ஏம்பல் ராஜா, மருத்துவர்
உன்னைவிடவா அதிக புல்லாங்குழல்களை கண்ணன் இசைத்திருப்பான்?.. உன்னைவிடவா அதிக வீணைகளை வாணி மீட்டியிருப்பாள்?.. உன்னைவிடவா அதிக கீர்த்தனைகளை திருவையாறு கேட்டிருக்கும்? அண்மைப் பயணமோ, தொலைதூரப் பயணமோ, அலைபேசி, குடிநீர் மட்டும் போதாது. உன் இசையின் துணையுடன் தொலைந்து போவது என்பது ஒவ்வொரு பயணத்தின் குறியீட்டுச் செயலாக இருக்கிறது. மனவெளியின் எல்லை தேடி பயணித்து களைப்பு நீங்கி, புத்துயிர் பெற்று வீடு திரும்புதல், அறை திரும்புதல், விடுதி திரும்புதல், அலுவலகம் திரும்புதல் என்பது ஒரு வாழ்க்கை முறையாகிப்போனது.
வீட்டின் அறைக்குள் உடல் சிக்கிக்கொள்ள, மனம் ஜன்னலைத் திறந்து திரைச்சீலை உடுத்திக்கொண்டு உன் இசையுடன் ‘மன உலா போதல்’ என்பது ஒரு வாழும் கலையாகிப் போனது.
உடல் வெப்பம் தாளாமல் தரை வியர்க்கையில் தனது உடலை குளிர்வித்துக் கொள்வதைப் போல, மனப்புழுக்கம் தாளாது மூச்சுத் திணறும் உயிருக்கு உன் இசை உயிர்க்காற்றை வழங்கி இயல்பாய் சுவாசிக்க வைக்கிறது.
சொல்ல முடியாத துயரங்களால், வேதனைகளால் நெருக்கடிகளால் மனம் மூழ்கி மூர்ச்சையாகும்போது மனதின் மீது தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தி என்னை விழிப்படைய வைக்கிறது உனது இசை.
தோட்டத்து பூச்செடிகள் பூக்க மறந்தாலென்ன, உன் இசை அதை சமன்செய்துவிடுகிறது. வெறுந்தரையில் படுத்துக்கொண்டு உன் இசை கேட்கும் இரவுப் பொழுதுகளில் நட்சத்திரங்கள் உதிர்ந்து அருகே இரவு தங்கிவிட்டு விடியலில் எழுந்து செல்வதாக எனக்கு அடிக்கடி தோன்றுகிறது.
உன் பாடலைக் கேட்பது என்பது சாலையில் பயணிப்பது போல, ஒரு சாலையின் முடிவில் இன்னொரு சாலை வந்துவிடுகிறது. ஒரு பாடலின் முடிவில் இன்னொரு பாடலைக் கேட்க மனம் துடித்துக் கிடக்கிறது. ஒரு பாடல் இன்னொரு பாடலுக்கான வழிகாட்டியாக அமைகிறது.
இரு துடிப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் ஒரு மௌனம் எப்போதும் இருக்கும். அதை உன் இசை எங்களுக்கு தந்து துடிப்பை சீராக்குகிறது.
உள்ளக் காயங்கள் ஆற உன் இசை உதவுவதால் நவீன மருந்துகளும் உங்கள் இசையும் ஒரு காட்டு சிகிச்சையாக இருப்பதை உணர முடிகிறது.
இசையைப் பற்றி எழுதுவது என்பது ஒருவகையான மூடநம்பிக்கைதான். இசையைப் படித்து தெரிந்துகொள்வது வேறு வகையான மூடநம்பிக்கைதான். ஆனாலும், எழுத்து ஒரு பொது மொழியின் குறியீடு என்பது குறியீடுகளால் இயங்கும் இசையை எழுதிப் பார்க்க நினைக்கிறது மனது.
ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்ட மனம் தனக்கான உயரங்களைத் தொட்டுப்பார்த்த பின்பு, ஏதோ ஒரு உயரத்திலிருந்து விழ எத்தனிக்கும்போது உங்களின் இன்னொரு பாடலின் இசை வந்து மீட்டு மீண்டும் சில சிகரங்களுக்கு அழைத்துச் சென்று இளைப்பாறி, பயனக் களைப்பின்றி இயல்பு வாழ்க்கைக்கு அழைத்து வந்து ஆசுவாசப்படுத்திவிட்டு சென்று விடுகிறது.
இசைப்பயணத்தில் மட்டுமே அதிக தூரங்கள் மனக் களைப்பை ஏற்படுத்தாது. நான் உங்களுடைய இசையை கேட்க ஆரம்பிக்கும்போது உங்களுடனும் உங்கள் இசைக்குழுவுடனும் இருப்பதுபோல தோன்றுகிறது. சில வினாடிக்குள் நீங்கள் உங்கள் இசைக்குழுவினரை அப்படியே விட்டுவிட்டு சென்று விடுகிறீர்கள். அங்கே இசைக் கருவிகள் மட்டும் இரைந்துகொண்டிருக்கிறது. நானும் சென்று விடுகிறேன். என் மனம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் சில வினாடிகளில் இசைக்கருவிகளும் மறைந்து விடுகிறது. இசை மட்டுமே இருக்கிறது. இசைப்பதும் இல்லை.. கேட்பவரும் இல்லை. ஆம் இசை மட்டுமே இருக்கிறது. அப்படியான இசை அனுபவத்தைதான் உங்கள் இசை எனக்கு ஒவ்வொரு முறையும் தருகிறது.
உங்கள் இசை மனதுக்கு உள்ளேயும் அழைத்துச் செல்கிறது. பிறகு மனதுக்கு வெளியேயும் அழைத்து செல்கிறது. அதனால்தான் விடுபட முடியாமல் ஒரு நிழலைப் போல பின் தொடர்கிறது உங்கள் இசை.
உங்கள் இசை பௌதீக விதிகளுகுள் அடங்காது. மனவெளியில் புதிய பிரபஞ்ச வெளியில் தஞ்சமடைகிறது. மேகங்களின் மீது அமர்ந்து வான்வெளியில் செல்லும் ஒரு இலகுவான வாகனமாக இசை எனக்குள் பலவிதமான எழுச்சிகளை உருவாக்கி என்னை வேறாக மாற்றி அமைக்கிறது ஒவ்வொரு முறையும்.
நான் என்பது ஒவ்வொரு முறையும் இரண்டாகப் பிரிந்து உங்கள் இசை கேட்பதற்கு முன்பு வேறாகவும் இசைக் கேட்ட பிறகு முற்றிலும் வேறாகவும் இருநிலை தவிப்பை அடைந்து என்னை நான் மீட்டு இயல்பு நிலைக்கு தரை தொட வேண்டிய வாழ்க்கைக்கு சபிக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.
டைரி எழுதும் பழக்கம் இல்லாத என்னைப் போன்றவர்கள் உங்கள் இசைக்குறிப்புகள் மூலமாக எங்கள் நாட்குறிப்புகளை குறித்து வைத்து பாடல் கேட்கும்போதெல்லாம் அதன் பக்கங்களை புரட்டி படித்து அடிக்கடி மகிழ்கிறோம். நன்றி இளையராஜா!