தோசையில் சாதி : மதிமாறன் பேசியது சரியா ?

உண்ணும் உணவிற்கு பின்னால் வர்க்க பேதங்கள் இருக்கிறது... சாதிய பேதங்களை கடந்து நாம் வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது !

தோசை சுடுவதில் சாதிய அரசியல் : முகநூல் மற்றும் ட்விட்டர் இணையங்களில் திடீரென எங்கு திரும்பினாலும் ஒரே தோசை மயம் தான். எதற்காக? ஏன் என்று ஒன்றும் புரியவில்லை. தினமும் நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக தோசை மாறியிருப்பதற்கு காரணம் அதை விரைவாக சமைத்து உண்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம் என்பதால் தான்.

ஆனால் அந்த  தோசைக்குப் பின்பும் ஒரு உணவு சார், சாதி சார், வர்க்கம் சார் அரசியல் இருக்கிறதா என்பது தான் கேள்வி. நாம் உண்ணும் உணவுகளுக்கு பின்னால் பொருளாதாரம் சார்ந்த அரசியல் இருக்கிறது என்பதற்கு மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் சாதிய அரசியல் இருக்கிறதா? வே. மதிமாறனின் கருத்து மக்களிடையே எதை கொண்டு போய் சேர்க்க விரும்பியது ?

தோசை சுடுவதில் சாதிய அரசியல்

13/10/2018 அன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருக்கும் எம்.ஏ.எம் மஹாலில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஒரு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சமூக செயற்பாட்டாளார் வே. மதிமாறன் அவர்கள் கலந்து கொண்டார்.

அப்போது நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் பற்றியும், காரைக்குடி செட்டி நாடு உலக அளவில் எப்படி பிரபலமானது என்பது குறித்தும், அதற்கு பின்னால் இருந்த நாட்டுக் கோட்டை நகரத்தார்களின் வாழ்வியல் செழுமை பற்றியும் பேசினார் வே. மதிமாறன்.

ஆதிக்க சாதியினர் சுடும் தோசை ஒரு விதமாகவும், தாழ்த்தப்பட்ட சாதியினர் சுடும் தேசை ஒரு விதமாகவும் இருக்கும் என்று அவர் அங்கு பேசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தோசை திடீரென ட்ரெண்டாக ஆரம்பித்தது. மேலும் படிக்க : மீம்ஸ் போட்டு மதிமாறனை கலங்கடித்த நெட்டிசன்கள் 

காரைக்குடி என்று சொன்னவுடன் உங்களுக்கு என்ன ஞாபகத்திற்கு வருகிறது ?

காரைக்குடி என்று சொன்னாலே அனைவருக்கும் காரைக்குடியின் சுவையான உணவு பதார்த்தங்கள் தான் ஞாபகத்திற்கு வரும். சைவம் சமைப்பதில் பிராமணர்கள் வல்லவர்களாகவும், அசைவம் சமைப்பதில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வல்லவர்களாகவும் திகழ்ந்து வந்தனர். அதற்கு எல்லா வகையிலும் காரணமாய் இருந்தது என்னவோ அவர்களின் சாதி இல்லை. மாறாக அவர்களின் பொருளாதார பின்புலம்.

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் ஆங்கிலேயர்கள் காலத்திற்கு முன்பில் இருந்தே அதிக அளவில் வெளியூர்களுக்கு உப்பு மற்றும் பல பொருட்களை விற்பனை செய்து வந்தவர்கள். அவர்கள் ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்பு இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து அண்டை நாடுகளிலும் வர்த்தகம் செய்ய ஆரம்பித்தனர். பொருளாதார செல்வாக்கு கொண்டவர்களாக அவர்கள் திகழ்ந்தனர்.

தோசை சுடுவதில் சாதிய அரசியல்

செட்டிநாடு அசைவ உணவு

பர்மாவில் (மியான்மர்) இருந்து அவர்கள் சம்பாதித்தை செல்வத்தையெல்லாம்  பெரிய பெரிய வீடுகளாக கட்டினார்கள். அவர்களின் பொருளாதார பின்புலம் அவர்கள் உணவு முறையை மாற்றி இருக்கலாம். இதில் சாதிய அரசியல் எங்கு இருக்கிறது என்பதே பெரும் குழப்பமாக இருக்கிறது.

புரட்டாசியில் சைவம் சாப்பிடுவதில் சாதிய அரசியல் இருக்கிறதா ?

புரட்டாசி மாதம் என்றாலே அனைவரும் சைவம் சாப்பிட வேண்டும் என்ற கருத்துகள் நிலவி வருகிறது. ஆனாலும் சில விசயங்களை அங்கே வே.மதிமாறன் மறந்திருக்கலாம். இந்தியா மட்டும் அல்ல தமிழகமும் சிறு சிறு குழுக்களாக, இறை நம்பிக்கை உடைய மக்களாக பிரிந்திருக்கிறார்கள். புரட்டாசியில் அனைவரும் சைவம் மட்டும் சாப்பிடுவதில்லை. அசைவம் உண்பதும் அவரவர் விருப்பம். ஒவ்வொரு இறை சார் நம்பிக்கை உடையவர்கள் ஆண்டாண்டு காலமாக அவர்கள் பழகி வந்த வழிமுறைகளையே பின்பற்றி வருகிறார்கள்.

Swiggy காலத்தில் நைஸ் தோசையைத் தான் அனைவரும் உண்கிறோம்…

பிராமணர்கள் சுடும் தோசை மிகவும் மெலிசாகவும், சாதிப் படிநிலை குறையக் குறைய மக்கள் சுடும் தோசையில் மந்தம் கூடி விடுகிறது என்று கூறி, அங்கே ஒவ்வொரு சாதிப் பெண்களும் சமையலறையில் எப்படி நேரத்தினை செலவிடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார் வே. மதிமாறன்.

ஆதிக்க சாதியில் இருக்கும் ஒரு தம்பதியினரில் கணவர் தன் குடும்பத்தின் தேவைக்கு அதிகமாக சம்பாதிக்கும் போது, உபரி பணத்தில் வகை வகையாக சமைக்கிறார்கள் என்றும், தாழ்த்தப்பட்ட குடும்ப தம்பதியினர், வேலைக்கு சென்றுவிட்டு வந்து ஐந்திற்கும் பத்திற்கும் கடையில் ஏதாவது ஒன்றை வாங்கி சமைத்து சாப்பிட்டுவிட்டு தூங்கி விடுகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இன்று இரும்பு தோசைக் கல்லை விட , நான் – ஸ்டிக்தவாவின் விலை என்னவோ குறைவு தான். சில அரசியல் ஆதாயங்கள் காரணமாக ஏழை பணக்காரன் என்ற பேதமில்லாமல் அனைவரின் வீட்டிலும் கிரைண்டர்கள் சுழன்று கொண்டு இருக்கின்றன. எந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணும் நான் – ஸ்டிக் தவாவில் தோசை சுட்டு சாப்பிட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். ஆதிக்க சாதி பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள்.

உபரியாக சேரும் பணத்தினை Swiggyக்கு கொடுத்து விரும்பிய உணவினை வாங்கி உண்டு விடுகிறார்கள். சமைப்பதற்கு அவர்களுக்கு தான் இன்று விருப்பம் இல்லை. 24 மணி நேரமும் பெண்கள் சமைக்க வேண்டும், அல்லது வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தும் பெண் சமைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை திணிப்பதாகவே இருக்கிறது வே. மதிமாறனின் கருத்து.

அவர் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மற்றும் பிராமணர்களின் உணவுகள் பிரபலமான வரலாற்றைத் தான் கூறுகிறார். ஆனாலும் இடையே கலப்புத் திருமணங்களில் ஏற்படும் பிரச்சனைகளில் தோசை சுடுவதையும் இணைக்கும் போது தான் இடறுகிறது. அதனால் தான் இந்த ஸ்விக்கி விளக்கம்.

தோசை சுடுவதில் சாதிய அரசியல் இல்லை : வர்க்க வேறுபாடுகள் உண்டு

சாதிய அரசியல் இருக்கிறது என்பதற்கு பதிலாக வர்க்க ரீதியில் ஒரு அரசியல் உணவுக்குப் பின்னால் இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். பத்தாயத்தில் சோளத்தை பத்திரம் செய்து வைத்துவிட்டு, வருகின்ற தீபாவளிக்காவது அரிசிச் சோறும், இட்லியும், தோசையும் பிள்ளைகளுக்கு செய்து தர வேண்டும் என்று ஒரு குடியான வீட்டுப் பெண் யோசிப்பாள். அவளின் ஆசை அது. அந்த ஆசையை தூண்டி விடும் வகையில் தான் ஆதிக்க சாதியில் பழக்கத்தில் இருந்த உணவு முறைகள் விற்பனைக்கு சந்தைக்கு வந்தன. மக்கள் மத்தியில் இட்லியும் தோசையும் தமிழர்களின் பாரம்பரிய உணவு என்றாகிப் போனது.

இன்றும் கூட சம்பளம் வாங்கிய முதல் நாள் பெரிய உணவகமாக சென்று அசைவு உணவு சாப்பிடும் நாம், மாதக்கடையில் தெரு முனையில் இருக்கும் ஒரு தள்ளுவண்டிக் கடை முன்பு நின்று கொண்டு கல் தோசைக்காக காத்திருப்போம். இங்கு வந்து அக்கடையில் சுடப்படும் தோசையின் அளவைப் பொறுத்து சாதியை எண்ணி நோட்டமிட இயலாது. மதிமாறன் சொல்லும் நைஸ் தோசையில் தொடங்கி, ஆதிக்க சாதிக்காரர்களின் பொடி தோசை, நெய் தோசை முதற்கொண்டு தாழ்த்தப்பட்ட சாதியினர் சுடும் கல் தோசையையும் அவரே இரண்டு சட்னி மற்றும் சாம்பார், குருமாவுடன் தருகிறார்.

தோசை சுடுவதில் சாதிய அரசியல், ஸ்விக்கி பாய்ஸ், வே, மதிமாறன்

உணவிற்கு பின்னால் இருக்கும் வர்க்க ரீதியான அரசியலுக்கு இது ஒரு உதாரணம்

வயிற்றிற்கு உணவிடல் நன்று… அங்கு சாதிகள் பார்க்கும் பழக்கம் கடந்து வந்துவிட்டோம். பேருக்கு எங்காவது ஐயங்கார் பேக்கரி கண்ணில் படலாம். செட்டிநாடு அசைவ உணவு என்று ஹோட்டல் நடத்தும் அனைவரும் நாட்டுக்கோட்டை நகர்த்தார்களாக இருக்க வேண்டிய அவசியமும் பின்புலமும் இன்று இல்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close