போருக்குத் தயாராகிறாரா, ரஜினி...?

ரசிகர் மன்ற சந்திப்பின்போது, ‘சிஸ்டம் கெட்டுப் போயிருக்கிறது’ என்று அவர் தெரிவித்தது, ‘அரசியல் அமைப்பு’ (சூழல்) குறித்த அவரது கவலையாகப் பார்க்கப்பட்டது.

அரவிந்தன்

தமிழக அரசியலில் இப்போது பெரிதும் விவாதிக்கப்படுவது, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவாரா, இல்லையா? அரசியல் களத்தில் அவர் இறங்கினால், சோபிப்பாரா, மாட்டாரா? – என்ற கேள்விகள்தான். இதற்கு முன் தேர்தல் சமயங்களில் ரஜினியின் ஆதரவு (‘வாய்ஸ்’) யாருக்கு என்று மட்டுமே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இது 1996ல் அவர் தொடங்கி வைத்தது. அப்போதைய (1991-96) ஜெயலலிதா ஆட்சி மீது அவருக்கு இருந்த விமர்சனங்களை சில முறை பொது வெளியில் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக 1996 சட்டசபைத் தேர்தலின்போது, ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனால்கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது’ என்று ரஜினி தெரிவித்த கருத்து மிகப் பிரசித்தமானது.
அப்போது வெறுமனே கருத்து தெரிவித்ததுடன் அவர் நிற்கவில்லை. அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரசில் இருந்து வெளியேறி த.மா.கா. என்ற தனிக்கட்சியை ஜி.கே. மூப்பனார் தொடங்கியபோது உருவான தி.மு.க.-த.மா.கா. கூட்டணிக்கு ரஜினி வெளிப்படையாக ஆதரவளித்தார். அந்தக் கூட்டணி உருவாவதிலும், அந்த அணிக்கு ரஜினியின் ஆதரவைப் பெற்றுத் தருவதிலும் ரஜினியின் நெருங்கிய நண்பரான பத்திரிகையாளர் மறைந்த சோ முக்கியப் பங்கு வகித்தார்.

அந்தத் தேர்தலுக்குப் பிறகும் சில முறை, தேர்தல் சமயங்களில் தனது நிலையை ரஜினி அறிவித்திருக்கிறார். 1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா ஆட்சி குறித்த விமர்சனங்களை வெளிப்படுத்தியது முதலே, ரஜினி அரசியலில் ஈடுபடப் போகிறாரா என்ற சர்ச்சை தொடங்கி, அது இன்று வரை தொடர்கிறது. அப்போது (1996 – தேர்தல் சமயத்தில்) அவர் கட்சி தொடங்கி தேர்தலைச் சந்தித்திருந்தால், அன்று அவர்தான் முதலமைச்சராகி இருப்பார் என்று இப்போதும்கூட வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூறுவதுண்டு.

தற்போது ரஜினி நேரடியாகக் களத்தில் இறங்க முடிவெடுத்து விட்டாரா என்ற கேள்விக்கான விடையை டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பதாக ரசிகர்களுடனான சந்திப்பின்போது கூறியிருக்கிறார். ‘அரசியலின் ஆழம் எனக்குத் தெரியும். வீரம் மட்டும் போதாது; வியூகம் வகுக்க வேண்டும்’ என்று ரஜினி கூறியிருப்பதன்பொருள், வியூகங்களை வகுத்துக் கொண்டு, பிறகு களத்துக்கு வரவேண்டும் என்று அவர் நினைப்பதுதான் என்கிறார், அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவர்.

இதற்கு முந்தைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பின்போது, ‘சிஸ்டம் கெட்டுப் போயிருக்கிறது’ என்று அவர் தெரிவித்த கருத்து, ‘அரசியல் அமைப்பு’ (சூழல்) குறித்த அவரது கவலையாகப் பார்க்கப்பட்டது. அதே கூட்டத்தில், ‘போர் வரும்போது சொல்கிறேன், தயாராக இருங்கள்’ என்று ரஜினி சொன்னபோது, ‘தலைவர் முடிவெடுத்துவிட்டார்’ என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள். இப்போது டிசம்பர் 31-க்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

டிசம்பர் 26 முதல் 31 வரை ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதாக ரஜினி அறிவித்த நாள் முதல், காட்சி ஊடகங்களில் இது பற்றிய நிறைய விவாதங்கள். அரசியல் தலைவர்கள் சிலர் மட்டுமே ரஜினியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘அரசியல் குறித்து அவருக்கு என்ன புரிதல் உண்டு? தமிழகத்தைப் பாதித்துள்ள முக்கியப் பிரச்சினைகள் அவருக்கு தெரியுமா?’ என்று கேள்விகளை இவர்கள் அடுக்கினாலும், தாங்கள் எல்லாம் பல ஆண்டுகளாக அரசியலில் முழு வெற்றி அடைய முடியாமல் தவிக்கும்போது, திரைத்துறைப் புகழை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இன்னொருவர் சுலபமாக வெற்றியை அடைய முயல்வதா என்பதுதான் இவர்களின் உண்மையான சீற்றம்.

போதாதகுறைக்கு நடிகர் கமல்ஹாசனும் நேரடி அரசியலில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இதனால் தமிழ்த் தேசியவாதிகளின் கோபம் இன்னும் அதிகரிக்கிறது. ‘சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் எம்.எல்.ஏ., எம்.பி.யாக வாருங்கள்; எங்களுக்கு ஆட்சேபணை இல்லை; முதலமைச்சராக வேண்டும் என்று நினைக்காதீர்கள்’ என்ற இவர்களின் வாதம் நகைப்புக்குரியதாக உள்ளது. அரசியலில் ஈடுபட முன்வரும் எவரும், தேர்தல் முறை மூலம், மக்களுடைய ஆதரவைப் பெற்று, பெரும்பான்மையான தொகுதிகளில் அவரது கட்சி வென்றால்தான், பதவிக்கு வருகிற பேச்சே எழும். ஆக, இவர்களுடைய எதிர்ப்பு, பதட்டத்தையே காட்டுகிறது.

இது ஒருபுறமிருக்க, ரஜினி குறிப்பிடுகிற ‘போர்’ என்பதைத் தேர்தல் என்று புரிந்து கொண்டாலும், அது எந்தத் தேர்தல்? நாடாளுமன்றத் தேர்தலிலேயே அவர் களத்துக்கு வந்து விடுவாரா, அல்லது சட்டசபைத் தேர்தல் வரை காத்திருப்பாரா? என்பதும் தற்போது விவாதப் பொருளாகிவிட்டது.

ரஜினிக்கு நெருக்கமான சிலரிடம் பேசியபோது, ரசிகர் மன்ற அமைப்புகளைப் பலப்படுத்தும் பணியையும், தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு பூத் கமிட்டிகளை உருவாக்கும் பணியையும் தொடங்கியிருப்பதாகக் கூறுகின்றனர். தவிர, தமிழினத்தின் முக்கியப் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பான செயல் திட்ட அறிக்கை (ப்ளூ பிரிண்ட்) ஒன்றை பல்துறை வல்லுனர்களின் துணையோடு தயாரிப்பது தொடர்பான முன்னேற்பாடுகளில் ரஜினி ஈடுபட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

‘இன்னொரு கட்சியில் ரஜினி இணைய மாட்டார்; அவர் தனிக்கட்சியே தொடங்குவார்’ என்றே அவருக்கு நெருக்கமான சிலர் ஊடக விவாதங்களில் குறிப்பிடுகின்றனர். போருக்குத் தயாராகிறார் ரஜினி என்பது புரிகிறது. எப்போது என்ற கேள்விக்கு டிசம்பர் 31 அன்றுகூட விடை கிடைக்குமா என்பது நிச்சயமில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close