ராண்டிப் சிங் சுர்ஜுவலா
''போலியான மனிதர்களுக்கு அழகாக மயக்கும் சத்தியங்களை அளிப்பது என்பது மிகவும் எளிதான ஒன்றாகும். இதனால் அவர்களுக்கு இழப்பென ஏதும் இல்லை'' - எட்மண்ட் ப்ரூக். அப்படியாகவே முடிந்திருக்கின்றது, பாஜக தலைமையில் அமைந்திருக்கும் ஆட்சியும், அதன் நான்காண்டு சாதனைகளும். மோளதாளங்களுடன் வெற்றிக் களிப்பென கொண்டாடினாலும், நிஜத்தில் இந்த ஆட்சி வேறாகவே இருக்கின்றது.
2014ம் ஆண்டு மே மாதம், பெரிய மாற்றங்களை உருவாக்கும் சக்தியாக வருவார் என்ற எதிர்பார்ப்பில் நரேந்திர மோடியை நாம் தேர்வு செய்தோம். இந்த நான்கு வருடங்களில் “அச்சே தின்” என்பது வருமா என்ற எதிர்ப்பார்ப்பே இன்று காணாமல் போய்விட்டது. இந்த அரசின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இருளில் காற்றோடு காற்றாக கலந்து போனது. தொழிற்துறைகள் யாவும் சரிவில் சென்று கொண்டிருக்கின்றன. ஊழலை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறிய வார்த்தைகாள் யாவும் கானல் நீராகியது.
வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்பட்டு அனைவருக்குமான வேலை வாய்ப்பினை உருவாக்குவோம் என்று கூறிய வார்த்தைகள் அனைத்தும் பொய்யாய் போனது. ஒவ்வொரு முறையும் மக்களுக்கென பிரச்சனைகளையே உருவாக்கி வந்த அரசின் மீது மக்களுக்கு இன்று மதிப்பு இல்லாமல் போனது. இந்த நான்கு வருடங்களைப் பற்றிய மதிப்பீடு மிக முக்கியமானது என்பதால் அதைப் பற்றி கொஞ்சம் ஆலோசிப்போம்.
கடந்த நான்காண்டுகளில் இந்தியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பு என இரண்டும், இந்துத்துவ ஆட்சியமைப்பில் அதிகமாக பாதிப்படைந்திருக்கின்றது. இதனால் முதலில் பாதிப்பினை சந்தித்தது ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தான். மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டாட்சியில் அமைக்கப்பட்டிருக்கும் அரசிற்கு கீழ் ஜம்மு-காஷ்மீர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. மே 26, 2014 முதல், 371 பாதுகாப்பு படை வீரர்களும், 239 பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். பதான்கோட் , உரி என தொடர் தாக்குதல்களாலும், பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைப் பற்றிய எண்ணமின்மை காரணமாகவும் இதுவரை 3000 முறை இராணுவ தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன.
மற்றொரு பக்கம், சீனாவுடனான உறவு முறையும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. வடக்கு டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் தன்னுடைய தடவாளங்களை அமைத்திருக்கிண்றது. தெற்கு டோக்லாமிலிருந்து சிலிகுரி பகுதிவரை சாலை அமைக்கும் பணியையும் மேற்கொண்டிருக்கின்றது சீன இராணுவம். ஆனால் பிரதம அமைச்சருக்கு சீனாவிற்கு செல்லவோ, இது தொடர்பாக பேசவோ நேரம் இல்லை.
பாதுகாப்பினை தாண்டி, அதிக அளவு விவசாய மக்களையும் ஏமாற்றியிருக்கின்றது இந்த அரசு. வேறெப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த அரசில் விவசாயிகள் அதிகமாக பாதிப்படைந்திருக்கின்றார்கள். விவசாயிகளுக்கு 50% லாபத்துடன் கூடிய குறைந்த பட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்து தரப்படும் என்று கூறியது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் கீழ் 4.2% என இருந்த விவசாய வளர்ச்சி இந்த நான்கு வருடங்களில் 1.9% ஆக குறைந்திருக்கின்றது. பிரதம அமைச்சரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் விளைவாக காப்பீட்டு உரிமையாளர்கள் மற்றும் அலுவலகங்கள் 14,800 கோடி ரூபாய் இலாபமடைய, விவசாயிகள் ரூபாய் 5,650 கோடியை நஷ்ட ஈடாக பெற்றிருக்கின்றார்கள். பிரதம மற்றும் நிதி அமைச்சகம் சிறு குறு விவசாயிகள் பெற்றிருக்கும் கடனை தள்ளுபடி செய்தல் பற்றி பேசவே யோசிக்கின்றாகள். ஆனால், பெரிய பெரிய தொழில்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கும் பெரும்புள்ளிகளின் கடன் மதிப்பான 2,41,000 கோடி ரூபாயினை தள்ளுபடி செய்திருக்கின்றது இவ்வரசு.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையினை நோக்கி பயணிக்கின்றது. வேலையில்லா திண்டாட்டம் என்பது இன்று இந்தியா சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையாகும். ஒவ்வொரு வருடமும் தோராயமாக 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் பிரதமர். ஆனால் 1.35 லட்சம் வேலை வாய்ப்புகள் மட்டுமே 2015ல் உருவாக்கப்பட்டது. கடந்த 7 வருடங்களில் இது மிகவும் குறைவான மதிப்பாகும். 4.16 லட்சம் வேலை வாய்ப்புகள் 2016 - 2017 நிதியாண்டில் உருவாக்கப்பட்டது. அவ்வாறாகவே உருவாக்கப்பட்ட வேலைகளும் நிலைத் தன்மையற்றதாக இருக்கின்றது. தகவல் தொழில்நுட்பத் துறையில் 3ல் ஒரு பங்கு ஊழியர்கள் 2022 சமயத்தில் வேலை இழக்கும் அபாயமும் இருக்கின்றது.
பல்வேறு நடைமுறை சிக்கல்களின் விளைவாக மக்கள் தற்போது வங்கித் துறையில் வைத்திருந்த நம்பிக்கையினையும் இழந்துவிட்டார்கள். ரூபாய் 55,000 கோடி வரை இழப்பீடுகள் ஏற்பட்டிருக்கின்றது. வங்கி மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. விஜய் மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி, மெஹூல் சோக்சி போன்றோர்களால் வாங்கப்பட்ட கடன் மற்றும் அதனால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு என்று ஒவ்வொன்றும் பூதகரமான பிரச்சனையாக இருக்கின்றது.
நீதித்துறை, நீதிபதிகள் நியமனம், ஒரு சாரர் மீதான தொடர் நிராகரிப்பு என அங்கும் பல பிரச்சனைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்திய ரிசவ் வங்கி தொடங்கி நிதி ஆயோக், ஐஐடி, ஐஐஎம்ஸ், தேர்தல் ஆணையம், இன்னும் பல நிறுவனங்கள் யாவும் தொடர்ந்து இவ்வரசால் பதிப்படைந்து கொண்டிருக்கின்றன. இவையாவையையும் கடந்து இன்று இந்தியாவின் இறையாண்மையும், மதசார்பற்ற தன்மையும், சகிப்புத் தன்மையும் தொடர் தாக்குதல்களுகு ஆளாகிய வண்ணம் இருக்கின்றது. இதில் இரண்டாம் முறையாக இந்தியாவில் ஆட்சியமைக்க பாஜக முழு முச்சில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
லைட்ஸ், கேமரா என இரண்டும் ரெடியாக இருக்கின்றது. ஆக்சன்ஸ் அனைத்தும் பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் பாகத்தில் வெளிப்படலாம்.
தமிழில் : நித்யா பாண்டியன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.