அரவிந்தன்
‘தோற்றால் பெரியார் வழி; வென்றால் அண்ணா வழி’ என்று தி.மு.க. தலைவர் கலைஞர், ஒரு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கூறிய சொற்றொடர் மிகப் பிரசித்தமாயிற்று. அதாவது, ‘வென்றால் ஆட்சியில் அமர்ந்து மக்கள் பணியாற்றுவோம்; இல்லையென்றால், போகாமல் (பொதுப் பிரச்சினைக்குப் போகாமல்) பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து கொண்டிருப்போம்’ என்பது அதன் பொருள். இப்போது செயல் தலைவா மு.க. ஸ்டாலின் தலைமையில், தேர்தலைச் சந்தித்து முடிவை அறிவதற்கு முன்பாகவே, திராவிடர் கழகப் பாதையில் பயணப்பட தீர்மானித்துவிட்டதோ என்ற எண்ணத்தையே அதன் சமீபகாலச் செயல்பாடுகள் தோற்றுவிக்கின்றன.
கடந்த ௬ மாதங்களாக எடப்படி பழனிசாமியின் ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களைவிட தி.மு.க.வின் பிரச்சாரத்தில், ஸ்டாலினின் அறிக்கைகளில் தூக்கலாக வெளிப்பட்டு வருவது, ‘பகுத்தறிவு-சுயமரியாதை- வர்ணாஸ்ரம எதிர்ப்பு - மதவாத சக்திகளை வீழ்த்துவது’ போன்ற கருத்துக்கள்தான். இதன் உச்சகட்டமாக, அதிகமாக விளம்பரம் பெறாமல் இருந்த ராமராஜ்ய ரத யாத்திரைக்கு தி.மு.க. மூர்க்கத்தனமாக எதிர்ப்புத் தெரிவித்து, அதற்கு விளம்பரம் தேடித் தந்ததில் முடிந்ததைச் சொல்லலாம்.
‘இது பெரியார் மண், பெரியார் மண்’ என்று இப்போதெல்லாம் மேடைதோறும் முழங்க ஆரம்பித்து விட்டார் மு.க.ஸ்டாலின். அண்மையில் ஈரோட்டில் நடந்து முடிந்த தி.மு.க.வின் மண்டல மாநாட்டிலும் பெரியாரியக் கருத்துக்களை முன் வைத்தே கட்சிப் பேச்சாளர்கள் பலருக்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆரியக் கூட்டம் தி.மு.க.வை அழிக்கப் பார்ப்பதாகப் பொங்கித் தீர்த்துவிட்டார்கள். எந்தெந்த ஆரியர்கள், எந்தெந்த முறையில் அழிக்கப் பார்க்கிறார்கள் என்று எந்த விளக்கமும் அங்கே சொல்லப்படவில்லை. வழக்கமாக தி.மு.க. மேடைகளில் பேராசிரியர் அன்பழகன் பேச்சில் மட்டுமே இக்கருத்து கீறல் விழுந்த கிராமபோன் ரிக்கார்டு மாதிரி வந்து கொண்டிருக்கும். ஆனால் இப்போது அவர் அவ்வளவாகப் பேசுவதில்லை என்பதாலோ, என்னவோ, ‘புதிய பட்டம்’ அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார்.
சரி, எதற்கு இந்த திடீர் ‘பெரியார் மண்’ என்ற சாமியாட்டம்? என்று ஆராய்வோம். அண்மையில் பா.ஜ.க.வின் எச்.ராஜா, பெரியார் சிலை குறித்து வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிலைத் தொடர்ந்து, தமிழகத்தில் இரு இடங்களில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவங்கள் மட்டுமே தி.மு.க.வின் இப்போதைய நிலைக்குக் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் அந்த இரு சம்பவங்களை மட்டும் கொண்டு பெரியாருக்கு எதிரான சூழ்நிலை உருவாகியிருப்பதாக பொதுமைப்படுத்த முடியாது. மேலும் பெரியார் குறித்த விமர்சகர்களின் கைமேலோங்கிவிட்டதாகவும் சொல்ல முடியாது. ஆகவே இதற்குப் பின்வரும் சில காரணங்களும் இருக்கலாம் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது.
“மத்திய பாரதிய ஜனதா அரசுதான், தமிழக அ.தி.மு.க. அரசு விழுந்து விடாமல் தாங்கிப் பிடிக்கிறது என்று தி.மு.க. திடமாக நம்புகிறது. அ.தி.மு.க. அரசின் மெஜாரிட்டி பலம் ஊசலாட்டத்தில் இருப்பது உண்மை என்றாலும், இப்போது இந்தப் பிரச்சினை உயர்நீதிமன்றத்தின் முன்னால் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. மத்திய அரசு தடாலடியாக அ.தி.மு.க. அரசைக் கலைப்பது சுலபமல்ல. தவிர, அ.தி.மு.க. மீது பா.ஜ.க. மேலிடத்துக்கு ஜெயலலிதா மறைவின்போது இருந்த பரிவுணர்ச்சி இப்போதும் தொடர்வதாகச் சொல்ல முடியாது. ஆக இந்த விஷயத்தில் பா.ஜ.க. மீதான தி.மு.க.வின் வெறுப்பில் நியாயம் இருப்பதாகக் கருத இயலாது.
ஆனால் இதைவிட பா.ஜ.க. மீது தி.மு.க.வுக்கு கோபம் இன்னொரு விஷயத்திலும் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அது, ரஜினியின் அரசியல் பிரவேசம். பா.ஜ.க.தான் ரஜினியைப் பின்னால் இருந்து இயக்குகிறது என்று தி.மு.க. தீர்மானமாக நம்புகிறது. சோவுக்குப் பிறகு ‘துக்ளக்’கின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுள்ள ஆடிட்டர் குருமூர்த்தி, ரஜினியைத் தீவிரமாக ஆதரிக்கத் துவங்கியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். பின்னணியும், மோடி-அமித்ஷாவுடன் நெருங்கிய நட்பும் கொண்ட குருமூர்த்தி, ரஜினியை முன்னிறுத்துவது, பா.ஜ.க.வின் மேலிட ஆசியுடன் நடைபெறும் ஒன்று என்றே தி.மு.க. கருதுகிறது.
இந்தப் பின்னணியில்தான் ‘சனாதன தர்மம், வர்ணாஸ்ரமம்’ என்ற பழைய திராவிட-ஆரிய பேதப் பிரச்சாரத்தை தி.மு.க. கையிலெடுத்துள்ளது. தி.க. மேடைகளை நினைவூட்டும் வகையிலான பேச்சுக்களும், ரஜினி மீதான வசைபாடலுமே தி.மு.க.வின் ஈரோட்டு மாநாட்டுப் பேச்சுக்களில் மேலோங்கி இருந்துள்ளது. ரஜினிக்கு மதவாத முத்திரை குத்துவது இதன் நோக்கம். ‘இந்துமத, மேல்சாதி ஆதரவு மனோபாவம் கொண்டவர்’ என்ற அளவுக்கு தி.மு.க. பேச்சாளர்கள் ரஜினி குறித்து விமர்சிக்கத் தலைப்பட்டிருப்பது, தி.மு.க.வின் பதற்றத்தையே காட்டுகிறது. அ.தி.மு.க.வைவிட ரஜினிதான் தங்களின் பிரதான போட்டியாளராக இருப்பார் என்று தி.மு.க. கவலை கொள்வதையே இந்த பிரச்சாரம் உணர்த்துகிறது.
ஆனால் ரஜினியை எதிர்கொள்கிறோம் என்ற பெயரில், துருப்பிடித்த, உளுத்துப்போன பெரியாரிய அரசியலை முன்னெடுப்பது தி.மு.க.வுக்கு எந்த வகையில் கை கொடுக்கும் என்ற சந்தேகம், அக்கட்சிக்குள்ளேயே பலரிடையே இருக்கிறது. 2016 தேர்தலுக்கு முன் தமிழகம் முழுவதும் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து, விவசாயிகள், நெசவாளர்கள், தொழில் துறையினர் என வெவ்வேறு தரப்பினரின் பிரச்சினகளை கேட்டறிந்து, அதற்கேற்ப உறுதிமொழிகளை வழங்கி, பிரச்சாரம் மேற்கொண்டதுதான் தி.மு.க.வுக்கு அதிக தொகுதிகளில் வெற்றி தேடித் தந்தது. அத்தகைய ஒரு அணுகுமுறையாவது கட்சியின் வெற்றிக்கு உதவும் என்பதே தி.மு.க.வில் பலரது கருத்தாக உள்ளது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், மாறிவரும் பொருளாதாரக் கொள்கைகளும் சமூகத்தில் ஏற்படுத்திவரும் தாக்கங்களின் விளைவாக, இடதுசாரிகளே தங்களது சித்தாந்தங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்திவரும் வேளையில், 50,60 ஆண்டுகளுக்கு முந்தைய சமூக நிலைக்கு ஏற்றபடி பெரியார் பேசிய கருத்துக்களை இப்போது தூசி தட்டி எடுத்து தூக்கிப் பிடிப்பபது சரிப்பட்டு வருமா? ஸ்டாலினின் இப்போதைய அணுகுமுறை இதுபோன்ற பல கேள்விகளையே தி.மு.க.வுக்கு உள்ளும், புறமும் எழுப்பியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.