/tamil-ie/media/media_files/uploads/2022/03/THE-ONLY-FUEL-copy.jpg)
2016 இல் உஜ்வாலா யோஜனா தொடங்கப்பட்டதிலிருந்து, உள்நாட்டு சமையல் எரிவாயு விநியோக கட்டமைப்பை அதிகரிக்க குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்/கோப்பு)
Narendra Pai , Ashok Sreenivas , Ann Josey
Looking for an effective alternative to LPG : 12,000 கோடி ரூபாய்க்கு மேல் சமையல் எரிவாயு இணைப்புகளுக்குச் செலவழிக்கப்பட்ட பிறகும், இந்திய சமையலறைகளில் நேரிடும் காற்று மாசுபாட்டால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு லட்சம் பேர் உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் கிராமப்புறங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், சமைப்பதற்கு விறகு போன்ற திட எரிபொருளை எரிப்பதையே முதன்மையாக நம்பியுள்ளனர், இதனால் இதய நோய், கண்புரை மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதன்காரணமாக கோவிட்-19 தொற்றுக்கான ஆபத்து அதிகரிக்கிறது என்பதையும் சமீபத்திய ஆய்வு சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
தெளிவாக சொல்ல வேண்டுமானால், இந்த சவாலை எதிர்கொள்ள எரிவாயு இணைப்புகள் போதுமானதாக இல்லை மற்றும் நீடித்த பயன்பாட்டிற்கு ஏற்ற விலையில் கிடைக்க செய்வதற்கு முதலீடுகள் , நடத்தை மாற்றம் மற்றும் வழங்கல் மற்றும் சேவையின் தரத்தை அதிகரிப்பதும் தேவையாகிறது. அதிகரித்து வரும் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மானியங்களை நீக்குதல், வளர்ந்து வரும் சில்லறை பணவீக்கம் மற்றும் தொற்றுநோயால் முடிவில்லாத துயரம் ஆகியவற்றால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் நெருக்கடியில் ஆழ்ந்திருப்பதால், சமையல் எரிவாயு இணைப்புக்கு மாறுவது கடினம். இந்த சூழ்நிலையில், பெரிய அளவில் சமையல் எரிவாயுவுக்கு பயனுள்ள மாற்று இருக்கிறதா என்று கேட்பது பொருத்தமானதா?
மின்சார அடுப்புகள்(induction stoves) மாற்றாக இருக்க முடியுமா? மின்சார அடுப்புகள் தீ சுடர் இல்லாதவை என்பதால், அவற்றிற்கு மாறுவது சில கலாச்சார மற்றும் நடத்தை தடைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால் இது தொடர்பான இரண்டு முக்கிய அம்சங்கள் காரணமாக மின்சார அடுப்புகள் உடனடியாக சாத்தியமான மாற்றாக இருக்காது. முதலாவதாக, கிராமப்புற மின்மயமாக்கல் திட்டங்களின் கீழ் மின் இணைப்புகளைப் பெற்ற குடும்பங்கள் அதிகபட்சமாக 500 வாட் திறன் கொண்ட இணைப்புகளைக் கொண்டுள்ளன.மின்சார அடுப்புகளை பொதுவாக 1500வாட்டுக்கும் அதிகமாக மின்சார வசதி உள்ள இடத்தில் பயன்படுத்தும் தகுதி படைத்தவை. கணிசமான எண்ணிக்கையிலான குடும்பத்தினர் மின்சார அடுப்பு சமையலுக்கு மாறினால், மின்மாற்றி செயலிழப்பு காரணமாக மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் நேரிடும் வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலான குடும்பங்கள் நாளின் ஒரே நேரத்தில் சமைப்பதால், அது மின்சார விநியோக அமைப்பில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். கிராமப்புறங்களில் மின்சாரம் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான விருப்பமாக மாறுவதற்கு முன்னர், மின் விநியோக கட்டமைப்பை அதிகரிப்பதில் பெரிய முதலீடுகள், சிறப்பான அதிகபட்ச மின்தேவை சுமை ஆகியவற்றை மேலாண்மை செய்வதற்கான முயற்சிகள் தேவைப்படும்.
மேலே குறிப்பிட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டாலும், கட்டுப்படியான மின் கட்டணம் என்பது கவலையளிப்பதாக இருக்கும். ஒரு கிராமப்புற குடும்பத்தின் தேவைகள் வழக்கமாக மாதத்துக்கு 100 யூனிட்கள் என்ற அளவில் பூர்த்தி செய்யப்படுகின்றன. இது பெரும்பாலான மாநிலங்களில் சலுகைக் கட்டணங்கள் அல்லது மானியத்துடன் கூடிய மின் திட்டங்களால் மேற்கொள்ளப்படுகின்றன,.
இருப்பினும், 100 யூனிட்டுகளுக்கு மேல், நுகர்வோர் பயன்படுத்திய யூனிட்டுக்கு சுமார் ரூ.7-8 செலுத்த வேண்டும். மானியங்கள் 100 யூனிட்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்ட மாநிலங்களைத் தவிர, மின்சார அடுப்பு அடிப்படையிலான சமையலுக்கு மட்டும் மாதாந்திர மின் கட்டணமானது குறைந்தபட்சம் ரூ. 500-600 வரை உயரக்கூடும்., இது பல ஏழை குடும்பங்களுக்கு கட்டுப்படியாகாது. இந்தச் செலவு என்பதானது அனைத்து சமையல் தேவைகளுக்கும் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதற்கான செலவுடன் ஒப்பிடத்தக்கது. மின்சாரம் மானிய விலையில் கொடுக்கப்பட்டாலும் கூட ஒரு சராசரி உஜ்வாலா நுகர்வோர் அதில் பாதி அளவு மட்டுமே வாங்க முடிந்ததால் , மின்சாரம் என்பது ஒரு மாற்றாக கட்டுப்படியாகாது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு திட்டங்கள் இருந்தபோதிலும், உயிர்வாயு (biogas)பயன்பாடு அதிகரிக்கவில்லை, மேலும் அவ்வாறு செய்ய வாய்ப்பில்லை. பயோ கேஸ் திட்டங்களுக்கான மத்திய அரசின் செலவினம் 2009-10ல் ரூ.137 கோடியிலிருந்து 2019-20ல் ரூ.36 கோடியாக தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. உயிர்வாயுவுக்கான நிதி இருந்தாலும், சமையல் எரிவாயுவுக்கு மேலாதிக்க மாற்றாக அதை கற்பனை செய்வது கடினம்.
வரும் ஆண்டுகளில் குழாய் இயற்கை எரிவாயு (PNG என்பது மக்கள் அடர்த்தியாக வாழும் நகர்ப்புற பகுதிகளில் சமையல் எரிவாயுவுக்கு மாற்றாக இருக்கும். ஆனால் கட்டமைப்பு விரிவாக்க செலவுகள் அதற்கு தடையாக இருப்பதால், கிராமப்புற இந்தியாவின் சமையல் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்படவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டாலும் கூட, இந்தியாவில் குறைந்த அளவு இயற்கை எரிவாயு இருப்பு மட்டுமே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, குழாய் இயற்கை எரிவாயுவை பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படும். இது போன்ற காரணங்களால் குழாய் இயற்கை எரிவாயுவை மாற்ற கருத முடியவில்லை. .
2016 இல் உஜ்வாலா யோஜனா தொடங்கப்பட்டதில் இருந்து, உள்நாட்டு எல்பிஜி விநியோக கட்டமைப்பை அதிகரிக்க குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 12 புதிய சிலிண்டர் ஆலைகள் (ஆண்டுக்கு 6,200 ஆயிரம் மெட்ரிக் டன்கள் கூடுதல் திறன் கொண்டவை) அமைக்கப்பட்டுள்ளன. தவிர, சுமார் 9,000 புதிய விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உள்நாட்டு சமையல் எரிவாயுவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், நீண்ட காலத்திற்கு மாற்று வழிகளை அதிகரிப்பதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, வீட்டின் சமையலறையில் ஏற்படும் காற்று மாசுபாடு எனும் சவாலை எதிர்கொள்ள உடனடியான ஒரே சிறந்த வழி சமையல் எரிவாயு மட்டுமே.
இருப்பினும், சமீப காலமாக சமையல் எரிவாயவுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் வேகமாக குறைந்து வருகின்றன. 2018-19 ஆம் ஆண்டில் சமையல் எரிவாயு மானியத்துக்கான நேரடி பணப் பரிமாற்றங்களுக்கான செலவு சுமார் ரூ.31,400 கோடியிலிருந்து 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.4,000 கோடியாகக் குறைந்துள்ளது. அதே சமயம், சில மாநிலங்களில் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சமையல் எரிவாயு என்பதானது மலிவு விலையோடு தொடர்புடையது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வது போல தெரிகிறது. எனவே, இந்த குறிப்பிட்ட சிக்கலைத் தீர்ப்பதற்கு தேவையான நிதி மற்றும் அமைப்பு ரீதியான ஆதரவுடன் ஒரு ஒத்திசைவான, இலக்கு சார்ந்த அணுகுமுறை விரும்பத்தக்கதாக இருக்கும்.
சமையல் எரிவாயுவுக்கான மானியங்களை மீண்டும் வழங்கத் தொடங்குவது மற்றும் அதனை முறைப்படுத்தி செயல்படுத்துவதே இந்த இலக்கை அடைவதற்கான ஒரு வழியாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, குறைந்த அளவு சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே மானியம் வழங்குவது என தீர்மானிக்கலாம். கூடுதலாக, நிலையற்ற சூழல் நிலவும் கச்சா எண்ணெய் சந்தைகளின் பின்னணியில் விலையை உறுதிப்படுத்த, சமையல் எரிவாயுவுக்கான விலையை வருடத்திற்கு இரண்டு முறை மட்டும் மாற்றி அமைக்கும் வகையை பின்பற்றலாம். மேலும் இன்னொருபுறம் மாற்று வழிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கிராமப்புற ஏழைகளான சமையல் எரிவாயு நுகர்வோருக்கு போதுமான, உடனடி மற்றும் நீடித்த ஆதரவை அளித்தால் மட்டுமே, வீட்டு சமையல் அறைகளில் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய பன்மடங்கு வளர்ச்சி பிரச்னைகளில் அரசாங்கத்தால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
இந்த கட்டுரை முதன்முதலில் அச்சுப் பதிப்பில் கடந்த 4ம் தேதியன்று ‘The Only fuel’ என்ற தலைப்பில் வெளிவந்தது. எழுத்தாளர்கள் பிரயாஸ் (எனர்ஜி குரூப்) குழுமத்தில் உள்ளனர்.
தமிழில் ரமணி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.