அமைதிக்கான ஒரு வாய்ப்பு!

ஜனநாயகத்திற்கும் காஷ்மீரின் பாரம்பரியத்திற்கும் வைக்கப்படிருக்கும் இந்த சோதனையை கடந்து முன்னேறுவோமானால் பள்ளத்தாக்கில் அமைதி என்பது மீண்டும் துளிர்க்கும்

ஃபயர்தஸ் தக்

வன்முறைகளாலும் தொடர் தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் குடிமகனாக இருப்பதில் தான் எத்தனை சிக்கல்கள். இறுதியாக அமைதி என்ற வார்த்தையின் மீதான நம்பிக்கை, எனக்கு இப்போது தான் வருகின்றது. பெற்றவர்களை இழந்த பிள்ளைகளையும், பிள்ளைகளை இழந்த பெற்றோர்களையும், கல்லறைகளையும், பிணங்களையும், வன்முறைகளையும், தூக்கமில்லா இரவுகளையும் பார்க்கும் போது நாங்கள் இழந்த அமைதியை திரும்பப் பெறுவது என்பது வெறும் கனவாகவே தான் இருக்கப் போகின்றது என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அடல் பிஹாரீ வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக்குப் பின்பு, நாங்கள் இழந்த அமைதியை மீட்டுத் தரும் வகையில் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கைளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது பாராட்டத்தக்கது.

இன்று காஷ்மீரின் நிலை எப்படியாக மாறிவிட்டது என்று கவனித்திருக்கின்றீர்களா? இப்பகுதி இளைஞர்களெல்லாம் தூப்பாக்கியினை தூக்கிக் கொண்டு தங்களுக்கு பிடித்த பாதையில் வீட்டையும் உறவினரையும் விட்டு விலகிச் செல்கின்றார்கள். இறுதி அழைப்பு என்று சொல்லிக் கொண்டு வன்முறையில் இறங்குகின்றார்கள். அவர்களுக்கு அஜாதி என்பது பெருங்கனவாகிவிட்டது. அதனால் தான் இந்த அரசாங்க அமைப்பிற்கு எதிராக சண்டையிட்டு உயிர் துறப்பதை கௌரவம் என்றும், அஜாதிக்கான தியாகம் என்றும் கருதி வன்முறையில் இறங்கி இறந்தும் விடுகின்றார்கள். இந்த வன்முறைகள் இவர்களை கதாநாயகர்களாக மக்கள் மனதில் காட்சிப்படுத்துகின்றது. அதன் விளைவாக இவர்களின் இறுதி ஊர்வலங்களில் மக்கள் அதிக அளவில் கலந்து கொள்கின்றார்கள்.

இதுநாள் வரை எத்தனை வன்முறையாளர்கள் இறந்து போனார்கள் என்பதை அறிந்து கொள்வது மிகச் சுலபம். இணையத்தில் தேடினால் அதற்கான பதில்கள் கிடைத்துவிடுகின்றது. விக்கிப்பீடியாவில் இது தொடர்பாக ஆப்ரேஷன் ஆல் அவுட் என்ற பக்கம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. வன்முறையாளர்களையும் தீவிரவாதிகளையும் ஒழித்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக இந்திய பாதுகாப்புப் படையால் உருவாக்கப்பட்ட அமைப்பு தான் இந்த ஆப்ரேஷன் ஆல் அவுட். இணையத்தில் இருக்கும் இலவச இன்சைகுளோபேடியாவில் தரப்பட்டிருக்கும் தரவுகள் படி, மே 6, 2018 வரை 70 வன்முறையாளர்கள், 15 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மேலும் துப்பாக்கிச் சூடு, கல்லெறிதல் போன்ற வன்முறைகளால் 30ற்கும் மேற்பட்ட குடிமக்கள் இறந்திருக்கின்றார்கள்.

கடந்த இரண்டு வருடங்களில் கொல்லப்பட்ட கலகக்காரர்களில் நிறைய பேர், மதிப்பு பெற்ற குடும்பத்தில் இருந்து வந்த படித்த இளைஞர்கள் தான். இந்த மாதத் தொடக்கத்தில் ஷோபியான் மாவட்டத்தில் இறந்த வன்முறையாளர்களில் ஒருவர் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வந்தவர். அரசாங்கத் தரவுகளின் படி கொல்லப்பட்ட வன்முறையாளர்களில் 90% பேர் உள்ளூர்வாசிகள் தான். காஷ்மீர் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட தருணத்தில், கடந்த 3 வருடங்களில் 280க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயங்கரவாதக் குழுக்குகளில் தங்களை இணைத்துக் கொண்டார்கள் என்று கூறப்பட்டது. மேலும் கடந்த வருடம் மட்டும் சுமார் 126 பேர் இணைந்துள்ளார்கள். 2010லிருந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி கடந்த வருடம் மிக அதிகமான எண்ணிக்கையில் பயங்கராவாத குழுக்களில் தங்களை இளைஞர்கள் இணைத்துக் கொண்டார்கள்.

அரசியல் காரணங்களிற்காக மட்டுமே இது போன்ற வன்முறைகள் வெடிக்கின்றன என்பதைப் பற்றி அறியாத வன்முறையாளர்கள் இவர்கள். தொடர்ந்து இளைஞர்கள் கொல்லப்படுவதும் அவர்கள் ஆயுதமேந்துவதும் ஒரு ஜனநாயக நாட்டிற்கு நல்லதே இல்லை என்பதை உணர இவர்களுக்கு அதிக காலம் தேவைப்பட்டிருக்கின்றது. இன்று பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்து வன்முறையில் ஈடுபடும் இளையோர்களின் வயது 13ல் இருந்து 30 வரைதான். இவர்கள் தான் 2002ல் இருந்து 2008வரை பள்ளதாக்கில் நடைபெற்ற அமைதியை கேள்விக்குறியாக்கிய அத்தனை மோசமான நிகழ்வுகளையும் கண்டு வளர்ந்தவர்கள்.

மெஹபூபா முஃப்தி தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவிற்கு பின்னர் வன்முறை நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றது அரசு. இது தொடர்பார்க மத்திய அரசின் ஆலோசனையை அவர் பெற்று இந்த முடிவிற்கு வந்துள்ளார். ஏற்கனவே ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கை இழந்த மக்களுக்கு புது தைரியம் தர இந்த முடிவை எடுத்துள்ளார் மெஹபூபா. ஆட்சி செய்பவர்கள் மக்களின் குறையினை வன்முறைகள் இன்றியும் அறிந்து கொள்ள இயலும் என்று கூறிய அவர், வன்முறை நிறுத்த நடிவடிக்கைகளை 2000ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியின் கீழ் மேற்கொண்டதைப் பற்றிக் குறிப்பிட்டு பேசினார். ஐந்து மாதங்கள் வரை நீடித்த இந்த நடவடிக்கைகளின் போது எந்த ஒரு வன்முறையும் நிகழவில்லை. எந்த ஒரு அரசு உடமைகளும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என்றும் குறிப்பிட்டார்.

வன்முறைகளை தடுக்க தொடர்ந்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுபட்டு வரும் மெஹபூபாவின் கருத்துகளை வைத்து தேசிய அளவில் அவரை தனிநாடு கோரும் மென்மையான புரட்சியாளராக அடையாளப்படுத்த முயல்கின்றார்கள். ஆனால் அவர் வன்முறையாளர்களை வீட்டிற்கு திரும்பிச் செல்லும்படியும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்கும்படியும், மதகுருக்களிடம் வன்முறையால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் தொடர்ந்து பேசும் படியும் அறிவுறுத்துகின்றார். ஒவ்வொரு முறையும் மத்திய அரசிடம் தங்களுக்கான கோரிக்களை முன்வைக்கும் போதும் எதிர்கட்சிகள் யாவும் அவரை அதிகார ஆசைக்காக அவர் இப்படியெல்லாம் நடந்து கொள்கின்றார் என்று கூறுகின்றார்கள். ஆனால் அவரை நல்ல தலைவராக அவருடைய மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அமைதியை நிலை நிறுத்த அவர் செய்யும் ஒவ்வொரு முயற்சியையும் அம்மக்கள் மதிக்கின்றார்கள். இரமலான் மாதத்தை முன்னிட்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஆயுத படைகளின் செயல்பாடுகள் யாவும் ரத்து செய்யபடுகின்றது என்று மத்திய அரசு அறிவித்திருக்கின்றது என்பது வரவேற்க தக்கது.

முன்னேற்றத்திற்கும் மறுசீரமைப்பிற்கும் அமைதி மிக முக்கியமானது. காஷ்மீர் பற்றி நரேந்திர மோடி சென்ற சுதந்திர தின விழாவில் ஆற்றிய உரையில் “காஷ்மீரின் பிரச்சனைகள் அனைத்தையும் அம்மக்களை அரவணைப்பதால் மட்டுமே சரியாகும் அன்றி தோட்டாக்களாலும் வன்முறைகளாலும் அல்ல” என்று கூறியிருக்கின்றார்.

2003ல் காஷ்மீரில் இருந்து திரும்பி வந்த திரு. வாஜ்பாய் “காஷ்மீரின் பிரச்சனைகள் யாவும் சரிசெய்யப்படும் என்பதற்கான உத்திரவாதத்தினை நாங்கள் அளிக்கின்றோம். எந்த ஒரு துப்பாக்கியாலும் கிடைக்காத அமைதியும் முடிவுகளும் சகோதரத்துவத்தால் கிடைக்கும். மனிதம், ஜனநாயகம், மற்றும் காஷ்மீரின் பரம்பரியம் என்ற மூன்றையும் பின்பற்றி நாம் முன்னேறுவோமானால் அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகும்” என்று பாராளுமன்றத்தில் ஏப்ரல் 23ல் பேசினார்.

வன்முறைகளுக்கு இனிமேல் இம்மண்ணில் இடமில்லை என்று நாம் உணரவேண்டிய தருணம் இது. மத்திய மாநில அரசின் முன்னெடுப்புகளை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து செயல்பட வேண்டும். ஆயிரம் அரசியல் மற்றும் சித்தாந்த காரணங்களால் நாம் வேறுபட்டிருப்பினும். நாட்டின் பெயராலோ, சுதந்திரத்தின் பெயராலோ இனி ஒரு துளி இரத்தமும் இந்நிலத்தில் சிந்த வேண்டாம். இந்த இனிய தொடக்கம் பலருக்கு சந்தேகத்தினை தரலாம். இம்முடிவு பற்றி தொடர்ந்து கேள்விகளும் கருத்துகளும் எழலாம். ஜனநாயகத்திற்கும் காஷ்மீரின் பாரம்பரியத்திற்கும் வைக்கப்படிருக்கும் இந்த சோதனையை கடந்து முன்னேறுவோமானால் பள்ளத்தாக்கில் அமைதி என்பது மீண்டும் துளிர்க்கும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 17.5.18 அன்று, பிடிபி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஃபயர்தஸ் தக் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழில் : நிதியா பாண்டியன்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close