Advertisment

சர்வதேச வீட்டு வேலை செய்வோர் தினம் : நிஜ வாழ்விலும், மீடியாவிலும் மோசமாக சித்தரிப்பது ஏன்?

ஜூன் 16, நாளை, உலக வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் தினம்.. ஆனால் மாற்றங்கள் வரும் வரை இம்மக்களுக்கு அது வெறும் சாதாரண நாள் தான்.

author-image
WebDesk
Jun 16, 2018 17:57 IST
New Update
International Domestic Workers Day

International Domestic Workers Day

ஜெயலலிதா இறந்த பின்பு, வி.கே. சசிகலா, முதலமைச்சர் ஆக வேண்டும் என்று அவரும் அவரைச் சார்ந்த எம்.எல்.ஏக்களும் விரும்பினார்கள். சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக்கி அந்த விருப்பத்தினை உண்டு இல்லை என்று செய்துவிட்டோம். ”வேலைக்காரிக்கு என்ன முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கனவு” “ஆயாம்மாவெல்லாம் முதலமைச்சரானா என்ன ஆகுறது” ”ஜெயலலிதா வீட்டுக்கு வேலைக்குப் போனா முதலமைச்சராகிடலாமா” என எத்தனை திட்டுக்கள் சசிக்கலாவின் மீது. வேலைக்காரி / வேலைக்காரர்கள் என்றாலே நம் மனதில் ஒரு பொது புத்தி வந்துவிடுகின்றது இல்லையா? அவர்களைப் பற்றி எப்போதும் ஒரு மட்டமான கருத்து மனதில் பதிந்துவிடுகின்றது. ஆனால் அவர்கள் ஒரு நாள் வீட்டு வேலை செய்யாமல் போனால் என்ன நிகழும் என்று யோசித்திருக்கின்றீர்களா?

Advertisment

”நிஜ வாழ்வில் தொடங்கி மீடியா வரை அவர்களை சித்தகரிக்கும் நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது. விளம்பரங்கள் தொடங்கி, டிவி சீரியல்கள் வரை எந்த மாற்றமும் இன்றி இது போன்ற சித்தகரிப்புகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. இது ஒன்றும் புதிதில்லை. வழக்கமாக நடைபெறும் ஒன்று தான்” என்று கூறுகின்றார், தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் இயக்கத்தின் தமிழக பிராந்திய தலைவர் ஜோஸ்பின் அமலா வளர்மதி.

சர்வதேச தொழிலாளர்களின் இயக்கம் வெளியிட்டு இருக்கும் அறிக்கை ஒன்றில், இந்தியாவில் மட்டும் வீட்டு வேலை செய்வதெற்கென்று நான்கு மில்லியன் தொழிலாளர்களும், தொழிற்சாலைகள் மற்றும் இதர வணிகம் சார்ந்த இடங்களில் வேலை செய்வோர்களின் எண்ணிக்கை பத்து மில்லியனாகவும் இருக்கின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டு வேலைக்கு வருபவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தான். அப்பெண்களில் ஏராளமானோர் பழங்குடி, நாடோடி, தலித், அல்லது நிலங்களை இழந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிய அமைப்புகளில் இருந்து வரும் பெண்களாகவே இருக்கின்றார்கள். தமிழகத்தில் மட்டும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

"இவர்களைப் பற்றி தொடர்ந்து பேச என்ன இருக்கின்றது என்று யோசிக்க வேண்டாம். உழைக்கும் வர்க்கத்தில் இருக்கும் இப்பெண்கள் பலருக்கு அடிப்படை ஊதியம் இது தான் என்று எதுவும் இல்லை. சம்பளத்துடன் கூடிய விடுமுறையோ, வார விடுமுறையோ கிடையாது. வேலைக்கு தாமதமாக வரும் நாட்களில் அவர்களின் நிலை இன்னும் மோசமாகிவிடுகின்றது. அவர்கள் செய்யும் வேலையின் நிரந்தரமற்ற தன்மை, பாதுகாப்பின்மை என்பதைப் பற்றியெல்லாம் நாம் யோசிப்பதே இல்லை. மிக சமீபத்தில் மிகவும் வயதான ஒரு அம்மா அவருடைய புகாரினை எங்களின் இயக்கத்திடம் கொடுத்தார். 15 வருடங்களாக  வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்த இடத்தில் சம்பளத்தினை உயர்த்தித் தர வேண்டி கோரிக்கை விடுத்துள்ளார். அந்த ஒரே காரணத்திற்காக அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள். அரசாங்கத்திற்கு  கிடைக்கும் வரிப்பணத்தில் ஒரு சதவீதத்தினை வீட்டு வேலை தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக இந்த நாடு ஒதுக்கினால் நன்றாக இருக்கும்” என்றும் கூறுகின்றார் வளர்மதி.

Domestic Workers Wage Card Domestic Workers Wage Card

தமிழகத்தில் பெண் வீட்டு வேலைத் தொழிலாளர்கள் இயக்கமான பெண்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுஜாதா மோடி இப்பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி மேலும் விரிவாக தெரிவிக்கின்றார். வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் மேம்பாட்டுத் திட்டத்திற்காக நிதி பெறுவது என்பது இன்றைய அரசியல் சூழ்நிலையில் சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றது. வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கென பாதுகாப்பான முறைப்படுத்தப்பட்ட வேலை, பாதுகாப்பான உறைவிடம் போன்றவற்றை உறுதி செய்யும் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பின் 2011ம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் யாவும் இந்தியாவில் இன்னும் நிலுவையில் தான் இருக்கின்றது. இந்தியாவை விட வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் பின்னிலையில் இருக்கும் நாடுகள் கூட இந்த திட்டங்களை சரிவர நிறைவேற்றியிருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார் மோடி.

அரசாங்கத்தின் எந்த ஒரு ஆதரவும் இன்றி கடந்த ஆறு மாதங்களில் சென்னையில் மட்டும் சுமார் 100 முறை, பெண் தொழிலாளர்கள் சங்கத்தின் மூலமாக கூட்டங்கள் நடத்தி அதில் 800க்கும் மேற்பட்ட வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்திருக்கின்றோம். அவர்களிடம், வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்குத் தரப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்திற்கான கார்டினை கொடுத்துள்ளோம்.

வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று குடிபெயர்தல். சிங்காரச் சென்னையை மேலும் சீர்படுத்தும் நோக்கில் பல்வேறு குடிசைப் பகுதியில் வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் கண்ணகி நகரில் குடியிருப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 2000த்திலிருந்து 2010 வரை இப்பகுதியில் குடியேறிய மக்கள் தங்களின் வேலைக்காக தினமும் பயணிக்க வேண்டியது இருக்கின்றது. கண்ணகி நகரில் வசிக்கும் கீதா “நான் என்னுடைய வேலைக்காக தினமும் 10 கிலோ மீட்டருக்கு மேலாக பயணிக்க வேண்டியது இருக்கின்றது“ என்றார். அதே கண்ணகி நகரில் வசிக்கும் பிரேமா இதைப் பற்றி “இங்கு பலர் ஒரு நாளைக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வீட்டு வேலைக்குச் செல்கின்றார்கள். அதனால் ஒரு நாளைக்கு நிறைய தூரம் பயணிக்க வேண்டியது வருகின்றது. நாங்கள் சம்பாதிப்பதில் பெரும் பகுதி பயணத்திற்கே சரியாக இருக்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சமீபமாக கூவம் மறுசீரமைப்புத் திட்டத்திற்காக, கூவத்தின் அருகே வசிக்கும் அனைவரையும் நாவலூர்-படப்பை மற்றும் குடப்பாக்கம் பகுதிகளுக்கு குடியமர்த்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. இதனால் வேலை இழப்போர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும். இது குறித்து எங்களின் இயக்கம், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கின்ற அட்வகேட் கமிஷ்னரிடம் மனு கொடுத்துள்ளது” என்றும் கூறினார்.

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான தேசிய கொள்கைகளை அரசு அறிவிக்கும் பட்சத்தில் இம்மக்களுக்கு நிச்சயம் ஒரு விடிவு காலம் வரும் என்று நம்புவோம். சர்வதேச தொழிலாளர்கள் இயக்கம் குறிப்பிட்டிருக்கும் விதிமுறைகளை பின்பற்றி இவ்வரைவு தயாரிக்கப்படாததால் இந்த வரைவு, இம்மக்களின் குறைகளை களையும் அளவிற்கு மிகப் பெரியதாக இல்லை. ஆனால் மாற்றங்களை அளிக்கும் அளவிற்கு இது இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அவ்வரைவு வெளியிடப்பட்டால் இம்மக்களுக்கான வேலை மற்றும் விடுமுறை நாட்கள், குறைந்த பட்ச ஊதியம், வேலை செய்யும் நேரம் போன்றவற்றைப் பற்றிய ஒரு தெளிவான முடிவு அனைவராலும் எட்டப்படும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு வேலை என்றால் அது பெண்களுக்கானது என்ற எண்ணத்தில் ஊறித்திளைத்த இந்த சமூகத்தில் பெண்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருதல் என்பது கொஞ்சம் சவலான காரியம் தான். வீட்டு வேலை செய்யும் பெண்கள் என்றல்லாமல், வேலைக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் களையப்பட வேண்டும். மேலும், பெண்களைப் பற்றி மீடியா தான் வைத்திருக்கும் கருத்துகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஜூன் 16, நாளை, உலக வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் தினம். ஆனால் மாற்றங்கள் வரும் வரை இம்மக்களுக்கு அது வெறும் சாதாரண நாள் தான்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் சுய சார்ப்பு பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் 16.6.18 அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.)

தமிழில் :  நித்யா பாண்டியன்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment