scorecardresearch

லோதா மரணம் வழக்கு : நீதித்துறையில் கலகத்தை உருவாக்க நடந்த முயற்சி!

சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் சந்திப்பை நிகழ்த்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளும் நால்வரும் உயர்ந்த அனுபவம் பெற்றவர்கள்.

Arun Jaitley

அருண் ஜெட்லி

நீதிபதி லோயாவின் மரணம் குறித்த வழக்கின், 114 பக்க தீர்ப்பை நேற்று நான் வாசித்தேன். மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வின் பிரதிநிதியாக இருந்த நீதிபதி சந்திரசூட் அவர்களால் எழுதப்பட்டுள்ளது இந்த தீர்ப்பு. அவ்வழக்கின் ஒவ்வொறு விஷமத்தனமான விஷயங்களும் மக்கள் மத்தியில், அரசியல் வட்டாரத்தில் பொய்யாக புனையப்பட்டு மிக கச்சிதமாக பிராச்சாரம் செய்யப்பட்டிருப்பது, அந்த தீர்ப்பை வாசிக்கையில் புலப்படுகிறது.

கடந்த காலங்களில் எந்த ஒரு தேசிய அரசியல் கட்சியோ, சில ஓய்வுபெற்ற நீதிபகளோ, சில மூத்த வழக்கறிஞர்களோ தங்களை தாங்களே சதிகாரர்களாக, இது போல் அடையாளம் காட்டிக் கொண்டதில்லை. உண்மைகள் குறித்த மிக விரிவான பகுப்பாய்வு சில குழுக்குளால் முடக்கிவிடப்பட்டுள்ளன. இந்த பகுப்பாய்வு மிக அவசியமான ஒன்று. ஏனெனில் வருங்காலத்திலும் இப்படியான பொய்யையும் புரட்டையும் பரப்பும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக நான் சந்தேகிக்கிறேன்.

சொஹ்ராபுதீன் வழக்கில் அமித் ஷா மீதான குற்றசாட்டு

சொஹ்ராபுதின் வழக்கில் அமித் ஷாவிற்க்கு எந்தவிதமான பங்கும் இல்லை. அவர் மீது பொய்யான ஒரு வழக்கு புனையப்பட்டு, பதியப்பட்டு அது சில மத்திய முகவர்களின் உதவியுடன் மாநில காவல் துறை மூலம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்று. செப்டம்பர் 27, 2013 அன்றைய பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கு நான் எழுதிய மிக விரிவான கடிதத்தில் அனைத்து உண்மைகளையும் மிக விரிவாக விளக்கமாக நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

கொலை வழக்கில் அமித் ஷாவை தொடர்பு படுத்தி வைக்கப்பட்ட ஆதரங்களில் முதன்மையானது ராமன்பாய் பட்டேல் மற்றும் தசரத்பாய் பட்டேல் ஆகிய இருவரின் வாக்குமூலம். இவர்கள் கூறிய கதையின் படி, இவர்கள் இருவரும் அமித் ஷாவின் அலுவலகத்திற்கு, அவர்களின் மீது பாய்ந்து இருந்த PASA(Prevention of Anti Social Activities Act) வழக்கில் தங்களை மீட்க ஆணை பெறுவதற்காக வந்ததாகவும், அதற்கு அமித் ஷா, 75 இலட்சம் ரூபாய் கேட்டதாகவும், அந்த தொகையை அஜய் பட்டேல் என்பவர் மூலம் தவணையில் செலுத்தியதாகவும், இது தொடர்பான அவர்களின் சந்திப்புகளின் போது எதற்காக சொஹ்ராபுதீன் கொல்லப்பட்டான் என்ற தகவலை இயல்பாக அமித்ஷா தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த குற்றத்தை சுமத்திய இரண்டு ஆதாரங்கள் முற்றிலும் தவறானது. காரணம் அன்றைய தினத்தில் அமித் ஷாவினுடைய அலுவலக வருகை பதிவேட்டில் இந்த இரண்டு நபர்களின் பெயர்களும் இல்லவே இல்லை என்பது முதல் உண்மை. இரண்டாவது, இந்த இருவர் மீதும் PASA சட்டம் பாயந்திருக்கவே இல்லை. எப்போதெல்லாம் அந்த 75 இலட்சம் தவணை அமித் பட்டேல் என்பவரால் கொடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளதோ, அந்த நபர் அந்த தேதிகளில் இந்தியாவிலேயே இருக்கவில்லை என்ற உண்மையை அவருடைய கடவுசீட்டு உறுதிப்படுத்துகிறது. இந்த அற்பத்தனமான ஆதரங்களை அமித் ஷாவிற்கு எதிராக எந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தாலும் அங்கே அமித் ஷாவிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கும்.

அமித ஷாவுக்கு ஜாமின் வழங்குகிய போது, குஜராத் உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட வாசகம் “இந்த வழக்கில் எந்த பயனுள்ள ஆதரங்களும் இல்லை” என்பதே. அமித் ஷாவை பொருத்தவரை இந்த முகாந்திரம் அற்ற அற்பதனமான வழக்கை எந்த நீதிபதி விசாரித்திருந்தாலும் அவருக்கு எந்த கவலையும் இருந்திருக்க போவதில்லை. அமித் ஷா இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனாலும் சிலர் இந்த விடுவிப்புக்கு எதிரான மேல் முறையீட்டினை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தனர். அந்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று நீதிபதி லோயா மரண வழக்கில் மிக உற்சாக ஒன்று கூடியிருக்கும் கூட்டத்தில் பெரும்பாலனவர்கள் சொஹ்ராபுதீன் கொலை வழக்கில் அமித் ஷாவுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் தொடர்பு உடையவர்களே.

கேரவன் பத்திரிக்கையின் செய்தி அப்பட்டமான பொய்

உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பின் படி, நீதிபதி லோயாவிற்கு நாக்பூர் ரவி பவனில் டிசம்பர் 1, 2014 ஆம் நாள் அதிகாலையில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவருடன் இரண்டு மாவட்ட நீதிபதிகளும் இருந்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் இருந்த மற்ற இரண்டு சக நீதிபதிளுக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின் அந்த நான்கு மாவட்ட நீதிபதிகளும், மற்ற அதிகாரிகளும் நீதிபதி லோயாவை காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு ஈ.சி.ஜி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆரம்பக் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அவர் இருதய சிகிச்சை மருத்துவமனையை அடைந்த போது அவருடைய உடல் நிலை மிக மோசமாகி அவர் உயிர் பிரிந்துள்ளது. அவரை உயிருடன் மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் எதிர்பாராத விதமாக அது தோல்வியில் முடிந்துள்ளது.

நெஞ்சு வலி தொடர்பான பிரச்சனை நீதிபதி லோயாவிற்கு ஏற்பட்ட போது, அவருடன் நான்கு மாவட்ட நீதிபதிகள், மருத்துவர்கள் மற்றும் இரண்டு மருத்துவமனையின் சில அலுவலர்கள் மட்டுமே உடன் இருந்துள்ளனர். நான்கு மாவட்ட நீதிபகளும் சிகிச்சையளிக்கப்பட்ட இரண்டாம் மருத்துவமனைக்கு வந்த போது, அவர்கள் பிரேத பரிசோதனைக்காக மூன்றாவதாக மற்றொரு மருத்துவமனையை பரிந்துரைத்துள்ளனர். அங்கேயும் இருதய கோளாறு காரணமாகத்தான் அவர் உயிரழந்தார் என்று தெரிய வந்தது. பின்பு அவருடைய உடல் இரண்டு மாஜிஸ்ட்ரேட்கள் துணையுடன் நீதிபதி லோயாவின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்மந்தப்பட்ட அனைவரின் கருத்துக்களை கேட்ட பின்னர், நீதிபதி லோயாவின் குடும்ப உறுப்பினர்கள் அவர் இயற்கையாக தான் இறந்தார் என்பதை ஏற்பதாக அறிந்த பின்னர் உச்ச நீதிமன்றம் “நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தது, இதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை” என்ற முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பான காரவன் பத்திரிக்கையின் கட்டுக்கதைகளும், போலி விசாரணைகளும் அவர்கள் வெளியிட்டது போலி செய்தி என்பதற்கான சிறந்த உதாரணம். இது வதந்தியோ, வீண்பேச்சோ, கிசுகிசுவோ அல்ல. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவர்களாக உருவாக்கிய போலி செய்தியை வேண்டுமென்றே மக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்புவதற்காகவே மிகுந்த சிரத்தையுடன் பரப்பியுள்ளனர்.

ஜனநாயக தூண்களை சிதைப்பவர்கள்

இந்தியாவின் பல நீதிமன்றங்களில் சில கிளர்ச்சியூட்டும் வழக்கறிஞர்கள் பொது நலன் மீது அக்கறை கொண்டு சில வழக்குகளை எடுத்து நடுத்துவார்கள். இது ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்த அறப்போராளிகளில் “ஜனநாயக தூண்களை சிதைப்பவர்களாக” பரிணாம வளர்ச்சி அடைந்து வருவது
குறிப்பிடத்தக்கது. அவர்கள் சில போலியான வழக்குகளை கூட, எந்த முகாந்திரமும் உண்மை ஆதரமும் இல்லாமல் ஆழமான அர்பணிப்புணர்வுடனும், மிரட்டல் தொனியுடனும், அவர்களை எதிர்க்கும் சக வழக்கறிஞர்களை சீறிக்கொண்டு, மிக கடுமையானவர்களாக, நீதிபதிகளிடம் மரியாதையற்றவர்களாக நடந்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் கூறும் ஒவ்வொறு பொய்யையும் நாம் தலையில் வைத்து கொண்டாடப்பட வேண்டிய உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறார்கள். இவர்களுக்கு இரண்டு வலுவான கூட்டாளிகள் இந்த விஷயத்தில் உண்டு. விளம்பரத்தை வாரி கொடுக்கும் ஊடக கூட்டம் ஒன்று மற்றொன்று அதிகாரத்தை வைத்திருந்து தற்சமயம் விளிம்பு நிலையை எட்டி வருகிற காங்கிரஸ் என்கிற கட்சி. இந்த கட்சி தன்னுடைய வழக்கறிஞர்கள் மூலமோ மற்றவர்கள் மூலமோ இது போன்ற “ஜனநாயக தூண்களை சிதைப்பவர்களை” கண்டறிய விரும்பிகிறது. இவர்களின் மூலம் நீதிமன்றத்தையே மிரட்டுவது என்பதை வழக்காடு மன்றத்தின் புதிய வடிவமாக ஆக்கியிருக்கிறார்கள்.

இது போன்ற மிரட்டல் தொனியிலான தந்திரங்களை எப்படி கையாள்வது என தெரியாமல் உதவியற்று நிற்கிறது பிளவுப்பட்ட உச்ச நீதிமன்றம். தற்போது வெளியாகியுள்ள நீதிபதி லோயா தீர்ப்பு, “இது போன்ற மிரட்டல் தந்திரங்கள் வழக்கின் ஒரு பக்கத்து நியாயத்தை மறைப்பதற்காக உபயோகப்படுத்தப் பட்டுள்ளது” என்பதை
சுட்டிகாட்டுகிறது. இந்த “ஜனநாயக தூண்களை சிதைப்பவர்கள்” நீதிபதி லோயாவின் மரண வழக்கில், பொய்யாக புனையப்பட்ட கதைகளுக்கு செய்தி தொடர்பாளார்கள் ஆகிவிட்டார்கள்.

பதவி நீக்கம் என்கிற ஆயுதம்

உச்ச நீதிமன்ற நீதிபதியின் “திறனற்றத்தன்மை” அல்லது “நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை” இந்த இரண்டு சூழலின் கீழ் மட்டுமே ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும். காங்கிரஸ் கட்சியும் அவற்றின் நண்பர்களும் தற்போது நீதிபதிகளை “பதவி நீக்கம்” ஒரு கருவியாகவே பயன்படுத்த துவங்கிவிட்டார்கள். பதவி நீக்கம் என்பது ஒரு பிடியில் இருக்கும் அலுவலகத்தை முற்றிலும் விலக்கி அதன் மரியாதையை காப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நடைமுறை. நமது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் “பதவி உயர்வு/நீக்கம்” என்பது உள்நாட்டு பொறுப்புணர்வின் ஓர் அங்கம். பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அரசியல் அவைகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு “பதவி உயர்வு/நீக்கம்” தொடர்பான நீதித்துறை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே நீதித்துறையின் அதிகாரம் அரசியல் அவையால் செயல்படுத்தப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் நீதிபதியாக செயல்பட வேண்டும். அவர் உண்மைகளையும், ஆதாரங்களையும் சுயமாக, சுதந்திரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தீர்மானங்கள் கட்சி சார்ந்ததாக இருக்கக் கூடாது. “நிறுபிக்கப்பட்ட தவறான நடத்தை” இருக்குமேயானால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் அதிகாரத்தை செயல்படுத்தப்படலாம். அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் மிக ஆபத்தான ஒன்று.

ராஜ்ய சபாவிலிருந்து 50 கையெழுத்துக்களையோ அல்லது லோக் சபாவிலிருந்து 100 கையெழுத்துக்களையோ ஒரு அற்ப காரியத்திற்காக கூட பெற்றுவிடலாம். அது ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல. ஆனால் நமக்கு இருக்கும் அதிகாரத்தை மிரட்டல் தந்திரங்களுடன் பயன்படுத்தி “நிரூபிக்கபட்ட தவறான நடத்தை” இல்லாத சமயத்திலும் பிரயோகிப்பது என்பது நீதித்துறையின் சுதந்திரத்தை கேள்வி குறியாக்கும் ஒன்று. தற்போது உருவாக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம் தொடர்பான கண்டன தீர்மானம் குறித்த என் முதல் வெளிப்பாடு மிக தெளிவானது. நீதிபதி லோயா மரண வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முகத்திறை கிழிந்ததனால் அதை மறைப்பதற்காக எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை தான் இது. எங்களோடு ஒத்துபோகவில்லை எனில், ஐம்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் போதும் உங்களை பழிவாங்க என்று நீதிபதிகளை மிரட்டுவதை போலவும் நீதிபதிகளை எச்சரிப்பதை போலவும் உள்ளது. இங்கே வாசிக்கப்பட்ட குற்றங்கள் அனைத்துக்கும் நீதித்துறை உத்தரவுகளால் தீர்வு காணப்பட்டுள்ளது. ஆனாலும் சில பிரச்சனைகள், காலம் தாழ்ந்து, அற்பத்தனமாக இருப்பதற்கு நீதித்துறையின் செயல்பாடுகள் எந்த வகையிலும் காரணம் அல்ல.

பிளவுபட்ட நீதிமன்றம்

“ஜனநாயக தூண்களை சிதைப்பவர்கள்” மிரட்டல் தந்திரங்களும், பதவி நீக்கம் எனும் அரசியல் கண்டனங்களும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல்கள் என்றால், அதைவிடவும் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பிளவுபட்ட நீதிமன்றங்கள். தற்சமயம் சதிவலையால் பின்னப்பட்ட நீதிபதி லோயாவின் பொய்யான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இச்சமயத்தில் என் மனதில் எழும் சில எண்ணங்கள், சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் சந்திப்பை நிகழ்த்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளும் நால்வரும் உயர்ந்த அனுபவம் பெற்றவர்கள். என்னுடைய பார்வையில் நேர்மையின் உச்சம் அவர்கள். இவர்கள் நீதிபதி லோயாவின் வழக்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்னர் உண்மைகளை ஒருமுறையேனும் பார்வையிட்டார்களா? பரிசோதித்தார்களா? பாரபட்சமான ஒரு சூழல் உருவாக்குவதும், பொய்யான் நம்பகதன்மையை விதைப்பதை போன்ற கருத்தை இந்த வழக்கில் தெரிவித்ததை போல் இவர்கள் யாரேனும் மற்ற நிலுவை வழக்கில் தெரிவிப்பார்களா? தற்போது பதியப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற பதவி நீக்க நகர்வு அந்த உச்ச நீதிமன்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் நேரடி தாக்கமா? இந்த கண்டன குரலை, இந்தியாவில் நிகழும் சர்ச்சைக்குரிய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள் கையில் எடுக்கும் மிரட்டலான ஆயுதம் எனலாமா?

இன்று நடந்திருக்கும் இந்த நிகழ்வு, நாளை இந்தியாவில் நடைபெற இருக்கிற பல துருதிர்ஷ்டவசாமன நிகழ்வுகளுக்கான முன்னோடி, அதற்கான விலையை நாம் கொடுத்தே ஆக வேண்டும். இதன் மூலம் நீதித் துறையின் அரசியலமைப்பிற்கும், அரசியல் தொலை நோக்காளர்களுக்கும் இனி நல்ல நேரம் என்ற ஒன்று வர போவதில்லை.

(இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 20.4.18 அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.)

தமிழாக்கம் : SG சூர்யா – வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகர்

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Judge loya death case the one that almost created a judicial mutiny