ஆ.சங்கர்
(ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது. ஜெயலலிதா இல்லாத தமிழகம் எப்படி இருக்கிறது என்பதை ஆ.சங்கர் அலசி ஆராய்கிறார்.)
2014 செப்டம்பர் 2014ன் இறுதி. தமிழக ஆளுனர் மாளிகையில் ஒரு பதவியேற்பு விழா. முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அவரோடு அமைச்சர்களும் பதவியேற்க தயாராக காத்திருந்தனர். தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள பத்திரிக்கையாளர்களும் வந்திருந்தனர்.
ஆளுனர் பன்னீர்செல்வத்தை அழைத்து, பதவிப் பிரமாணத்தை படிக்கத் தொடங்கினார். ஆளுனர் படிக்கத் தொடங்கியதும், ஓ.பன்னீர்செல்வமாகிய நான் என்று அவரையொற்றி சொல்ல வேண்டிய பன்னீர்செல்வம், திடீரென்று குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார். ஆளுனருக்கு என்னவென்று புரியாமல் அவர் அழுது முடிக்கும் வரை காத்திருந்தார். பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்து கண்களை துடைத்துக் கொண்ட பன்னீர் தேம்பியவாறே பதவிப் பிரமாணம் செய்து முடித்தார்.
அவரை அடுத்து அமைச்சர்கள் பதவியேற்க வந்தார்கள். ஏற்கனவே பன்னீர்செல்வம் அழுது விட்டதால், அவரை விட அதிகமாக அழ வேண்டும் என்று தேம்பி தேம்பி அழுதார்கள். அந்த பதவியேற்பை தொடர்ந்து தமிழகம் அதிர்ச்சி சம்பவங்களை சந்தித்தது. அம்மாவுக்கு தண்டனையா, கடவுளை மனிதன் தண்டிப்பதா என்று அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் பல்வேறு புதுமையான போராட்டங்களை கையாண்டார்கள். அலகு குத்தினார்கள். காவடி தூக்கினார்கள். சாலைகளில் உருண்டார்கள். கோவிலில் பூஜை செய்தார்கள். மண் சோறு சாப்பிட்டார்கள். மொட்டை அடித்துக் கொண்டார்கள். பெண் நிர்வாகிகள் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்கள். பன்னீர்செல்வம் சாதாரண முதல்வர். ஆனால் மக்கள் முதல்வர் அம்மாதான் என்றார்கள்.
அதற்கு முன்பாகவும் அவர்கள் சாதாரணமாக இருந்தவர்கள் இல்லை. ஜெயலலிதா வரும் வாகனத்தின் டயரை தொட்டு கும்பிடுவார்கள். மலர்கொத்து அளிக்கையில், 90 டிகிரியில் வளைவார்கள். சாஷ்டாங்கமாக காலில் விழுவார்கள். ஜெயலலிதா வரும் ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடுவார்கள். அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளின் அம்மா பக்தியைப் பார்ப்பவர்கள் வியந்து போவார்கள். ஒரு தலைவரை இப்படியெல்லாம் நேசிக்க முடியுமா? இப்படியும் வெறித்தனமாக ஒரு தலைவரை நேசிப்பார்களா என்று ஆச்சர்யத்தில் மூழ்குவார்கள்.
அழுது கொண்டே பதவி ஏற்கும் அமைச்சர்கள் வீடியோ...
மறுபுறம், அரசியல் நோக்கர்களும், நடுநிலையாளர்களும் ஜெயலலிதா ஏன் இவற்றை அனுமதிக்கிறார் என்று கேள்வி எழுப்புவார்கள். இத்தனை பேரை, குறிப்பாக வயதில் மூத்தவர்களை காலில் விழ வைத்து அழகு பார்க்கிறாரே ஜெயலலிதா இது சரியா என்று கேள்விகள் எழுந்தன.
அது மட்டுமல்லாமல், எந்த காரண காரியமும் இல்லாமல் திடீரென்று அமைச்சர்களை பந்தாடுவார் ஜெயலலிதா. தேர்தல் நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரத்தில் கூட வேட்பாளரை மாற்றுவார். ஜெயலலிதா ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார். வேறு எந்த கட்சிகளிலும் இது போல நடப்பது கிடையாதே என்றும் ஜெயலலிதா மீது கடும் விமர்சனங்கள் அப்போதே எழுந்ததுண்டு. ஆனால் இத்தகைய விமர்சனங்களை ஜெயலலிதா என்றுமே பொருட்படுத்தியது கிடையாது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அந்த செப்டம்பர் 22 வரை, அவர் தன் அமைச்சர்களையும், எம்எல்ஏக்களையும், கட்சி நிர்வாகிகளையும் அப்படித்தான் நடத்தினார்.
அவர் ஏன் அப்படி நடத்தினார் என்பதற்கான காரணங்களைத்தான் நாம் கடந்த ஒரு ஆண்டாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஜெயலலிதா ஆட்சியில், எந்த அமைச்சரும் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதோ, பேட்டியளிப்பதோ கிடையாது. அவர் ஏன் அமைச்சர்களை அப்படி வைத்திருந்தார் என்பதை நாம் கடந்த ஒரு ஆண்டாக அமைச்சர்கள் உளறிக் கொட்டுவதன் மூலம் பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஒரே ஒரு முறை பிஜேபியோடு கூட்டணி வைத்து பிஜேபி அமைச்சரவையில் பங்கேற்றார் ஜெயலலிதா. 13 மாதங்களில் அந்த ஆட்சியை கவிழ்த்ததோடு பின்னர் ஒரு நாளும் பிஜேபியோடு கூட்டணி வைத்ததில்லை ஜெயலலிதா. பிஜேபியோடு கூட்டணி வைத்தற்காக, 2001 தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிறுபான்மை மக்களிடம் மன்னிப்பு கோரினார் ஜெயலலிதா.
தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடியோடும், பிஜேபி அமைச்சர்களோடும் நல்ல நட்பு உண்டு. பிஜேபியில் இன்று அமைச்சர்களாக உள்ள மூத்த வழக்கறிஞர்களான அருண் ஜெய்ட்லி, ரவிசங்கர் பிரசாத் போன்றோர், ஜெயலலிதாவுக்காக நீதிமன்றத்தில் வாதாடியவர்கள். ஆனால் இந்த நட்பு எந்த விதத்திலும், தமிழக நலனுக்கு குறுக்கே நிற்க ஜெயலலிதா அனுமதித்ததே இல்லை.
2014 பொதுத் தேர்தலில் நாடு முழுக்க பிஜேபி அலை வீசியது. பிஜேபி எப்படியாவது அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று தலைகீழாக நின்றது. கடைசியாக வெறும் 4 சீட்டுகளை ஒப்புக் கொள்ள பிஜேபி தயாராக இருந்தது. ஆனால், ஜெயலலிதா கூட்டணி கிடையவே கிடையாது என்று மறுத்தார். ஒரு புறம் திமுக காங்கிரஸ் கூட்டணி. மற்றொரு புறம், பிஜேபி, தேமுதிக, பாமக என்ற கூட்டணி. ஆனால் துணிச்சலாக தனியாக போட்டியிட்டார் ஜெயலலிதா. “மற்ற மாநிலங்களில் மோடி அலை வீசலாம். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்த லேடிதான்“ என்று முழங்கினார். சொன்னது போலவே 37 தொகுதிகளில் வெற்றி பெற்று, மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை இடம் பெற வைத்தார்.
அந்த தேர்தலுக்கு பிறகாவது அதிமுகவோடு நெருக்கம் காட்ட வேண்டும் என்று பிஜேபி கடுமையாக முயற்சி செய்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா வீட்டில் இருந்தபோது, நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி ஜெயலலிதாவை வீட்டுக்கே சென்று பார்த்தார். அதன் பிறகு நரேந்திர மோடியும் சென்று பார்த்தார்.
ஆனால் ஒரு நொடி கூட தமிழகத்தின் நலன்களை சமரசம் செய்து கொள்ள ஜெயலலிதா தயாராகவே இல்லை. நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தார். தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படும் என்று கடுமையான கடிதங்களை எழுதினார். மின் திட்டமான உதய் திட்டத்துக்கு வலுவாக எதிர்ப்பை பதிவு செய்தார். தமிழகத்தின் வரி வருவாயை பாதிக்கும் பொது சேவை வரியை தீவிரமாக எதிர்த்தார். தமிழகத்தின் நலன்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தும் போதெல்லாம் அவற்றை தீவிரமாக எதிர்த்து வந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரால் செயல்பட முடியாத நிலையில் முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றார். எந்த கலந்தாலோசனையும் இல்லாமல், உதய் மின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். நீட் தேர்வுக்கான சட்டத்துக்கு சம்மதத்தை தெரிவித்தார். ஜிஎஸ்டி மசோதாவுக்கும் தலையாட்டினார்.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவி அனிதா மரணமடைந்தபோது, தமிழகமே குமுறியது. ஆனால் அந்த சட்டத்தை ஒப்புக் கொண்டு கையெழுத்திட்ட அதிமுகவின் அமைச்சர்கள் கள்ள மவுனம் காத்தார்கள். மாணவி அனிதாவின் மரணத்தில் எங்களுக்கும் வருத்தம்தான் என்று நீலிக் கண்ணீர் வடித்தார்கள். தமிழகத்துக்கு வருகை தரும் பிஜேபி தலைவர்களெல்லாம் ஜெயலலிதாவை ஒரு முறையாவது பார்க்க முடியாதா என்று அவரது நேரத்துக்காக தவம் கிடந்தது வரலாறு. ஆனால் வாரத்துக்கு பல முறை டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட தமிழக அமைச்சர்களும், முதலமைச்சரும் பிஜேபியிடம் முழுமையாக சரணடைந்து தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.
மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு, தமிழகம் வந்து தலைமைச் செயலகத்திலேயே ஆய்வு நடத்தினார். மத்திய அரசோடு ஒத்துழைப்பு இல்லையென்றால், தமிழகத்துக்கான நிதி விரைவாக ஒதுக்கப்படாது என்று வெளிப்படையாகவே பேசினார் ஒரு மத்திய அமைச்சர். தமிழகத்தின் நலன்களை காவு கொடுத்து, டெல்லிக்கு காவடி எடுத்த தமிழக அமைச்சர்கள் தங்களின் பிஜேபி விசுவாசத்தை எந்த அளவுக்கு காண்பித்தார்கள் என்றால், டெங்கு விழிப்புணர்வுக்காக அரசு சார்பாக கட்டப் பட்டிருந்த பேனர்களை வழக்கமான பச்சை நிறத்துக்கு பதிலாக காவி நிறத்தில் தயாரிக்கும் அளவுக்கு சென்றார்கள்.
அதிமுக அமைச்சர்களின் அத்தனை நடவடிக்கைகளும், சந்தேகத்திற்கு இடமின்றி உணர்த்தியது ஒன்றே ஒன்றைத்தான். இவர்கள் ஒரு நாளும் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தவர்கள் அல்ல. இவர்கள் தங்களைத் தவிர வேறு ஒருவருக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. வார்த்தைக்கு வார்த்தை அம்மாவின் வழிகாட்டுதலின்படி நடக்கும் அம்மாவின் ஆட்சி என்று கூறுபவர்கள் அம்மா இப்படி தமிழகத்தின் நலனை பலி கொடுப்பாரா என்பதை ஒரு நொடி கூட சிந்தித்ததில்லை. அம்மா அரசு பேனர்களை காவி நிறத்தில் தயாரிப்பாரா என்பது குறித்து கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்பதையே உணர்த்துகிறது.
ஆனால் இவர்களெல்லாம் யார், இவர்கள் எப்படிப்பட்டவர்கள், சமயம் வரும்போது எந்த ரூபத்துக்கும் மாறக் கூடியவர்கள் என்பதை ஜெயலலிதா நன்றாகவே உணர்ந்திருந்தார் என்பதை நாம் இப்போதுதான் புரிந்து கொள்ள முடிகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவை ஒரு மனதாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து அவர் வீட்டுக்கு சென்று, அதிமுகவை தலைமையேற்று வழி நடத்துங்கள் என்று மன்றாடிய அமைச்சர்கள் பட்டாளம், சசிகலா சிறை சென்றதும், தலைகீழாக மாறினார்கள். சசிகலாவால் சீட் பெற்று, சசிகலாவால் அமைச்சரவையில் இடம் பெற்று, சசிகலாவின் ஆசியால் கோடீஸ்வரர்களான அதே அமைச்சர்கள் சசிகலாவை கொள்ளைக்காரி என்றார்கள். தீய சக்தி என்றார்கள். சசிகலாவால்தான் கட்சியே சீரழிந்தது என்றார்கள்.
சசிகலா நல்லவரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், இன்று அமைச்சர்களாக இருக்கும் ஒவ்வொருவரும் சசிகலாவின் தயவில்தான் எம்எல்ஏவானார்கள், அமைச்சரானார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த அமைச்சர் பெருமக்களின் ஜெயலலிதா விசுவாசம் என்ன என்பதை, சில நாட்களுக்கு முன் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகள் தெள்ளத் தெளிவாக காட்டியது. ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் கால் கடுக்க காத்து நின்றவர்கள்தான் இந்த அமைச்சர்கள். அம்மாவின் இல்லம் எங்களது கோவில் என்றார்கள். அந்த கோவிலில் நள்ளிரவு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
இதற்கு காரணமானது மத்திய அரசு என்பது குழந்தைக்குக் கூட தெரியும். ஆனால் ஒரே ஒரு அமைச்சரின் வாயிலிருந்து கூட மத்திய அரசை கண்டித்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. ஒரு அமைச்சர் அம்மா தவறிழைக்கவில்லை. ஆனால் அவருக்கு பிறகு, அந்த வீட்டில் குடியிருந்த சசிகலாவால்தான் வருமான வரி சோதனை என்றார்.
அமைச்சர்களின் இந்த நடத்தை இவர்கள் எப்படிப்பட்ட சுயநலமிகள், தங்கள் நலனுக்காக எதையும், யாரையும் காவு கொடுக்க தயங்காதவர்கள் என்பதையே உணர்த்தியது.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டது உட்பட அவருக்கு ஏற்பட்ட அவப் பெயர், ஊழல் குற்றச் சாட்டுகள் என்று அத்தனைக்கும் சசிகலாவை எளிதாக காரணமாக சுட்டிக் காட்ட முடியும்.
ஆனால் நாம் யாருமே மறுக்க முடியாத உண்மை, சசிகலா கடைசி வரை ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தார் என்பதே. தன் கணவரை பிரிந்து, ஜெயலலிதாதான் தனக்கு எல்லாமும் என்று ஜெயலலிதாவின் நலனையே தன் நலனாக கருதி இருந்தார் என்பதுதான் உண்மை. சசிகலா ஊழல் செய்தார், அவரின் உறவினர்கள் கோடிக் கணக்கில் கொள்ளையடித்தார்கள் என்பதும் உண்மைதான் என்றாலும், இந்த அமைச்சர்களும் ஜெயலலிதா ஆட்சியில் சம்பாதித்தவர்கள்தானே? யாராவது ஒரே ஒரு விசுவாசியை காட்ட முடியுமா?
1995ம் ஆண்டு, அமலாக்கத் துறையால் சசிகலா அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, 11 மாதங்கள் சிறையில் இருந்தார். அப்போது அவரிடம் சொல்லப்பட்டது என்னவென்றால், ஜெயலலிதாவுக்கு எதிராக வாக்குமூலம் கொடுங்கள், உங்களை விட்டு விடுகிறேன் என்பதே. ஆனால் இறுதி வரை, வாக்குமூலம் கொடுக்க மறுத்து சிறையை ஏற்றார் சசிகலா.
ஒரு வேளை உயிரோடு இருந்து, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றிருந்தாரென்றால், ஜெயலலிதாவை ஒரு நொடியில் கொள்ளைக்காரி என்று கூறி விட்டு, தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கு தயங்கியிருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ?
இரும்பு மனுஷி, கம்பீரமானவர், உறுதியான மனதுக்கு சொந்தக்காரர் என்றெல்லாம் ஜெயலலிதா புகழப்பட்டாலும், சசிகலாவைத் தவிர அவருக்கு இறுதி வரை யாருமே துணையாக இருந்ததில்லை என்பதே யதார்த்தம். கோடிக்கணக்கான மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு மாபெரும் தலைவராக இருந்த ஜெயலலிதா தன் வாழ்க்கை முழுக்க துரோகிகளால் சூழப்பட்டே வாழ்ந்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் புகழ் கோட்டையில் உள்ள ஒவ்வொரு செங்கலாக பிஜேபியின் துணையோடு பிரித்துக் கொண்டிருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும். இந்த துரோகிகள் நடுவிலோ வாழ்ந்திருக்கிறோம் என்று நினைத்து, ஜெயலலிதா தன் கல்லறையில் புரண்டு படுத்திருப்பார்.
ஜெயலலிதா நினைவு நாள் சிறப்புக் கட்டுரைகள்...
1.தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் முதல் பெண் உறுப்பினர், ஜெயலலிதா – ச.கோசல்ராம்
2. தாய்ப்பாசத்துக்காக ஏங்கிய ஜெயலலிதா – ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா
3. “ஜெயலலிதா யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க” – செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு
4. ஜெயலலிதா இல்லாத ஒரு வருடம் – கவிதா முரளிதரன்
5. “அம்மா”என்ற முத்திரையை தக்கவைத்துக் கொள்ள காத்திருக்கும் சவால்கள் - பால்ராஜா
6. “உலகத் தலைவர்களின் வரலாற்றைப் படிப்பது அம்முவுக்குப் பிடிக்கும்” – ஏவி.எம்.சரவணன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.