ப சிதம்பரம்
சீக்கிய சமூகம் எப்போதும் இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாக இருப்பதாக கூறிய மோடி, "அதை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள்" கிடைத்துள்ளதாகவும், அதை தான் செய்து வருவதாகவும் கூறி இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் முக்கிய நாளிதழ்களில் வெளியான தலைப்புகளை பார்த்து திடுக்கிட்டேன். இந்தியா என்பது இந்தியத்தன்மையுடன் ஒரே சாதியாக இருப்பது போன்ற தலைப்பு தான் அது. கேரளாவில் வாழ்ந்த துறவியும், தத்துவவாதியான ஸ்ரீ நாராயண குருவின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் 'சிவகிரி யாத்திரையின் 90-வது ஆண்டு விழா தொடக்க உரையில் பேசிய பிரதமரின் உரைக்கு பத்திரிகைகள் அளித்த தலைப்பு தான் இந்த தலைப்பாக வெளிவந்திருந்தது.
இந்த குருவின் போதனைகள் பற்றி நான் படித்த விதத்திலும், அவரது சிவகிரி மேடம் சென்று பார்த்த வகையிலும் தன் வாழ்நாள் முழுவதும் சாதிப் பாகுபாட்டுக்கு எதிராகப் போராடியவர் இவர் என்று என்னால் கூற முடியும். சிவகிரியில் உள்ள அவரது ஆசிரமத்தின் பொன்மொழி "ஓம் சஹோர்யம் சர்வத்ரா", அதாவது 'கடவுளின் பார்வையில் எல்லா மனிதர்களும் சமம்', என்பது தான்.
தவறான தலைப்பு
இந்திய மக்களாகிய நாங்கள் ... எங்களுக்கான அரசியலமைப்பு சட்டத்தை நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தொடக்க வாசகம். திரு. மோடி அரசியலமைப்பு சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர். மாநிலங்கள், மதங்கள், மதப் பிரிவுகள், மொழிகள், சாதிகள் மற்றும் தீண்டாமை ஆகியவற்றை இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒப்புக்கொள்கிறது. அதே நேரத்தில் சில வெறுக்கத்தக்க நடைமுறையை ஒழிப்பதாகவும் உறுதியளிக்கிறது. பிறப்பு, வம்சாவளி, பதிவு, இயற்கைமயமாக்கல், பிரதேசத்தை இணைத்தல் மற்றும் இடம்பெயர்தல், பல வகையிலும் பெறப்பட்ட குடியுரிமையை போன்றவற்றையும் அரசியலமைப்பு அங்கீகரிக்கிறது. 'இந்தியா' என்ற வார்த்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் வருகிறது. இந்திய சுதந்திர சட்டத்தில் இந்தியன் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்தியத் தன்மை என்ற வார்த்தை எந்த இடத்திலும் இடம் பெறவில்லை.
சாதி என்பதற்கு ஆங்கில மொழியிலோ அல்லது இந்திய மொழியிலோ ஒரே ஒரு பொருள் மட்டுமே உண்டு. இது ஜாதி மற்றும் ஜாதி அமைப்புடன் தொடர்புடைய தொடர்புடைய எண்ணற்ற தீமைகளை நினைவுக்குக் கொண்டு வருகிறது. அதை வைத்து தான் பிரதமர் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கலாம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் அந்த வார்த்தையை பிரதமர் தேர்ந்தெடுத்தது தான் துரதிர்ஷ்டவசமானது மற்றும் தவறானது. அதாவது இந்திய தன்மையை பிரதமர் சாதியுடன் ஒப்பிட்டது தவறானது.
ஒற்றை அடையாளங்களை நிராகரிக்கவும்
இந்தியத் தன்மையை சாதியுடன் ஒப்பிடுவது ஆபத்தானது. 'சாதி' கடுமையான மற்றும் பிற்போக்கான விதிகளை கொண்டுள்ளது. இது இறுக்கமானது. இந்த விதிகளின் படி அந்தந்த சாதிகளுக்குள் தான் திருமணம் செய்ய முடியும் . அந்த விதியை மீறுவது பல இளம் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இது ஒரு பிரிவினரை தனித்துவப் படுத்தி சமூகத்தை பிளவு படுத்துகிறது. இது பெரும்பாலும் இரு குழுக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறது. ஜாதி விசுவாசமும் தவறான எண்ணங்களும் மத விசுவாசத்தை விட வலுவானவை மற்றும் கடுமையானவை. சமீப காலம் வரை சாதி மத அடையாளங்கள் அடக்கியே வாசிக்கப்பட்டன. மோடி ஆட்சி வந்த பிறகு ஏராளமானவர்கள் தமது சாதி,மத அடையாளங்களை வெளிப்படையாக காட்டி வருகின்றனர்.
சாதி என்பது ஒரு அடையாளத்தை உருவாக்க முயல்கிறது. இனி இந்தியன் என்ற தன்மையும் ஒற்றை அடையாளத்தை உருவாக்கும் நோக்கம் உள்ளதாக மாறும் எனில் இப்போதைய நிலைக்கு வெவ்வேறான தன்மைகளை கொண்ட பன்மைத்துவம் ஈனும் இப்போதைய நிலைக்கு நேர் எதிரான துருவமாகவே இருக்கும். பாரதிய ஜனதா கட்சி உருவாக்க விரும்பும் இந்த ஒற்றை அடையாளத்தை கோடிக்கணக்கான என்னுடைய சக இந்தியர்களை போலவே நானும் நிராகரிக்கிறேன்.
பிரதமரின் அறிக்கை, பாபாசாகேப் அம்பேத்கரின் 'சாதி ஒழிப்பு' குறித்த உன்னதமான உன்னதமான உரையை மீண்டும் படிக்கத் தூண்டியது. சில கிளர்ச்சியூட்டும் பத்திகள் உள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
இந்துக்களின் நெறிமுறைகளில் சாதியத்தின் தாக்கம் வருந்தத்தக்கது. சாதி என்ற உணர்வு பொதுவான சகோதர உணர்வை கொன்று விட்டது. சாதி பொது தொண்டு உணர்வை அழித்துவிட்டது. சாதி காரணமாக அனைவரும் சேர்ந்து பேசி பொதுக் கருத்துக்களுக்கு வாய்ப்பே இல்லாமல் செய்து விட்டது.
சாதி அமைப்பை விட இழிவான சமூக அமைப்பு இருக்க முடியாது. இந்த அமைப்பு தான் உயிரை சிதைக்கிறது. இயங்க முடியாமல் சக மக்களிடம் அன்பு பாராட்ட முடியாமல் முடக்குகிறது. பிறர்க்கு உதவும் செயல்களை மேற்கொள்ள விடாமல் தடுக்கிறது.
எனது கருத்துப்படி, நீங்கள் உங்கள் சமூக அமைப்பை மாற்றாத வரை, நீங்கள் முன்னேற்ற பாதையில் நடை போட முடியாது. இதில் எனக்கு சந்தேகம் இல்லை. எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எதிரிகளை எதிர்த்து போராடவும் அனைத்து மக்களையும் எதிர்த்து போராட முடியாது. மக்களையும் திரட்ட முடியாது. சாதி எனும் அமைப்பை அடித்தளமாக கொண்டு உங்களால எதையும் உருவாக்க முடியாது.
சாதி அமைப்புகள் தான் மக்களிடையே சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்து நிலை பெற செய்கின்றன. கிராமங்களில் ஒருவரின் சாதியும் அவர் சார்த்த சாதியினரின் எண்ணிக்கையும் தான் அவருக்கான சமூக, அரசியல் செல்வாக்கை தீர்மானிக்கிறது. பெரும்பாலும் அரசியல் அதிகாரமே, பொருளாதார முன்னேற்ற வாய்ப்புகளையும் அளிக்கிறது.
சாதி எனும் வார்த்தையை இந்தியத்தன்மை எனும் வார்த்தையுடன் ஒப்பிட்டால், மிகவும் ஆபத்தான சரிவை நோக்கி நாம் பயணிக்க வேண்டியதிருக்கும். சாதி உணர்வும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளும் சமூகத்திலிருந்து சீக்கிரத்தில் மறைந்துவிடும் என்ற மாயையான எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் சாதி அமைப்பில் இருந்து சமூகம் விடுபடும் விடும் என்பதற்கான நம்பிக்கை அளிக்கக் கூடிய போக்குகள் சமூகத்தில் தெரிகின்றன. நகரமயமாக்கல், தொழில்மயமாதல், தொலைக்காட்சி மற்றும் சினிமா, திறந்த பொருளாதாரம், தகவல் தொடர்பு, வெளியூர் இடம்பெயர்வு மற்றும் பயணம் (குறிப்பாக வெளிநாட்டுப் பயணம்) ஆகியவை சாதிய பாரபட்சங்களை உடைக்கின்றன. இந்தியத் தன்மையை சாதியுடன் ஒப்பிடுவது கடந்த சில தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மாற்றியமைக்கும்.
குடியரசுக் கட்சியின் அணுகுமுறை
வெளிப்படையாக, ஒவ்வொரு இந்தியரிடமும் இந்தியத்தன்மை என்று விவரிக்க கூடிய ஒரு குணம் உள்ளது. நான் அதை வரையறுக்கவோ அல்லது விவரிக்கவோ முயற்சிக்க மாட்டேன், ஆனால் ஒரு இந்தியனாக இருப்பது ஒரு நாட்டிற்கு சொந்தமானது என்ற விவரிக்க முடியாத உணர்வு. இந்தியத் தன்மையை குடியுரிமையுடன் சமன்படுத்த வேண்டும் என்ற எனது முடிவு, அரசியலமைப்பின் கீழ் குடியரசு என்ற கருத்துடன் ஒத்துப் போகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் நம்பிக்கை வைத்து, அதன் அடிப்படைக் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருக்கும் குடிமகன் ஒரு இந்தியன்.
நாம் இந்தியர்களை சாதி விசுவாசங்களிலிருந்து விலக்கி வெளியே கொண்டு வர வேண்டும். சுதந்திரம் , தாராளமயம், சமத்துவம், சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் போன்ற உலகளாவிய கொள்கைகளை கொண்டாடுவதற்கு அவர்களுக்குக் நல்ல கல்வி வேண்டும். ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும், மதிப்புகள், உரிமைகள் மற்றும் கடமைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், அமைதி மற்றும் செழிப்பை அடைவதற்கும் 'குடியுரிமை' உண்மையான அடித்தளமாகும். அதுவே உண்மையான குடியரசுவாதம் ஆகவும் இருக்கும்.
தமிழில் : த. வளவன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.