பினராய்… இதயம் தொட்ட நிகழ்வு

முதல்வரின் அரைமணி நேரம் என்பது சாமானிய மனிதனின் அறுநூறு மணி நேரத்துக்கு சமம். ஆனாலும், அவர் பிரணவ்க்கு நேரம் ஒதுக்கி பேசி மகிழ்கிறார்.

By: Published: November 13, 2019, 8:47:43 PM

க.சந்திரகலா

உலகத் தலைவர்களுடன் கை குலுக்கி தன்னை ஒருபடி உயர்த்திக்கொள்ள எத்தனிக்கும் முதல்வர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு ஈர மனதுக்காரரா? என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் கேரள முதல்வர் பினராய் விஜயன்.

தொண்டனாக தவழ்ந்து வந்து, தலைவனாக நிமிர்பவர்கள் நிறைந்தது தமிழக அரசியல் களம். கேரளம் அப்படியில்லை. தொண்டனாக நிமிர்ந்து வந்து தலைவனாக குனிகிறார்கள். அதனால்தான் தவழ்ந்து வந்த இளைஞனுக்கு இறங்கி வந்து கரம் கொடுக்கிறார்கள். ஒரே நாளில் பினராய் விஜயன் இணையவாசிகளின் இதயவாசியான ரகசியம் அதுதான்.

பரஸ்பரம் கை குலுக்கிக் கொள்வதற்கு கைகள் தேவையில்லை; இதயம் போதும் என்பதை உலக சமுதாயத்துக்கு பொட்டில் அறைந்தமாதிரி புரிய வைத்திருக்கிறார் மனிதர். அரசியல் ரீதியாக பினராய் மீது அபிப்பிராய வித்தியாசம் இருந்தாலும் , கட்சி பேதமற்று அத்தனை கண்களும் நேற்று ஆச்சரியப்பட்டு பார்த்த நிகழ்வு அது.

கேரள பாலக்காட்டை சேர்ந்த இளைஞர் பிரணவ். பிறக்கும் போதே இரண்டு கைகளும் இல்லாமல் இந்த பூமிக்கு வந்தவர். வறுமையான சூழலிலும் கடின உழைப்பு காரணமாக கல்லூரிப்படிப்பு கை கூடியது. கால்களால் ஓவியம் வரைகிற தூரிகைக்கலைஞனாக தன்னை வளர்த்துக்கொண்டார்.

தனது நிலையைப்பார்த்து எவரும் கழிவிரக்கம் கொள்வதை விரும்பாத இவர், தனக்கு கிடைப்பதை அடுத்தவர்களுக்கு கொடுத்து அழகு பார்ப்பவர். தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக மலையாள மக்களின் இதயத்தின் இடுப்பிலேறி உட்கார்ந்து விட்ட இவருக்கு, பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஐந்தாயிரம் ரூபாய்க்கான அன்பளிப்பு காசோலையை வழங்குகிறது. அதை முதல்வரின் பெருவெள்ள நிவாரண நிதியில் சேர்ப்பதற்காக வருகிறார்.

தகவல் பினராய்க்கு தெரிவிக்கப்படுகிறது.அந்த இளைஞரை சந்திக்க தயாராகிறார். தயங்கித் தயங்கி தவழ்ந்து வந்த இளைஞனை சந்திக்க வசதியாக தாழ்வான இருக்கையில் உட்காருகிறார். எண்சுவடி கணக்கு வைத்து பார்த்தால் பிரணவ்க்கு பேரன் வயது. பினராயோ தனது கண்சுவடி கொண்டு கணக்கிடுகிறார். கைகளற்று போன குறை தெரியக்கூடாது என்பதற்காக பினரவ்-ன் கால்தொட்டு குலுக்குகிறார்.

இடது கையால் நீட்டுவதை கூட வாங்கிக்கொள்ளத் தயங்குகிற நிலையில் திமிர் வளர்த்து திரிகிற மனிதர்களுக்கு மத்தியில் ,அந்த இளைஞன் காலில் வைத்து நீட்டிய காசோலையை கனிவுடன் பெற்றுக்கொள்கிறார் அவர். ஒரு முதல்வரின் அரைமணி நேரம் என்பது சாமானிய மனிதனின் அறுநூறு மணி நேரத்துக்கு சமம். ஆனாலும், அவர் பிரணவ்க்கு நேரம் ஒதுக்கி பேசி மகிழ்கிறார்.

பாதுகாப்பு என்ற ஒற்றை வார்த்தையை பயன்படுத்தி அரசியல் தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பெருசுவர் எழுப்பப்பட்டிருப்பதன் காரணமாக அதிக பட்சம் தலைமைச்செயலக வாசல்வரை மட்டுமே வரமுடியும் என நம்பிருந்த இளைஞன் ஆச்சரியப்பட்டுப்போகிறான். ஒரு தமையனைப்போல ஒரு தகப்பனை போல ஒரு தாத்தாவைப்போல எளிமையாக இப்படி ஒரு தலைவரா?

கிளம்புவதற்கு முன்பு முதல்வருடன் ஒரு செல்பி எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற தனது ஆசையை தெரிவிக்கிறான் புன்னகையுடன் அனுமதி கிடைக்கிறது.
கைகளால் கையாள்வதற்கே சிரமமான செல்போனை கால் விரலில் இடுக்கி கச்சிதமாக ஒரு செல்பி எடுக்கிறான். காமிரா பிரேமுக்கு வசதியாக பினராய் சற்றே சாய்ந்து கொள்ள பதிவாகிய படம் உலகம் முழுக்க ஒரே நாளில் பறந்திருக்கிறது.

இங்கே, செல்பி காமிராவை தட்டிவிட்டு நடக்கிற நடிகர்கள்,; தன்னிடம் கைகுலுக்க வந்துவிடுவானோ என பயந்து பத்தடி விலகியே நிற்கிற தலைவர்கள் என பலரையும் பார்த்து விட்டவர்கள் நாம். உயரத்தில் இருக்கிற எதுவும், உயரத்தில் இருக்கிற எவரும் ஒருநாள் கீழிறங்கி வந்தாக வேண்டும் என்பது நியதி. அதையும் கடந்து உயரத்தில் இருந்து மேலும் மேலும் உயரத்தில் போவதற்கும் ஒரு வழி இருக்கிறது. அதற்கான சூட்சுமம் பினராய்க்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Kerala news chief minister pinarayi vijayan met pranav man with disability

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X