Advertisment

கமல்ஹாசன் - ரஜினிகாந்த் : யாருக்கு வாய்க்கும் அரசியல்?

கமல்ஹாசன் - ரஜினிகாந்த் ஆகிய இருவரில் யாருக்கு அரசியல் வாய்க்கும்? அரசியல் தகுதிகள் யாரிடம் இருக்கின்றன? என அலசுகிறார், கட்டுரையாளர் முனைவர் கமல.செல்வராஜ்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor kamal haasan, actor rajini kanth, kamala.selvaraj, tamilnadu politics, kamal haasan - rajini kanth ,

கமல. செல்வராஜ்

Advertisment

தமிழகம் நல்ல அரசியல் தலைமைகளின்றித் தள்ளாடும் நேரமிது. தமிழகத்திலுள்ள அரசியல் ஆர்வமிக்க இளைஞர்கள் மற்றும் தூய்மையான அரசியலை நாடும் நடுத்தர முதியவர்கள், நல்ல நிழல் தரும் அரசியல் ஆலமரத்தைத் தேடி அலைந்து கொண்டேயிருக்கின்றனர்.

எனவே தமிழகத்திற்கு மாற்று அரசியல் கட்சியும், பன்முகத் தன்மை கொண்ட மாற்றுத் தலைமையும் தேவைப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மாற்று அரசியல் கட்சி தொடங்குவது நீயா? இல்லை நானா? என்ற போட்டியில் மீண்டும் இரண்டு பிரபல சினிமா நடிகர்கள் அரசியல் களம் இறங்கியுள்ளனர். அவர்கள்தான் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும்.

இவர்களில் ரஜினிகாந்த் ஓரளவிற்கு தமிழகத்திலுள்ள மக்களின் மனநிலையை பதம் பார்த்து விட்டு, தனியாக அரசியல் கட்சி தொடங்குவதில்லை என்ற முடிவோடு ஒதுங்கி விட்டார் என்றே தோன்றுகிறது. அது அவருக்கும் தமிழகத்திற்கும் நல்லதாகக் கூட இருக்கலாம்.

 kamal haasan,rajini kanth, kamala.selvaraj, tamilnadu politics முனைவர் கமல.செல்வராஜ்

இன்னொருவர் கமல்ஹாசன். தமிழக திரையுலகில் சிவாஜிகணேசனுக்கு அடுத்து நடிப்பில் தன்னை மிஞ்சும் அளவிற்கு எவரும் இல்லை என்பதை நிரூபித்தவர். தான் இவ்வளவு நாள் நடித்துள்ள சினிமாக்கள் மூலமோ, பொது நிகழ்வுகள் மூலமோ, இதுவரை எவ்வித அரசியல் வாடையும் காட்டாமல் இருந்தவர்.

அதனால் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கமல் அரசியலுக்கு வருவார் என்ற எண்ணமோ, எதிர்பார்ப்போ கடுகளவுக்கும் இருந்ததில்லை என்பது திண்ணம். தற்பொழுது தமிழகத்தில் நடக்கும் அரசியல் சூழ்நிலைகளைத் தனக்குச் சாதகமாக்கி அரசியல் களத்தில் புகுந்து, தமிழகத்தை ஆட்சி செய்யலாம் என்ற அவா அவரை ஆட்கொண்டுள்ளது.

அதற்காக அவர் முதல் முதலில் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தமிழக அரசையும் அமைச்சர்களையும் கடுமையாகக் குறை கூறி சற்று சீண்டிப் பார்திருப்பதுதான்.

அதோடு கேரள மாநில முதல்வரை சந்தித்து அரசியல் ஆலோசனை நடத்தியிருப்பதும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவாலைச் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பதும் அவர் அரசியலுக்கு புதுவரவாக வரப்போகிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

கமல் அரசியல் களத்தில் இறங்குவதற்கு முன்பு, இதற்கு முன் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த இருபெரும் நடிகர்களின் வரலாற்றை சற்றுப் புரட்டிப் பார்க்க வேண்டும். அவர்கள்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனும்.

இவர்களில் எம்.ஜி.ஆர். தனது நடிப்பால் மக்களைக் கவர்ந்தவரல்ல. மாறாக அவரது குணத்தால் மக்களைக் கவர்ந்தவர். அதனால் அவர் அரசியலில் புகுந்த உடனே மிகச் சுலபமாக வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராவதற்கு முடிந்தது.

ஆனால் சிவாஜிகணேசன் அப்படியல்ல, அவர் நடிப்பில் தன்னிகரற்றுத் திகழ்ந்தார். ஆனால் மக்களோடு ஒன்றிணைந்து பழகுவதிலும் செயல்படுவதிலும் சற்று ஒதுங்கியே இருந்தவர். அதனால் அவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும் எதையும் சாதிக்க முடியவில்லை. பின்பு தனிக்கட்சி ஆரம்பித்த போதும் எதையும் சாதிக்க முடியவில்லை என்பது நாடறிந்த உண்மை.

அதுபோலவேதான் கமலும் நடிப்பில் பெரும் புள்ளியாக இருக்கிறார். ஆனால் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் எந்த அளவிற்கு அசைக்க முடியாத செல்வாக்குப் பெற்றவராக இருக்கிறார் என்பது ஒரு கேள்விக் குறியே ஆகும்.

ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து, அவர் அதில் வெற்றி பெற வேண்டுமென்றால் அவருக்கு இரண்டு மிகப் பெரியக் காரணிகள் வலுவாக இருக்க வேண்டும். ஒன்று அவர்களின் ரசிகர் மன்றங்கள் மிகவும் வலுவானதாகவும், அர்ப்பணிப்பு தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும். இரண்டு பொதுமக்கள் மத்தியில் நடிப்பையும் கடந்த ஒரு அன்னோன்னியமான நடைமுறை பழக்க வழக்கம் இருக்க வேண்டும். இவையிரண்டும் யாரிடத்தில் இருக்கிறதோ அவர்களால் மட்டும்தான் அரசியலில் வெற்றி பெற முடியும்.

கமலைப் பொறுத்தவரை இவ்விரண்டு காரணிகளும் வலுவாக உள்ளனவா? என்றால் அதன் பதில் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் கமலுக்கும் ரஜினிக்கும் இருக்கும் ரசிகர் மன்றங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ரஜினிக்கு தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவருக்காக ஆத்மார்த்தமாக உயிரையே தியாகம் செய்யும் அளவில் மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் கமலைப் பொறுத்தவரை தமிழகம் முழுவதும் வலுவான ரசிகர்கள் இருகின்றார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் எதற்காகவும் தங்களை அர்ப்பணம் செய்யும் ரசிகர்கள் இருப்பார்களா என்றால் அது சற்று ஏமாற்றம் அளிப்பதாகத்தான் இருக்கும்.

இதே நிலைதான் பொதுமக்கள் மத்தியிலும் கமலுக்கு இருக்கிறது. ரஜினியென்றால் சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை, அவர்களை அறியாமலே, அவர் மீது ஒரு பிரியம் உடையவர்களாகவே காணப்படுகின்றனர். இப்படியான ஒரு பிடிப்பு கமலிடம் பொதுமக்களுக்கு இருக்கிறதா என்றால் அதுவும் ஏமாற்றமே.

இத்தனை ஆண்டுகளில் பொதுமக்களின் எந்தப் பிரச்னைக்காக கமல் களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்தியிருக்கிறார்? அல்லது பொதுமக்களுக்கு பயன்படும் விதத்தில் தமிழகத்தில் என்னென்ன சமூக செயல்பாடுகளை நடத்தி வருகிறார் என்றெல்லாம் பொதுமக்கள் கேள்வி எழுப்பமாட்டார்களா? இதற்கெல்லாம் கமல் என்னப் பதில் கூறப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒருவேளை தமிழகத்திலிருக்கும் தனது ரசிகர் மன்றங்களை வைத்து, அரசியலில் வெற்றி பெற்று விடலாம் என கமல் நினைத்து விட்டால் அதுவும் முன்பு போல் அவருக்குக் கை கொடுக்காது. ஏனென்றால், இன்றைய இளைஞர்கள், முன்பு போல் முழுமையாக ரசிகர் மன்றங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில்லை.

அதற்குக் காரணம் முன்பு சினிமாவும் ரசிகர் மன்றங்களும் மட்டும்தான் இளைஞர்களின் பொழுது போக்காக இருந்தன. தற்போது தகவல் தொழில் நுட்ப வசதிகள் பெருகியுள்ளதால் இளைஞர்கள் அவற்றின் மூலம் தங்களின் பொழுதைப் போக்கிக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்களே தவிர ரசிகர் மன்றங்களில் அந்த அளவிற்கு ஆர்வம் காட்டுவது நாளுக்கு நாள் குறைந்து கொண்டேதான் வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கி தமிழகத்தை ஆட்சி செய்யலாம் எனக் கனவு காண்பது, எட்டாத பழத்திற்கு விடப்படும் கொட்டாவிதான். இதை காலம் உணர்த்தும்.

(கட்டுரையாளர் கமல.செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர்! சமூக கேடுகளை சாடும் கவிதை, கட்டுரை தொகுப்புகளின் ஆசிரியர்! பேச: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)

 

Rajini Kanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment