ஆர். மனோஜ்குமார்
கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்த , மக்கள் நீதி மய்யம் இயக்கத்தின் தலைவர் கமல்ஹாசன் ”காலாவை விட காவிரி முக்கியம்” என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால் ’காலா ’ரீலீஸ். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி இருக்கும் திரைப்படம் தான் ‘காலா’ மக்களின் பிரச்சனைக்காக போராடும் தலைவன் குறித்த கதை தான் ‘காலா’ என்பது டீஸர், ட்ரெய்லர் வைத்தே நம்பால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
நாடு முழுவதும் இந்த திரைப்படம் வரும் 7 ஆம் தேதி திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் காவிரி பிரச்சனையில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கெடும் என்பதால் காலாவிற்கு கர்நாடக வர்த்தக சபை தடை விதித்துள்ளது. இருந்தபோதும் படத்தை கர்நாடகாவில் வெளியிட படக்குழுவும், தமிழ் தயாரிப்பாளர் சங்கமும் முயன்று வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து 2 நாட்கள் நடந்த நிலையில் தற்போது வரை தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று(4.5.18) கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து பேசினார். எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நடந்த இந்த சந்திப்பிற்கு பிறகு, கமல்ஹாசன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது, காலா ரீலீஸ் குறித்து முதல்வரிடம் பேசுனீர்களா? என்ற கேள்விக்கு கமலின் பதில், “ காலா பற்றி கர்நாடக முதல்வரிடம் பேசுவது தேவையற்றது என நான் கருதுகிறேன். இந்த சந்திப்பில் அதுபற்றி நான் எதுவும் பேசவில்லை. என்னை கேட்டால் திரைப்படத்தைவிட மக்கள் பிரச்சனை தான் முக்கியம், காலாவை விட காவிரி முக்கியம் எனக் குறிப்பிட்டார்.
கமலின் இந்த பதிலை சற்றும் எதிர்ப்பார்க்காத ரஜினி ரசிகர்கள் திகைத்தனர். காரணம், கடந்த 2013 ஆம் ஆண்டு கமல் தயாரித்து ,இயக்கி, நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் வெளியாவதற்கு மூஸ்லீம் அமைப்பினர் சில எதிர்ப்பு தெரிவித்தனர். அன்றைய சூழ்நிலையில் அந்த பிரச்சனையை நினைத்து கமல் மிகவும் வேதனையடைந்திருந்தார்.
அப்போது தான், ரஜினி எதிர்ப்பு தெரிவித்த முஸ்லீம் சகோதர்களுக்கு தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “ விஸ்வரூபம் படத்தை தயாரிக்க கமல் அனுபவித்த சிரமத்தை அறிந்து கலங்கினேன். எனது 40 ஆண்டுகால நண்பர் கமல் யாரையும் புண்படுத்தாதவர். தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்ல காரணமான மகா கலைஞன் கமல் . இஸ்லாமிய சமூகத்தின் மீது கமல், அக்கறையும், மதிப்பும் உடையவர் . அவரின் படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறும் முஸ்லீம் சகோதர்களிடம் வேண்டுக்கோள் விடுக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/driver-300x285.png)
கமலுக்கு திரையுலகில் ஒரு பிரச்சனை வந்த போது ஆதரவு கரம் நீட்டிய ரஜினியின் நன்றியை மறந்து, காலா ரீலீஸ் குறித்து ஒருவார்த்தை கூட சாதகமாக பேசாத கமலின் பேச்சு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஆர்.மனோஜ்குமார் (நியூ மீடியா பத்திரிகையாளர்) எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)
தமிழில் : ஸ்ரீஜா