scorecardresearch

வலிமையானவர்களின் பலவீனம்… உக்ரைனிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம்

புதினின் ரஷ்யா போன்ற சக்திவாய்ந்த நாடுகள் கூட தங்களின் தவறுகளால் பலவீனமடையக்கூடும்

ரஷ்யாவின் தாக்குதல் படைகளின் திறன்களை புதின் மிகைப்படுத்தி மதிப்பிட்டார். அவர் தாம் விரும்பியதையே எண்ணமாகக் கொண்டிருந்தார். (கோப்பு புகைப்படம்)

 Rajmohan Gandhi 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூரமான தாக்குதலின் கதையின் போக்கில் இன்னும் முடிவு ஏற்படவில்லை. என்றாலும், எப்படியேனும் கதை முடிவுக்கு வரும்போது சில படிப்பினைகள் நம்பத்தகுந்தவையாக இருக்கும். இதில் முதன்மையான படிப்பினை என்னவென்றால், வலுவான மற்றும் வெளித்தோற்றத்தில் எதிரிகளே இல்லை என்று கருதப்படும் அதிகாரத்தில் இருக்கும் ஆட்சிகள் திடீரென்று பலவீனமான தருணங்களில் சிக்கிவிடக் கூடும். இது தொடர்பான படிப்பினை என்னவெனில், ராணுவ தரவரிசையில், பல ஆண்டுகளாக உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள நாட்டில் ஒரு சிறிய தவறு என்றாலும், அது எந்த ஒரு நாட்டையும் கடுமையாக பலவீனப்படுத்தக்கூடும்.

உக்ரேனியர்களின் தேசபக்தியை குறைத்து மதிப்பிட்ட அதிபர் புதின் பின்விளைவுகளைக் கொண்ட மூன்று காரணிகளை கருத்தில் கொள்ளத் தவறிவிட்டார். முதலில், உக்ரைனியர்களிடம் போராட்ட குணம் இருந்தது. “உக்ரேனியர்கள் தோல்வி எனும் சூழலுக்கு ஆட்படுவார்கள் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவர்கள் வெடிகுண்டுகளுடன் வந்தார்கள். வைரலாக பரவும் இந்த கருத்து நீண்டநாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது. இரண்டாவதாக, முன் எப்போதும் இல்லாத வகையில் ஐரோப்பியர்களிடையே ஒற்றுமை ஏற்பட்டது. மூன்றாவதாக, அமெரிக்காவுடன் ஐரோப்பாவைக் கட்டிப்போட்ட துணியானது எதிர்பாராத வேகத்தின் காரணமாக பலவீனம் அடைந்து விட்டது.

ரஷ்யாவின் தாக்குதல் படைகளின் திறன்களையும் புதின் மிகைப்படுத்தி மதிப்பிட்டார். அவர் தாம் விரும்பியதையே எண்ணமாகக் கொண்டிருந்தார். ஆளுமை வழிபாட்டுடன் தீவிர தேசியவாதம் இணைந்த ரஷ்யாவில், முதலிடத்தில் இருக்கும் மாஸ்டர் திட்டங்களை யாரும் கேள்வி கேட்க விரும்பவில்லை.

அதிபர் புதினுக்கும் ரஷ்யாவின் பாரம்பர்யமான சர்ச்சின் தலைவரான 75 வயதான தேசபக்தர் கிரில்லுக்கும் இடையிலான நெருக்கம் குறைந்திருப்பதாகவே அறியப்படுகிறது. இந்த இரண்டு மனிதர்களும் கற்பனை செய்தபடி, ஒரு ஒருங்கிணைந்த ரஷ்ய உலகின் புகழ்பெற்ற கடந்த காலத்தை உயிர்த்தெழுப்புவதற்கான இன்றைய ரஷ்ய கூட்டமைப்புடன் கூடுதலாக உக்ரைன் மட்டுமல்ல, பெரியதாக சித்தரிக்கப்பட்ட பிற பகுதிகளும் அடங்கிய ரஷ்ய நாகரிகம் அல்லது வரலாற்றின் பேரரசு என்ற ஒரு கடந்த காலத்தை உள்ளடக்கிய இலக்கை வெளிப்படையாக, பகிர்ந்து கொண்டனர்.

அத்தகைய உயிர்த்தெழுதலுக்கு மற்ற ரஷ்யர்களும் அடைக்கலம் கொடுத்திருக்கின்றனர். உக்ரேனில் ரஷ்ய படைகளின் உயிரிழப்புகள் மற்றும் போரின் முடங்கும் சுமை மற்றும் அதைத் தொடர்ந்து உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ஆகியவை இருந்தபோதிலும் புதின் இன்னும் உள்நாட்டில் ஆதரவை பெற்றிருப்பதற்கு இதுதான் காரணமாக கூறப்படுகிறது. .

சமீபத்திய ஆண்டுகளில், பல நாடுகளில் மத தேசியவாதம் செழித்து வளர்வதைக் காணமுடிகிறது. மியான்மர் மற்றும் இலங்கையில் பௌத்த தேசியவாதம் தீவிர ஆதரவைக் கண்டுள்ளது. ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி மற்றும் பிற இடங்களில் இஸ்லாமிய தேசியவாதம், ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் அதிகாரத்திற்கான பாதையாக உள்ளது. இந்தியாவில் இந்து தேசியவாதம் தலைதூக்கியுள்ளது. ஒரு ரஷ்ய தேசியவாதம் அதன் பாரம்பர்யமிக்க சர்ச்சுடன் இணைக்கப்பட்டிருப்பது ஒரு முரணான நிகழ்வு அல்ல.

புதினின் நடவடிக்கைக்கு ஆதரவாக தங்களை இந்து சேனாவின் வீரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில இந்தியர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியதில் ஆச்சரியமில்லை. ரஷ்யாவின் மதத் தேசியவாதிகளால் நினைவுகூரப்படும் அகண்ட ரஷ்யாவைப் போல, இன்றைய இந்தியாவை விட அகண்ட பாரத தேசம் எனும் கனவு ஒரு சில சமகால இந்தியர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இருந்தபோதிலும் பெரும்பாலான இந்து தேசியவாதிகள் இந்தியாவிற்குள்ளும் உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள்களுக்கு மத்தியிலும் தங்கள் சித்தாந்தத்தை வலுவாகப் பிடித்து வைத்துக் கொள்வதில் திருப்தி அடைகின்றனர்.

புதின் உட்பட ரஷ்யாவின் மத தேசியவாதிகளால் உக்ரைன் ஏளனமாகப் பார்க்கப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது, ​​அவரும் உக்ரைனை கேலி செய்ய முனைந்தார். படையெடுப்பு தொடங்கியவுடன், டிரம்ப் முதலில் புதினை “புத்திசாலி” மற்றும் “மேதை” என்று அழைத்தார், இருப்பினும் சமீபத்தில், அமெரிக்காவின் மனநிலையை அவதானித்த அவர், படையெடுப்பை மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று கூறினார். உக்ரைன் அவமதிப்புக்கு உள்ளானபோதிலும், அதன் “குழப்பமான” ஜனநாயகம் குறிப்பிடத்தக்க தைரியத்துடன் செயல்பட்டதாகத் தெரிகிறது, அதே நேரத்தில் புதினின் லட்சிய மற்றும் திறமையான தேசியவாதம் ரஷ்யர்களுக்கு கஷ்டங்களையும் சோகத்தையும் கொண்டு வந்ததாகத் தெரிகிறது. ஒரு யூத அதிபர் மற்றும் காகசஸ் வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள் ரஷ்ய டாங்கிகள் மீது ஆயுதங்களை வீசும்போது “அல்லாஹ் ஹு அக்பர்” என்று கூக்குரலிடும்போது மட்டும் உக்ரைனின் பல்வேறு படைகள் ரஷ்ய ஒற்றுமைக்கு எதிராக நிற்கின்றன!

இந்தியாவின் இந்து தேசியவாதத்தைப் பொறுத்தவரை, அதன் நீடித்த தன்மையை கணிப்பது கடினம். தேர்தல் முடிவுகள் என்பது சித்திரத்தின் ஒரு பகுதி மட்டுமே, அங்கும் கூட பாஜகவின் சமீபத்திய வெற்றிகளில் இந்து தேசியவாதம், ஜனரஞ்சக நலன், ஜாதிக் குழுக்கள் பங்கெடுப்பு அல்லது பிற காரணிகள் எந்த அளவுக்கு பங்கு வகித்தன என்று தெரியவில்லை. பெரும் அளவிலான ஊடகங்களின் மீது இந்து தேசியவாதத்தின் சந்தேகத்திற்கு இடமில்லாத அளவுக்கு தாக்கத்தையும், மற்றும் நீதிபதிகள் மீதான அதன் தாக்கம் பலருக்கு ஆழ்ந்த கவலையளிக்கும் விஷயங்களாக உள்ளன, குடிமக்களை வெறுப்பூட்டும் பேச்சிலிருந்து பாதுகாக்க அரசியலமைப்பு அதிகார அமைப்புக்கு ஊடகங்களின் மூத்த செய்தி ஆசிரியர்கள் பகிரங்கமாக அழைப்பு விடுத்தபோது இது வெளிப்பட்டது.

புதினைப் போலவே, இந்து தேசியவாதத்தின் தலைவர்களும் தவறு செய்யலாம் என்பதால் நாம் அதில் நம்பிக்கை வைக்க முடியாது. ஆனால் . இந்துக்கள் அல்லாதவர்களை அவமானப்படுத்துவதன் மூலம் மகத்துவம் வெல்கிறது என்ற எண்ணத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் பெரும்பான்மையான இந்துக்கள் நிச்சயமாக அந்த கருத்தை வெறுக்கிறார்கள். எவ்வாறாயினும், முஸ்லிம்களை விசுவாசமற்றவர்களாகவும் கிறிஸ்தவர்களை துரோகிகளாகவும் சித்தரிப்பது நம்பிக்கை மோசம் செய்கின்ற சாத்தியமான எதிர் விளவுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியம் மற்றும் சம உரிமைகளுக்கு உரிமையுள்ள சக குடிமக்கள் என்ற கண்ணோட்டத்தை இந்துக்கள் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் தீண்டாமையை நிராகரித்ததும் பிழை என்றும், முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் வீழ்த்தியது போதுமானதல்ல என்றும் நாளை அவர்கள் சொல்லக்கூடும். ஆனால், இது சாத்தியமில்லை, ஏனென்றால் இந்து சமுதாயத்தில் மேலாதிக்கத்தை நிராகரிப்பது ஒரு மெதுவான மற்றும் தயக்கமான செயல்முறையாகும், மேலும் இது பொதுவாக உண்மையான நம்பிக்கையாக அல்லது மனந்திரும்புதலுடன் கூடியதாக இருக்காது.

இறுதியாக, உலகளாவிய ஏற்றுக்கொள்ளல், நல்லெண்ணம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் தேவையானது எந்தவொரு பிரத்தியேகமான அல்லது மத தேசியவாதத்திற்கும் கடுமையான தடையாகும். பரந்த அணு ஆயுதங்களைக் கொண்ட ரஷ்யா கூட தனிமனித சுதந்திரம் மற்றும் உக்ரைன் போன்ற சக்தி குறைந்தவர்களின் சுயாட்சிக்கு ஆதரவாக உலகளாவிய உணர்வை எதிர்கொள்வது கடினமாக இருப்பதைக் காட்டுகிறது.

இந்த கட்டுரை முதன்முதலில் அச்சுப் பதிப்பில் 8 ம் தேதியன்று ‘Fragility of the strong’ என்ற தலைப்பில் வெளிவந்தது. எழுத்தாளர் தற்போது அர்பானா-சாம்பெய்னில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக உள்ளார்.

தமிழில்; ரமணி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Lessons from ukraine on the fragility of the strong