நம்பிக்கை இழந்துவிட்டதா மின்னணு வாக்கு இயந்திரம்? மீண்டும் வருமா வாக்குச்சீட்டு?

ஜனநாயகத்தின் ரத்த நாளங்கள், மக்களின் வாக்குகள் என்பதால், இதில் துளியளவு சந்தேகம் வந்தாலும், அதை மலையளவு முயன்றேனும் போக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.

parthiban
பார்த்திபன்

நீ அமெரிக்காவுக்கே திரும்பிப் போயிடு சிவாஜி… என்ற வசனம் தான் நினைவில் வந்தது, வாக்குச்சீட்டு முறைக்கே நாம் திரும்ப வேண்டும் என அண்மையில் காங்கிரஸ் தீர்மானம் போட்டபோது. வாக்குச்சீட்டு முறையில் கள்ள ஓட்டு போடுறாங்க, எண்ணி முடிக்கவும் அதிக நேரமாகுது என பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுதான் அந்த வாக்குச்சீட்டு முறையை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தது நம்ம இந்திய தேர்தல் ஆணையம். அதுக்கு பதிலா வந்த மின்னணு வாக்கு இயந்திரம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று ஏற்கனவே தமிழகத்தில் பாமக தொடங்கி டெல்லியில் ஆம் ஆத்மி வரை பல கட்சிகள் குறை சொல்லிக் கொண்டே இருந்தன.

இந்த சூழலில் தான் இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறது காங்கிரஸ். 2014இல் தொடங்கி பாஜக பெரு வெற்றிகளை குவித்தபோதெல்லாம் இந்த பல்லவியை எதிர்கட்சிகள் வாய் ஓயாமல் பாடின. சமீபத்தில் உத்தர பிரதேசம் மற்றும் பீகார் இடைத்தேர்தலில் பாஜக தோற்றபோதும் கூட இந்த பல்லவியை சில இடங்களில் கேட்க முடிந்தது. வாக்கு இயந்திரம் சரியாகத் தான் வேலை செய்கிறது என்பதை நிருபிக்கவே இந்த முறை, முறைகேட்டுக்கு லீவ் விட்டிருப்பார்கள் என்றும் ஒரு கூட்டம் இணையத்தில் வெறும் வாயை அசைபோட்டது. ஆனால் அன்று முதல் இன்று வரை வாக்கு இயந்திரம் சரியாக, முறையாக வேலை செய்கிறது, இதில் முறைகேடு செய்வதெல்லாம் முடியவே முடியாத காரியம் என தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். முடிந்தால் முறைகேடு நடக்கிறது என நிரூபியுங்கள் என்று குறை சொன்ன கட்சிகளுக்கு சவால் விட்டது தேர்தல் ஆணையம். எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்துதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு மாறினோம், மறுபடியும் வாக்குச்சீட்டுதான் வேண்டும் என்று எல்லா கட்சிகளும் ஒருமனதாக கூறினால் அதனை பரிசீலிப்போம் என்கிறது ஆளும் பாஜக.

என்னப்பா இது, ஸ்மார்ட்ஃபோன் காலத்தில் மீண்டும் நம்பர் சுத்துற டெலிபோனுக்கு போக சொல்றீங்க என்று ஒரு கூட்டம் ராகுலை கலாய்க்கிறது. இந்த கோரிக்கை டிஜிட்டல் இந்தியாவை மீண்டும் பழைய காலத்திற்கு கொண்டு போய்விட்டுவிடும் என்றும் சிலர் அச்சப்படுகிறார்கள்.

வாக்கு இயந்திரம் ’தேசத்தின் பெருமை, மிகவும் நம்பிக்கைக்குரியது’ என்கிறார் இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி. மறுபடியும் வாக்குச்சீட்டு முறைக்கு போனால், மறுபடியும் செல்லாத ஓட்டு, கள்ள ஓட்டு பிரச்னைகள் தான் வரும் என்றும் எச்சரிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

மின்னணு இயந்திரம் அத்தனை சிறப்பானது என்றால் ஏன் இன்னும் பல வளர்ந்த நாடுகள் வாக்கு சீட்டு முறையில் வாக்களிக்கின்றன என்று கேட்கிறார்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள். ஐரோப்பாவில் பெல்ஜியமும், பிரான்சும் மட்டும்தான் மின்னணு இயந்திரத்தை பயன்படுத்துகின்றன. மின்னணு இயந்திரத்தை பயன்படுத்திப் பார்த்த 8 ஐரோப்பிய நாடுகளில் 6 நாடுகள் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே திரும்பிவிட்டன. தொழில்நுட்பத்தில் முன்னணியில் விளங்கும் அமெரிக்கர்கள் இன்றும் வாக்குச்சீட்டில்தான் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் பாதுகாப்பானதாகவும், மக்கள் விருப்பமாகவும் என்கிறது அமெரிக்க தேர்தல் ஆணையம்.

இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் மின்னணு இயந்திரத்திற்கு தடை விதித்திருக்கின்றன. மின்னணு வாக்கு இயந்திரத்தில் யாருக்கு ஓட்டு போட்டாலும் தாமரையில் லைட் எரிகிறது. இது உலக மகா முறைகேடு என கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோற்றபோது மாயாவதி போர்க்கொடி தூக்கினார். 80 எம்எல்ஏக்களை வைத்திருந்த கட்சி வெறும் 19 எம்எல்ஏக்கள் என குறைந்து போனதால் வந்த கோபம் என்று அதை அப்படியே புறக்கணித்துவிட முடியாது. மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று தொடர்ந்து வாதிடுகிறார்கள் ஆம் ஆத்மி கட்சியினர்.

வாக்கு இயந்திரத்தில் பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட் என இரண்டு பகுதிகள் இருக்கும். வேட்பாளர்களின் பெயர்களும், சின்னங்களும் இருப்பது பேலட் யூனிட். இதில்தான் நமக்கு பிடித்த வேட்பாளருக்கு பக்கத்தில் உள்ள நீல நிற பட்டனை நாம் அழுத்துகிறோம். இதற்குள் சாதாரண பவர் சர்க்கியூட் மட்டுமே இருக்கும். அதனால்தான் நாம் பட்டனை அழுத்தியதும் அந்த
இடத்தில் லைட் எரிகிறது. அதேசமயம் நாம் போட்ட ஓட்டு கன்ட்ரோல் யூனிட்டில் சேமிக்கப்படும். இதில் ஒரு மெமரி சிப் இருக்கிறது. இந்த சிப் தான் வாக்காளர்கள் போடும் ஓட்டுகளை சேமித்து வைத்துக் கொள்கிறது. பின்னர் ரிசல்ட் என்ற பட்டனை அழுத்தினால்,
யாருக்கு எத்தனை ஓட்டு என்று அதில் உள்ள எல்இடி திரையில் காட்டும். இவ்வளவுதான் வாக்கு இயந்திரத்தில் இருக்கும் மெக்கானிசம்.

இந்த மெமரி சிப்பில் சேமிக்கப்பட்டுள்ள தகவலை சிறிய ஹார்ட்வேர் ஒன்றை பொருத்தி நமக்கு ஏற்றபடி மாற்றிவிட முடியும் என சிலர் வாதிடுகின்றனர். அதற்கு கன்ட்ரோல் யூனிட்டில் உள்ள ஒயரோடு இந்த ஹார்ட்வேரை பொருத்த வேண்டும். மற்றபடி இணையதளம் மூலம், ரிமோட்டில், ப்ளூடூத்தில் ரிசல்ட்டை மாற்றிவிடலாம் என்பதெல்லாம் உட்டாலக்கடி என்கிறார்கள் கணினி
நிபுணர்கள். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஹார்ட்வேர் பொருத்துவதாக இருந்தால் அதை பூத்திற்கு வந்த பிறகு செய்யவே முடியாது. ஏற்கனவே ஏதாவது லேப்பில் பொருத்தி கொண்டு வர வேண்டும். பலகட்ட பாதுகாப்புகளோடு வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், அது எந்தளவிற்கு சாத்தியம் என்பது ஆச்சர்யக்குறி கலந்த கேள்விக்குறிதான்.

அதேபோல ஏற்கனவே ஒரு கட்சியின் பெயரில் 100 ஓட்டை சேமித்து வைத்தெல்லாம் பூத்திற்கு அனுப்ப முடியாது. காரணம், பல கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு இயந்திரம் இயக்கி காட்டப்பட்ட பிறகே பூத்திற்கு வரும். தேர்தல் நாளன்று காலையும் மாதிரி வாக்குப்பதிவு என்ற முறையில் ஏஜெண்ட்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்சிக்கும் வாக்களித்து காட்டப்படும். இவை
அனைத்தும் வீடியோ பதிவும் செய்யப்படும். இவற்றிற்கெல்லாம் மேலாக இப்போது யாருக்கு வாக்களித்தோம் என்ற தகவல் பிரிண்ட் ஆகி வெளிவரும் VVPAT  (voter verifiable paper audit trail) முறையும் அமலுக்கு வர ஆரம்பித்திருக்கிறது. இதன் மூலம் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை இந்த மெஷினில் வெளி வரும் ரசீதைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

மின்னணு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் VVPAT போன்று புதிய உத்திகளை கையாண்டு அதன் மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டுமே தவிர முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பப் போய் அவதிப்படக் கூடாது என்கிறார்கள் நடுநிலையாளர்கள். இன்று வாக்குச்சாவடியில் சிசிடிவி வைத்து கண்காணிக்கப்படுகிறது, அதனால் கள்ள ஓட்டு போட முடியாது என்று வாதிடுபவர்களுக்கு சுடச்சுட நடந்து முடிந்த ரஷ்ய தேர்தலை உதாரணமாக காட்டுகிறார்கள் அவர்கள். புடினுக்கு ஆதரவாக கட்டுகட்டாக கள்ள ஓட்டு போடும் வீடியோ யூ ட்யூப்பில் வைரலாக ஓடிக்
கொண்டிருக்கிறது. கேமரா இருக்கிறதே என்று கள்ள ஓட்டு போட்டவர்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

வாக்குச்சீட்டு vs மின்னணு வாக்கு இயந்திரம் சண்டை உலகம் முழுக்க நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஜனநாயகத்தின் ரத்த நாளங்கள், மக்களின் வாக்குகள் என்பதால், இதில் துளியளவு சந்தேகம் வந்தாலும், அதை மலையளவு முயன்றேனும் போக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. அதைத்தான் நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

கட்டுரையாளர் : பார்த்திபன், பத்திரிகையாளர்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close