scorecardresearch

என் அறையில் ஜின்னா

ஜின்னா யாரு உனக்கு? அவரு போட்டோ ஏன் நம்ம வீட்டுல இருக்கனும்?

என் அறையில் ஜின்னா

நிருபமா சுப்ரமணியன்

இந்த முறை வீட்டிற்கு சென்ற போது, என் அம்மா “இந்த போட்டோவை வச்சுட்டு என்ன செய்யப் போற” என்றார்.

“எந்த போட்டோ?” என்று நான் கேட்கும் போதே முடிவு செய்துவிட்டேன், என் அம்மா ஜின்னாவைப் பற்றி தான் கேட்கிறார் என்று.

“அது தான் அந்த கருப்பு நிற கோட் சூட் அணிந்து, இரண்டு நாய்களுடன், வாயில் சிகரெட் வைத்த மாதிரி இருக்கின்றதே அந்த புகைப்படம், ஜின்னாவோடது” என்று பதில் கூறினார் என் அம்மா.

“ஏன் இத்தன வருஷம் கழிச்சு இதைப் பத்தி கேட்குறீங்க? என்ன அவசியம் வந்தது அதற்கு?” என்றேன்.

“ஏன் கேட்கின்றேனா? அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் நடந்தது பற்றி உனக்கு ஏதும் தெரியாதா” என்றார் என் அம்மா.

“அம்மா, அது கர்நாடகா எலெக்சன் காரணமாக வந்த பிரச்சனை… அதுவுமில்லாம, இது நம்ம வீடு, நம்ம வீட்டுக்குள்ள வந்து நீ யார் போட்டோவை வச்சுருக்கன்னு எல்லாம் பாக்கமாட்டாங்க…”

“இந்த காலத்துல இதையெல்லாம் பேசாத… வீட்டுக்குள்ள வந்து சோதனை செஞ்சா என்ன செய்வ? கொஞ்ச நாளைக்கு முன்னாடி, யார் வீட்டு ஃபிரிட்ஜ்லையோ மாட்டுக்கறி இருக்குதான்னு தேடுனாங்க தானே. அதெல்லாம் ஞாபகத்துல இருக்கட்டும். அப்பறம் நீ எப்பவும், இந்தியாவும் பாகிஸ்தானும் எப்படி ஒற்றுமையா இருக்கனும்னு அடிக்கடி எழுதுற… அதுக்காகவே இங்க வந்து சோதனை செய்யலாம்”

“அம்மா, நீங்க தேவையில்லாத யோசிக்கிறீங்க” என்றேன்.

“நான் ஒன்னும் பயப்படல… ஜின்னா யாரு உனக்கு? அவரு போட்டோ ஏன் நம்ம வீட்டுல இருக்கனும்… அவரு உனக்கு மாமாவா, இல்ல சித்தப்பாவா?”

“ரெண்டும் இல்லை… அந்த போட்டோ என்னுடைய வரலாறு சம்பந்தபட்டதும்மா”

“இந்த வீட்டுல எங்கயாவது நேரு போட்டோவோ, காந்தி போட்டோவோ இருக்குதா சொல்லு… உன்னுடைய வரலாறுன்னா அதுல இவங்களுக்கு எடமில்லையா? சொல்லப் போனால் இவங்க ரெண்டு பேரு போட்டோவும் தான் இந்த வீட்டுல இருக்கனும். ஜின்னாவோடது கிடையாது”

“நான் இந்த நாட்டோட வரலாறை பத்தி ஒன்னும் பேசல… என்னுடைய வரலாறு, நான் பாக்குற வேலையோட சம்பந்தப்பட்ட வரலாறு… இந்த போட்டோவை, பாகிஸ்தான்ல இருக்குற என் நண்பர் எனக்கு அன்பளிப்பா கொடுத்தது”

“அன்பளிப்பாவா? ஏன் உன் நண்பருக்கு அன்பளிப்பா தர்றதுக்கு வேறெந்த பொருளும் கெடைக்கலையாமா?”

“என் நண்பர் தன்னுடைய வாழ்நாள் முழுமைக்கும், பாகிஸ்தானின் தேசத்தந்தை எப்படி ஒரு மதசார்பற்ற தலைவராக இருந்தவர்ன்னு சொல்லிகிட்டு இருந்தவர்…”

“யாரு மதசார்பற்ற ஆளு… ஜின்னாவா? அவரால தான் நம்ம நாடு ரெண்டா பிரிஞ்சு, காலத்துக்கும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கோம்..”

“அம்மா… உனக்கு நல்லவே தெரியும் நாம நினைக்குறதுக்கும் மேல இருந்தது அந்த பிரிவினைன்னு”

“அதவிடு, யாரந்த நண்பர்… உனக்கு இப்படி ஒரு அன்பளிப்பை தந்த நல்ல மனுஷன்?”

“அர்தேஷிர் கவாஸ்ஜீ – Dawn பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அவரோட கடைசி மூச்சு வரை, ஜின்னா பாகிஸ்தானை எப்படி ஒரு மதசார்பற்ற, அனைத்து மதத்தாருக்கும் சம உரிமை அளிக்கின்ற நாடாக மாற்ற முயற்சி செய்தார்ன்னு எழுதிக்கிட்டே இருந்தவர் அம்மா… அவரை பாக்குறதுக்காக நான் கராச்சி போன போது எனக்கு ரெண்டு போட்டோ கொடுத்து, ரெண்டாவது ஒன்ன யாருக்க்கு வேணும்னாலும் தரலாம்னு சொன்னார்.. நாம நினைக்குறது மாதிரி ஜின்னா இல்லை என்பதற்கு அவர் கைல இருக்குற சிகெரெட்டும், அவர் பக்கதுல இருக்குற நாய்களும், இந்த போட்டோவும் தான் உதாராணம்”

“ஆக உங்கிட்ட இன்னொரு ஜின்னா போட்டோ இருக்குதா?”

“இல்லை… அந்த போட்டோவை நான் என்னோட இன்னொரு பாகிஸ்தான் நண்பருக்கு பரிசா கொடுத்துட்டு வந்துட்டேன்”

“நல்ல வேளை… சரி சொல்லு நாம இந்த போட்டோவை என்ன செய்யப் போறோம்?”

“உனக்கு அது இங்க இருக்குறதுல பிரச்சனைன்னா சொல்லு, நான் போகும் போது கையோட எடுத்துட்டுப் போய்டுறேன்”

“அப்டி எடுத்துட்டுப் போனா, ஏர் போர்ட் எக்ஸ்-ரே செக்கிங்ல மாட்டிக்குவ.. நானும் உங்க அப்பாவும் வந்து தான் உன்னை போலீஸ்ல இருந்து காப்பத்தனும்”

“எக்ஸ்-ரே செக்கிங்ல போட்டோவையெல்லாம் ஒன்னும் கண்டுபிடிக்க முடியாது.. அப்பறம், இது தமிழ் நாடும்மா, உத்திரப்பிரதேசம் கிடையாது. ஜின்னாவோட போட்டோவை வச்சு பிரச்சனை செய்ய…”

“எந்த ஒலகத்துல இருக்குற நீ.. அதிமுகவோட ஜாதகமே அவர் கைல தான் இருக்கு… அவர் ஆட்டுற ஆட்டத்துக்கு ஏத்தமாதிரி தான் இங்க எல்லாரும் ஆடிட்டு இருக்காங்க பொம்மை மாதிரி”

“யாரு கைல”

“பேரெல்லாம் சொல்ல முடியாது”

ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்பு மீண்டும் என் அம்மா ஆரம்பித்தார்… “நான் இந்த போட்டோவ கயித்-இ-மில்லத் ஹாலுக்கு கொடுத்துடுறேன்.. அவங்க கிட்ட ஜின்னா போட்டோ இல்லை”

“அவங்ககிட்ட போட்டோ இல்லைன்னா அவங்களுக்கு அந்த போட்டோ தேவை இல்லைன்னு அர்த்தம்… அதுக்காக அவங்கனால ஒரு ஜின்னா போட்டோ கண்டுபிடிக்க முடியலைன்னோ, யாராவது வந்து தருவாங்கன்னோ காத்துட்டு இருக்காங்கன்னு அர்த்தம் இல்லை”

“நாம் இந்த போட்டோவை யார்கிட்டையாவது கொடுத்துடனும்”

“ஜின்னாவை விடும்மா… அவர் போட்டோல இருந்துட்டுப் போறாரு… கர்நாடக தேர்தல் பத்தி சொல்லு… யாரு முதலமைச்சர் ஆவாங்கன்னு நெனைக்குற”

“இந்த போட்டோவை பத்தி ஒரு முடிவெடுத்துட்டு அப்பறமா பேசலாம்…”

“அம்மா என்னம்மா இது? இந்தியா இன்னும் சட்டதிட்டங்களை மதிக்கிற நாடும்மா”

“நீ குடியிருக்குற பக்கத்தில யாரும் இதெயெல்லாம் கண்காணிக்குறது இல்லையா?”

“அவங்க எல்லாம் பசுவத்தான் கண்காணிப்பாங்க… இன்னும் போட்டோ, வயசானவங்க பக்கமெல்லாம் திரும்பல”

“எல்லோரும் சேந்து கடைசில அத்வானியை என்ன பண்ணிட்டாங்கன்னு பாரு”

(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 18.5.18 அன்று நிருபமா சுப்ரமணியன் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் : நித்யா பாண்டியன்

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Jinnah potrait aligarh muslim university in my room