ச.செல்வராஜ்
லோக் ஆயுக்தா மசோதா... நீண்ட இழுபறிக்கு பிறகு, உச்ச நீதிமன்றமே கெடு விதித்த பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. இப்போதைய கேள்வி, இதுவும் ஆளும்கட்சியின் கைப்பாவையா?
லோக் ஆயுக்தா மசோதாவில் உள்ள சில அம்சங்கள்தான் இந்தக் கேள்வி எழ காரணமாக இருக்கின்றன. சரி, மசோதாவில் உள்ள அம்சங்களை பார்ப்போம்!
லோக் ஆயுக்தா அமைப்பில் ஒரு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் இருப்பார்கள். தலைவர், உச்சநீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியாக இருப்பார். இந்த தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரை செய்ய ஒரு குழு அமைக்கப்படும்.
அந்தப் பரிந்துரைக் குழுவில் முதல் அமைச்சர், சட்டமன்ற சபாநாயகர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் இப்போதைய சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அந்தக் குழுவில் இருப்பார்கள்.
இந்தக் குழு தேர்வு செய்து பரிந்துரை செய்யும் உறுப்பினர்களை ஆளுனர் நியமனம் செய்வார். தேர்வுக் குழுவில் ஆளும் கட்சிக்கு மெஜாரிட்டி இருப்பதால், ஆளும்கட்சி நினைப்பவர்களையே லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக பரிந்துரை செய்யும் வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரசாங்கம் வழக்கமாக அமைக்கும் விசாரணை ஆணையம் போலவே லோக் ஆயுக்தா இயங்கும் வாய்ப்புகளே அதிகம்!
இன்னொரு அம்சம், லோக் ஆயுக்தா மூலமாக அரசு ஒப்பந்தங்களையும், உள்ளாட்சி அமைப்புகளையும் விசாரிக்க முடியாது. தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் ஒரு அங்கமான தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரையும் இந்த அமைப்பு விசாரிக்க முடியாது.
அரசு நிர்வாகத்தில் எழும் ஒரே ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்பு போலீஸாரும் விசாரிப்பார்கள். அதே புகாரை லோக் ஆயுக்தாவும் விசாரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதுவும் குழப்பத்தை உருவாக்கும்.
லோக் ஆயுக்தா மசோதாவில் உள்ள இன்னொரு அம்சம், அதிகாரிகள் மீது புகார் எழுந்தால் அது நேரடியாக லோக் ஆயுக்தாவுக்கு வராது. தமிழ்நாடு அரசின் அங்கமான ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு முதலில் அனுப்பி வைக்கப்படும். அங்கு கண்காணிப்பு ஆணையராக பதவி வகிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அது குறித்து விசாரிப்பார். அதில் பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பதாக அவர் கருதும் பட்சத்தில், அந்தப் புகார் லோக் ஆயுக்தாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேற்படி கண்காணிப்பு ஆணையர் மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு கட்டுப்பட்டு பணி செய்யும் நிலமையே இருக்கிறது. எனவே உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை அவர் லோக் ஆயுக்தாவுக்கு அனுமதிப்பாரா? என்கிற கேள்வி எழுகிறது.
அரசியல்வாதிகள் மீது புகார் எழுந்தால், நேரடியாக லோக் ஆயுக்தாவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒருவேளை புகாரில் உண்மை இருந்தாலும், நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யும் அதிகாரம் மட்டுமே லோக் ஆயுக்தாவுக்கு இருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசுதான்!
இதைத் தாண்டி லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனம் உள்ளிட்ட பணிகளுக்கு எந்தக் காலக்கெடுவும் இல்லை என விமர்சனம் எழுந்திருக்கிறது.
ஊழல் புகாருக்கு உள்ளானவர்களை தண்டிப்பதில் ஆயிரம் முட்டுக்கட்டைகள் இருக்கும் அதே சூழலில், லோக் ஆயுக்தாவுக்கு பொய்யான புகாரை ஒருவர் கொடுத்துவிட்டது உறுதி ஆனால் ஓராண்டு ஜெயில் தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் கிடைக்கும்!
இந்த விதிமுறையை பார்த்தபிறகு எத்தனை பேர் லோக் ஆயுக்தாவுக்கு புகார் அனுப்பத் தயாராவார்கள்? ஆக, லோக் ஆயுக்தாவை வலியுறுத்திப் போராடிய சமூக ஆர்வலர்களுக்கே நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை லோக் ஆயுக்தா மசோதா!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.