Advertisment

இந்திய உழவாண்மை பிற்போக்கானதா?

ஒரு மழைக்குப் பிறகு, மண் இறுகிப் போவதால் மண்ணில் காற்றோட்டம் குறைகிறது. அதனால் நிலத்தை கிளறிக் கொடுப்பதற்காக களைக்கொட்டுடன் நிலம் நோக்கி நடக்கிறார்கள்; இந்திய உழவாண்மை பிற்போக்கானது என்ற கருத்துக்கு ஆங்கிலேயர் வால்க்கரின் பதில்

author-image
WebDesk
New Update
இந்திய உழவாண்மை பிற்போக்கானதா?

த. வளவன்

Advertisment

Is Indian agriculture processes are backward?: ‘இந்தியாவின் உழவாண்மை மிகவும் பிற்போக்கானது. உழவர்கள் பழைய மரக்கலப்பையை பயன்படுத்துகிறார்கள். பசுக்கள், ஐரோப்பிய பசுக்களை போல் நிறைய பால் கறக்க வில்லை. இந்திய உழவர்கள் திறமை இல்லாதவர்கள். ஆதலால் போதிய விளைச்சல் இல்லை. நாடெங்கும் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.’

இங்கிலாந்து ராணிக்கு துரை ஒருவரால் எழுதப்பட்ட கடிதம் இது. 1880-ம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட கடுமையான உணவுப் பஞ்சத்துக்கு பிறகு தான் அவர் இப்படி எழுதினார்.

இந்தியாவில் இப்படி ஒரு பஞ்சம் ஏற்படுவதற்கு என்ன காரணம்? முதலில் கடை விரித்து… கடைசியில் நம் தலைமீதே ஏறி அமர்ந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிதான் காரணம். அவர்கள் இங்கே கால் பதித்த பிறகு, பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பஞ்சம் தலை விரித்தாடுவது தொடர் கதையாகிப் போனது. கடும் பஞ்சம் ஏற்பட்ட 1880ம் ஆண்டுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பாக... அதாவது 1770 களில் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் போட்ட சட்டம் தான் எல்லாவற்றிக்கும் மூலகாரணம். ‘விளைச்சலை மூன்று பங்காகப் பிரிக்க வேண்டும். ஒரு பங்கு, கிழக்கிந்திய கம்பெனிக்கு, இரண்டாவது பங்கு, கம்பெனிக்கு வரி வசூல் செய்து கொடுக்கும் ஜமீன்தாருக்கு, மூன்றாவது பங்கு உழுது.... விதைத்து.... அறுத்த உழவனுக்கு. இப்படி போடப்பட்ட சட்டத்தின் விளைவாகத்தான் இங்கே பஞ்சம், மஞ்சத்தில் ஏறி கொண்டு ஆட்டம் போட ஆரம்பித்தது.

1880 ம் ஆண்டு பஞ்சத்தின் தன்மையை ஆங்கிலேயரான அன்ட்டா என்பவர் எழுதி வைத்திருப்பதை படித்தால் இப்போது கூட நெஞ்சு பதறுகிறது. ‘வங்காளத்தில் உழவர்கள் மாடு, கலப்பை, மண்வெட்டியை விற்று விட்டார்கள். விதை நெல்லை குற்றி உலையிலிட்டார்கள். மகனை, மகளை விற்றார்கள். வாங்குவதற்கு ஆள் இல்லை என்றாகும் வரை விற்றார்கள். பிழைத்திருந்தவர்கள் பிணங்களை தின்றார்கள். செத்தவர்களை புதைக்கவோ, எரிக்கவோ ஆள் இல்லை. நாய், நரி, கழுகு தின்று தீர்க்க முடியாத அளவுக்கு பிணங்கள் குவிந்து கிடந்தன.  

ஆனாலும், உழவன் விளைவித்ததைக் கொள்ளை கொண்டு போகும் செயலை, கிழக்கிந்திய கம்பெனி குறைத்துக் கொள்ளவில்லை. ‘உழுதவன் கால் வயிற்று கஞ்சியாவது குடிக்கிறானா? என்று கூட பார்க்காமல், இப்படி கொள்ளை கொண்டு போனதாலும்... உணவுப் பயிர் விளைந்த நிலத்தை வாணிபப் பயிருக்கு மாற்றியதாலும் தான் பஞ்சம் ஏற்பட்டது. இதை கேள்விப்படும் எவரும் ஆட்சியாளர்கள் முகத்தில் காறி உமிழ்வார்கள். ஆனால் இங்கே ஆட்சியை கவனித்துக்கொண்டிருந்த துரைகளோ... ‘இந்திய உழவாண்மை பிற்போக்கானது’ என்று தங்களின் ராணிக்கு கடிதம் எழுதினார்கள். அதன் விளைவாக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர், ஜான் அகஸ்டன் வால்க்கர். இங்கே ஓராண்டு காலம் தங்கி, நாடு முழுவதும் சுற்றிப் பார்த்து, விரிவான அறிக்கையை ராணிக்கு அனுப்பி வைத்தார் வால்க்கர். அதை படித்துப் பார்த்தாலே போதும்... இந்திய உழவாண்மையை கேலி பேசுவோர் வாயை மூடிக்கொள்வார்கள்.

பயிர்த் தொழிலில் இந்திய உழவர்களின் மதி நுட்பத்தைப் பாராட்டியதில் ஆல்பர்ட் ஓவார்டுக்கு முந்தையவர் இந்த வால்க்கார். கிராமத்துப் பெண் தலையில் ஒரு தவலை. இடுப்பில் ஒரு குடம், வலது கையில் ஒரு செம்பு. இப்படி தண்ணீர் கொண்டு சென்ற காட்சி கூட அவரைக் கவர்ந்தது. இந்திய உழவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது எதுவுமே இல்லை. நான் தான் அவர்களிடம் கற்றுக்கொண்டேன். ஒரு மழைக்குப் பிறகு, மண் இறுகிப் போவதால் மண்ணில் காற்றோட்டம் குறைகிறது.  அதனால் நிலத்தை கிளறிக் கொடுப்பதற்காக களைக்கொட்டுடன் நிலம் நோக்கி நடக்கிறார்கள். இது இந்திய உழவர்களிடம் நான் கற்றது’ என்று மெய்சிலிர்த்து போய் எழுதியிருக்கிறார் வால்க்கர்.

உழவர்கள் விதம் விதமான பயிர் ரகங்களை வைத்திருந்தது அவருக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மலபார் பகுதிகளில் (இன்றைய கேரளம்) நெல்லில் மட்டுமே 50 ரகங்கள் பயிரிடப் பட்டிருந்ததைப் பார்த்துவிட்டு, ‘50 ரகங்களுக்கும் தனித்தனி பெயர் வைத்திருக்கிறார்கள். அவற்றின் பண்புகளை விளக்குகிறார்கள். இந்திய உழவரின் கலப்பை பத்து அல்லது பன்னிரண்டு கிலோ எடை நிற்கிறது. தோளில் சுமந்தபடி வயல் வரப்புகளில் நடக்கிறார் உழவர்.  

இந்திய உழவரது மரக்கலப்பை ‘க்ஷி’ வடிவத்தில் உள்ளது. அதனால் புல், களை வெளிப்படுத்துகிறது. ஏரின் பின்னால் நடக்கும் உழவர் பெண், களையைப் பொறுக்கி விடுகிறார். நம்முடைய இரும்புக் கலப்பை உழவு அப்படிப்பட்டது அல்ல. மேல் மண்ணை அடியிலும் அடியிலும், அடி மண்ணை மேலுமாக புரட்டி போட்டுவிடுகிறது. அதனால் புல்லும் களையும் புதைந்து போகிறது. மீண்டும் செழித்து வளர்கிறது. நாட்டுக் கலப்பை பழுதுபடும் போது உள்ளூரிலேயே சரி செய்துவிடுகிறார்கள். இரும்புக் கலப்பை பழுதானால் மாவட்ட தலைநகருக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது என்று இந்திய கலப்பையைப் பற்றி அலசியிருக்கும் வால்க்கர், நம் மாடுகளைப் பற்றியும் பேசுகிறார்.

‘இந்தியாவில் பாலுக்காக மட்டுமே பசுக்கள் வளர்க்கப்படுவதில்லை. நிலத்தை உழுவதற்கும் கன்றுகள் பெற்றுத் தருவதற்கும், எருவுக்காகவும் பசு மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. இந்திய எருமை தரும் பாலில் உள்ள வெண்ணெய், ஆங்கில பசும்பாலில் உள்ள வெண்ணெயை விடவும் அதிகம். இந்தியர்களின் எருமைப் பாலின் மதிப்பு, ஆங்கிலப் பசும்பாலின் மதிப்பை விடவும் அதிகம். மேலே சொல்லப்பட்ட காரணங்களால் ஐரோப்பாவில் இருந்து பசு மாட்டை இறக்குமதி செய்ய அவசியம் இருக்கவில்லை’ என்று சொல்லியிருக்கும் வால்க்கர் கூடுதலாக ஒரு செய்தியையும் தருகிறார்.

‘சென்னை ராயப்பேட்டையில் ஒரு பசுவைப் பார்த்தேன். அது நெல்லூர் பசு. பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவிடு, சோளத்தட்டை எல்லாம் கொடுத்தால் நெல்லூர் பசு ஒரு நாளைக்கு ஒன்பது லிட்டர் பால் கொடுக்கிறது.

கோவை மாவட்டத்தில் பார்த்தேன் உழவர்கள் மாடுகளைக் குடும்ப உறுப்பினர்களாகவே பார்க்கிறார்கள். தங்கள் உணவுக்கு நிலம் ஒதுக்குவது போலவே மாடுகளின் உணவுக்காகத் தனியாக நிலம் ஒதுக்கி தீவனம் பயிர் செய்கிறார்கள். அதனை அறுவடை செய்து போர் போட்டு வைத்துக் கொள்கிறார்கள். கோடையில் புல் இல்லாத காலத்தில்... அதை உணவாகக் கொடுக்கிறார்கள். இந்தியர்களின் பல்லுயிர் பேணும் பண்பு கண்டு இப்படியாக உருகி உருகிப் பேசும் வால்க்கர், பயிர் சாகுபடியைப் பொறுத்தவரை ஒரே ஒரு குறைபாட்டை தான் பார்க்கிறேன் என்கிறார். மனித மலத்தை எருவாக பயன்படுத்துவது இந்தியாவில் காண முடியவில்லை. அதற்கு காரணம் உள்ளது. நிலம் மேல் சாதிக்காரர்களின் கையில் உள்ளது. கீழ் சாதிக்காரர்கள் மலம் தங்கள் நிலத்தில் கலப்பதை மேல் சாதியினர் அனுமதிக்க மாட்டார்கள். அதனாலேயே மலம் இன்னும் எருவாகப் பயன்படுத்தப்படவில்லை. இந்தியாவில் கல்வி வளர்ந்து, சாதிகள் மறையும் போது மலத்துக்கு பயன்பாடு வந்துவிடும் என்று நம்பலாம். என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

வால்க்கரின் இந்த அறிக்கை நமக்கு அறிவிப்பது என்ன? உழவியல் தொழில்நுட்பம் என்பது இடத்துக்கு இடம் வேறுபடக்கூடியது. மனித குல வரலாற்றில் மூத்த குடியான நம்மிடம் மதிநுட்பத்துக்கும் தொழில்நுட்பத்துக்கும் பஞ்சம் இல்லை. வணிகத்துக்கு பல்லக்கு சுமக்கும் தொழில்நுட்பத்தைப் புகுத்தியதாலேயே கடன் பட்டோம். அமெரிக்கா போல் ஐரோப்பா போல் நூற்றுக்கு ஒருவர் கிராமத்தில் இல்லை. இங்கு நூற்றுக்கு 65 பேர் கிராமத்தில் வாழ்கிறார்கள். கிராமம் திரும்புவார்கள். விதை, நிலம், நாற்றங்கால் நடை காடு சந்தை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் மக்கள் மடிவதை குறைக்க முடியும்.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Agriculture
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment