பொள்ளாச்சி விவகாரம் : பாக்கியராஜின் சர்ச்சைப் பேச்சு!

ஆசை வார்த்தை கூறியோ அத்துமீறியோ காரியமாற்றுகிற காவாலிகள் கட்டியெழுப்பும் கல்லறைகளை ஒருபோதும் நியாயப்படுத்தாதீர்கள்.

ஆசை வார்த்தை கூறியோ அத்துமீறியோ காரியமாற்றுகிற காவாலிகள் கட்டியெழுப்பும் கல்லறைகளை ஒருபோதும் நியாயப்படுத்தாதீர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
K Bhagyaraj speech on sexual crimes, K Bhagyaraj speech on pollachi sexual assault, பாக்கியராஜ், பாக்கியராஜ் பொள்ளாச்சி பாலியல் கொலைகள்

K Bhagyaraj speech on sexual crimes, K Bhagyaraj speech on pollachi sexual assault, பாக்கியராஜ், பாக்கியராஜ் பொள்ளாச்சி பாலியல் கொலைகள்

க.சந்திரகலா

எவர் வாயிலிருந்து எது வேண்டுமானாலும் வரலாம். திரையுலகில் தனது வாரிசு என எம்ஜிஆரால் கௌரவப்படுத்தப்பட்ட பாக்யராஜின் வாயிலிருத்து இப்படியொரு அபிப்பிராயம் வருமென எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படியொரு பேச்சு; அவர் பேச்சு.

Advertisment

கருத்துகளை பதிவு செய் என்றொரு திரைப்பட இசை வெளியீட்டு விழா. பெண்கள் உயர் பொறுப்புக்கு குறுக்கு வழியில் வருவதாக அடுக்காத மொழி பேசிய எஸ் வி சேகர் உட்பட பலரும் அங்கே இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் திரைக்கதை ஜாம்பவான் என பேசப்படுகிற பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக பேசத் தொடங்குகிறார்.

ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என ஊசிப்போன பழமொழி பட்டாசை கொழுத்திப் போட்டதும் கூட்டத்தின் கடைசி பெஞ்சிலிருந்து உற்சாக விசில் பறக்கிறது. சாமி வந்தவனை உடுக்கையடித்து உசுப்பேற்றியது போலானது அரங்கு.

Advertisment
Advertisements

பெண்ணொழுக்கத்திற்கு எதிரான உலகின் முதல் பழமொழியை அவர் கையிலெடுத்த போதே அவர் என்ன பேச வேண்டுமென்கிற தயாரிப்போடு வந்திருக்கிறார் என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது. பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வாய்ப்பில்லை; பெண்கள் எல்லா விசயத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார். பரவாயில்லை.

ஆண்கள் சின்ன வீடு வைத்துக்கொள்வதின் நோக்கத்தையும், அது குடும்பத்தில் ஏற்படுத்துகிற தாக்கத்தையும் சொன்னவர் அத்தோடு நிறுத்தியிருந்தால் ஏதோ அவர் பாடு என போயிருக்கலாம். அத்தோடு நிறுத்தவில்லை. இங்கே, உலக மனிதர்களின் மனசாட்சியை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்துக்குப் போகிறார். தப்பு நடந்ததற்கு ஆண்கள் மட்டும் காரணமில்லை; பெண்களின் பலவீனத்தை சரியான முறையில் பயன்படுத்தி ஆண்கள் தவறு செய்து விட்டார்கள். இதில் ஆண்கள் செய்தது தவறு என்றால் அந்த பெண்கள் செய்ததும் தவறுதான் என்கிறார். பாலின் தரத்தை தண்ணீர் தீர்மானிப்பது போலிருக்கிறது இது.

பாக்யராஜின் படங்களை பார்த்தால் தெரியும். பெண்களின் பலவீனத்தை அவர் சினிமாவாக்கி ஜெயித்த கதை. பெண்களுக்கு பொதுவாக இயல்பான ஆண்களை பிடிக்கும். சினிமாவில் தான் பார்க்கும் நாயகனும் தங்கள் வீட்டு ஆண்களைப்போல, அதிலும் கொஞ்சம் கோம்பையனாக இருந்தால் பெண்களுக்கு இன்னமும் பிடிக்கும். பாக்யராஜ் எல்லோருக்கும், குறிப்பாக தாய்குலத்துக்கு பிடித்த கதாநாயகன் ஆனது அப்படித்தான்.

பெண்களின் இதயம் தொடுகிற சினிமாவுக்கு முதலீடு குறைவு. வரும்படி அதிகம். முருங்கைக்காய் போன்ற கண்டுபிடிப்புகள் அவரை சாதாரண அடுக்களை வரை கொண்டு சேர்த்தது. பாக்யராஜ் படங்களின் வெற்றிச்சூத்திரமும் அதுதான். இதில் பிழையேதுமில்லை.

அதேநேரம் , பொள்ளாச்சியில் நடந்தேறியது பெண்களின் பருவ வயது பலவீனத்தை பயன்படுத்தி பொறுக்கிகளும் போக்கிரிகளும் ஜெயித்த கதை. பொறியில் சிக்காத புள்ளிமான் இருந்தால் சொல்லுங்கள்; நாங்கள் அதை வேட்டையாடிக்காட்டுகிறோம் என்கிற ரீதியில் திட்டம் போட்டு காவாலி கூட்டம் ஆடித்தீர்த்த கதை.

பணபலம், செல்வாக்கு, அரசியல் பின்புலம் தந்த தைரியத்தில் பெண்களை சீரழிப்பதை ஒரு தொழிலாக, ஒரு விளையாட்டாக, ஒரு பொழுதுபோக்காக வைத்துக்கொண்டு பெரிய இடத்து கும்பல் வெறியாட்டம் ஆடிய கதை.

பெண்கள் தவறு செய்ய துணிவதாகவும், செல்போன் போன்ற சாதனங்கள் அதற்கு காரணமாக இருப்பதாகவும் சித்தரிக்கிறீர்கள். சரி. பெண் குழந்தைகளையும்தான் இங்கே கதறக்கதற குதறுகிறார்கள். இதற்கு என்ன நியாயம் வைத்திருக்கிறீர்கள்?

திரைத்துறையில், உற்றுப்பார்க்கிற உயரத்தில் முப்பதைந்து ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தமிழ் சினிமாவுக்கு நிறைய செய்திருக்கிறீர்கள்.பிரதிபலனாக பெண்கள் தங்கள் கையடக்க பர்சில் இருந்த சில்லரையை தந்துதான் உங்களை கோடீஸ்வரனாக்கினார்கள்.

அதே நேரம் , உங்களிடம் ஒரேயொரு கோரிக்கை உண்டு.

பெண்களின் பலவீனத்தை, ஏழ்மையை, சூழ்நிலையை பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறியோ அத்துமீறியோ காரியமாற்றுகிற காவாலிகள் கட்டியெழுப்பும்

கல்லறைகளை ஒருபோதும் நியாயப்படுத்தாதீர்கள்.

(கட்டுரையாளர் கவிஞர் க.சந்திரகலா, கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு கிராமத்தை சேர்ந்தவர். தொடர்புக்கு kachandrakala@gmail.com )

Kavignar Chandrakala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: