முனைவர் கமல. செல்வராஜ்.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு இடதுகரை சானல் பாய்ந்தோடும் படப்பச்சை முதல் மஞ்சாலுமூடு வரை, சானலின் இரு கரைகளிலும் அரசுக்குச் சொந்தமானப் புறம்போக்குக் நிலத்தில் சில நூறு வீடுகள். பெரும்பாலான வீட்டில் உள்ளவர்கள் காலம்காலமாக வயலில் உழவு, நடவு, களை எடுத்தல், அறுவடை செய்தல் என உழவுத் தொழில் சம்பந்தமான வேலைகள் மட்டுமே அன்றாடம் செய்து வந்தனர்.
காலப்போக்கில் வயல்வெளிகள் குறைந்து அவை அனைத்தும் ரப்பர் தோட்டங்களாகவும், தென்னந் தோப்புகளாகவும் மாறிப்போயின. அதனால் அந்த மக்களும், ரப்பர் பால் எடுத்தல், களையெடுத்தல், புல் பறித்தல், விறகு பொறுக்கி விற்றல் என காலத்தின் கோலத்திற்கு ஏற்றார் போல் தங்களின் அன்றாடத் வேலையை மாற்றிக் கொண்டார்கள்.
இந்த வேலை மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் வருமானம், அவர்களின் அன்றாடத் தேவைகளைக் கஷ்டப்பட்டுப் பூர்த்திச் செய்வதற்குப் போதுமானதாக இருக்குமே தவிர, ஐந்து காசு கூட அவர்களால் மறுநாள் தேவைக்கு மீதி வைக்கவோ அல்லது நீண்ட நாள் சேமிப்பாக வைக்கவோ போதுமானதாக இருக்காது.
என்னுடைய அரை நூற்றாண்டு கால வாழ்க்கை முழுவதுமாக அவர்களோடு அன்னியோன்னியமாகப் பழகியும் வாழ்ந்தும் வருகிறேன். கூடவே அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்தும் வருகிறேன். இன்றுவரை அவர்களின் வாழ்க்கை, அரசுக்குச் சொந்தமானப் புறம்போக்கு நிலத்தில், குடிசைகளில்தான் நகர்ந்து போகிறதே தவிர, ஒரு குடும்பத்தில் ஒருவர் கூட ஒரு சென்ட் நிலத்தைத் தனதாக்கவோ, அல்லது தங்களின் பிள்ளைகளை உயர்படிப்பு படிக்க வைக்கவோ செய்யவில்லை. மட்டுமின்றி, அதிகமாகக் குடிபோதைக்கு அடிமையாகவோ, சினிமா போன்ற கேளிக்கைகளுக்கு அதிகம் செலவிடுவதோ கிடையாது.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய்நொடிகள் வந்தால் கூட முடிந்த அளவு ஆஸ்பத்திரிக்குக் கொண்டுச் சென்று சிகிச்சையளிப்பதற்கான வசதி வாய்ப்புகள் கூட அவர்களுக்குக் கானல் நீர்தான். அதிகமாக சுய மருத்துவம், அதையும் தாண்டிவந்தால் அரசு ஆஸ்பத்திரிதான் அவர்களின் புகலிடம். தலைமுறை தலைமுறையாக இதுதான் அவர்களின் வாழ்க்கைத் தரம்.
இந்த மக்களின் வாழ்க்கை முறையை ஏன், நான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துக் கூறுகிறேன் என்றால். இது என் கண்ணெதிரே அன்றாடம் நடந்தேறிக் கொண்டிருப்பது. அதனால் ஓர் உதாரணத்திற்காக மட்டுமே. இதைப்போன்று நம் இந்தியத் தேசம் முழுவதும் எத்தனையெத்தனை ஊர்கள் இருக்கும், அவற்றில் இது போன்று எத்தனையெத்தனைக் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதனை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் தான் கடந்த இரண்டு மாதக் காலமாக நம் நாட்டில் கொரோனா தொற்றினால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு, இந்த மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளார்கள். ஒரு நாள் வேலையில்லையென்றால் மறுநாள் உணவுக்கு வழியின்றி தவிக்கும் இது போன்ற மக்களின் நிலைப் பரிதாபத்திலும் பரிதாபம் என்பதை நம் நாட்டு அரசும், அதிகாரிகளும் உணர வேண்டும்.
லாக்டவுனுக்குப் பின் தங்களால் இயன்றவரைத் தாக்குப்பிடித்துப் பார்த்தார்கள். அதன் பின் சேவாபாரதி போன்ற சில சமூக அமைப்புகள் வழங்கிய ஒரு வேளை சாப்பாட்டை மூன்று வேளையாக்கி... பசியும்... பட்டினியுமாக... மாதங்கள் இரண்டு உருண்டோடி விட்டது. முதல் மாதத்தில் அரசாங்கம் வழங்கிய இலவச அரிசியும் ஆயிரம் ரூபாயும் இவர்களுக்கு ஓரளவுக்கு ஆறுதலாக இருந்தது. இரண்டாவது மாதத்தில் கூடுதலாக அரிசி மட்டுமே வழங்கப்பட்டது. வெறும் அரிசியால் மட்டுமே வாழ்க்கையை ஓட்டுவது என்பது எவ்வளவு சாத்தியமாகும்?
இந்த நேரத்தில் அரசு இன்னும் கூடதலாக தமிழக மக்களுக்கு உதவியிருக்க முடியும். நமது அண்டை மாநிலமான கேரள அரசு லாக்டவுனை மிகவும் கடுமையாகப் பாவித்தது. மக்களும் அதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர் என்பது உலகறிந்த உண்மை. அதற்குக் காரணம், அந்த அரசு லாக்டவுன் தொடங்கிய உடன், ஒவ்வொருக் குடும்பத்திற்கும் ஒரு வாரத்திற்குத் தேவையான நல்ல தரமான அரிசி முதல் மளிகைச் சாமான்கள், காய்கறிகள் வரை அனைத்தையும் பார்சலாக்கி அரசு ஊழியர்களை வைத்து ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கியது.
இதனால் அந்த மாநிலத்தில் மக்கள் லாக்டவுனுக்கு, அரசுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தனர். அதனால் இந்தியாவில் முதல் முதலில் கொரோனா தொற்று அறிமுகமான அம்மாநிலத்தால் மிக எளிதாக, அத்தொற்றை சமாளித்து, இந்தியாவிலையே கொரானோ தொற்றை வெற்றி கொண்ட மாநிலம் என்னும் அந்தஸ்தைப் பெற முடிந்தது. இதைப்போன்று தமிழக அரசும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருந்திருந்தால், மக்களும் இவ்வளவு பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். கூடவே கொரோனாவையும் மிகவும் சாதுர்யமாகச் சமாளித்திருக்க முடிந்திருக்கும்.
அரசு தேர்தல் நேரத்தில் அறிவிக்கும் இலவசங்களை இந்த நேரத்தில் வழங்கியிருந்தால் மக்கள் இன்னும் அதிகமாகத் திருப்தியடைந்திருப்பார்கள். விளிம்புநிலை மக்களும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
இந்நிலையில் நான்காவது முறையாக அறிவிக்கப்பட்ட மே 31 வரையிலான லாக்டவுன் முடிவதற்கு இன்னும் ஒருசில நாள்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் சென்னை உட்பட ஒருசில மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொட்டு வருகிறது. அதனால், லாக்டவுன் தற்பொழுது குறிப்பிட்டிருக்கும் மே 31 அன்று முடிவுக்கு வருமா? இல்லை மீண்டும் நீட்டிக்கப்படுமா? என்ற பீதி அனைத்துத் தரப்பு மக்களையும் கௌவிக் கொண்டுள்ளது.
அவ்வாறு மீண்டும் லாக்டவுன் நீட்டிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், இப்படிப்பட்ட விளிம்புநிலை மக்களின் நிலை மிகவும் பரிதாபகரமான நிலைக்குச் சென்று விடும். அதனை தாங்கிக் கொள்ளும் நிலை விளிம்பு நிலை மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இருக்காது என்பது நிதர்சனமான உண்மை.
எனவே தற்பொழுது எய்ட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு அனைத்து மக்களிடமும் உள்ளதைப் போன்று, கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிய விழிப்புணர்வும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் உருவாகியுள்ளது. அதனால் அவரவர்களைப் இந்த நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பு அனைத்து மக்களுக்கும் உண்டு. அதனால் இனியும் லாக்டவுன் வேண்டிவந்தால், அதை ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் அறிவிக்காமல், எந்தெந்த மாவட்டத்திற்கு அல்லது குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் அறிவித்து விட்டு, மற்ற இடங்களின் லாக்டவுனை விலக்கிக் கொள்வது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனுடையதாக இருக்கும்.
மட்டுமின்றி லாக்டவுன் முடிந்த பிறகு, அதனால் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கும் விளிம்புநிலை மக்களுக்கு அரசு அதிக முக்கியத்துவமளித்து, அவர்களின் நலிந்துள்ள வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com )
படம்: லாசர் ஜோசப் முகநூல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.