சோலி ஜே.சோரப்ஜி
கட்டுரையாசிரியர், இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல்.
மகாத்மா காந்தி, தேசத் துரோகத்தை “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இளவரசன்” என்று பொருத்தமாகத்தான் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் யூனியன் முன்னாள் தலைவர் மற்றும் மாணவர்கள் மீது “தேசவிரோத கோஷங்கள் எழுப்பியதற்காகவும் ஆதரித்ததற்காகவும்” வரைமுறையற்ற வகையில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, தேசத் துரோகப் பிரிவு ராஜாவாகவே ஆகிவிட்டதாகத் தோன்றுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 124 - ஏ தெரிவிக்கும் ‘தேசத் துரோகம்’ என்றால் என்ன? பிரைவி கவுன்சிலின்படி, “வெறுப்பை”த் தூண்டும் எந்தக் கூற்றும், அதாவது, அரசாங்கத்தின் மீது எதிர்மறை உணர்வை தூண்டும் எந்தக் கூற்றும் தேசத் துரோகம் தான். அதில் வன்முறை அல்லது கிளர்ச்சியைத் தூண்டும் அம்சங்கள் இல்லையென்றாலும், அது தேசத் துரோகம்தான்.
அரசியல் நிர்ணய சபை விவாதங்கள், தேசத் துரோகம் பற்றி, நிறைய தெளிவுகளைக் கொடுத்துள்ளன. அரசமைப்புச் சட்ட முன்வரைவில், பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையைக் கட்டுப்படுத்துவதில், “தேசத் துரோகப்” பிரிவும் ஒன்று. பிரிட்டிஷ் காலனியாதிக்கம் உச்சத்தில் இருந்தபோது, சுதந்திரப் போராட்டத்தை நசுக்கவும், பாலகங்காதர திலகர், காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தேசியத் தலைவர்களைச் சிறையில் அடைக்கவும் இந்தப் பிரிவு அவ்வப்போது பயன்பட்டது. உரிமைகளை மறுக்கும் “தேசத் துரோகப்” பிரிவை நீக்குவதற்கு ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார் கே.எம். முன்ஷி.
அந்த விவாதங்களின்போது, முன்ஷி இப்படிச் சொன்னார், “தற்போது ஜனநாயக அரசாங்கம் உருவாகிவிட்ட நிலையில், அரசாங்கத்தின் மீது வைக்கப்படும் வரவேற்கத்தக்க விமர்சனங்களுக்கும், நமது நாகரிக வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கும் சட்டம் ஒழுங்கைச் சிதைக்கும், வன்முறையைத் தூண்டும் விமர்சனங்களுக்கும் இடையிலான வரையறையைத் தெளிவுபடுத்த வேண்டும். ஜனநாயகத்தின் அடிப்படையே அரசாங்கத்தின் மீதான விமர்சனம்தான். ஒரு அரசாங்கத்தை, மற்றொரு அரசாங்கத்தால் மாற்ற முடியும் என்பதை முன்னிறுத்தும் பல கட்சி ஆட்சிமுறை இதற்கான அரண். பல வகை அரசாங்கங்கள் தேவை என்பதை முன்னிறுத்துவதை நாம் வரவேற்கவேண்டும். ஏனெனில் அதுதான் ஜனநாயகத்துக்கு அதன் ஜீவனைத் தருகிறது.”
அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னோடிகள், முன்ஷியின் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர். அதனால்தான், பேச்சுரிமை, கருத்துரிமையைப் பறிக்கும் அடிப்படைகளில் ஒன்றாக, சட்டப் பிரிவு 19 (2)இல், ‘தேசத் துரோகத்தை’ச் சேர்க்காமல் கைவிட்டார்கள். இந்தியக் குற்றவியல் சட்டப்படி, தேசத்துரோகம் ஒரு தண்டனைக்குரிய குற்றம்; குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்திய நீதிமன்றங்கள் ‘தேசத் துரோகத்தை’ எப்படி பார்க்கின்றன? சுதந்திரத்துக்கு முந்தைய பெடரல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த மோரிஸ் குவையர், தேசத் துரோகப் பிரிவு என்பது “அரசாங்கத்தின் புண்பட்ட கெளரவத்துக்கு மருந்திடுவதற்காக பயன்படக்கூடாது. அந்தச் சொற்களோ செயல்களோ குழப்பத்தைத் தூண்டுவதாக இருக்கவேண்டும் அல்லது, அதற்கான நோக்கமோ குணமோ இருந்தது என்பதை நியாயவான்கள் ஏற்கும்படியாக இருக்கவேண்டும்” என்றார்.
இதன் பிறகு, நமது உச்ச நீதிமன்றம், 1962இல் கேதார்நாத் எதிர் பீகார் மாநில வழக்கில் ஓர் முக்கியமான தீர்ப்பை வழங்கியதோடு, பிரைவி கவுன்சிலின் கருத்தை மறுத்து, பெடரல் நீதிமன்றம் முன்வைத்த கருத்தை ஏற்றுக்கொண்டது. எவ்வளவு கடுமையாக இருந்தாலும், குறையுடைய புரிதலில் இருந்து வந்திருந்தாலும் அரசாங்கத்தின் மீது விமர்சனமோ, நிர்வாகத்தின் மீதான கருத்துகளோ நிச்சயம் தேசத் துரோகக் குற்றமாகாது என்று தீர்ப்பளித்தது. தேசத் துரோக பிரிவான 124 (ஏ) என்பது, கலவரத்தைத் தூண்டும் அல்லது சட்டம் ஒழுங்கைக் குலைக்கும் அல்லது வன்முறையைத் தூண்டும் எண்ணமோ, குணமோ கொண்ட செயல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றது உச்ச நீதிமன்றம். இதன்படி, வன்முறையைத் தூண்டுவதாக இருந்தால்தான் அது தேசத் துரோகக் குற்றமாகும்.
1995இல், கேதார்நாத் வழக்கில் பின்பற்றப்பட்ட கொள்கையையே பல்வந்த் சிங் எதிர் பஞ்சாப் மாநில வழக்கில், உச்ச நீதிமன்றம் பின்பற்றியது. இதில் ஒருசிலர் பின்வரும் கோஷங்களை எழுப்பினர்:
ஒன்று, “காலிஸ்தான் ஜிந்தாபாத்”; இரண்டு “ராஜ் கரேகா கால்ஸா”; மூன்று “ஹிந்துவான் நன் பஞ்சாப் சோன் காத் கே சதாடம், ஹம் மெளக்கா ஆயா ஹை ராஜ் கரம் டா”.
இந்த கோஷங்கள் ஒருசில முறை எழுப்பப்பட்டதாக அரசாங்கத் தரப்பு சாட்சிகள் தெரிவித்தாலும், அதனால் இதர சீக்கியர்களிடமோ அல்லது வேறு சமுதாயத்தினரிடமோ எந்தவிதமான எதிர்வினையும் ஏற்படவில்லை. வேறு எந்தச் செயலும் இல்லாமல், இத்தகைய கோஷங்கள் இரண்டொரு முறை எழுப்பப்பட்டதாலேயே, அது தேசத் துரோகக் குற்றமாகாது. இதற்கு, சட்டப் பிரிவு 124 - ஏ-வைப் பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
அதன் பிறகு, 2003இல், நசீர் கான் எதிர் தில்லி அரசாங்கத்தின் வழக்கில், உச்ச நீதிமன்றம் இப்படித் தெரிவித்தது : “அரசியல் கொள்கைகளையும் கருத்துகளையும் வைத்திருப்பதும், அதற்காகப் பிரசாரம் செய்வதும், அதனை நிறுவுவதற்காக பணியாற்றுவதும், வற்புறுத்தல், வன்முறை அல்லது சட்டத்துக்கு புறம்பாக செய்யப்படாதவரை, அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். வாக்குறுதிகளில் ‘மோதல்’ மற்றும் ‘போர்’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படுவதாலேயே, அவர்கள் உருவாக்க நினைக்கும் சமுதாயம், வற்புறுத்தல் மற்றும் வன்முறையால் உருவாக்கப்படும் என்று அர்த்தமில்லை.”
அப்படியானால், தேசவிரோத கோஷங்கள் என்றால் என்ன? அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிப்பதாகவோ, குற்றம் சுமத்துவதாகவோ இருந்தாலும், அவை நாட்டுக்கு எதிரானது அல்ல, மேலும் அவை ‘தேச விரோதமாக’வும் ஆகாது. இந்திய அரசாங்கம் என்பது ஒரு கொடுங்கோல் ஆட்சி, அதை தூக்கியெறிவது அவசியம் என்று கோஷம் எழுப்பப்பட்டால் வேண்டுமானால், சட்டப் பிரிவு 124 -ஏ பயன்படுத்தப்படலாம். ஆனால், இந்தச் சட்டப் பிரிவை யோசிக்காமலும் அதீத ஆர்வத்தினாலும், பல அரசாங்க அமைப்புகள் பயன்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது. இதற்காக சட்டப் பிரிவு 124 ஏ வை ரத்த செய்வதற்கு அடிப்படை ஏதுமில்லை.
வன்முறையைத் தூண்டுவதற்கும், பொது ஒழுங்கைக் குலைப்பதற்குமான வாய்ப்புள்ள கோஷங்கள் அல்லது அறிக்கைகள் விஷயத்தில் இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தலாம். சட்டப் பிரிவு 124 ஏவை பயன்படுத்துவதற்கு வன்முறையைத் தூண்டுவது என்பது தவிர்க்கமுடியாத முன் நிபந்தனை என்பதை நமது புலனாய்வு அமைப்புகளுக்குச் சொல்லித் தர வேண்டும். நமது தேசம் வலிமையான அடிப்படைகளால் உருவாக்கப்பட்டது. அதனை ஒருசில மோசமான, கூர்மையான அல்லது முட்டாள்தனமான கோஷங்களால் குலைத்துவிட முடியாது. தேசத் துரோக பிரிவு தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அதைச் செய்த புலனாய்வு அமைப்புகளின் மீது உரிய அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும் என்பதோடு, அத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.
(கட்டுரையாசிரியர், சோலி ஜே.சோரப்ஜி இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல்)
தமிழில் : துளசி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.