2019ற்கான தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேசியக் கட்சிகளான காங்கிரஸ்ஸும், பாஜகவும் தங்களுக்குள் ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொள்ளாமல் தினமும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறது.
மிக சமீபத்தில் ராகுல் காந்தி இஸ்லாமியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையினை வைத்து பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் இருவரும் காங்கிரஸ்ஸினை கடுமையாக சாடியுள்ளனர்.
“காங்கிரஸ் ஒரு இஸ்லாமிய கட்சி என்றும், நீங்கள் பூனூல் போட்ட இஸ்லாமியராக ஒரு நாளும் இருக்க முடியாது” என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.
உண்மைக்கு புறம்பான, பாதி உண்மை மட்டும் கூறக்கூடிய, உண்மைக்கு துளியும் சம்பந்தமில்லாதவர் மோடி என்று கூறிய ராகுல் காந்தியின் பேச்சுக்கு உங்களால் மறுப்பு சொல்ல இயலுமா என்று பாஜகவினரைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளது காங்கிரஸ்.
ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆன நிலையிலும் ஏன் இந்து - இஸ்லாம் என்ற பெயரைக் கொண்டு ஆட்சியை நிர்வாகம் செய்கிறது பாஜக என்பது தான் கேள்வி.
இன்னும் இரு மதத்தினரையும் வெவ்வேறு துருவங்களாக சித்தகரித்து ஏன் இரு பெரும் கட்சிகளும் அடித்துக் கொள்கின்றன.
இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக - என்பதை ஏன் பாஜக “தேச விரோதிகள்” என்ற பதத்திற்கு இணையாக பயன்படுத்திவருகிறது?
காங்கிரஸ் கட்சியினரும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை. இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மை சமுதாயத்தினருக்கு ஆதரவாக நிற்பதற்கு ஏன் தயங்குகிறது என்பதும் புரியவில்லை.
மாறாக காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களின் கட்சி என்று கூறுவது தங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்கின்றனர் சில காங்கிரஸ் கட்சியினர்.
இது ஒன்றும் புதிதாக நடப்பதில்லை. உத்திரப் பிரதேசத்தில் சமஜ்வாடி கட்சியினை இஸ்லாமிய கட்சி என்றும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியினை இஸ்லாமிய ஆதரவாளர் என்றும் கூறியவர்கள் தான் பாஜகவினர்.
இப்படி இஸ்லாமியர்களை அடையாளப்படுத்துவது என்பது, அச்சமுதாயத்தின் பிரச்சனைகள் களைவதற்காக அல்லாமல், அவர்களை மீண்டும் மீண்டும் ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்பட்டே வருகிறது. இதற்கு பாஜக மட்டுமே காரணம் இல்லை.
தங்களை மதசார்பற்ற கட்சிகள் என்று கூறிக்கொண்டு, சிறுபான்மையினருக்கு பக்கபலமாக ஒரு போதும் இல்லாத கட்சிகளும் தான் இதற்கு காரணம்.
சிறுபான்மையினரின் நலத்திட்டங்கள், உரிமைகள், சுதந்திரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரும் கட்சிகள் எது என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாமல் போய்விடுகிறது என்பது தான் உண்மை.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 17.07.18 அன்று வெளியான கட்டுரையின் தமிழாக்கம்
தமிழில் : நித்யா பாண்டியன்