ஜெயலலிதா படத்திறப்பு - சர்ச்சைகள் சரியா?

ஜெயலலிதா, மீதான விமர்சனங்களையும் தாண்டிய ஒரு ஆளுமையாகவும், மக்கள் அபிமானம் பெற்றவராகவும் திகழ்ந்தவர் என்பதால் அவரது படம் சபையில் திறக்கப்பட்டுள்ளது.

அரவிந்தன்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம், தமிழ்நாடு சட்டசபையில் திறக்கப்பட்டு இருப்பது பலத்த விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. நீதிமன்றத்தின் ஆய்வையும் எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. சட்டசபையில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்திராத தலைவர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன மக்களால் மதிக்கப்படும் தலைவர்கள் என்ற முறையில் அவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிலரும் வழக்குகளை எதிர்கொண்டு இருக்கிறார்கள். சிறைக்கும் சென்று இருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்கான எதிர்ப்பு, அவர் ஊழல் வழக்கை சந்தித்தவர் என்பதால் எழுந்து இருக்கிறது.

எனினும் ஜெயலலிதாவுக்கு எதிராக முந்தைய தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்ட ஊழல் குற்றசாட்டுகள் தொடர்பான பல வழக்குகளில் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இறுதியாக அவர் மறைவுக்கு முன்பு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்த சொத்து குவிப்பு வழக்கிலும் கூட விசாரணை நீதிமன்றம் அவரை தண்டித்திருந்தாலும், கர்நாடக உயர்நீதிமன்றம் அவர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையுமே விடுவித்திருந்தது. இது ஒருபுறம் இருக்க இந்த வழக்கு நிலுவையில் இருந்த அதே காலகட்டத்தில்தான், 2001, 2011, 2016 என மூன்று முறை சட்டசபை தேர்தலில் மக்கள் அவருக்கு அமோக ஆதரவளித்து அவரை முதலமைச்சர் ஆக்கினார்கள் என்பதை மறந்துவிட முடியாது. அவர்மீதான நிலுவையில் இருந்த வழக்கு பற்றி மக்களிடம் அப்போது எதிர்கட்சிகள் விஸ்தாரமாக பிரச்சாரம் செய்தும், அதை புறம்தள்ளி மக்கள் அவரது கட்சியை வெற்றிபெற செய்தார்கள்.

சரி – இந்த ‘மக்கள் தீர்ப்பு’ மட்டுமே அவரது படம் சட்டசபையில் வைக்கப்பட போதுமான தகுதியாகி விடுமா என்ற கேள்வி எழக்கூடும். மக்களின் நம்பிக்கையை இழக்காமல் இருந்த தலைவராக ஜெயலலிதா விளங்கினார் என்பதற்கான ஒரு குறியீடு அது. அதற்கான உதாரணம் – 2016 ல் அவர் இறுதியாக வென்ற போது, தொடர்ச்சியாக இரண்டாவது முறை பொது தேர்தலில் ஆளுங்கட்சி வென்ற பெருமையை 36 ஆண்டுகளுக்கு பிறகு (1980 – ல் எம். ஜி. ஆர்.) அவர் பெற்றார். அந்த தேர்தலின் போது வாக்களித்த மக்களுக்கு, ஜெயலலிதா மீது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையிலிருந்த சொத்து வழக்கின் தீர்ப்பு எந்நேரமும் வெளியாகலாம் என்பது நன்கு தெரியும்.

எனவே ஜெயலலிதா மீதான வழக்குகளையும், விமர்சனங்களையும் தாண்டி மக்களால் – குறிப்பாக பெண்களால் நேசிக்கப்பட்ட சக்திவாய்ந்த ஒரு தலைவராக அவர் விளங்கினார். அவரது துணிவும், போர்க்குணமும் பலரையும் கவர்ந்தது. அரசியலில் ஈடுபடும் பெண்கள் மிக கடுமையான தனிப்பட்ட வகையிலான விமர்சனங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அவற்றை வெற்றிகரமாக கடந்து வந்தவர் என்பதும் ஜெயலலிதா மீதான ஈர்ப்புக்கு முக்கியமான ஒரு காரணம் தவிர, தனது ஒவ்வொரு பதவி காலத்திலும் குறிப்பிட்டு சொல்லத்தக்க சில பணிகளை அவர் நிறைவேற்றி காட்டினார் என்பதும் அவர்பெற்ற மக்கள் ஆதரவுக்கு அடிப்படையாக அமைந்தது.

உதாரணமாக, 1991 முதல் 1996 வரையிலான அவரது முதல் பதவிக்காலம் தான், அவர் மீதான கடும் விமர்சனங்கள் எழுந்த காலகட்டம். அவர் முன் நின்று நடத்திய ஒரு டாம்பீக திருமணம், தேவையற்ற முறையில் மேற்கொண்ட மகாமக குளியல் போன்ற நிகழ்வுகள் அப்போது நடந்தவை தான். ஆனாலும் அவரது அதே பதவிக்காலத்தில்தான், தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் சில பகுதிகளில், வறிய மக்கள் பெண் குழந்தை பிறந்தால் உடனே கள்ளிப்பால் கொடுத்து கொன்றுவிடும் கொடிய பழக்கம் நிலவி வந்ததை, ‘தொட்டில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்’ என்ற திட்டம் மூலம் ஜெயலலிதா முடிவுக்கு கொண்டு வந்தார். வளர்க்க முடியாதவர்களின் பெண் குழந்தைகளை அரசு பாதுகாக்கும் என்பதுதான் அத்திட்டத்தின் சாரம். இந்த முயற்சிக்காக ஜெயலலிதாவை அன்னை தெரசா நேரில் வந்து பாராட்டினார். அதே போல பெண் போலீஸ் அதிரடி படை பிரிவையும் அந்த பதவிக்காலத்தில் அவர் உருவாக்கினார்.

2001-ல் அவரது பதவி காலத்தில், தமிழக – கர்நாடக பகுதிகளில் யானைகளையும், வனக்காவலர்களையும் கொன்று சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்டு, இருமாநில அரசுகளுக்கு தலைவலியாக இருந்த, ‘காட்டு ராஜா’ வீரப்பனை அதிரடிப்படையின் மூலம் வீழ்த்த வழி செய்தார். சென்னை குடிநீர் பிரச்சனையை பெருமளவு தீர்க்க உதவிய புதிய வீராணம் குடிநீர் திட்டம் கொண்டுவந்தார். இது நிறைவேறுவது சாத்தியமா என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் வெற்றிகரமாக முடித்தார்.

இவற்றை எல்லாம் கூட நிர்வாக ரீதியான முதலமைச்சரின் பணிகள் என்று சாதாரணமாக கடந்து விடலாம். ஆனால் அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் சவாலாக விளங்கக்கூடிய சிலவற்றையும் வெற்றிகரமாக முடிக்க அவரது விடா முயற்சியும், துணிவுமே காரணமாக அமைந்தன. எதிர் கட்சியினரும் பாராட்டிய அப்படிப்பட்ட இரு விஷயங்கள் – பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் எந்த மாநிலத்திலும் இல்லாத 69 சதவிகித இடஒதுக்கீட்டை அரசியல் சட்ட பாதுகாப்புடன் உறுதி செய்தது அவரது ஆட்சி தான். அவரை துளியும் ஏற்காத பெரியார் நிறுவிய திராவிடர் கழகம் இந்த ஒரு செயலுக்காக ஜெயலலிலதாவை, ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று போற்றியது.

அதே போல தமிழகத்தின் நீண்ட கால பிரச்னையான காவேரி நீர் பிரச்னைக்கு தொடர் சட்ட போராட்டம் மூலம், நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை பெற்று, அதை மத்திய அரசு கெசட்டில் வெளியிடுமாறு செய்து, அதற்காக டெல்டா மாவட்டங்களில் உள்ள அத்தனை விவசாய சங்கங்களின் பாராட்டையும் பெற்றார்.

ஆக, ஜெயலலிதா, அவர் மீதான பல விமர்சனங்களையும் தாண்டிய ஒரு ஆளுமையாகவும், மக்கள் அபிமானம் பெற்றவராகவும் திகழ்ந்த ஒரு தலைவர் என்ற முறையில் தான் அவரது படத்தை சட்ட சபையில் திறக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு என்பதில், அரசியலும் சில கட்சிகளின் தனிப்பட்ட காழ்ப்பும் மேலோங்கி இருப்பதை மறுக்க முடியாது அ. தி. மு. க. இப்போது பலவீனமாக இருப்பதால், எதிர்ப்பாளர்களின் குரல் வலுவாக தெரிகிறது. ஆனால் மக்களிடம் இந்த எதிர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தோன்றவில்லை. குறிப்பாக பெண்கள், ஜெயலலிதா பற்றிய இப்போதைய விமர்சனங்களை ரசிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் எதிப்பு குரல் எடுபடாமல் போவதற்கு இன்னொரு காரணம், குறைகூறுவோரில் பலரும் யோக்யவான்கள் இல்லை என்ற கருத்து நிலவுவதுதான்.

×Close
×Close