(தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டு இந்த கட்டுரை வெளியிட்டப்படுகிறது.)
ஜெயலலிதா மறைந்து சரியாக ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்திலும் தமிழக அரசியல் ஜெயலலிதாவை சுற்றியே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் மர்மங்கள், நடப்பது அம்மாவின் ஆட்சி என்கிற பிரகடனங்கள், அம்மாவின் அசலான வாரிசுகளாக` தங்களை நிலைநிறுத்திக்கொள்ள சசிகலா குடும்பத்தினர் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் என்று தமிழக அரசியலில் நடக்கும் களேபரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஜெயலலிதா மறைந்து சில நாட்களில் சசிகலாவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் ஜெயலலிதா போன்ற தோற்றத்துடனும் பாவனைகளுடனும் வலம் வந்தது ஜெயலலிதா என்னும் ஆளுமைக்கு தமிழ் பரப்பில் இருந்த தாக்கத்தின் அடையாளம்.
ஆனால் இந்த தாக்கம் எந்த மாதிரியானது என்பது பற்றிய கேள்விகள் இப்போது எழுகின்றன.
இந்த ஒரு வருடத்தில் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது நடக்காத, நடக்க முடியாத பல சம்பவங்கள் அரங்கேயிருக்கின்றன. அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் ஜெயலலிதாவின் பல முடிவுகளும் கட்டுப்பாடுகளும் இப்போது காற்றில் பறக்கின்றன. உயிரோடு இருந்த வரையில் சசிகலாவின் குரலை கூட தமிழ் கூறும் நல்லுலகு கேட்டதில்லை. இறந்து சில நாட்களில் கட்சியின் பொது செயலாளரான சசிகலா டிசம்பர் 31ம் தேதி முதல் உரையை நிகழ்த்தினார். உரை பற்றியும் குரல் பற்றியும் சமூக வலைதளங்களிலும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் அலசல்கள் நடத்துமளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த நிகழ்வு இருந்தது.
ஆனால் அதைவிட பிரமிக்க வைப்பது தமிழக அமைச்சர்களின் பேச்சுகள். ஜெயலலிதா இருந்த வரையில் அமைச்சர்கள் பேசுவதற்கு அதிகாரப்பூர்வமற்ற தடை இருந்தது. அப்படியொரு தடைக்கு நியாயம் கற்பிப்பது போல இப்போது அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். அனுபவம் வாய்ந்த அதிகாரிகளிடம் மட்டுமே ஆலோசனை பெறும் ஜெயலலிதா, அமைச்சரவை ஜனநாயக அரசின் தேவை என்பதாலேயே வைத்துக்கொண்டதாகச் சொல்கிறார், அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர். அமைச்சர்களையும் கட்சியினரையும் அடிமை மனநிலையிலேயே ஜெயலலிதா வைத்திருந்ததன் விளைவை இன்று தமிழகம் எதிர்கொண்டு வருகிறது. அடிமை மனநிலையிலிருந்து பிறக்கும் பயமும் மரியாதையும் எத்தனை போலியானது என்பதை இன்று காலம் காட்டிக்கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்த நீட், உதய் போன்ற திட்டங்களுக்கு இப்பொதிருக்கும் அரசு அனுமதி வழங்கியதும் இந்த அடிமை மனநிலையின் நீட்சியே.
தனக்கு பிறகு கட்சி இருக்க கூடாது என்று எம்.ஜி.ஆர் நினைத்ததாக சில ஆய்வாளர்கள் சொல்வார்கள். தனக்கு பிறகும் கட்சி நூறாண்டு தழைக்கும் என்று ஜெயலலிதா பிரகடனப்படுத்தியிருந்தாலும் உண்மையிலேயே அவர் அந்த எண்ணத்திலிருந்தாரா என்கிற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது இப்போது அதிமுக சந்தித்து வரும் பிரச்னைகள்.
அதிமுகவிற்குள் இப்போது நடக்கும் அதிகார யுத்தங்களும் நிழல் போட்டிகளும் அந்த இயக்கத்தின் எதிர்காலம் பற்றிய தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன. இரட்டை இலையை வென்றிருந்தாலும் ஆர்.கே நகரில் ஜெயித்தால் மட்டுமே அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி தனது எதிர்காலம் குறித்த அச்சங்கங்கள் சற்று குறைந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அப்போதும் அதிமுக மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் ஆளுகையிலிருந்து வெளியேற முடியுமா என்பது கேள்விக்குறியே.
இப்போது நடக்கும் இந்த பிரச்னைகளிலிருந்து அதிமுக தன்னை ஒரு வலிமையான தலைமையோடு மீட்டெடுத்துக் கொள்ள முடியுமென்றால் அந்த கட்சிக்கு அரசியல் ரீதியாக ஒரு புத்தியிர்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஜெயலலிதா தலைமையின் கீழிருந்த ஒரு அடிமைக் கட்சி என்கிற அடையாளத்தை துறந்து ஜனநாயகத் தன்மை கொண்ட ஒரு இயக்கமாக அது தன்னை வளர்த்தெடுக்கும் சாத்தியங்கள் உருவானால் அது உண்மையிலேயே தமிழக அரசியலில் ஒரு முக்கியமான நகர்வாக இருக்கும். ஆனால் அப்படியொரு நகர்வு இனி தமிழ்ச் சூழலில் சாத்தியமா என்று தெரியவில்லை.
வி.கே.சசிகலாவின் முதல் பேச்சு:
ஜெயலலிதா நினைவு தின கட்டுரைகள் படிக்க…
1.தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் முதல் பெண் உறுப்பினர், ஜெயலலிதா – ச.கோசல்ராம்
2. தாய்ப்பாசத்துக்காக ஏங்கிய ஜெயலலிதா – ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா
3. “ஜெயலலிதா யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க” – செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு