராட்டமும் விழிப்புணர்வும் பேரியக்கமாக மாற வேண்டும்.    

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Sexual Harassment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment