சு.திருநாவுக்கரசர்
கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினம், உடன்பிறப்புகளுக்கு எப்போதுமே திருவிழா. கலைஞர் மறைவுக்கு பிறகான முதல் பிறந்த நாளில் நெகிழ்ச்சி கூடியிருக்கிறது.
கலைஞருடன் நெருங்கிப் பழகிய தலைவர்களில் ஒருவரான காங்கிரஸ் மூத்த தலைவர் சு.திருநாவுக்கரசர் தனது நினைவுகளை இங்கே பகிர்கிறார்….
தமிழ்நாடு அரசியலின் மையப் புள்ளியாக, இமயமாக சுமார் அரை நூற்றாண்டுகள் இயங்கியவர் டாக்டர் கலைஞர். ஆளும்கட்சியாக அல்லது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழக அரசியல் தேரின் அச்சாணி அவரே!
முதல்வராக அவர் செய்த சாதனைகள் பல. அவற்றைத் தாண்டி, ஒரு கட்சித் தலைவராக தி.மு.க.வை அவர் கட்டிக்காக்க தனது மதிநுட்பம், சமயோசிதம், எழுத்தாற்றல், பேச்சாற்றல், தமிழ்ப் புலமை அத்தனையையும் அவர் பயன்படுத்தியவிதம் தனித்துவமானது.
1977-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வராக வந்தார். ஒரு காலத்தில் கலைஞரின் தலைமையை ஏற்று அவருடன் பணியாற்றியவர் எம்.ஜி.ஆர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தனி இயக்கம் கண்டபிறகு எம்.ஜி.ஆரின் புகழ் கிராமப்புறங்களில் பெரிய அளவில் இருந்தது. 1977, 1980-ல் எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றிகள், 1984-ல் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப் பட்டிருந்தபோதும் மருத்துவமனையில் இருந்து கொண்டே பெற்ற வெற்றி ஆகியன அவரது செல்வாக்கை பறைசாற்றின.

இந்தத் தருணங்களில் ஒரு சாதாரண தலைவராக இருந்திருந்தால் எம்.ஜி.ஆர். புகழுக்கு முன்பு நிலைத்து நின்றிருக்க முடியாமல் போயிருக்கும். எம்.ஜி.ஆர். புகழ் உச்சத்தில் இருந்த காலங்களிலும் தனது உழைப்பு, பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகியவற்றால் அரசியலில் கலைஞர் சரித்திரம் படைத்தார்.
கலைஞர் போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் தோல்வியைக் காணாதவர். இது பெரும் வரலாறு. மக்களிடம் அவருக்கு இருந்த மதிப்பும், செல்வாக்கும் இதற்கு காரணம். எம்.ஜி.ஆர், வைகோ வெளியேறிய காலகட்டங்கள் அவருக்கு அரசியல் ரீதியாக சோதனையான காலகட்டங்கள். அவற்றையும் திறமையாக எதிர்கொண்டார். எமர்ஜென்சி காலத்தை அவர் கடந்த விதமும், அப்போது கட்சியை நடத்திய விதமும் வியப்புக்குரியவை.
அரசியல் ரீதியாக கலைஞரை விமர்சித்தவர்கள் கூட தமிழுக்காக கலைஞர் செய்தவற்றை புறம் தள்ளிவிட முடியாது. சிலருக்கு எழுத வரும், பேச வராது. கலைஞரைப் பொறுத்தவரை தமிழில் எத்தனை கூறுகள் இருக்கிறதோ, அத்தனையிலும் திறமை வாய்ந்தவராக இருந்தார். சினிமாத் துறையில் கதாநாயகர்களுக்கு உரிய அங்கீகாரத்தை கதை வசனகர்த்தாவாக கலைஞர் பெற்றார். திரையில் இவர் பெயர் வந்தபோதும், ரசிகர்கள் கைத்தட்டினார்கள்.
நகைச்சுவை, கலைஞரின் உடன்பிறந்த கலை. சாதாரணமாக பேசும்போதே, சுவாரசியமாக இரு பொருள்படப் பேசுவார். ஒருமுறை அவரது பிறந்த நாளன்று, நான் வெளிநாட்டில் இருந்தேன். நான் சென்னையில் இருந்துகொண்டு வரவில்லை என அவர் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக, ‘அண்ணன், நான் வெளிநாட்டில் இருக்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணே’ என்றேன்.
உடனே, ‘எங்க இருக்கீங்க?’ என்றார். நான், ‘தாய்லாந்தில் இருக்கிறேன்’ என்றேன். கொஞ்சம் கூட தாமதிக்காமல், ‘நானும் தாய்லாந்தில்தான்யா இருக்கேன்’ என பதில் கொடுத்தார். அவர் சொன்னது, ‘தாய் நாடு’ என்கிற அர்த்தத்தில்!
கடைசி காலத்தில் மருத்துவமனையில் டாக்டர்கள், ‘மூச்ச இழுத்து விடுங்க’ என சொன்னபோதும், ‘மூச்ச விடக்கூடாதுன்னுதான் இங்க வந்திருக்கேன்’ என நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியவர் கலைஞர்.
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்கிற கட்சியை நான் நடத்தியபோது, அவருடன் கூட்டணித் தலைவராக செயல்பட்டிருக்கிறேன். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, தமிழ்நாட்டில் பதற்றமான நேரம். திமுக.வுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நேரம் அது. அப்போதும் நிலைகுலையாமல் நின்று, அடுத்த 5 ஆண்டுகளில் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தவர் அவர்.
அவருக்கு தெரிந்த விஷயமாக இருந்தாலும், நாம் சொல்வதற்கு காது கொடுப்பார். தனக்கு தெரியும் என்பதாக காட்டிக்கொள்ளவும் மாட்டார்.
கூட்டணிக் கட்சிகளில் சின்ன கட்சி, பெரிய கட்சி என்கிற பாகுபாடுகளை பார்க்க மாட்டார். அவருக்கு தெரிந்த விஷயமாக இருந்தாலும், நாம் சொல்வதற்கு காது கொடுப்பார். தனக்கு தெரியும் என்பதாக காட்டிக்கொள்ளவும் மாட்டார். மற்றவர்களிடம் இருந்து விஷயங்களை கிரகிப்பதில் அப்படியொரு ஆர்வம் கலைஞருக்கு இருந்தது. தவிர, சொல்கிறவர்களுக்கு அவர் கொடுத்த மரியாதை அது.
அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் அவர் முன்வைக்கிற முடிவுகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இருக்கும். ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதாக இருந்தால், முதலில் வரைவுத் தீர்மானத்தை வாசிப்பார். அது தொடர்பான கருத்துகளை கேட்பார். யாராவது, கருத்து சொன்னால் அதை ஏற்றுக் கொள்வார்.
பெரும்பாலான நேரங்களில், அவரது தீர்மானங்களில் திருத்தங்களே தேவைப்படாது. எழுத்துப் பிழையை மட்டும் நான் சொல்லவில்லை. கருத்துகளில்கூட அவ்வளவு கச்சிதமாக தீர்மானம் இருக்கும். இந்த வார்த்தைக்குப் பதில் இன்னொரு வார்த்தை பயன்படுத்தலாம் என நாம் கூற முடியாத அளவுக்கு அவரது வார்த்தை பிரயோகம் அமைந்திருக்கும்.
என் மீது தனிப்பட்ட அன்பு வைத்திருந்தார். சந்திக்கிற நேரங்களில் மணிக்கணக்கில் பேசியிருக்கிறார். என்னை உள்ளே அனுப்பும்போதே கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன், ‘சீக்கிரம் வந்துருங்க. நிறைய பேரு காத்திருக்காங்க’ என என்னிடம் சொல்லி அனுப்புவார். நான், ‘அவரு விட்டா, வந்திடுறேன்’ன்னு சொல்லிட்டுப் போவேன்.
கலைஞர் மறைந்த பிறகு, முதல் பிறந்த நாள் இன்று. அவர் புகழும், பெருமையும் என்றும் நிலைத்து நிற்கும்.
தொகுப்பு: ச.செல்வராஜ்