ஸ்ரீவித்யா
பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்துக்கும் ஆதார் தேவை என்று தற்போது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், செல்போன் எண்களுடன் ஆதார் இணைப்பது, வங்கிக் கணக்குகளுடன் ஆதார் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு இணைக்க வேண்டியது கட்டாயமா. அவ்வாறு இணைக்காவிட்டால், வங்கிக் கணக்கையோ அல்லது செல்போனையோ பயன்படுத்த முடியாதா என்று பல கேள்விகள் எழலாம்.
தற்போதைய நிலையில், நாட்டில், 117.1 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 99 சதவீத குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வங்கிக் கணக்காவது உள்ளது என்று, அரசு கூறுகிறது. 118.08 கோடி செல்போன்கள் இணைப்புகள் வழங்கப்பட்டு, அதில், 101.95 கோடி செல்போன் இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளன.
செல்போன்கள் கட்டுப்பாடு இல்லாமல் எல்லோருக்கும் வழங்குகிறார்கள். இது குற்றவாளிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் சாதகமாக உள்ளது என்று ஒரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது. அப்போது, ஆதார் எண் அடிப்படையில் செல்போன்கள் இணைப்புகள் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
அதனடிப்படையில்தான், செல்போன் இணைப்புகளுக்கு ஆதார் கேட்பது துவங்கியது. தற்போது, ஏற்கனவே உள்ள செல்போன் இணைப்புகளையும் ஆதாருடன் பதிவு செய்ய வேண்டும் என்று, செல்போன் நிறுவனங்கள் கூறி வருகின்றன. 2018, பிப்ரவரி 28 வரை இதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வங்கிகளும் டிசம்பர் 31க்குள் வங்கி கணக்குடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளன.
இது தொடர்பாக, செல்போன் நிறுவனங்களும், வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்பி வருகின்றன. உண்மையில் இதை உடனடியாக செய்ய வேண்டுமா என்றால், அதற்கு அவசியம் இல்லை என்றே கூறலாம்.
ஆதாரை பல திட்டங்களுக்கு கட்டாயமாக்கும் மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் நடந்து வருகின்றன. அதில் ஒரு பகுதி வழக்கில், தனிமனித சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை என்று சுப்ரீம் கோர்ட்டின், 9 நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த நிலையில், ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளும், வரும் நவம்பர் மாதத்தில் விசாரணைக்கு வர உள்ளன. சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்பைத் தொடர்ந்தே, இதில் முடிவெடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதனால்தான், பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கான கால அவகாசத்தை டிசம்பர் வரை நீட்டித்துள்ளது. பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாளர் அட்டை, சமையல் காஸ இணைப்பு, வங்கிக் கணக்கு, செல்போன் இணைப்பு என, அனைத்தையும் ஆதாருடன் இணைப்பதற்கு, வரும் டிசம்பர், 31 வரை அவகாசம் உள்ளது.
ஒருவருடைய கைவிரல் ரேகைகள், கண் விழி ஆகியவற்றின் அடிப்படையில் தான் ஆதார் எண் வழங்கப்படுவதால், ஆதாரில் டூப்ளிகேட் செய்ய முடியாது என்று அரசு கூறுகிறது. ஆனால், ஆங்காங்கே போலி ஆதார் தயாரிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
பான் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றில் போலிகள் அதிகளவில் உள்ளதால், அதனால் மோசடிகள் நடக்கின்றன. அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஆதாருடன் இணைப்பதால், இந்த மோசடிகள் குறையும், இழப்பு தவிர்க்கப்படும் என்பது நல்ல விஷயம்தான்.
இதனால் பயன்பெற போவது நாம் தான். உதாரணத்துக்கு, ரேஷனில் மானிய விலையில் வழங்கப்படும் பொருளை, போலி பெயரில் ஒருவர் வாங்குகிறார். இதனால், அரசு கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது. அதற்காக நம்மிடம் தான் வரி என்ற பெயரில் வசூலிப்பார்கள். நேரடி மானிய திட்டம் மூலம், குறைந்தபட்சம், 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என்று அரசு கூறுகிறது.
நாடு முழுவதும், 2.33 கோடி போலி ரேஷன் கார்டுகளை ஒழித்தன் மூலம், கடந்த ஆண்டில், ரூ.14,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் ஏப்பம் விடப்பட்ட ரூ.399 கோடி இழப்பும் தவிர்க்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான சமையஸ் காஸ் சிலிண்டரில், ரூ.26,408 கோடி ரூபாய் மிச்சமாகியிருப்பதாக அரசு கூறியுள்ளது.
இவ்வாறு பல பலன்கள் இருப்பதால், ஆதாருடன் மற்ற வசதிகளை இணைப்பது என்பது சாதாரண மக்களுக்கு மிகவும் நல்லதுதான்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், யாருக்கு என்ன பலன் கிடைத்தது என்பது இதுவரை யாருக்குமே தெரியாது. அதே நேரத்தில், பல பலன்கள் கிடைக்கும் என்பதால், ஆதாருடன் மற்ற வசதிகளை இணைப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் ஆதார் தகவல்கள் தனியார் நிறுவனங்களுக்கு எப்படி எளிதாக கிடைக்கிறது? இதை அரசு தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான் மக்களுக்கு அரசு மீது நம்பிக்கை ஏற்படும்.