மதுக் கடைகளில் பெண்கள் மா பாவமா?

பெண்களின் மீது போலி பச்சாதாபம் கொள்பவர்களின் கேள்விக்கு விடை ஒன்றுதான். பெண்ணை பெண்ணாக பாருங்கள்; அவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

kerala, liquir shops, ladies at liquir shops, kerala government, kerala cm pinarayee vijayan, kavignar chandrakala

கவிஞர் சந்திரகலா

அண்மையில் இரு விஷயங்களுக்காக பரபரப்பாக செய்திகளில் அடிபட்டது, கடவுளின் தேசமான கேரளா, ஒன்று, தலித்களை தேவசம் போர்டு ஆலயங்களில் அர்ச்சகர் ஆக்கியது! இன்னொன்று, மதுபானக் கடைகளில் பெண்களை விற்பனையாளர் பணிக்கு அமர்த்தியிருப்பது!

இவற்றில் முன்னதை ஆரவாரமாக வரவேற்றவர்களும்கூட, பின்னதை பம்மியபடியே பார்க்கிறார்கள். சமூக செயல்பாட்டாளரும் கவிஞருமான அதங்கோடு சந்திர கலாதரன் அது குறித்து தனது கருத்துகளை இங்கே முன்வைக்கிறார்…

அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் என யார்யாரோ யோசித்து பார்க்கவே முடியாத விசயத்தை சாதித்துக்காட்டி அனைத்து தரப்பினரையும் ஆச்சரியச் சிகரமேற்றிக் கொண்டிருக்கிறார் கேரள முதல்வர் பினராய் விஜயன். பிராமணரல்லாத தலித் உள்ளிட்ட 36 பேரை ஆட்சேபங்களுக்கு மத்தியில் அர்ச்சகராக்கி சமீபத்தில்தான் ஆண்டவனை சந்தோசப்படுத்தினார்.

நாகரீக சமுதாயம் அவரது தோளுக்கு சூட்டிய பூமாலை வாடுவதற்குள், ஆண்களுக்கு நிகராக அரசு மதுக்கடையில் பெண்களை பணியமர்த்தியதன் மூலம் அடுத்த மாலைக்கு அருகதைப்பட்டவராயிருக்கிறார். ஆண்கள் மட்டுமே புழங்குகிற இடமென்று அறியப்பட்ட 33 வருட கேரள மது சாம்ராஜ்ஜிய சரித்திரத்தில் புதிதாக எழுதிச்சேர்க்கப்பட்ட முதல் அத்தியாயம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைனி.

கடவுள் விக்ரக ஆறாட்டு வைபவத்துக்காக சர்வதேச விமான முனையத்தையே 5 மணி நேரம் மூடி பாரம்பர்யம் காக்கிறது கேரளம். கேரளம் முழுக்க ஆணுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்துக் காட்டுகிறார்கள். ஆனாலும், மதுக்கடையில் பெண்களை பணியமர்த்தியிருப்பது சிலருக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படிப்பட்ட நடவடிக்கைகள் கடவுளின் சொந்த தேசமென உலகமே கொண்டாடுகிற கேரளத்தின் பாரம்பரிய மகிமையை கெடுத்து விடாதா? என கேள்வி எழுப்புபவர்களும் உண்டு. இந்த விவகாரத்தை நம்மூர் மதுக்கடைகளை பார்த்து பழகிய கண்களைக் கொண்டல்லாமல் இன்னொரு கண்ணால் பார்க்க வேண்டும்.

கல்வி நிறுவனமோ மருத்துவமனையோ கவலையில்லை; சாக்கடையோ மூத்திரச்சந்தாக இருந்தாலும் பரவாயில்லை. சரக்கு விற்றொழிக்க வேண்டுமென கருதி கேரளாவில் மதுக்கடை திறப்பதில்லை. எதிலும் விதிமுறைகளை கடைபிடிக்கிறார்கள்.

ஒரு அரசு அலுவலகத்துக்கு இடம் தேர்வாகிற மாதிரிதான் மதுக்கடைக்கும் இடம் தேடுகிறார்கள். ஒரு வங்கியின் கட்டமைப்பைப்போலத்தான் கடைகளை வடிவமைக்கிறார்கள். மது வகைகளுக்கான விலைப்பட்டியல் வெளியே இருந்தாக வேண்டும். இருக்கும். பணம் கொடுத்து கம்ப்யூட்டர் பில் வாங்க தனி கவுன்டர், மது வாங்க தனி கவுன்டர், நீள் வரிசைக்கென இரும்பு தடுப்புகள் என நீள்கிறது பட்டியல்.

வங்கிகள் கூட வாடிக்கையாளருக்கேற்ப திறந்து மூடுகிற நேரத்தை கூட்டி குறைக்கலாம் . இங்கே அது இல்லை. நம்மூரைப்போல உள்ளூர் அரசியல் அல்லக்கைகள் கடை நேரத்தை தீர்மானிக்க முடியாது. தூக்குத்தண்டனை நிறைவேற்றம்போல துல்லியமான நேரத்தில் கடை திறக்கும். காலை 9 மணிதொடங்கி இரவு 9 வரை மட்டுமே பணி நேரம். தேவைப்படும் நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு. பிறகென்ன?

ஆனாலும் மதுக்கடைகளில் பெண்களை நியமிப்பது மலிவான விற்பனை தந்திரம் என்று சொல்பவர்கள் உண்டு. பெண்களுக்கென எத்தனையோ பணி நியமனங்கள் இருக்க, மதுக்கடையில் பெண்களை பணியமர்த்துவது உலக மகா பங்கத்தை ஏற்படுத்திவிடாதா ? மதுக்கடை இருக்கும் பகுதிகளில் பாதுகாப்பற்ற நிலை இருக்கும் போது அங்கு பணி செய்யும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும் ?

இது மட்டுமா..கேள்வி கேட்பவர்கள் இன்னும் கேட்கிறார்கள்..
மதுக்கடைகளில் ஆண்கள் விற்பனையாளராக இருந்தால் அவர்களின் அதட்டலுக்குப் பயந்து பள்ளிச்சிறுவர்கள் அந்த பக்கமே வரமாடார்கள்.அதுவே பெண்களாக இருக்கும் பட்சத்தில் பள்ளிச்சிறுவர்கள் மாத்திரமின்றி பெண்களும் வர ஆரம்பிக்க மாட்டார்களா என கேள்வி எழுப்புகிறார்கள்.

இவையெல்லாம் சிரிப்பு மூட்டுகிற கிச்சு கிச்சு  கேள்விகளல்லாமல் வேறென்ன? பொதுவெளியில், பணியிடங்களில் பெண்கள் பத்திரமாக இருக்கிறார்கள்; பாதுகாப்பாக உணர்கிறார்கள். அப்படியொரு சூழலை கேரளம் ஏற்படுத்தி தந்திருக்கிறது.

இத்தனைக்குப்பின்னும் பெண்களின் மீது போலி பச்சாதாபம் கொள்பவர்களின் கேள்விக்கு விடை ஒன்றுதான். பெண்ணை பெண்ணாக பாருங்கள்; அவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். முடிந்தால் களம் அமைத்து கொடுங்கள். அல்லது தள்ளி நின்று வேடிக்கை பாருங்கள். ஆட்டத்தை அவர்களே ஆடுவார்கள். பினராயும் இதைத்தான் செய்திருக்கிறார்!

(கவிஞர் சந்திரகலா, கன்னியாகுமரி மாவட்டம் அதங்ககோட்டைச் சேர்ந்தவர். இவரது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் தமிழ் ஊடகப் பரப்பில் உற்று நோக்கப் படுபவை!)

 

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ladies at liquir shops what wrong in it

Next Story
கமல்ஹாசன் – ரஜினிகாந்த் : யாருக்கு வாய்க்கும் அரசியல்?actor kamal haasan, actor rajini kanth, kamala.selvaraj, tamilnadu politics, kamal haasan - rajini kanth ,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com