சமீபத்தில் நோபல் பரிசு வென்ற பொருளாதார ஆய்வறிக்கை, ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் நிறுவனங்களை உருவாக்க வேண்டும், என்று சொல்கிறது. ஐ.ஐ.டி.,க்காக (IIT) நடத்தப்படும் ஒன்றுபட்ட (பொறியியல்) நுழைவுத் தேர்வில் (Joint Entrance Examination-JEE) தற்போது பின்பற்றப்படும் தேர்வு முறை அப்படிப் பட்டதாக இல்லை.
ஆங்கிலத்தில் படிக்க: The JEE system is broken. Here’s how India can produce employable engineers
ஜே.இ.இ தேர்வின் இப்போதைய பிரச்சினை என்ன:
பொறியியல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக எல்லாவற்றையும் துறந்து தங்களைத் தேர்விற்கு தயார் படுத்திக் கொள்கின்றனர். தங்கள் பொன்னான இளமைக் காலத்தைத் தொலைத்து, சோர்வடைந்தும் போய்விடுகின்றனர். இரண்டு சதவீதத்தினர் மட்டுமே வெற்றி பெற்று ஐ.ஐ.டி-களில் நுழைவர் என்பதினால் இது ஒரு விதத்தில் லாட்டரி கிடைப்பது போன்றதுதான். அதனால், தரத்தைக் குறைக்காமல் இந்தத் தேர்வு முறையை மாற்றியமைப்பதின் மூலமாக எல்லா மாணவர்களும் பயன்பெறும்படி செய்யலாம்.
பயிற்சி வகுப்புகள் வெற்றிக்கு வழிவகுத்தாலும் அதன் விலை மிகவும் அதிகம். குறைந்த வருமானம் உள்ளவர்கள் கூட தனது குழந்தையின் பயிற்சிக்காக தனது தகுதிக்கு மேல் செலவு செய்து படிக்க வைக்கின்றனர். வெற்றி வாய்ப்பை இது உயர்த்தினாலும் இந்தப் பயிற்சி உறுதியாக வெற்றியைத் தரும் என்று எந்த உத்திரவாதமும் கிடையாது. வெற்றி பெற முடியாது என்று கருதும் மாணவர்கள் ஒருவித குற்ற மனப்பான்மைக்கு ஆளாகின்றனர், சில அரிதான சூழலில் தற்கொலைக்கும் தூண்டப்படுகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அவர்களின் பயிற்சியைப் பயனுள்ளதாக்கி அவர்களையும் வெற்றிப் பாதையில் வழி நடத்திச் செல்ல தேவையான வழிமுறைகளையும் இனி வரும் பகுதியில் பார்ப்போம்.
கடந்த 2021-22-ல் இந்திய உயர்கல்வியைப் பற்றிய கணக்கெடுப்பின்படி, மொத்தம் பொறியியல் படித்த 39 லட்சம் மாணவர்களில் 29 சதவிகித்தினர் பெண்கள் ஆவர். இது ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மொத்தப் பெண்களின் எண்ணிக்கைக்கு (30 சதவீதம்) ஒன்றியாதகவே உள்ளது. ஆனால், பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு செய்யப்படும் முன்பு இவர்கள் ஐ.ஐ.டி-களில் சேரும் விகிதாச்சாரம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. ஜே.இ.இ பயிற்சிக்கு நிறைய பணம் செலவு செய்ய வேண்டி இருப்பதாலும் நம் சமூகத்தில் பெண்கள் படிக்க அதிகம் செலவு செய்ய முன் வருவதில்லை என்பதாலும், இட ஒதுக்கீட்டைத் தவிர வேறு வழியில்லை. ஆனாலும் இது ஒரு சீரான முடிவு இல்லை.
ஜே.இ.இ பயிற்சியின் போது கற்றவை பிற்காலங்களிலும் உபயோகமாக இருந்தால் எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால் நிலைமை அப்படி இல்லை. எடுத்துக்காட்டாக, முக்கோணவியல் பொறியியல் துறையில் படிக்கும் எல்லோருக்கும் பயனுள்ளதே, ஆனால் அதன் புதிர்வுகளுக்கு விடை காண ஓராயிரம் வழிகளைப் படிப்பது எல்லோருக்கும் பயனற்றது. இதனடிப்படையில், மெக்கின்சி (McKinsey) என்பவரால் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பிரச்சினையைப் பார்க்கலாம். (பின்பு மற்ற கல்லூரிகளில்) பெரும்பாலான பொறியியல் பட்டதாரிகள் வேலைக்குத் தகுதியில்லாதவர்களாக இருக்கின்றனர், ஆனால் அவர்கள் பள்ளியில் நன்றாகப் படித்தவர்களாகவும் ஜே.இ.இ பயிற்சிக்கு மிகவும் கடினமாக உழைத்தவர்களாகவும் இருக்கலாம். இந்தக் கட்டுரையில் பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளைச் செயல்படுத்தினால் தகுதிமிக்க பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கலாம்.
மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பைக் கற்காமல் இருப்பது, குறிப்பாக கட்டாயமாக வேறு ஒரு துறையைப் படிக்க வைப்பது, மற்றொரு முக்கியமான பிரச்சினையாகும். மாணவர்கள் தங்கள் படிப்பைத் தானே தேர்வு செய்ய அனுமதிப்பதுவே இதற்குத் தீர்வாகும்.
கடைசியாக, ஜே.இ.இ தேர்வு நடத்தக் கொடுக்கப்படும் அவகாசம். தற்போது, இந்த நுழைவுத் தேர்வு +2 தேர்வுகள் முடிந்ததில் இருந்து பருவமழை துவக்கத்திற்கு முன்பாகக் கிடைக்கும் குறுகிய காலக் கட்டத்திற்குள் நடத்தி முடிக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்த ஏதாவதொரு காரணமாகத் தவறினால், இந்தியா முழுவதும் மேற்கல்வி படிப்பில் சேரும் அனைத்து வாய்ப்புகளையும் இழக்க நேரிடும்.
தரமான கல்வியைப் பெற ஒரு புதிய திட்டம்
அனைத்து முதனிலை கல்வி நிறுவனங்கலும் (IIT, BITS பிலானி, NIT திருச்சி போன்றவை) வழிகாட்டும் கல்வி நிறுவனங்களாக மாற அனுமதிக்க வேண்டும். இந்தக் கல்வி நிறுவனங்களில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பொறியியல் கல்வியைக் கற்பிக்கக் கூடாது.
இந்நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் நூற்றுக் கணக்கில் கல்வி நிலையங்கள் இருக்கும். 12-ஆம் வகுப்பிற்குப் பின் மாணவர்கள் இந்த நிறுவனங்கள் ஒன்றில் தனக்குப் பிடித்த இடத்தில், பிடித்த படிப்பில் சேரலாம். ஐ.ஐ.டி போன்ற நிறுவனங்கள் இந்த நிலையில் இல்லாமல் இருந்தால், இந்த நிறுவனங்களில் சேருவதில் அதிகமான மன அழுத்தம் ஏற்படாது.
பொறியியல் படிப்பின் இரண்டாமாண்டு முடிவில், வழிகாட்டும் பாடத் திட்டத்தைப் பயில்விக்கும் முதனிலைக் கல்லூரி நிறுவனங்களில் மூன்றாமாண்டு சேர நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். முதல் இரண்டு ஆண்டு வகுப்புகள் இங்கு நடைபெறவில்லை என்பதால், வழக்கமான மாணவர்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பாடத்தின், முதல் இரண்டு ஆண்டுகளின் பொறியியல் பாடத் திட்டம் NPTEL (National Programme on Technology Enhanced Learning) வீடியோவில் உள்ளது போல் இருக்க வேண்டும்.
மாணவர்கள் ஜே.இ.இ தேர்வுக்குத் தங்களை நன்றாக தயார் செய்த பின்பும் தங்களுக்கு விருப்பப்பட்ட வழிகாட்டும் கல்வி நிறுவனங்களில் (IIT போன்றவை) இடம் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரிகளிலேயே மீதமுள்ள இரண்டாண்டு கல்வியையும் தொடரந்து படித்துப் பட்டம் பெறலாம். அவர்கள் NPTEL பாடத்திட்டத்தைத் தொடர்ந்து படித்து வேலையில் சேரும் தகுதியுடன், திறமை வாய்ந்த பட்டதாரியாகலாம். இதன் வாயிலாக பொறியியல் மேற்படிப்பிற்கும், ஆராய்ச்சி மையங்களில் சேரவும் அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் கிடைப்பார்கள்.
அனைத்து முக்கிய பொறியியல் படிப்புகளையும் NPTEL பாடத் திட்டங்கள் மூலம் மாணவர்கள் தொடர்ந்து கட்டணமின்றி படிக்க உதவ வேண்டும், மேலும் அவர்களுடைய மொழிகளிலேயே மொழிபெயர்த்துத் தர வேண்டும். ஐ.ஐ.டி-கள் இலவச இணையவழிக் கல்வி மூலம் தொடர்ந்து இந்தப் பாடங்கள் சம்பந்தப்பட்ட சந்தேகங்களைத் தீர்க்க உதவ வேண்டும்.
வழிகாட்டும் கல்வி நிறுவனங்கள் பாடத்திட்டங்களை வரையறுக்கவும் தங்களது நிதிநிலையை நிர்வகிக்கவும் சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். குறிப்பாக, கட்டணங்களை முடிவு செய்யும் அதிகாரம் அவர்களிடம் இருக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் வழிகாட்டும் நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்பும் கல்வி நிறுவனங்களை வழிகாட்டும் நிறுவனங்களாக உயர்த்த வேண்டும். சிறந்த முறையில் இயங்கும் கல்லூரிகளைக் கண்டறிந்து அவைகளுக்கு வெகுமதி அளிக்க இது ஒரு உறுதியான வழியாகும்.
அதிக எண்ணிக்கையில் வழிகாட்டும் நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்பும் பயிற்சி வகுப்புகளை நடத்தும் நிறுவனங்களையும் வழிகாட்டும் நிறுவனங்களாக உயர்த்த வேண்டும். சிறந்த முறையில் கற்றவர்கள், அதிக வேலைவாய்ப்புத் திறனுடன் இந்த விதமாக தொழில்துறை நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலும். உதாரணமாக, வழிகாட்டும் நிறுவனங்களின் கணினி அறிவியல் துறையில் சேர விரும்புவோர் கணினி மென்பொருள் எழுதும் திறமையைச் சோதிக்க உதவும் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். மென்பொருள் எழுதும் திறன் பெற வேண்டும் என்பதை அனைவரும் அறிய இது உதவும். தற்போதைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், 36,000 கணினி அறிவியல் பட்டதாரிகளில் 1.4 சதவீதத்தினர் மட்டுமே திறமையாக மென்பொருள் எழுத முடிகிறது என்று Aspiring Minds (ஆர்வமிக்க மனங்கள்) நடத்திய ஆய்வு கூறுகிறது.
முன்மொழியப்பட்ட அணுகுமுறை தகவல் தொழில்நுட்பத் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்த பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஜே.இ.இ ஏனைய கல்வித் துறைக்குத் தேவையான திறமையை வளர்த்துக் கொடுக்கும் தேர்வாக விளங்கும்.
கல்லூரிகளின் நான்காவது பருவமுறை (4th Semester) காலங்கள் முழுவதும் ஜே.இ.இ தேர்வை நடத்த இயலும். கொள்குறி வகை (MCQ - Multiple Choice Questions) முறையில் தேர்வு நடத்தி ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான இருக்கைகள் எண்ணிக்கையைவிட 10 மடங்கு மாணவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும். அவர்கள் மேலும் ஒரு சிக்கல் தீர்க்கும் தேர்வில் வெற்றி பெற்ற பின் வழிகாட்டும் நிறுவனங்களில் சேர அனுமதிக்க வேண்டும். உதாரணமாக, வேதியியல் பொறியியல் துறையில் 1,000 இருக்கைகள் இருக்குமானால் 10,000 மாணவர்களை கொள்குறி வகை முறை மூலம் முதற்கட்டமாகத் தேர்ந்தெடுத்து பின்பு அடுத்து ஒரு சிக்கல்-தீர்வு தேர்வின் மூலம் இறுதிச் சேர்க்கை செய்ய வேண்டும். கொள்குறி வகை தேர்வு முறையை ஒன்றிற்கு மேற்பட்ட தடவையில் எழுத அனுமதிக்கலாம். ஒவ்வொரு படிப்பின் துறைக்கும் வெவ்வேறு தேதிகளில் தேர்வு நடத்தப்பட வேண்டும், இது தெரிவு செய்யப்படும் முறையை எளிதாக்கும்.
மேல் மட்டத்தில் உள்ள இரண்டு சதவீதத்தினர் எப்படிப்பட்ட தேர்வுமுறை இருந்தாலும் வெற்றிப் பாதையில் பயணிப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்தத் தீர்வு முன்மொழியப்படுகிறது. இதைப் பரீட்சார்த்த முறையில் ஓரிரு ஐ.ஐ.டி-களில் அறிமுகப் படுத்தலாம். முடிவுகள் திருப்திகரமாக இருந்தால் மற்ற வழிகாட்டும் நிறுவனங்களிலும் இந்த முறையச் செயல்படுத்தலாம்.
கட்டுரையாளர்: கண்ணன் எம். மௌட்கல்யா, ஐ.ஐ.டி பம்பாயில் சிறந்த ஆய்வறிஞர். அவர் எராச் மற்றும் மெஹரூ மேத்தா மேம்பட்ட கல்வி தொழில்நுட்பத் தலைவராகவும், ஐ.ஐ.டி பாம்பேயில் பேராசிரியராகவும் இருந்தார்.
மொழிபெயர்ப்பு: எம்.கோபால்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.