ரவி செல்லம்
மனிதர்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும், அதன் விளைவாக நம் வாழ்விற்கு ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்தும் 1970களிலிருந்தே நமக்குப் புரிய ஆரம்பித்துவிட்டது. காட்டுத்தீ பரவல், மோசமான வெப்ப அலை வீசுதல், கடும் மழை பொழிவு, அடிக்கடி ஏற்படும் வெள்ளம், பல்லுயிர் இழப்பு, சூழல்மண்டலச் சீர்குலைவு போன்றவற்றின் கூட்டு விளைவு பல கோடி மக்களின் வாழ்வை மோசமாகப் பாதித்துள்ளது. இளம் வயதிலேயே இறந்துபோதல், அடிக்கடி ஏற்படும் தொற்று நோய்கள், கட்டுமானங்கள் அழிந்துபோதல், மண்வளம் குறைதல், காற்று, நீர் போன்ற மனித வாழ்விற்கு முக்கியமான காரணிகளின் தரம் குறைதல் என பதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தப் போக்கை மாற்றுவதற்காக உலக அளவில் பன்னாட்டுச் சுற்றுச்சூழல் ஒப்பந்தங்கள் பல போடப்பட்டுள்ளன. பல நாடுகள், குறிப்பாக இந்தியா, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மீளமைக்கவும் கடுமையான சட்டங்களையும் கொள்கைகளையும் வகுத்துள்ளன.
இந்தச் சூழலில்தான், இந்த வார தொடக்கத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023 குறித்து நான் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளேன். உலகம் எதிர்கொண்டு வரும் இந்த இக்கட்டான சூழலில் இந்திய அரசின் வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023 கவலை கொள்ள வைக்கிறது. இந்தியாவின் பரப்பளவில், சுமார் 21 சதவிகித நிலப்பரப்பு மட்டும்தான் வனப்பகுதியாக உள்ளது. அதிலும் 12.37 சதவிகிதம் தான் ஓரளவிற்காவது சீர்குலையாத இயற்கையான வாழிடமாக உள்ளது. வனப்பரப்பை 33 சதவிகதம் அதிகரிக்க வேண்டும் எனும் நமது குறிக்கோளை அடைய இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது. மேலும், பல்லுயிர் பெருக்கத்திற்குப் பெயர்போன இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் 2009லிருந்து 2019வரை வனப்பரப்பின் நிகர சரிவு 3,199 சதுர கி.மீ. என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறிதளவு அதிகரித்ததாகச் சொல்லப்பட்ட வனப்பரப்பும்கூட ஓரினப்பயிர் தோட்டங்களும், நகரப்பகுதியில் உள்ள பூங்காக்களுமே என அறியப்படுகிறது. இதுபோன்ற இடங்கள் பல்லூழிக் காலமாகப் பரிணமித்து வந்த இயற்கையான வாழிடங்கள் நமக்கு ஆற்றும் சூழல் செயல்பாடுகளை ஈடுசெய்ய முடியாது.
இந்தியாவின் இயற்கையான சூழல் மண்டலங்களின் பாதுகாப்பின் பலமான அடிப்படையாகத் திகழ்வது வன (பாதுகாப்பு) சட்டம், 1980தும், டி. என். கோதவர்மன் எதிர் ஒன்றிய அரசு வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்புமே ஆகும். இவற்றைச் சரியான, பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதே இன்றைய காலத்தின் கட்டாயம். இப்படிப்பட்ட சட்ட முறையமைப்பு காலம்காலமாக நமக்கு ஒத்துவரும் பட்சத்தில் இதைத் திருத்தி அமைக்கவேண்டியதன் அவசியம் என்ன?
இந்தத் திருத்த மசோதாவில் கவலையளிக்கக்கூடிய சில அம்சங்கள்: காடு அல்லது வனப்பகுதியின் வரையறையை மாற்றி அமைத்தல், நாட்டின் எல்லைப் பகுதியில் ஆரம்பிக்கப்படும் திட்டங்களுக்கும், தேசியப் பாதுகாப்புத் தேவைகளுக்கும் இச்சட்டத்திலிருந்து விலக்கு அளித்தல், உயிரியல் பூங்கா (Zoo), கானுலா (Safari parks), மற்றும் சூழல் சுற்றுலா ஆகியவற்றுக்கு விலக்கு அளித்தல், மேலும் உள்ளூர்ச் சமூகத்தின், பூர்வ குடிகளின் உரிமையைப் பறித்தல் போன்றவையே.
அரசு நில ஆவணங்களில் எங்கெல்லாம் 'காடு' என குறிப்பிடப்பட்டுள்ளதோ அப்பகுதிகளில் மட்டுமே இந்த வனப் பாதுகாப்புச் சட்டம் பொருந்தும் என இந்தத் திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது, டி. என். கோதவர்மன் வழக்கில் உயர்நீதி மன்றம் 1996இல் அளித்த தீர்ப்பினை செல்லாததாக்கும் என அச்சம் கொள்ள வைக்கிறது. நீதிமன்றம் தனது தீர்ப்பில் 'காடு' என்பதன் அர்த்தத்தை ஒரு பரந்த நோக்குடன் வரையறுத்துள்ளது. அதாவது, ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் மட்டுமல்லாது காடு என்பது தனியார் பகுதிகளில் உள்ள காடுகள், கோயில் காடுகள், புல்வெளிகள், மரங்கள் அடர்ந்த பகுதிகள் போன்ற இயற்கையான வாழிடங்கள் ஆகியவற்றிற்கும் பொருந்தும் என்கிறது. இது வனப் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கத்தை மேலும் விரிவாக்குகிறது. ஆகவே இதுபோன்ற இடங்கள் காடு எனும் வரையரைக்குள் உட்படுத்த முடியாது என்று சொல்வது, பல்லாயிரக்கணக்கான சதுர கி.மீ. பரப்பில் உள்ள பல இயற்கையான வாழிடங்கள் சட்ட ரீதியான பாதுகாப்பை இழக்க நேரிடும். இது இந்தியாவின் இயற்கையான வாழிடங்களை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பேரழிவை உண்டாக்கும். ஏறத்தாழ, 1,97,159 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள வனப்பகுதிகள் அரசு நில ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டப் பரப்பிற்கு வெளியே அமைந்துள்ளன. அதாவது, 7,13,789 சதுர கி.மீ. உள்ள மொத்த வனப் பரப்பளவில் 27.62 விழுக்காடு வனப்பகுதிகள் சட்ட ரீதியான பாதுகாப்பை இழக்கும் ஆபத்தில் உள்ளன.
நாட்டின் பாதுகாப்பு சார்ந்த கட்டுமானப் பணிகளுக்கு அவை சர்வதேச எல்லையில் இருந்து 100 கி.மீ.க்குள் இருக்கும் பட்சத்தில் அவற்றிற்கு வனம் சார்ந்த முன்அனுமதி பெறத் தேவையில்லை என்றும் இந்தத் திருத்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், வடகிழக்கு இந்தியாவிலுள்ள அடர்ந்த மழைக்காடுகள், லடாக், ஸ்ப்பிதி போன்ற கடல் மட்டத்தில் இருந்து மேலே உயரமான பகுதிகளில் உள்ள குளிர் பாலைவனங்கள், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் முதலிய மாநிலங்களில் அமைந்துள்ள மலையுச்சிப் புல்வெளிகள், அல்பைன் காடுகள், மேற்கே ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உள்ள வெட்டவெளிப் புதர்க்காடுகள், பாலைவனங்கள், புல்வெளிகள் என இந்தப் பகுதிகளில்தான் உலக அளவில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த வாழிடங்கள் உள்ளன. இராணுவப் பாதுகாப்பு அவசியமே, ஆனால் சூழல் பாதுகாப்பையும் அதற்கு நிகராக எண்ணிச் செயல்பட வேண்டும். பொதுமக்களின் நலனுக்காக தேசியப் பாதுகாப்பின் ஒரு முக்கியமான அங்கமாக சூழல் பாதுகாப்பும் இருக்க வேண்டும். ஆகவே, இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களைத் துரித கதியில் அனுமதி அளிப்பது, சூழல் கேடுகள் குறித்த மதிப்பீடுகள் எதுவும் செய்யாமல், வெளிப்படையான மற்றும் நடுநிலையான முடிவுகளை எடுக்காமல் இருப்பதில் போய் முடிந்துவிடக் கூடாது.
காலநிலை மாற்றத்தால் எதிர்பாராவிதமாக மாறும் வானிலையையும், இயற்கைச் சீற்றங்களையும் தாங்கும் பணியை நமது இயற்கையான வாழிடங்கள் செய்துகொண்டிருக்கின்றன.. எனவே அவற்றை அழித்தொழித்தால், பெரிய அளவில் மனித இடம்பெயர்வுக்கும், உள்நாட்டு பாதுகாப்பிற்கும் பேராபத்தாகவும் முடியும்.
உயிரியல் பூங்காக்கள் (Zoos & Safaris) காடுகள் ஆகிவிடாது. இயற்கையான வாழிடங்கள் யாவும் மிகவும் நுட்பமான, பல பகுதிகளைக் கொண்ட செயற் கூறுகளைக் (Functional units) கொண்டவை. ஒரு முறை அழித்துவிட்டால் அவற்றை மீளமைப்பது மிகவும் கடினம். சூழல் மண்டலங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதற்கான விடையைக் காண பல அறிவியல் ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அடைப்பினப் பெருக்கம், இயற்கைக் கல்வி, பொழுதுபோக்கு போன்ற காரணங்களுக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்டவை உயிரியல் பூங்காக்கள். இயற்கையான வாழிடத்தை அழித்துவிட்டு உயிரியல் பூங்காக்களை உருவாக்குவது என்பது முற்றிலும் பொருத்தமற்ற, தவறான செயல். மாறாக, அறிவியல் அடிப்படையில் அமைந்த பல்லுயிர்ப் பாதுகாப்பு மையங்களை வனப்பகுதிகளுக்கு அப்பால் தொலைதூரத்தில் நிறுவுவதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். சூழல்சார் சுற்றுலா உள்ளூர் மக்களுக்கு வழ்வாதாரம் அளிக்கும் ஒரு முக்கியமான துணை நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால், இந்தச் செயல்பாட்டை அனுமதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது சரியல்ல. இயற்கைப் பாதுகாப்பைவிட சுற்றுலாவுக்கே முன்னுரிமை அளிப்பதையே இது காட்டுகிறது. பெரும்பாலும், சூழல்சார் சுற்றுலாத் திட்டங்கள் யாவும், பெரிய கட்டுமானங்களை அமைப்பதிலேயே குறியாக இருந்து இயற்கையான வாழிடங்களுக்கு எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துவதில் தான் முடிந்திருக்கிறது.
"மற்ற காரணங்களுக்காக" (any other purposes) எனக் குறிப்பிட்டு அவற்றிற்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதிலிருந்து விலக்கு அளிப்பது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லாத வனப்பகுதிகளில் பல வகையான செயல்பாடுகளைத் தொடங்குவதற்கான வழிவகை செய்யும்.
அதிக அளவில் ‘வளர்ச்சிக்காக’ எனும் பெயரில் தொடங்கப்படும் திட்டங்களுக்கு அனுமதி வாங்குவதில் விலக்கு அளிக்கப்பட்டால், அத்திட்டங்கள் குறித்து வனவாழ் மக்களிடம் கலந்து ஆலோசிக்காமலேயே போய்விடும் நிலை ஏற்படும். அவர்களின் கருத்துகளைக் கேட்பது மிகவும் இன்றியமையாததாகும். பல ஆண்டுகளாக அரும்பாடுபட்டு பூர்வ குடிகளும் பரம்பரையாக வானப்பகுதியில் வாழ்வோரும் பெற்ற வன உரிமை அங்கீகாரம், அல்லது வன உரிமைச் சட்டம், 2006இன் (Forest Right Act, 2006) படி அவர்கள் வாழும் பகுதியில் திட்டங்களைக் கொண்டு வரும் முன் அவர்களது கிராம சபை கூட்டத்தில் அறிவித்து, ஒப்புதல் பெறவேண்டியது அவசியம். ஆனால், இந்த மசோதாவால், அவர்களது உரிமையை இரக்கமற்ற வகையில் தட்டிப்பறிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
முடிவாக, வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவின் முன்னுரை பாராட்டத்தக்க இலக்குகளையும் குறிக்கோள்களையும் உள்ளடக்கியிருந்தாலும், முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் அம்முன்னுரையில் காட்டப்பட்டுள்ள கருத்துகளுடன் முரண்படுகின்றன. இது, இந்தச் சட்டத் திருத்தங்கள் உள்நோக்கம் கொண்டதோ எனும் கேள்வியை எழுப்புகிறது. வனப் பாதுகாப்புச் சட்டத்தின் புவியல் செயற்பரவலை வெகுவாகச் சுருக்கி, அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டும் பல வகையான வளர்ச்சித் திட்டங்களின் எண்ணிகையை அதிகரித்து அவற்றைச் செயல்படுத்துவதில் உள்ளூர் மக்களின் முடிவெடுக்கும் உரிமையை வெகுவாகக் குறைப்பதால், இந்தச் சட்டம் ஒரு படி பின்னோக்கிச் செல்கிறது. ஆகவே, இந்தச் சட்டத் திருத்தம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
ரவி செல்லம், கட்டுரை ஆசிரியர், மெட்டாஸ்ட்ரிங் நிறுவத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் பல்லுயிர் கூட்டுமுயற்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.
தமிழில். ப. ஜெகநாதன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.