ஜெயலலிதா நினைவு தினம் : குழந்தை பிறந்திருந்தால் மறைத்திருக்கமாட்டார்

ஜெயலலிதா நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மூத்த பத்திரிகையாளர் துரைகருணா, ‘ஜெயலலிதாவின் வாழ்க்கை திறந்த புத்தகம்’ என்கிறார்.

துரைக்கருணா

அறுபதுகளில் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ஜெயலலிதா எம்.ஜிஆரோடு இணைந்து நடித்து உச்ச நட்சத்திரமாக பிரபலமானவர்.

12 ஆண்டுகளுக்கும் மேலாக அன்றைய முன்னணிக் கதாநாயகர்களான சிவாஜி, ஜெமினிகணேசன், ரவிச்சந்திரன், முத்துராமன் உள்ளிட்ட பலரோடும் இணையாக நடித்து எழுபதுகளின் மத்தியில் திரையுலகில் இருந்து விலகினார்.

பின்னர் எண்பதுகள் வரையிலும் நாட்டிய நாடக குழுவை உருவாக்கி, ‘காவிரீ தந்த கலைச் செல்வி’, ‘மதுரநாயகி’ உள்ளிட்ட நாட்டிய நாடகங்களை நடத்தியதுடன், அதில் அவரும் பங்கேற்றார்.

1981ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற 5ம் உலக தமிழ்ச்சங்க மாநாட்டில் ‘மதுரைநாயகி’ நாட்டிய நாடகத்தை அன்றைய முதல் அமைச்சர் இடம் பெறச் செய்தார்.

திரையுலக வாழ்விற்கு பிறகு எம்.ஜி.ஆரோடு இருந்த நெருக்கம் விலகி இருந்த நிலையில் இந்த நாட்டிய நாடகம் மூலம் மீண்டும் தொடர்பு ஏற்படுத்த உதவியது.

அதைத் தொடர்ந்து, 1982ல் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு தொடங்கியது.

முன்னதாக, ஜெயலலிதா எழுத்துறையிலும் தமது முத்திரையைப் பதித்தவர். கல்கி, குமுதம், தாய், துக்ளக் உள்ளிட்ட பத்திரிகைகளில் நாவல்கள் கட்டுரைகள் எழுதினார். குமுதம் வார இதழில் தனது சொந்த வாழ்க்கை குறித்தும் ஜெயலலிதா எழுதி இருக்கிறார். அதில் நடிகர் சோபன் பாபுவுடன் சுமார் இரண்டு வருடங்கள் வாழ்ந்ததாக (கோயிங் ஸ்டெடி) குறிப்பிட்டிருந்தார்.

சோபன்பாபுவின் மனைவி, தனது இரண்டு குழந்தைகளுடன் வந்து காலில் விழுந்து கதறி அழுததாலே, தாம் சோபன்பாபுவை விட்டு விலகியதாகவும் ஜெயலலிதா எழுதியிருந்தார்.

அந்தக் கால கட்டத்தில் ஜெயலலிதா குழந்தை பெற்றுக் கொண்டதாக அவரும் சொல்லவில்லை. அவரைச் சார்ந்தவர்களோ, உறவுகளோ, நட்பு வட்டமோ அல்லது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களோ, அவரது வீட்டுப் பணியாளர்களோ எவருமே சொல்லவில்லை.

ஆனாலும், அவர் உயிரோடு இருந்த காலம் தொட்டு, அவரது மறைவுக்குப் பிறகும் அவருக்கு குழந்தை பிறந்ததாகவும், அது ஹைதராபாத்தில், பெங்களூருவில் வளர்ந்ததாகவு, ஏன் அமெரிக்காவில் இருப்பதாகவும் கூட பரவலாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன.

நிச்சயமாக ஜெயலலித குழந்தை பெற்றிருந்தால், அவர் வெளிப்படையாகவே அதை அறிவித்திருப்பார். என் வாழ்க்கை திறந்த புத்தகம் என அடிக்கடி கூறிய ஜெயலலிதா, ஒருவரோடு நான் குடும்பம் நடத்தினேன் என பகிரங்கமாக அறிவித்த ஜெயலலிதா, இதை மறைத்திருக்கமாட்டார். மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

1982ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த ஜெயலலிதா, சத்துணவு உயர்மட்ட குழு உறுப்பினர், அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் என படிப்படியாக அரசியலில் பல உயர்வுகளைப் பெற்றார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, 1988ம் ஆண்டு அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, சுமார் 4 மாதங்கள் தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டி எங்கும், மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்தார். தொண்டர்களின் ஆதரவைத் திரட்டினார். அதனால்தான், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையாரின் தலைமையிலான அதிமுக ஜா அணியை அவரால் அரசியலில் இருந்து ஒதுங்கச் செய்ய முடிந்தது.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசுதாம் தான் என 1989 தேர்தல் மூலம் நிருபித்த ஜெயலலிதா, 1991ம் ஆண்டே அதிமுகவை ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வந்தார்.

எம்.ஜி.ஆர். போல 1977-80-84 என தொடர்ந்து மூன்று தேர்தல்களை சந்தித்து, வெற்றிகளைப் பெற முடியாவிட்டாலும் 1991-2001-2011-2016 என நான்கு முறை அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமைக்குச் சொந்தக்காரராக திகழ்ந்தார்.

குறிப்பாக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தமிழ் நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளைக் கைப்பற்றி, நாடாளுமன்றத்தில் அதிமுகவை 3வது பெரிய கட்சியாக அமர்த்தியதும், 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தை களம் இறக்கி 134 இடங்களைக் கைப்பற்றி 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் இருந்த கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தும் ஜெயலலித நிகழ்த்திய வரலாற்று சிறப்பு மிக்க சாதனையாகும்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அவர் அசாத்திய துணிச்சல் மிக்கவர் என்பது அனைவராலும் ஏற்கத்தக்க ஒன்றுதான். ஆனாலும் அரசியலிலிம் ஆட்சி நிர்வாகத்திலும் அவரின் போக்கு சில நேரங்களில் திசை மாறி அதனால் பல நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தது.

வளர்ப்பு மகன் திருமணம், எஸ்மா, டெஸ்மா சட்டம், ஆடு, கோழி வெட்ட தடை, மதமாற்ற தடைச் சட்டம், ரேசன் அட்டைகளில் மாற்றம் போன்றவை மக்களிடம் அவர் மீதான அதிருப்திக்கு காரணமாக அமைந்தன.

தனக்கு நெருக்கமான உயிர்த் தோழி குடும்பத்தினருக்கு அவர் அளித்த கட்டுப்பாடற்ற சுதந்திரத்தாலும் பெரும் நெருக்கடிகளை ஜெயலலிதா சந்திக்க நேர்ந்தது. பல வழக்குகளை எதிர்கொள்ளும் நிலை உருவானது. ஒரு கட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய துரதிஷ்ட நிலை உருவானது. அரசியல் பொது வாழ்வில் எளிமை, நேர்மை, உண்மை என வாழ்ந்த தலைவர்கள்தான் எந்தவிதமான விமர்சனங்களுக்கும், உள்ளாகாமல், மக்கள் மதிக்கத் தக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். மறைந்தும் மறையா புகழோடு வாழ்கிறார்கள்.

ஆனால், அந்த வகையில் ஜெயலலிதா அந்த இடத்தைப் பெற முடியாதது துரதிஷ்டமே.

அறிவு, ஆற்றல், தகுதி, திறமை என்ற பன்முகத் தன்மை இருந்தும் அதை சரியாக முறையாக அவர் கையாளாததால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் பல்வேறு விமர்சன கனைகள் அவர் மீது வீசப்பட்டுக் கொண்டிருகின்றன.

இதையும் தாண்டி, மக்களுக்கும் இந்த மாநிலத்துக்கும் அவர் செய்த சில நற்செயல்கள் அவருக்குப் புகழ் சேர்க்கும்.

(கட்டுரையாளர் துரைகருணா, மூத்த பத்திரிகையாளர்.)

×Close
×Close