உலக வன தினமும் இந்திய வனங்களில் இருந்து வெளியேற்றப்படும் வனவாசிகளும்!

கடலோடிகளுக்கு கடலோடும், கடற்கரை மணலோடும் இருக்கும் உரிமையும் உணர்வுப் பிணைப்பும் தான், வனவாசிகளுக்கு காடுகள் மீதும் இருக்கும்

By: Updated: March 21, 2019, 06:13:19 PM

நித்யா பாண்டியன்

International Forest Day 2019 : உலகின் அனைத்து உயிரினங்களும் செழித்திருக்க, பசி பட்டினின் என்று வாடாமல் இருக்க, காடுகளின், அடர் வனங்களின் பங்கீடுகள் மிக முக்கியமான ஒன்றாகும். தமிழ் வரையறுக்கும் ஐந்திணைகளில் மருதம் என்று பல்வேறு காலங்களிலும் வழங்கப்பட்டு வரும் தமிழக காடுகளின் நிலை எப்போது எப்படி உள்ளது ?

காடுகளும், வனவளங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, வன விலங்குகளுக்கு   உரிய உறைவிடங்களை தர இயலாத சூழலில் காடுகள், பாலைகளாகவும், பணப்பயிர் மற்றும் வேளாண்பயிர்களை பயிர்விக்கும் இடங்களாக மாற்றி வருகின்றோம்.

இதனால் ஏற்படும் சாதக பாதகங்களை உணர்ந்து ஆங்காங்கே காடுகளின் மீளாக்கம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனாலும் அழிப்புகள் 100% நடைபெற்றால், மீள் உருவாக்கம் வெறும் 2% என்ற ரீதியில் தான் அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெற்று வருகிறது.

World Forest day 2019
Courtesy : Saravanan Kandasamy

International Forest Day 2019 : வன வளங்களைத் தொலைத்தால் என்ன நடக்கும் ?

வனங்களை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று நாம் எப்போதேனும் யோசித்திருக்கின்றோமா ?  பெரும் உயிரினங்களான யானைகள், புலிகள், மான் வகைகள் என ஒவ்வொன்றாக உணவு மற்றும் நீர் தேவைகளுக்காக மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வரும். மனிதன் – விலங்குகள் இடையேயான புரிந்துணர்வு நமக்கு என்றும் பிரச்சனையாகவே இருக்கிறது.

நாம் வனங்களை வணங்குகின்றோம். யானைகளை கணபதிகளாக பூஜிக்கின்றோம். ஆனால் சின்னத்தம்பிகளை அதன் பூர்வீகத்தில் இருந்து அகற்ற பெரும் களைப்புண்டாக்கும் செயல்களை திறம்பட செய்து முடிக்கின்றோம்.

வாழ்விடங்களை, வழித்தடங்களை மனிதன் உருவாக்கிய கோவில்களுக்கும், ஆசிரமங்களுக்கும், தேயிலைக்காடுகளுக்கும் தின்னக் கொடுக்கும் கரடிகளும், சிறுத்தைகளும் ஊருக்குள் வந்துவிட்டது என்று பதம் மாற்றுகின்றோம். காட்டுக்குள், அனுமதியில்லாமல் நாம் தான் உட்புகுந்தோம் என்பதை மனிதர்கள் நாம் வெகு விரைவாக மறந்துவிடுகின்றோம்.  பிடிபட்ட விலங்குகள் பூங்காக்களில் அடிமைகளாக, காட்சிப் பொருளாக, அடைபட்டுக் கிடக்கின்றன.

International Forest Day 2019 : எங்கே செல்வார்கள் வனத்தின் ஆதிகுடிகள் ?

வன வளங்களை அழிக்க அரசு எந்திரம் எடுக்கும் நடவடிக்கைகள் இன்னும் சிறப்பாக, ஆனால் மிகவும் சங்கடமான சூழலையும் தான் உருவாக்குகிறது. காடுகளையும், அதில் இருந்து கிடைக்கும் பொருட்களையும் வைத்து பணம், பொருள் ஈட்டி வந்த வனத்தின் பழங்குடிகளை சட்டங்கள் மூலம், அவர்களின் தாய் நிலத்தில் இருந்து பிடிங்கி வேறொரு இடத்தில் நட்டுவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது அரசு.

World Forest day 2019
Courtesy : Saravanan Kandasamy

தேனி, குரங்கனியில் ட்ரெக்கிங் சென்ற மக்கள் தீக்கிரையான செய்திகளை நாம் படித்திருப்போம். அங்கு ஒரு மாற்றுக் கருத்தினை அனைவரும் அன்று முன் வைத்தோம். அந்த ட்ரெக்கிங் குழுவில் ஒரே ஒரு பழங்குடி இனத்தவர் இருந்திருந்தால், நிலை வேறொன்றாக இருந்திருக்கும். காடுகளை அவர்களைத் தவிர வேறொருவர் என்றுமே சிறப்பாக புரிந்து கொண்டிருக்க இயலாது. ஆண்டாண்டு காலமாக அங்கே வாழ்ந்து, மரணிக்கும் மனிதனின் மரபில் இருக்கிறது அந்த காட்டு வேர்களின் ரேகை.

ஆனால் இன்றோ, இந்தியா முழுவதும் சுமார் 11  லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மக்களை வெளியேற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

ஜூலை மாதம் 27ம் தேதிக்குள் பட்டா இல்லாத பழங்குடி மக்கள் அனைவரும் காட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று அருண் மிஸ்ரா, ந்நவீன் சின்ஹா, மற்றும் இந்திரா பானர்ஜி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 16 மாநிலங்களில் இருந்து 11 லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடிகள் காடுகளில் இருந்து வெளியேறும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இனி மரங்களை வெட்டுதல், வனவிலங்குகளை சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடுதல், வனப்பகுதிகளை அழித்தல் என்பது எந்த சிறு எதிர்ப்பும் இன்றி மிக சுலபமாக நடைஇபெறும். 2006ம் ஆண்டு பழங்குடி மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட வன உரிமைச் சட்டம் இன்று அவர்களின் கழுத்தினை நெரிக்கிறது.

World Forest day 2019, international forest day World Forest day 2019
Courtesy : Saravanan Kandasamy

பூர்வீக குடிகளிடம் முதலில் பட்டா கேட்பதே தவறான செயல். அவர்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற நினைப்பது கிட்டத்தட்ட வனங்களை அழிப்பதின் தொடக்கப்புள்ளியாகவே கருத்தப்படுகிறது. கடலோடிகளுக்கு கடலோடும், கடற்கரை மணலோடும் இருக்கும் உரிமையும் உணர்வுப் பிணைப்பும் தான், வனவாசிகளுக்கு காடுகள் மீதும் இருக்கும். நர்மதா அணைக்கட்டப்படும் போதும், சத்தியமங்கலத்தில் வீரப்பனை தேடும் போதும், எங்கேனும் நக்சல்கள் தேடுதல் வேட்டை என்றும் நசுக்கப்படுவது என்னவோ பழங்குடிகளின் வாழ்வு தான்.

மேலும் படிக்க : இந்த உயிரினங்களை காக்க ஒரு பட்சிராஜன் வரமாட்டாரா ?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:International forest day 2019 what is today scenario in indian jungles

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X