AANCHAL MAGAZINE
370 என்பது நம்பிக்கையின் வெளிப்பாடா அல்லது அது வெறும் ஒரு நம்பரா? ஒரு அடையாளத்தின் பரிசா அல்லது தவறாக வழங்கப்பட்ட உரிமையா? 370-ல் நடு எண்ணை விட்டுவிட்டால், 30 மீதமிருக்கும். அதுவே எனது வயது. நான், நாடுக டத்தப்பட்டும் அத்தனை ஆண்டுகள் தான் ஆகின்றன. எங்கள் தாயார் காஷ்மீரில் இருந்து ஒரு குழந்தையாக என்னை அறியாத நிலத்திற்கு கொண்டுச் சென்ற போது என் அம்மாவின் வயதும் இதே 30 தான்.
எங்கள் தாயகத்திலிருந்து வெளியேற எங்களுக்கு அரசு போக்குவரத்து பேருந்துகள் வழங்கப்படவில்லை. இன்று, நாங்கள் ஒரே இரவில் பணக்காரர்களாகவும் மாறவில்லை. பயங்கரவாதத்திலிருந்தும் மத தீவிரவாதத்திலிருந்தும் எங்கள் உயிரைக் காப்பாற்ற நாங்கள் தப்பி ஓடினோம். உயிரைக் காப்பாற்றி, குடும்பமாய் ஒன்றிணைந்து இழந்த வாழ்கையை டெல்லியில் மீண்டும் கட்டியெழுப்பும் போதுதான் எங்கள் தாய்நாடு எங்களுக்கு கற்றுக்கொடுத்த நன்னெறிகளை உணர்ந்தோம். எங்கள் பல வருட போராட்டத்தைப் பற்றி என் அம்மா எப்போதும் குறைபேச விரும்பவில்லை, அவள் மனக்கட்டுப்பாடு, பொறுமை மற்றும் உறுதியுடன் வாழ்க்கை கேள்விகளை எதிர்கொண்டாள்.
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு, காஷ்மீரில் உள்ள அவரது குழந்தைப் பருவ நண்பர் காலிதாவுடன் தொலைபேசியில் இணைய முயற்சித்தோம். அங்குள்ள ஹெல்ப்லைன்களை நிர்வகிக்கும் அதிகாரிகள், தனது நண்பருடன் பேச அவளுக்கு உதவுவாரா? என்று அம்மா என்னிடம் கேட்டாள். அதற்கு என்னிடம் பதிலும் இல்லை.
2012 ஆம் ஆண்டில் எங்கள் தாய்நாடான காஷ்மீருக்கு முதல் முறையாக பயணித்தோம். ஸ்ரீநகரின் புறநகரில் திருமணத்தில் கலந்து கொண்ட பிறகு காலிதாவை அவரது வீட்டில் சந்திக்கச் சென்றோம். முதல் சில நிமிடங்களுக்கு, ஒருவருக்கொருவர் கட்டிப்பிடிக்கும்போது, அவர்கள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. பின் காலிதா , “நாம் வாழ்க்கையில் மீண்டும் சந்தித்தால், நீங்கள் எனக்கு எதிராக வெறுப்பு காட்டக்கூடாது என்று நான் அடிக்கடி நம்பினேன்", என்று கூறினாள். என் அம்மா உடைந்து போனார்கள்! . பிறகு என் அம்மா இவ்வாறாக பதில் அளித்தாள், "நான் உன்னை ஏன் வெறுக்கிறேன், இதெற்கெல்லாம் யார் பொறுப்பானவர்களோ, அவர்களின் நடவடிக்கைகள் உச்ச சக்தியால் தீர்மானிக்கப்படும்.
முந்தைய நாள், என் அம்மா எங்களை ஸ்ரீநகரின் ஹப்பா கடலில் உள்ள தனது முன்னாள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த வீடு தான் பாட்டி, பெற்றோர், சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் அவள் வாழ்ந்து, வளர்ந்த இடம். இப்போது இருக்கும் புதிய குடியிருப்பாளர்கள் அவளை வரவேற்ற போதிலும், அவள் தயக்கத்தோடு எங்களுக்கு சில ஆவணங்களை காண்பிப்பதற்காக மாடிக்குச் சென்றாள்.
புதிய குடியிருப்பாளர்கள் என் தாயைப் பார்த்து, "நீங்கள் இங்குள்ள சிறிய பொருட்களை தாராளமாக திருடிக் கொள்ளலாம், ஏனெனில் பெரிய பொருட்களை உங்களால் எடுத்துச் செல்ல இயலாது" என்பது போல் சொன்னார்கள். அதைக் கேட்டதும் என் தொண்டை அடைத்தது. மெதுவாய், என் அம்மாவைப் பார்த்தேன். அவள் அமைதியாகச் சிரித்தாள். பிறகு என் தாய் அவளுடைய சில புத்தகங்கள் / ஆவணங்கள் / சான்றிதழ்களை நீங்கள் வைத்திருக்கிறார்களா? என்று கேட்டார். “நீங்கள் திரும்பி வரமாட்டீர்கள் என்று நாங்கள் நினைத்தோம், எனவே அதையெல்லாம் தூக்கி எறிந்தோம்.’ என்று பதில் அளித்தனர்.
கடந்த இரண்டு வாரங்களாக, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு நிலையை ரத்து செய்வது குறித்த எனது கருத்தைக் கேட்க நண்பர்கள் செய்தி அனுப்பினர். இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?. ஏறக்குறைய 30 ஆண்டு கால ஜம்மு-காஷ்மீரிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின் காஷ்மீர் குறித்த எனது பார்வையை ஆர்வத்துடன் மற்றவர்கள் கேட்பது இதுவே முதல் முறை என்று கூறலாம். நான் அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன் - இந்த முடிவு எங்களைப் பற்றியது அல்ல!
என் தாய்வழி தாத்தா மற்றும் பாட்டி எங்களைத் தாயகத்திற்கு திரும்ப வேண்டும் என்ற ஏக்கத்திலேயே காலமானார்கள். தனது இளமை காலத்தை அடகு வைத்து எங்களை வளர்ப்பதற்கு என் பெற்றோர் போராடினார்கள். இன்று எங்களை முன் வைத்து நோயின் பின்னால் அவர்கள் ஒளிந்திருக்கிறார்கள். குழந்தைப் பருவத்திலே ஏன் தாய்நாட்டைத் தொலைத்தேன் என்ற கேள்வியைக் கேட்கவும் இல்லை கேட்க வாய்ப்பும் இல்லை.
சிறப்பு அந்தஸ்த்து ரத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை நான் கேட்டபொழுது, இந்த அறிவிப்பில் எங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் நிச்சயமாக அங்கு வசிக்கும் காஷ்மீரிகள் பற்றிய குறிப்பு இதில் உள்ளது. அங்கே இப்போதும் மக்கள் வாழ்கின்றனர் என்பதை நான் மௌனமாய் என் மனதிற்குள் ஒலித்தேன்.
நம்பிக்கை, மாற்றம் பற்றிய வாக்குறுதியாய் இருந்தது அது. வஞ்சகம், பயங்கரவாதம் மற்றும் அதிகார அத்துமீறல் இருந்து விடுபடுவதற்கான உறுதிமொழி அது. எங்களது மிகவும் பிரியமான தாய்நாடான காஷ்மீருக்கு அமைதிக்கான வாய்ப்பை வழங்குவதற்கான வாக்குறுதி அது. வாக்குறுதிகள் கிடைக்குமா? எனக்குத் தெரியாது - 30 வருடங்களுக்கு முன்பு காஷ்மீரில் இருந்து நாங்கள் இடம்பெயரும் போது எப்படி இனம் புரியாதது போல் உணர்ந்தேனோ, அதைத் தான் இப்போதும் உணர்கிறேன். ஆனால், நான் சமாதானத்தை நம்புகிறேன். எனது காஷ்மீர் என்றுமே புனிதர்கள், அறிஞர்கள் மற்றும் உள்ளுணர்வுவாதிகளின் இடம்.
அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். கண்டிப்பாக இது தகுதியான வாய்ப்பு. நான், ஒரு காஷ்மீரி என்ற முறையில், அடுத்த தலைமுறை காஷ்மீரிகளுக்கு நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த கட்டுரை முதன்முதலில் ஆகஸ்ட் 19 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ' நாளிதழில் "அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்" என்ற தலைப்பில் வெளிவந்த ஒன்று.