நேரு, இந்தியா ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொண்ட ஒரே இளவரசன். இந்தியா என்கிற தத்துவம் செத்துப்போகாமல் காப்பாற்றிய தனிமனித சேனை நேரு.
நேருயிஸத்தைக் கொலை செய்துவிட வேண்டும் என்றுதான் இந்துத்துவம் கடந்த 55 ஆண்டுகளாக மூச்சுமுட்ட உழைத்துக் கொண்டிருக்கிறது. வெட்ட வெட்ட துளிர்க்கின்ற இராவண சிரம் போல, இந்துத்துவத்தின் கொடூர தாக்குதல்களை தாண்டியும் வளரும் தேகம் நேருயிஸத்துடையது.
நேருவை ஒரு பெண் வெறியனாக கட்டமைத்தது இந்துத்துவம். ஆனால், நேருவின் மனைவி கமலா 1936-ல் இறந்தபிறகு, உடலுறவு வாழ்க்கையிலேயே பிடிப்பற்றவராக, சோர்வுற்றவராக நேரு இருந்தார் என்கிறார் நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட்.
நேரு இந்தியாவுக்கு கொடுத்தது என்ன?
இந்திய சுதந்திரம் ஒரு சர்வதேச பிரச்னை என்கிற தெளிவை நேருவே இந்தியாவுக்குள்ளும், உலக அரங்கிலும் எடுத்துச் சென்றார். அமெரிக்கா தான் 20, 21-ம் நூற்றாண்டின் மையமாக இருக்கும் என சொல்லும் உலகப்பார்வையும், துணிச்சலும், சர்வதேச தொடர்புகளும் 1930-களின் பின்பகுதியிலேயே நேருவுக்கு இருந்தது.
இன்றைக்கு மோடி ஒரு சர்வதேச தலைவர் என இந்துத்துவம் சொல்லும்போது நகைக்கத் தோன்றுகிறது. ஒரு இந்துத்துவ நேருவை உருவாக்கிவிட வேண்டும் என காந்தாரியைப் போல வயிற்றில் அடித்துக் கொள்கிறார்கள் இந்துத்துவவாதிகள். ஆனால், நேரு இருந்த உயரத்தின் சுவடை இந்துத்துவத்தால் எட்ட முடியாது.
ஒரு சின்ன சீன் சொல்கிறேன். 1930-களின் இறுதியில் உலகப் பயணங்கள் மேற்கொண்ட நேரத்தில் நேருவுக்கு உதவியாகவும், சர்வதேசத் தொடர்புகளுக்கு பாத்திரமாகவும் இருந்தது சீனம். சீனம் குறித்து நேருவுக்கு ஆத்மார்த்தமான நேசம் இருந்தது. அவருடைய 'இந்திய தரிசனம்', 'உலக வரலாற்று சித்திரம்' இரண்டிலும் சீனத்தை அவர் வியந்தோதுகிறார்.
1930-களுக்கு அடுத்த 20 ஆண்டுகளில் 1950-ல் நடந்த ஐ.நா கூட்டத்தில் சீனப்பிரதமர் சௌ என் லாயை மற்ற நாட்டின் தலைவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் அளவுக்கு விண்முட்டும் அளவுக்கு உயர்ந்து நின்றவர் நேரு! காந்திக்கு அடுத்து இந்தியா முழுமைக்கும் மிக அதிகமாக பயணம் செய்தவர் நேரு மட்டுமே. அந்த பயணம்தான், அழுகிக்கொண்டிருக்கும் இந்திய உடலுக்கு வெள்ளமென பாய்ச்ச வேண்டிய நவீன ஊசியை அவருக்கு தெளிவுப்படுத்தியது.
காந்தியின் மிக நெருக்கமான சீடர்கள் பட்டேல், ராஜேந்திர பிரசாத். இருவருமே இந்து மனம் கொண்டவர்கள். ஆனால், காந்தியோடு மோதிய, ஆனால் காந்தியை மீறாத மகத்தான மகன் நேரு. 'நவீன சமூகத்தின் எழுச்சியின்போது மதமும், கடவுளும் சிதைந்து வீழ்வதை நான் கண்கொட்ட பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன்' என சொல்லும் ஆகிருதிமிக்க நவீனன்.
தொழிற்புரட்சியின் கரங்கள் எல்லையற்று விரிவதை உணர்ந்துகொண்ட சிந்தனாவாதி. நேரு நிகழ்த்திய பயணங்கள், மகத்தான மக்கள் செல்வாக்கு, நவீன மனம் இது மூன்றும்தான் உடனடியான இந்துத்துவ அபாயத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றியது.
சுதந்திரத்திற்கு பிறகு கலப்புப் பொருளாதாரம் என்கிற பெயரில் 'வலது - இடது' கலந்த ஒரு அரசாங்கத்தை நேரு கட்டியமைத்தார். ஆனால், அதை நடைமுறைப்படுத்தும் முறைமைகளை அவர் அமெரிக்காவிடமிருந்து பெறவில்லை. மாறாக, சோவியத்தையே அவர் தேர்ந்தெடுத்தார். அந்தத்தேர்வுதான் வலது ஆதிக்கம் அதிகரித்துவிடாத பிடிமானத்தைத் தந்தது.
காஷ்மீர் விவகாரத்தை நேருதான் கெடுத்தார் என இந்துத்துவம் கூவுகிறது. ஆனால், ஹைதராபாத்தை இந்தியாவோடு இணைத்ததே நேருவின் சாமர்த்தியம் தான். பட்டேலுக்கு அதில் பெரும் பங்கில்லை. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தப்போது, நேருவே அதைச் செய்துகாட்டினார் என்கிறார் ராமச்சந்திர குஹா.
மிக ஓட்டையான ஒரு அரசு இயந்திரத்தை வைத்துக்கொண்டு தன்னால் முடிந்ததையெல்லாம் செய்தார் நேரு. அரசு இயந்திரத்தின் மொண்ணைத்தனங்களை எரிச்சலோடு நேருவே பகிர்ந்திருக்கிறார்.
இவ்வளவு மகத்துவம் இருந்தாலும் நேரு பல சிக்கல்களுக்கு உள்ளாகினார். நேருவியத்தின் முழுமையான அடுத்த தலைமுறை பிரதிநிதிகளை உருவாக்காமல் விட்டது அதில் முதன்மையானது. அவர் வாழும் காலத்திலேயே காங்கிரசை இந்துத்துவம் பெருமளவு செல்லரித்துவிட்டது.
ஒற்றை தேசமாக இருப்பதால் கிடைக்கும் சர்வதேச வலிமை முக்கியமானது என நினைத்தார். பாகிஸ்தான் போனால் போகட்டும், வலிமையான மைய அரசோடு ஒருங்கிணைந்த இந்தியாவை வைத்துக் கொள்ளுங்கள் என்கிற மௌண்ட்பேட்டனின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட நேரு, போலிக்கூட்டாட்சி தத்துவத்தை இந்தியாவின் அரசியலமைப்பாக்கினார்.
பாகிஸ்தான் பிரிவினையால் கோடிக்கணக்கான மக்கள் ரத்தமும், சதையுமாய் அடித்துக்கொண்டு நாறியதைக் கண்ட நேரு மாநில சுயாட்சியை வெறுத்தார். இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் வேறு எவரையும்விட அதிகம் ஆதிக்கம் செலுத்தியது நேரு தான் !
ஒருங்கிணைந்த இந்தியா , மத அபாயம் என்கிற நோக்கில் பார்க்கிறபோது 'வல்லாண்மைமிக்க மைய அரசு' என்கிற நேருவின் எண்ணத்தை தவறு என கருத இடமில்லை. ஆனால், அதே போலிக்கூட்டாட்சி இந்துத்துவத்தின் முறைவாசல் ஆகக்கூடும் என்கிற அபாயத்தை அவர் சிந்திக்கவில்லை.
இடஒதுக்கீட்டின் வரலாற்று இன்றியமையாமையும், மொழி தேசிய இனங்களின் உரிமைகளையும் நேரு முழுமையாக உள்வாங்கவில்லை. கம்யூனிச ஈர்ப்பும், சோசலிச கனவும் கொண்ட அவரது கண்களுக்கு 'ஒற்றை சமத்துவ மனிதமே' கண்ணில் பட்டது.
சரி. நேருவை எப்படி அணுகுவது?
நேருவை 'திராவிட இயக்கத்தின் நேருவான' அண்ணாவின் கண்களில் இருந்து அணுக வேண்டும். மாநில சுயாட்சி, பொதுவுடமை பரவலாக்க அரசாங்கம், சமூக நீதி, இன தேசியம், மொழி தேசியம், எல்லாவற்றையும் செரித்துத் திங்கும் பார்ப்பனியத்தையே உட்செரிக்கும் ஆற்றல் என நேரு எங்கெல்லாம் தவறினாரோ, அதையெல்லாம் இட்டு நிரப்பிய பேருண்மையாக அண்ணாவே இருக்கிறார்.
20-ம் நூற்றாண்டு நேருவிய நூற்றாண்டு என்றால், 21ம் நூற்றாண்டு அண்ணா உடையது. இன்னொருவகையில் சொல்லவேண்டும் என்றால், 20-ம் நூற்றாண்டில் நேருவை வைத்து தப்பிப்பிழைத்ததைப் போல, 21-ம் நூற்றாண்டில் தப்பிப்பிழைக்க வேண்டும் என்றால் அதற்கு அண்ணாவே வழி.
நேரு எனும் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரத்தை, அண்ணா எனும் கொட்டிக்கிடக்கும் செங்கல் மலைக்குவியலிலிருந்து பார்க்க வேண்டும். அந்த கோபுரத்தில் இருக்கும் விரிசல், தள்ளாட்டம், போதாமை எல்லாம் கண்ணுக்குத் தெரியும்.
இதுவரை நேரு கோபுரம் விரிசல் விடும்போதெல்லாம், அண்ணாவின் பாரம்பரியம் அதற்கு இடஒதுக்கீடு சிமெண்ட் பூசி, சமூக நீதி செங்கல் வைத்து, அதிகாரப்பரவலாக்க கரைசல் கொடுத்து காப்பாற்றியது.
நேரு பாரம்பரியமும், அண்ணா பாரம்பரியமும் நிகழ்த்திக் கொள்ளும் உரையாடலே இந்தியாவை வழிநடத்தப் போகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.