அரியகுளம் பெருமாள் மணி
ஊடகவியலாளர்
சாதியை குறிப்பிட விரும்பாதவர்கள் பள்ளிக்கூடங்களில் தங்கள் பிள்ளைகளுக்கு சாதியில்லை என்று குறிப்பிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிறார் வெற்றிமாறன். பள்ளிகளில் சாதிச் சான்றிதழை கேட்காவிட்டால் சாதி ஒழிந்து விடும் என்ற கோரிக்கையையும் மாறனின் கோரிக்கையையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். சாதியற்றவர் என குறிப்பிட உரிமை கேட்கும் வெற்றியின் கோரிக்கை சாதிய கட்டமைப்பை புரிந்து கொண்ட மனநிலையில் இருந்து எழுகிறது. சாதியை குறிப்பிட விரும்புகிறவர் குறிப்பிடட்டும், குறிப்பிட விரும்பாதவர்கள் அதற்கான வாய்ப்பை தேர்ந்தெடுப்பது காலப்போக்கில் சாதிய கட்டமைப்பை வலுவிழக்கச் செய்யும் என்பதே உண்மை.
சாதிய கட்டமைப்பு ஒரு விஷச் சுழல்
உலகில் வேறெங்கும் இல்லாத கொடூரமான சமூக யதார்த்தம் சாதி. இந்தியாவில் பிறக்கிற ஒவ்வொரு குழந்தையும் சாதியுடன் பிறக்கும் வகையில் வலுவாக சாதிய கட்டமைப்பு வகுக்கப்பட்டுள்ளது. தன்னுடன் வரும் சாதியை எந்த சூழலிலும் உதற முடியாது என்பதே சாதியத்தின் கடுமையான அங்கம். சாதிய வகைப்பாடுகளை ஏதேதோ காரணங்களை சொல்லி நியாயப்படுத்துகின்றவர்கள் இருக்கின்றனர், இதன் கொடூரத்தை புரிந்த எந்த மனிதனும் சாதியை ஏற்றுக் கொள்ள மாட்டான். வெற்றி மாறன் சாதிக்கு எதிரான மனநிலையில் இருந்தே சாதியில்லை/ சாதியற்றவர் என்ற பிரிவை உருவாக்க வேண்டும் என்கிறார், பள்ளிக்கூடங்களில் அதற்கான ஆரம்ப விதைகளை தூவ விரும்புகிறார்.
தனக்கோ தன் பிள்ளைகளுக்கோ சாதியில்லை என கூறுகிற ஒரு மனிதன் சாதிய நச்சிலிருந்து வெளியேறுகிறான் என்பது தானே உண்மை. சாதி ஆவணமாக ஒரு குழந்தையின் பள்ளிக்கூட சான்றிதழில் முதலில் குறிப்பிடப்படுகிறது. சாதி ஒழிப்பை விரும்புகிறவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சாதியில்லை என பள்ளிகளில் குறிப்பிடுவது வரவேற்கத்தக்க முன்னகர்வு.
இடஒதுக்கீடு மட்டும் தான் தீர்வா?
பள்ளிக்கூடங்களில் தனக்கு சாதியில்லை என ஒரு மாணவன் குறிப்பிடுவது இடஒதுக்கீடு வழங்குகிற சமூக நீதிக்கு எதிரானது என்ற கோணத்தில் இருந்தே வெற்றி மாறனின் கருத்தை பலரும் விமர்சனம் செய்கின்றனர். கல்வி கற்க, அரசு வேலைகளில் இடஒதுக்கீடு என்பது சாதிக்கு எதிரான ஒரு முன்னகர்வு. இடஒதுக்கீடு மட்டுமே சாதிக்கு எதிரான ஒரேயொரு முன்னெடுப்பு என நம்புகிற மனநிலையில் இருப்பது ஆபத்தானது. அரசு வழங்குகிற சாதிச் சான்றிதழ் கல்வி கற்கின்ற போது சில சலுகைகளை பெறவும், அரசு வேலைகளுக்கும் முக்கியமான ஆவணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இடஒதுக்கீடு உருவாக்கித் தருகிற வாய்ப்பு மிகவும் முக்கியமானது என்றாலும் அது மிகக்குறைவான எண்ணிக்கையிலான மக்களுக்கே பலன் தருகிறது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தனியார் கல்வி நிறுவனங்களில், தனியார் வேலைகளில் இன்னமும் இடஒதுக்கீடு சாத்தியமாகவில்லை. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளில் கூட இடஒதுக்கீடு இன்னமும் அமல்படுத்தப்படவில்லை. மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் ஓபிசி இடஒதுக்கீட்டில் கொண்டு வரப்பட்ட கிரீமி லேயர் எனப்படும் வருமான உச்ச வரம்பு சாதி குறித்த வரையறைகளை மாற்றியுள்ளது. பொருளாதாரத்தில் வளர்ந்த ஒருவன் ஓபிசி சலுகைகளை பெற முடியாது என்ற நடைமுறை ஒரே சாதிக்குள் உள்ள பொருளாதார உயர்வு தாழ்வை அங்கீகரிக்கிறது. பொருளாதார அடிப்படையில் உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கான குறு வித்துக்கள் ஓபிசி கிரீமிலேயரில் ஒளிந்திருந்தன. கிரீமிலேயர் என்பது அரசின் பாகுபாடு, சாதியற்றவர் என குறிப்பிட்டு இடஒதுக்கீடுகளுக்கு வெளியே செல்வது தனிமனித விருப்பம். தனக்கு சாதியில்லை என்று சொல்கிற ஒருவன் இடஒதுக்கீடுகளுக்கு வெளியே மட்டும் செல்லவில்லை, சாதிய கட்டமைப்பிற்கு வெளியே செல்கிறான்.
தனக்கு சாதியில்லை என்றும் தான் சாதியற்றவன் என்றும் சொல்கிற ஒருவனின் குரலை அறிவார்ந்த சமூகம் கொண்டாட வேண்டும். பிறப்பு, இறப்பு, திருமண சடங்குகளில் சாதி நிலைகுத்தி நிற்கிறது. அதை மறுக்க வேண்டியது நவீன சமூகத்தின் கடமை, பலரும் தங்கள் அளவில் சாதி மறுப்பை நடைமுறைப்படுத்துகின்றனர். பழக்க, வழக்கங்களில் சாதியை களைவது மெச்சத்தக்கத்து. சாதியை முற்றாக மறுக்கிறவன் அந்த விஷச்சுழலில் இருந்து வெளியேறும் வழி என்ன? தன் பிள்ளைகளுக்கு சாதி இல்லை என்று சொல்வது தானே? ஆவணங்களில் உள்ள சாதியை மறுக்க பள்ளிக்கூடங்களில் சேரும் போது சாதியில்லை என்று சொல்வது தானே சிறந்த வழி? முதல் படி.
சாதிப் பட்டங்களை துறக்க வைத்த பெரியார்
பெயருக்கு பின் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்கிற வழக்கம் இந்தியா முழுக்க உள்ளது. ஒரு மனிதனின் பெயரைக் கேட்ட உடனே சாதியை அறிந்து கொள்கிற துயரத்தை நீக்க விரும்பினார் பெரியார். பெயருக்கு பின்னால் உள்ள சாதியை துறக்க வேண்டும் என்று கோரினார். ராமச்சந்திரனாருக்கு விழா எடுத்து சாதிப் பெயர் நீக்கத்தை வேகப்படுத்தினார். தமிழ்நாட்டில் பெயர்களுடன் ஒட்டிக் கொண்டிருந்த சாதிப் பெயர்களை, பட்டங்களை ஒழித்து நம்மை நவீனப்படுத்தினார் அய்யா. இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ள ஒரு பழக்கம், தமிழ்நாட்டில் தந்தை பெரியாரால் ஒழிந்தது. பெயர்களுக்கு பின் உள்ள சாதிப் பெயரை களைந்து விட்டால் சாதி ஒழிந்து விடுமா? என்ற கேள்வி அப்போது முன் வைக்கப்பட்டது. அரை நூற்றாண்டாக தமிழகம் சாதிப் பெயர்களை துறந்து மிக நவீனமாக இயங்கி வருகிறது. நம்முடன் படிக்கிற, பணியாற்றுகிற, பயணிக்கிற மனிதர்களின் சாதி குறித்த கவனம் இல்லாமல் தமிழ்நாடு இயங்கிறது. அன்றாட நிகழ்வுகளில் சாதிய கட்டமைப்பின் கொடூரத்தை நீக்க உதவுகிறது பெரியாரின் முன்னெடுப்பு.
இன்று தமிழ்நாட்டில் சக மனிதனின் சாதியை கேட்பது இழிவான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு மனிதனின் சாதியை கண்டடைய ஏதேதோ கேள்விகளை கேட்கின்றனர். எந்த ஊர்? குல தெய்வம் எங்கே உள்ளது? இவர் உங்களுக்கு சொந்தமா? தனி மனிதர்கள் சாதிப் பெயர்களை தவிர்க்க வேண்டும் என்ற பெரியாரின் முன்னெடுப்பு சாதிய கட்டமைப்பின் நோக்கத்தை தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வலுவிழக்கச் செய்துள்ளது. தனி மனித பெயர்களில் சாதி இல்லாததை கண்ட தமிழக அரசு தெருவில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க அரசாணை வெளியிட்டது. சாதிக்கு எதிரான ஒவ்வொரு நகர்வும் வலுவான இந்திய சாதிய மனநிலைநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே உண்மை.
சாதி ஒழிப்புப் போரில் தமிழ்நாடு எப்போதும் முன்னத்தி ஏராக இருந்துள்ளது. சாதி மறுப்பு திருமணத்தை முதன் முதலாக சட்டப்பூர்வமாக அங்கீகரித்த பெருமை தமிழ்நாட்டரசிற்கு உண்டு. சாதி மறுப்பு திருமணங்களை செய்தவர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு சாதி இல்லை என்ற சான்றிதழ் பெற கடுமையாக முயற்சி செய்ய வேண்டி உள்ளது, சாதியற்றவர் சான்றிழுக்கான நிர்வாக நடைமுறைகள் கடினமானவை. சாதியற்றவர் என்ற பிரிவை அரசாணை மூலம் உறுதி செய்து கல்வி நிறுவன சான்றிதழ்களில் இடம் பெறச் செய்ய வேண்டியது அரசின் கடமை. சாதியற்றவர் என்ற வகுப்பு தமிழ்ச் சமூகம் வளமாக, வளமாக வலுப்படும். சாதிய கட்டமைப்பை செயலிழக்க வைக்க நீண்ட காலம் ஆகலாம் ஆனால் அதனை வலுவிழக்கச் செய்கிற வேலையை ஒவ்வொரு நொடியும் செய்ய வேண்டும். தனக்கு சாதி இல்லை என ஒருவன் பிரகடனம் செய்து தன் பிள்ளையை சாதியற்றவர் என பதிவு செய்வது மகத்தான சமூக மாற்றமேயன்றி, வேறில்லை.