கீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்

இலங்கை இராணுவத்தின் கொலை வெறி நடைமுறைகள் பல இங்கிலாந்து இராணுவத்தின் பயிற்சியில் இருந்து வந்தவை என வாதிடுகிறது இம்மாதம் வெளியாகி இருக்கும் புதிய புத்தகமான – கீனி மீனி. கீனி மீனி என்பது ஒரு தனியார் நிறுவனத்தின் பெயர்.

Keenie Meenie Services, Keenie Meenie, கீனி மீனி, கீனி மீனியும் மனித உரிமை மீறல்களும் Keenie Meenie and Human rights violations, மனித உரிமை மீறல்கள், Keenie Meenie role in sri lanka war, Keenie Meenie services mercenary
Keenie Meenie Services, Keenie Meenie, கீனி மீனி, கீனி மீனியும் மனித உரிமை மீறல்களும் Keenie Meenie and Human rights violations, மனித உரிமை மீறல்கள், Keenie Meenie role in sri lanka war, Keenie Meenie services mercenary

சேனன், கட்டுரையாளர்
இலங்கை இராணுவத்தின் கொலை வெறி நடைமுறைகள் பல இங்கிலாந்து இராணுவத்தின் பயிற்சியில் இருந்து வந்தவை என வாதிடுகிறது இம்மாதம் வெளியாகி இருக்கும் புதிய புத்தகமான – கீனி மீனி. கீனி மீனி என்பது ஒரு தனியார் நிறுவனத்தின் பெயர். அறுபது மற்றும் எழுபதாம் ஆண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த போராட்டச் சக்திகளின் வளர்ச்சி முதலாளித்துவ அதிகாரத்துக்கு சவாலாக உருவாகி வந்ததை அறிவோம். இதை முறியடிக்க முதலாளித்துவ அரசுகள் பல்வேறு இரகசிய வேலைகளைச் செய்து வந்தன. நேரடியாக தலையிட்டால் தமது நாடுகளிலும் மக்கள் மத்தியில் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால் இரகசிய கொலைகள் மற்றும் சதித்திட்டங்கள் போட்டு அரசுகளை கவிழ்க்கும் வேலைகளை அவர்கள் செய்து வந்தனர். இவற்றுக்கு தாம் நேரடியாக பொறுப்பு இல்லை என்ற பிரச்சாரம் செய்ய உதவியாக அவர்கள் பல்வேறு இரகசிய தனியார் அமைப்புக்களை நிறுவி அதன் மூலமாக இந்த வேலைகளை செய்து வந்தனர். நவ தாராளவாத வலது சாரிய தாக்குதலைத் தலைமை தாங்கி நடத்திய அமெரிக்க ஜனாதிபதி ரோனல்ட் ரேகன் – இங்கிலாந்து பிரதமர் மார்கிரட் தச்சர் காலப்பகுதியில் தச்சர் அரசின் உதவியுடன் இங்கிலாந்து இராணுவ அதிகாரிகளால் நிறுவப்பட்ட தனியார் ‘கூலிப்படை’ அமைப்பே கீனி மீனி.

இலங்கையில் நவ தாராளவாத கொள்கைகளை முன்னெடுத்த ஜே ஆர் ஜெயவர்த்தனா காலப்பகுதியில் அவருக்காக கொலை செய்ய இலங்கை வந்து சேர்ந்தது கீனி மீனி கம்பனி. தெற்கில் ஜே.வி.பி – வடக்கில் ஆயுதம் தாங்கிய தமிழ் அமைப்புக்கள் என இலங்கை அரசு எதிர் கொண்ட நெருக்கடியை எதிர்கொள்ளும் பலம் அப்போது இலங்கை இராணுவத்துக்கு இருக்கவில்லை. இலங்கையிடம் போதிய அளவு ஹெலிகாப்டர் – மற்றும் விமான தாக்குதல் வசதிகள் போதுமானதாக இருக்கவில்லை. அந்தத் தளவாடங்களை இந்தியாவிடம் இருந்தும் மேற்கத்தேய நாடுகளிடம் இருந்தும் அவர்கள் வாங்கியபோதும் அவற்றைப் பயன்படுத்தும் திறமை அப்போது இருக்கவில்லை. இவற்றை எவ்வாறு பயன்படுத்துவது – அரசு எதிர் கொள்ளும் கிளர்ச்சியை எவ்வாறு முறியடிப்பது என்பதற்கு பயிற்சிகளை கீனி மீனி கம்பனி வழங்கியது. மில்லியன் கணக்கான டாலர்களை வழங்கி கீனி மீனியை இலங்கைக்கு ஜே ஆர் வரவழைத்த பின்புதான் மக்கள் மேலான கடும் ஹெலிகாப்டர் தாக்குதல்கள் ஆரம்பித்தன.

மக்கள் மேலான நேரடி ஹெலிகாப்டர் தாக்குதல்களை பிரித்தானிய கீனி மீனி படை அத்தருணத்தில் செய்ததையும் இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி அளித்ததையும் இந்தப் புத்தகம் வெளிக் கொண்டு வந்துள்ளது. இங்கிலாந்தின் முக்கிய புலனாய்வு ஊடகவியலாளர் என அறியப்படும் பில் மில்லர் கடந்த ஏழு ஆண்டுகளாக தான் செய்த ஆய்வின் சுருக்கமாக இந்தப் புத்தகத்தை எழுதி உள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்களை எவ்வாறு இங்கிலாந்து அரசு ஆரம்பித்து வைத்தது என்பதை பில் மில்லர் இப்புத்தகத்தின் மூலம் தெளிவாக வெளிக் கொண்டுவந்து உள்ளார்.

இலங்கையில் தற்போது பலமாக இயங்கி வரும் விசேட அதிரடிப்படை என்ற தனிப் பிரிவை உருவாக்குவதில் கீனி மேனி முக்கிய பங்காற்றி உள்ளதையும் இந்தப் புத்தகம் வெளிக் கொண்டு வந்துள்ளது. மக்கள் கொலை செய்யப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல் – மனித உரிமை மீறல்களைப் பற்றிய அக்கறை இன்றி எவ்வாறு இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பது என்ற பயிற்சியையும் அறிவுரையையும் வழங்கியது இங்கிலாந்து அரசின் இந்தக் கூலிப் படைதான் என்பதை இந்தப் புத்தகம் வெளிக்கொண்டுவந்துள்ளது.

இது மட்டுமின்றி கீனி மீனி பெரும் படுகொலை நடவடிக்கைகளை இலங்கையில் தொடங்கி வைத்த கம்பனியாகவும் உள்ளது. 1987ம் ஆண்டு பண்ணை ஒன்றில் வேலை செய்த மற்றும் அதைச் சுற்றி இருந்த 85 பேர்களை ஒரே சமயத்தில் கொன்று தள்ளிய படுகொலைக்கு வெளிநாட்டுப் படையினரும் காரணம் என்பதை அங்கிருந்த மக்களில் பலர் அறிவர். அந்தப் படை பிரித்தானிய அரசின் கீனி மீனிதான் என்பதை இந்தப் புத்தகம் முதன் முதலாக வெளிக்காட்டி உள்ளது.

வலது சாரிய அரசுகளுக்கு மக்கள் மத்தியில் உருவாகும் எதிர்ப்பை எவ்வாறு முறியடிப்பது என்பதில் விசேட அனுபவம் பெற்றவர்களாக தம்மை விளம்பரம் செய்து காசுக்கு கொலை செய்து வந்த கம்பனி இது. இலங்கையில் மட்டும் இன்றி நிகரகுவா, புவனஸ் எரஸ், ஓமன் என பல நாடுகளில் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை இந்தக் கம்பனி செய்து வந்த வரலாறு இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எகுடோரியல் கினியா நாட்டில் அந்த நாட்டின் இடது சாரிய அரசை வீழ்த்த மார்கிரட் தச்சரின் மகன் சதி வேலைகளை செய்தது இன்று பலரும் அறிந்த விசயம். இதுபோல் கியூபா, வியட்நாம் என பல நாடுகளில் இரகசிய கொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் பலதை மேற்கத்தேய வலது சாரிய அரசுகள் செய்து வந்தன. இது வரை இரகசியமாக காக்கப்பட்டு வந்த இந்த விபரங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கி உள்ளது. இருப்பினும் இன்னும் பல விபரங்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டு உள்ளன. மக்களுக்கு தெரிந்தால் எதிர்ப்புக் கிளப்பும் என்பதே இவர்கள் இதை வெளியிட மறுப்பதற்கு முதன்மைக் காரணம். இது தவிர இந்த மனித உரிமை மீறல் நடவடிக்கைககளில் ஈடுபட்ட பல அதிகாரிகள் எந்தக் குற்றமும் சுமத்தப் படாமல் –அந்தக் குற்றங்களால் பெற்ற லாபத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தக் குற்றவாளிகளை காப்பாற்றுவது இந்த அரசுகளுக்கு அவசியமாக உள்ளது.

இலங்கையில் 2009-ல் நடந்த மிகப்பெரும் படுகொலைக்கு இலங்கை அரசு மட்டும் பொறுப்பல்ல என்பதை நாம் பல தடவை சுட்டிக்காட்டி வந்து இருக்கிறோம். மிகப் பெரும் படுகொலை நடப்பதையும் – நடக்க இருப்பதையும் இந்தியா, மேற்கு அரசுகள் நன்கறிவர். அது மட்டும் இன்றி அந்த படுகொலையை நடத்தி முடிக்க அவர்கள் தமது உதவிகளை வழங்கி வந்துள்ளனர். இலங்கை சார்பில் கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, லலித் வீரதுங்க உள்ளிட்டோர் இலங்கை அரசின் ஜெனோசைட் கமிட்டியில் இருந்தனர் என்பதை சமீபத்தில் பாராளுமன்ற உரையில் சுட்டிக்காட்டிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அதில் மேற்கு அரசு சார்பாக யார் பங்கேற்றார்கள் என்ற விபரத்தை மறைத்து விட்டார்.

ஈழ விடுதலைக்கான போராட்டம் இலங்கை வலது சாரிய அரசின் இருப்பை ஆட்டத்துக்கு உள்ளாக்குவதாக இருப்பதை இந்தச் சக்திகள் எதுவுமே விரும்பியதில்லை. இலங்கை அரசு தமது நலனுக்கு சார்பாக இயங்க வேண்டும் என்பதுதான் அவர்கள் தலையாய நோக்கம். இதில் மனித உரிமையும் தமிழ் பேசும் மக்களின் உயிர்களோடு சேர்த்து கொள்ளப்பட்டுவிடுகிறது. ஆனால், தாமும் மனித உரிமை காப்பதாக நடிப்பதில் அவர்கள் பின் நிற்பதில்லை. மனித உரிமைக் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவேன் என அறிவித்த முன்னாள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் தானும் மனிதஉரிமை காப்பவராக நடிப்பது – ஈராக்கில் மில்லியன் கணக்கான மக்கள் படுகொலைக்குக் காரணமான டோனி பிளேயர் தன்னை மனித நேயராகக் காட்டிக் கொள்வது- தெற்காசிய வரலாறு காணாத படுகொலைக்கு காரணமாக இருக்கும் ராஜபக்ச குடும்பம் தம்மை இலங்கை பாதுகாப்பாளராக காட்டிக் கொள்வது – போன்ற நடவடிக்கைகள் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மக்களை ஏமாற்றத்தான் அவர்கள் தமது இத்தகைய நடவடிக்கைகளை இரகசியமாக பாதுகாத்து வருகிறார்கள். இலங்கையில் நடந்த கடந்த ஈஸ்டர் தின குண்டு வெடிப்பின் பின் இருக்கும் சக்திகள் யார் என்ற விபரம் வெளிவரத் தொடங்கியது முதலே அவற்றை ஒழித்து மறைக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டது. மிரர் பத்திரிகை இணையத்தில் இருந்த இது பற்றிய பல கட்டுரைகளை அவசர அவசரமாக தூக்கி விடுவதற்கு அழுத்தம் கொடுத்தது இலங்கை அரசு.

தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மக்கள் மத்தியில் பிளவை உண்டு பண்ணும் இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதை எல்லா அதிகார சக்திகளும் செய்து வருகின்றன. பிரித்தாளும் முறையின் நிபுணர்களான பிரித்தானிய அரசு அந்த பயிற்சியையும் இலங்கை அரசுக்கு வழங்கி உள்ளது. கிழக்கு இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் எவ்வாறு பிளவுகளை உருவாக்குவது என்ற திட்டமிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இந்தக் கீனி மீனி கம்பனி உதவி உள்ளது.

இலங்கை அரசின் படுகொலை செய்யும் முறை – மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்கும் சதி வேலைகள் செய்யும் முறை ஆகியனவற்றைப் பயிற்றுவித்த முக்கிய பொறுப்பு இங்கிலாந்து அரசுக்கு உண்டு. இலங்கை படுகொலையில் இவர்களுக்கும் பங்கு உண்டு. அவர்கள் ஒலித்து வைத்திருக்கும் ஆவணங்கள் அனைத்துமாவது உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்பதே தமிழ் சாலிடரிட்டி (Tamil Solidarity) போன்ற போராட்ட அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.

சேனன், கட்டுரையாளர், எழுத்தாளர்,
லண்டனில் தமிழ் சாலிடரிட்டி அமைப்பின் செயற்பாட்டாளராக இயங்குகிறார்.

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Keenie meenie services and human rights violations

Next Story
என்ன செய்யப்போகிறார் ரஜினி?rajini
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com