சீறும் கமல்ஹாசனும் சிரிப்பு அமைச்சர்களும்

தமிழக அரசு லஞ்ச ஊழலில் திளைப்பதாக, பிக் பாஸ்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் ஹாசன் சொன்னதும், சிரிப்பு அமைச்சர்கள் அவர் மீது பாய ஆரம்பித்துள்ளனர்.

இரா. குமார்

ஆளுங்கட்சியின் அத்தனை அமைச்சர்களும் கமலஹாசனுக்கு எதிராகக் கொதித்து எழுந்திருக்கிறார்கள். கண்டனம் மட்டுமல்ல. மிரட்டலும் விடுக்கிறார்கள்.

பிக் பாஸ் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, “தமிழக அரசின் எல்லா துறையிலும்தான் ஊழல் நடக்கிறது” என்று கோபமாகவே பதில் சொன்னார் கமல்.

அவ்வளவுதான். இந்த அரசு மீது , புதிய குற்றச்சாட்டை, இல்லாத ஒரு குற்றச்சாட்டை கமல் சொல்லிவிட்டது போல அமைச்சர்கள் பாயத் தொடங்கிவிட்டனர்.

ஒருவர் ஒரு குற்றச்சாட்டை சொல்கிறார் என்றால் அதற்கு விளக்கம் அளிக்கலாம். கண்டனம் தெரிவிக்கலாம். ஆர்ப்பாட்டம்கூட நடத்துவது உண்டு. இதுதான் முறை.

ஆனால் இங்கே, கமலுக்கு எதிராக அமைச்சர்கள் பேசுவதைக் கேட்டால் சிரிப்பு வருகிறது. சினிமாவில் சிரிப்பு போலிஸ் என்று சொல்வது போல, சிரிப்பு அமைச்சர்கள் இவர்கள்.

” கமல் அரசியலுக்கு வந்துவிட்டு அரசை குறை சொல்லட்டும்” என்று சொல்கிறார் சட்ட அமைச்சர் சி. வி. சண்முகம். இது என்ன சித்தாந்தம். அரசியலில் இல்லாதவர்கள் அரசை விமர்சிக்கக் கூடாதா? கட்சி தொடங்கிவிட்டுதான் கமல் அரசியல் பேச வேண்டுமா?

ஓட்டு போடும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த அரசை விமர்சிக்கத் தகுதியும் உரிமையும் உண்டு. இதை சட்ட அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.

உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி, ஒருபடி மேலே போய்விட்டார். ”கமல் அவர் எடுக்கும் படங்களுக்கு முறையாக வரி கட்டுகிறாரா? ஆய்வு செய்யட்டுமா?” என்று கமலை மிரட்டுகிறார் வேலுமணி.

அமைச்சர் வேலுமணியின் இந்தப் பேச்சு, அவருடைய துறையும் அவரும் முறையாக செயல்படவில்லை என்பதை அவரே ஒப்புக்கொள்வது போல உள்ளது.

சரியாக வரிகட்டுகிறாரா? ஆய்வு செய்யட்டுமா? என்றால் என்ன அர்த்தம்? கமல் மட்டும்தானா? மற்ற யாரும் இல்லையா? முறையாக வரிகட்டாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைச்சரின் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளதா? குறிப்பிட்ட இடைவெளியில் அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டுமல்லவா? அமைச்சர் இதுவரை ஆய்வு செய்யவில்லையா? ஒருவரை பிடிக்கவில்லை என்றால்தான் ஆய்வு செய்வாரா?

மத்தியில் ஆளும் பாஜக, தங்களை எப்படி மிரட்டிப் பணிய வைத்ததோ அதே பாணியில் கமலை மிரட்டிப் பணிய வைக்கலாம் என்று நினைக்கிறார் அமைச்சர்.

அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை; மத்திய அரசும் பாஜகவும் சொல்வதைக் கேட்டால், இத்துடன் நிற்கும். இல்லையென்றால் சோதனை தொடரும் என்ற சிக்னல் கொடுக்கப்பட்டது. அவ்வளவுதான்; தமிழக அரசும் அமைச்சர்களும் மோடியின் அடிமை ஆகிவிட்டார்கள்.

முறையாக வரி செலுத்தாமல் இருந்தால் நடவடிக்க்கை எடுக்க வேண்டியதுதானே? ஆய்வு செய்யட்டுமா? என்று கேட்டால்? வாயை மூடிக்கொண்டிருக்கிறாயா? வரித்துறையை ஏவி விடட்டுமா? என்று மிரட்டுவதாகத்தானே அர்த்தம்.

அடுத்த மிரட்டல் சட்ட அமைச்சர் சி.வி. சன்முகத்திடம் இருந்து. “பிக் பாஸ் நிகழ்ச்சியே, பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தும் ஆபாச நிகழ்ச்சி. இதற்காகவே கமலை கைது செய்யலாம்” என்று சொல்கிறார். அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. அதை விடுத்து மிரட்டல் பேச்சு எதற்கு? ஆபாச நிகழ்ச்சி நடத்தினாலும், அரசுக்கு ஆதரவாக இருந்தால் கண்டுகொள்ளமாட்டார்கள். எதிராகப் பேசினால் நடவடிக்கை பாயும். அப்படித்தானே. இதுதான் நேர்மையான அரசா?

ஜெயலலிதா இருக்கும்போது இப்படிப் பேசும் துணிச்சல் கமலுக்கு வந்ததா? என்று கேட்கிறார்கள்? இதிலிருந்தே, இப்போதுள்ள அரசு எவ்வளவு பலவீனமான அரசு என்பது தெரிகிறது அல்லவா?

கடைசியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கமல் பற்றி வாய் திறந்துள்ளார். “கமல் அரசியலுக்கு வந்துவிட்டு பேசட்டும். பதில் சொல்கிறேன்” என்று சொல்லி நழுவியிருக்கிறார் பழனிச்சாமி. ஓட்டு போட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும், உங்களைக் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. முதல்வர் பதில் சொல்ல வேண்டும். அரசியலில் இருப்பவர்கள் கேட்டால்தான் பதில் சொல்வேன் என்று சொல்வது, எஸ்கேபிசம். இல்லையென்றால், அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும்.

“கமல் முதுகெலும்பில்லாத கோழை” என்று சம்பந்தமே இல்லாத எச். ராஜாவும் விழுந்து பிறாண்டியுள்ளார். அரசை பற்றி சொன்னால் ராஜாவுக்கு ஏன் கோபம்? இந்துத்துவாவுக்கு எதிரானவர் கமல். அந்தக் கோபம்தான் ராஜாவுக்கு. அதனால்தான் சம்பந்தமே இல்லாத அவரும் கமல் மீது பாய்ந்துள்ளார்.

அரசியலுக்கு வா; பதில் சொல்கிறேன் என்று சொன்ன முதல்வருக்கு, “இந்தித் திணிப்புக்கு எதிராக என்று குரல் கொடுத்தேனோ அன்றே நான், வயதுக்குவராத அரசியல்வாதி ஆகிவிட்டேன்” என்று பதில் கொடுத்திருக்கிறார் கமல்.

அத்துடன் நிற்கவில்லை. ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள், அதை ஆதாரத்துடன் அந்தந்த துறை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள் என்று திரைத்துறையினருக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ”எனது துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன். சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்துக்கும் தனிச் சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்களுக்கு என்னைப் போல் ஒரு சிலரைத் தவிர, மற்றவரெல்லாம் பயந்து உடந்தையாக இருக்கிறார்கள். இது என் முதல் குரல்” என்று தனது குற்றச்சாட்டை பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார் கமல்.

எடப்பாடியும் அவரது அமைச்சர்களும் பதில் சொல்வார்களா? வழக்கு பாயுமா? கமல் கைது செய்யப்படுவாரா?

மக்களாட்சியின் மாண்பு காப்பற்றப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close