C.RAJA MOHAN
கட்டுரை ஆசிரியர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநராகவும், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான கன்சல்டிங் எடிட்டராக உள்ளார்.
இந்தியாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் தற்போது ஏற்ப்பட்டுள்ள பதற்றத்தைப் பற்றிய பேச்சுக்களில், அதன் பின்புலங்களின் உள்ள பெரிய சிந்தாந்தங்களை பற்றிய யோசனையை நாம் கோட்டை விடுகிறோம்.
நூறாண்டுகளுக்கு முன்பே கர்சன் பிரபு ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் நடைப்பெற்ற ரோமன்ஸ் சொற்பொழிவில் " ஒரு நாட்டின் எல்லைகளை திறன்படக் கையாளுவதே ஒரு நாட்டு தலைவரின் முக்கிய பொறுப்பாக இருக்க வேண்டும். ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அதன் எல்லைகள் திறன்பட நிர்வகிக்க முடியும். இவ்வளவு ஏன், ஒரு நாட்டுக்குள் வாழ்க்கை, மரணம், பிறப்பு, இறப்பு, சண்டை என்ற நவீன வாழ்வின் ஒட்டுமொத்த அடையாளமும் அந்த நாடுகள் எவ்வாறு எல்லையை நிர்வகிக்கிறது என்பதை பொறுத்தே அமையும். எல்லை பிரச்சினை நமது உலக அரசியலில் இருந்து ஒருபோதும் மறையாது, ஆனால் அரசியல் மாண்பு மற்றும் விஞ்ஞான யுக்திகாளோடு அந்த எல்லை பிரச்சனைகளை நிர்வகிக்க முடியும்" என்று தெரிவித்திருந்தார்.
அந்த கர்சன் ஆக்ஸ்போர்ட் பேச்சுக்குப் பின், ஐரோப்பாவின் எல்லைகள் பிரச்சன்னைகளில், அதன் எல்லை கோடுகளில் பல மாற்றத்தை சந்தித்து இருந்தது. குறிப்பாக, 1919, 1945, 1991 மற்றும் சமீபத்திய ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான எல்லை சண்டைகள் ஐரோப்பாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், "ஐரிஷ் பேக்ஸ்டாப்" என்பது பிரிட்டனுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான எல்லை பிரச்சனையைக் குறிப்பதாகும். இந்த "ஐரிஷ் பேக்ஸ்டாப்" தொடர்பான விஷயங்களால் தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளி வருவதற்கான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளை முடிக்க முடியாமல் பிரிட்டன் போராடி வருகிறது. மெக்ஸிகோவின் எல்லையில் ஒரு பெரிய சுவரைக் கட்ட டிரம்பின் திட்டங்களே இன்று வடஅமெரிக்காவின் மிகப்பெரிய அரசியல் பிரச்சினையாய் உருவாகியுள்ளது.
இதே போன்று எண்ணற்ற எல்லை மோதல்கள் ஆப்பிரிக்காவிலும்,ஆசியாவிலும் உண்டு. இவ்வளவு, ஏன்? அன்று கர்சனால் திறக்கப்பட்ட இந்தோ-திபெத்திய எல்லை கோடுகள் இன்றும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான ஒரு எல்லை தகராறாகவே உள்ளது. இன்னும் விரிவாக சொல்லவேண்டும் என்றால், ரஷ்யாவுடனான மோதலைக் கட்டுப்படுத்த அன்று பிரிட்டிஷ்ராஜ் ஏற்படுத்திய இடையகங்களும்,பாதுகாப்பகங்களும் இப்போது இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான அரசியல் போட்டி நடைபெறும் களங்களாக மாறியிருக்கின்றன.
கர்சன் இந்தியா வருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, 1893-ம் ஆண்டில் இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் வரையப்பட்ட துராந்த் கோடு இன்றும் காபூலுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. பாகிஸ்தானால் ஆதரவைப் பெற்ற தலிபான்கள் கூட இந்த துராந்த் கோட்டைஇன்னும் ஏற்கவில்லை.
இந்த பிரச்னைகளுக்கெல்லாம் மூலக் காரணம் இன்றைய முக்கிய தெற்காசிய நாடுகள் அன்று வகுக்கப்பட்ட பிரிட்டிஷ் எல்லைகளின் தன்மையை அப்படியே பெற்றதுதான். உதாரணமாக, ஆங்கிலேயரின் ஆட்சியில் இந்தியாவின் நில எல்லைகள் ஒரு கொள்கைகளால், ஒரு கோடால் வரையறுக்கப்படவில்லை. இந்தியாவின் எல்லைகளை "நிர்வாக எல்லை", "செயலில் பாதுகாப்புக்கான எல்லை ", "ராஜதந்திர எல்லை" போன்ற மூன்று கோட்பாடுகளால் கட்டமைக்கப்பட்டது.
ஸாரிஸ்ட் ரஷ்யா மற்றும் குயிங் சீனா ஆகியவை பிரிட்டிஷ் பேரரசின் தெளிவற்ற எல்லைக் கோட்ப்பாடு தன்மைகளுடன் வாழ வழிகளைக் கண்டறிந்தாலும், அவர்களுக்குப் பின் அங்கு வந்த புதிய தேசியவாத ஆட்சிகள் இந்த குழப்பத்தை ஏற்றுக் கொள்ள தயாராய் இல்லை. எல்லை பிரச்னையைத் தீர்க்க முழு முனைப்போடு இருந்தது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான இந்தியாவின் சமீபத்திய முடிவு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட ஒரு குழப்பத்தையே சரி செய்துள்ளது. மாவோயிஸ்ட் சீனா அதன் எல்லைகளில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஏற்பட்ட தெளிவின்மைகளை சரி செய்ய முயற்சிப்பதில் இந்தியாவை விட விரைவாகவும் தீர்க்கமாகவும் இருக்கிறது என்பதே உண்மை. ஆனால், வல்லமை பொருந்திய சீனாவால் கூட திபெத், ஹாங் காங் பகுதிகளில் இன்னும் கணிசமான வெற்றியை பெறமுடியவில்லை என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
பாக்கிஸ்தானும் தனது மேற்கு எல்லையில் உள்ள பலூச் மற்றும் பஷ்டூன் பகுதிகளின் எல்லை பிரச்சையை ஸ்திரத்தன்மையைக் காண போராடிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு, அதன் அரசியல் வேகத்தாலும் மற்றும் தெளிவான கொள்கைகளினாலும், பாகிஸ்தானை விட சற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது . இருந்தாலும், அது தொடர்ந்து குறிப்பிடத்தக்க சவால்களை சந்திக்க வேண்டிய கட்டயாத்தில் தான் உள்ளது.
1975 ஆம் ஆண்டில் இந்திய அரசு சிக்கிமை இந்தியாவுடன் ஒருங்கிணைத்தபோது அந்த நடவடிக்கையை சீனா ஆவேசமாய் பார்த்தது. சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாக அங்கீகரிக்கவே சீனாவிற்கு கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஆகின. மேலும், சீனா இன்று வரை தொடர்ந்து பிரதேசம் முழுவதையும் உரிமை கோருகிறது. இருந்தாலும் சீனாவுடனான வாதங்கள் இப்போது குறிகிய எல்லை பிரச்சனயைக் கடந்து உலக அரசியலை மையப்படுத்தியே நகர்கின்றன. டெல்லி மற்றும் பெய்ஜிங் இப்போது தங்களுக்குள்ள பரந்த உறவை விரிவுபடுத்த முடிவெடுத்துவிட்டதால், எல்லை சர்ச்சைகள் அமைதியாக நடைப்பெற்றுவருகின்றன. இராணுவ பதட்டங்கள் இருந்தாலும்,1962-க்கு பின் இந்திய-சீனா எல்லையில் எந்த துப்பாக்கிச் சூடும் நடைப்பெற்றது இல்லை.
பங்களாதேஷத்திலும் இந்திய கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் பதவிக் காலத்தின் போது அந்நாட்டினுடன் சர்ச்சைக்குரிய நில ஒப்பந்தத்தை வெற்றிகரமாகக் கொண்டுவந்தார்.
ஆனால், டாக்கா மற்றும் பெய்ஜிங்கைப் போன்று இல்லாமல், ராவல்பிண்டி உண்மையில் அமைதியான தீர்மானத்திற்கு தயாராக இல்லை. இந்திரா காந்தி (1972), அடல் பிஹாரி வாஜ்பாய் (1999), மன்மோகன் சிங் (2005-07) ஆகியோரின் தொடர்ச்சியான முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தன. பாகிஸ்தான் பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதாலும், இந்திய ஒன்றியத்திற்குள் காஷ்மீரின் தெளிவற்ற சிறப்பு அந்தஸ்தாலும் பேச்சுவார்த்தைக்கான சிரமம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததன் மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதிலும், காஷ்மீரின் அரசியல் நிலையை மறுசீரமைப்பதிலும், மோடி அரசாங்கம் ஒரு புதிய கொள்கையை அமைத்துள்ளது.
அதே நேரத்தில், அங்கு கூடிய விரைவில் அரசியல் நல்லிணக்கத்தை கொண்டு வருவதிலும், அமைதியான காஷ்மீர் இரு நாடுகளுக்கும் மிகவும் உகந்த சூழலை கொண்டு வரும் என்பதை பாகிஸ்தானிற்கும், அதன் ராணுவத்திற்கு புரிய வைப்பதே இந்திய அரசாங்கத்தின் அடுத்த முயற்சியாக இருக்க வேண்டும். இது ஒரு நீண்ட பயணமாக இருக்கலாம், ஆனால் அதற்க்கான பயணம் தொடங்கியது என்றே கூறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.