முனைவர் கமல. செல்வராஜ்
எல்லா வருடமும் ஏப்ரல் மாதம் கடைசியில் பள்ளி இறுதித் தேர்வு முடிந்து, மே மாதம் தொடக்கத்திலிருந்து முடிவு வரை ஒரு மாத காலம் முழுமையாகப் பள்ளிகளுக்கு விடுமுறைக் கிடைக்கும். அதன் பிறகு ஜூன் மாதம் முதல் அல்லது இரண்டாம் தேதியிலிருந்து புதியக் கல்வியாண்டுத் தொடங்கி விடும். இது காலாகலமாக நம் நாட்டில் நடந்து வரும் வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு நம் நாட்டில் எல்லாம் தலைகீழாக மாறியுள்ளன. ஏப்ரல் மாதத்தில், தேர்வு நடக்கவில்லை, ஜூன் மாதத்தில் பள்ளி திறக்கவுமில்லை. இது அனைத்துத் தரப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் எப்பொழுது பள்ளி இறுதித் தேர்வு முடியும், உறவினர்களின் வீட்டிற்கு விருந்துக்குப் போகலாம் என ஒவ்வொரு மாணவனும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டே இருப்பான். கூடவே பிள்ளைகளின் பெற்றோரும், பிள்ளைகளுக்கு விடுமுறைக் கிடைத்து விட்டால், பிள்ளைகளுடன், தங்களின் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களைச் சந்தித்து மகிழலாம் என்ற ஏக எண்ணத்தில், அந்த விடுமுறையை எதிர்நோக்கி இருப்பார்கள்.
உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று விட்டால் பிள்ளைகளுக்குக் குதூகுலம்தான். எனென்றால் அங்கு அவர்களுக்குக் கிடைப்பது, தினமும் அறுசுவை விருந்து மட்டுமல்ல பல்வேறு விளையாட்டுகளை, கூடியாடிக் கொக்கரித்து, ஆரவாரித்து விளையாடுவதற்கான நல்ல நண்பர்களும் கிடைத்து விடுவார்கள்.
மே மாதம் எப்பொழுது தொடங்கியது, எப்படி முடிந்தது என்றே நினைத்துப் பார்க்க முடியாதப்படி நாள்கள் கடந்து போகும். விருந்து வீட்டிலிருந்து திரும்பி வரும்போது, தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, மாமா, மாமி என எல்லோரும் போட்டிப் போட்டுப் புத்தாடை எடுத்துத் தருவது, புத்தாண்டில் பள்ளிக்குப் போகும் போது புத்தகம் வாங்க பணம் தருவது என எல்லாமே மகிழ்ச்சியும் மனநிறைவும் தருவதாக இருக்கும்.
ஜூன் மாதம் பள்ளித் திறக்கும் பொழுது பருவ மழையும் பொழியத் தொடங்கும். புத்தாடை உடுத்து, புதியப் புத்தகங்களுடன் பெரும்பாலான நாள்கள் நனைந்து கொண்டே பள்ளிக்குப் பிள்ளைகள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்வார்கள்.
அப்பொழுதெல்லாம், பள்ளிக்குச் செல்லும் போது மழை பொழிந்தால், இப்பொழுதுள்ள பிள்ளைகள் கொண்டுச் செல்லும் விதவிதமான வண்ண வண்ணக் குடைகளெல்லாம் இருக்காது. பெற்றோர்கள், பெரிய வாழையிலை, சேம்பிலை, பனை ஓலையில் செய்த தலைக்குடை போன்றவற்றைக் கொடுத்து அனுப்புவார்கள். அவற்றுடன் பாதி நனைந்தும் நனையாததுமாகப் பெரும்பாலான நாள்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டி வரும். அந்த நினைவுகளெல்லாம் இன்றும் வயதானவர்களின் மனதில் நிழலாடிக் கொண்டேயிருக்கும்.
ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல, மழையும் வெயிலும் பிள்ளைகளுக்கு ஒரு பொருட்டல்ல. வீட்டின் வாசலில் பள்ளி வாகனங்கள் வந்து காத்து நின்று, பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்கின்றன. காலம் அப்படி மாறிவிட்டது.
கொரோனா தந்த விடுமுறை:
இந்த ஆண்டு கொடியக் கொரோனா தொற்றினால் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. ஏப்ரல் மாதம் நடக்க வேண்டியப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வருப்பு வரை நடத்தாமலே ரத்தாக்கி விட்டார்கள். இதனால் தேர்வில் வெற்றியா? தோல்வியா? என்ற பயம் இல்லாமலானது. தேர்வில் அதிக மார்க் கிடைக்குமா? இல்லை குறையுமா? என்ற எதிர்பார்ப்பும் இல்லாமல் போனது.
மே மாதம் மட்டும் கிடைக்க வேண்டிய விடுமுறைக்குப் பதில் மார்ச் மாதத்திலிருந்தே நீண்ட விடுமுறை கிடைத்து விட்டது. ஜூன் மாதம் முதல் தேதியில் திறக்க வேண்டியப் பள்ளிகள் இன்னும் திறக்கவேயில்லை.
இவையெல்லாம் கிடைத்தும் பிள்ளைகளின் மனதிற்கு மகிழ்ச்சியும் எழுச்சியும் உண்டா? என்றால் அவை எதுவுமே இல்லை என்பதுதான் வேதனைக்குரியது. ஒரு மாதத்திற்குப் பதில், நான்கு மாதங்கள் விடுமுறை கிடைத்தும், ஒரு நாள் கூட உறவினர்கள் வீட்டில் சென்று விருந்து உண்பதற்கு முடியவில்லை. உறவினர்களோடு மட்டுமல்ல அடுத்த வீட்டிலுள்ளப் பிள்ளைகளோடு கூட விளையாடி மகிழ்வதற்கான வாய்ப்பில்லை.
தினம் தினம் பேசிப்பழகி வந்த உற்ற நண்பர்களைப் பார்ப்பதற்கும், அவர்களிடம் மனம் திறந்து பேசுவதற்கும் முடியவில்லை. கொரோனாவினால் லாக்டவுண் அறிவிக்கப் பட்டதினால் வீட்டைவிட்டு வெளியே இறங்க முடியாதப் பரிதாபமான நிலைக்குப் பிள்ளைகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு பிள்ளையும் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளால் பெற்றோர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
பிள்ளைகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாததும், தங்களது நண்பர்களைச் சந்திக்க முடியாததும் மனதிற்குள்ளே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் ஒவ்வொரு நாளையும் கடத்தி விடுவதற்காக, இரவிலும் பகலிலும் அதிக நேரம் தூங்குகின்றனர். மட்டுமின்றி சில பிள்ளைகள் டி.வி. பார்ப்பதிலேயே தங்களின் முழு நேரத்தையும் செலவழிக்கின்றனர். பெரும்பாலான வீடுகளிலுள்ளப் பிள்ளைகள் நேரம் விடிவதும் இருட்டுவதும் தெரியாமல் செல்போனிலேயே தங்களின் நேரத்தை வீணடிக்கின்றனர். பிள்ளைகளின் இது போன்ற செயல்பாடுகள், பெரும்பாலான பெற்றோரால் சகித்துக் கொள்வதற்கு முடியவில்லை. அதனால் பிள்ளைகளை அவர்கள் சில நேரங்களில் கடுமையாகக் கண்டிக்கின்றனர்.
அப்பொழுது பிள்ளைகள், தங்களின் பெற்றோரிடத்தில், ‘நான் இவற்றைச் செய்யாமல் வீட்டுக்குள்ளே இருந்து வேறு என்ன செய்ய வேண்டும்’ என எதிர் கேள்வி கேட்கின்றனர். இதனால் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதமும், பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்படியாமையும் நடக்கின்றன. இவை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்தி சில நேரங்களில் அவை குடும்ப வன்முறைகளாகக் கூட மாறுகின்றன.
இணையவழித் தீமை:
நிலைமை இப்படியிருக்க தற்பொழுது பெரும்பாலானத் தனியார்ப் பள்ளிகள் எல்.கே.ஜி, யு.கே.ஜி. என அனைத்து நிலைப் பிள்ளைகளுக்கும் இணையவழிக் கல்வியைத் தொடங்கியுள்ளனர். இக்கல்வி முறை அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் பயன்படுகிறதா? என்றால் அதுவும் ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. ஒரளவுக்கு வசதிபடைத்த வீடுகளில் உள்ள பிள்ளைகளுக்கு மட்டுமே ஸ்மார்ட்போன் இருக்கும். மற்ற வீடுகளிலுள்ளப் பிள்ளைகளுக்கு அந்த வசதியிருக்காது. இரண்டு வசதிகளும் இருந்தாலும், அவர்கள் வசிக்கும் இடத்தில் இன்டெர்நெட் இணைப்பு இருக்காது. அதனால் அவர்கள் இணையவழிக் கல்வியில் இணைந்திருந்துப் படிப்பதற்கு முடியாது. இதுவும் பெரும்பாலான பிள்ளைகளுக்கு மன உளச்சலை ஏற்படுத்தியுள்ளது.
நிலைமை இப்படியிருக்க சில பிள்ளைகள் இணையவழியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, அவர்கள் நடத்தும் பாடத்தைக் கவனிக்காமல், இணையதளத்திலுள்ள ஆபாசப் படங்களைப் பார்ப்பதையும், தற்கொலைக்குத் தூண்டும் அளவிலான விளையாட்டுகளை விளையாடுவதாகவும் பெற்றோர் மத்தியிலிருந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இவையும் வீடுகளில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவுக்கு உலை வைப்பதாக இருக்கின்றன.
மட்டுமின்றி சில பள்ளிகள் காலை முதல் மாலை வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்தி, அதன் பின் தினமும் தேர்வுகள் நடத்தி பிள்ளைகளுக்கு ஓய்வே இல்லாமல் பாடாப்படுத்துகின்றன. இதுவும் பிள்ளைகளுக்கு மன, உடல் ரீதியிலான பிரச்னைகளுக்கு வித்திடுகின்றன.
எனேவ இணைய வழியாகப் பள்ளிகள், வகுப்புகள் நடத்துவதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். கூடவே பிள்ளைகள் வீட்டில் இருந்து இணையவழிக் கல்விக் கற்கும் போது பெற்றோர்கள் முழுமையாக அவர்களைக் கண்காணிக்க வேண்டும். என்றால் மட்டுமே பிள்ளைகள் இந்த இணையவழிக் கல்வி மூலம் வழி தவறிப் போகாமல் பாதுகாப்பதற்கு முடியும்.
பொற்றோரின் கடமை:
பிள்ளைகள் பள்ளிக்குப் போகாமலும், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களைப் பார்ப்பதற்கு முடியாமலும் வீட்டிற்குள்ளையே அடங்கி, பெற்றோரின் அரவணைப்பில் மட்டுமே இருக்கும் இவ்வேளையில், அவர்களுக்குள் பல்வேறு விதமான மன அழுத்தங்களும், குமுறல்களும் இருக்கும். அவற்றையெல்லாம் பெற்றோர்கள் ஒரு உளவியல் வல்லுநரைப் போன்று உணர்ந்து, அவர்களுடன் பழக வேண்டும்.
அவர்களுடன் அன்பான வார்த்தைகள் மட்டுமே பேசுதல், வீட்டிற்குள்ளே எப்படியெல்லாம் அவர்கள் பொழுதைப் போக்குவதற்கு முடியுமே அவற்றிற்கு எல்லாம் பெற்றோரும் ஒத்துழைத்தல், ஒரு குறிப்பிட்ட நேரம் அவர்களுக்கு செல்போனில் பேசுவதற்கும், டி.வி. பார்ப்பதற்கும் அனுமதிக்க வேண்டும். பிறரிடத்தில் கண்டிப்பாக உங்கள் பிள்ளைகளின் குறைகளைக் கூறாமலும், அவர்களைத் தரம் தாழ்த்திப் பேசாமலும் இருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் பிள்ளைகள் என்னதான் தவறுகள் செய்தாலும் அவற்றை நல்ல பொறுமையுடனும் ஞானத்துடனும் கையாளுவது பெற்றோரின் தலையாயக் கடமையாகும். ஆனால் அவர்கள் என்னதான் அடம் பிடித்தாலும் தேவையின்றி வெளியே சென்று ஊர்சுற்றுவதற்கும் நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்கும் அனுமதிக்காதீர்கள். அது கொரோனாவின் கொடியத் தாக்குதலுக்கு வழிவகுக்கும்.
எது எப்படியானாலும் இந்நேரத்தில் பள்ளிகள் திறப்பது வரை பிள்ளைகளைப் பேணிக்காப்பது பெற்றோரின் தலையாயக் கடமையாகும்.
( கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். பேச: 9443559841, அணுக: drkamalaru@gmail.com )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.