தலைவர்களுக்கெல்லாம் தலைவர் கலைஞர் கருணாநிதி

பிறப்பில் இருந்து இறப்பு வரை போராளியாகவே வாழ்ந்த தலைவர்

வாஸந்தி

கலைஞர் கருணாநிதி தன்னுடைய வாய் திறந்து “என் உயிருக்கும் உயிரான உடன்பிறப்புகளே” என்ற வார்த்தைகளை மீண்டும் கேட்க இயலுமா என்ற எதிர்பார்ப்பில் வீதியில் காத்துக் கொண்டிருந்தார்கள் கழக உடன்பிறப்புகள்.

கலைஞரின் உடல் நிலை சில வருடங்களுக்கு முன்பே சீரற்றுப் போனது. அவரின் காந்தக் குரலையோ பல நாட்களாக கேட்க முடியாமல் போனது. அவரின் வயதோ 94.  இருப்பினும் அவரின் மறைவை யாராலும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூணாய் கலைஞர் கருணாநிதி

உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் தலைவா என்ற தொண்டர்கள்,  நீ மீண்டு வா என்று கூறிக்கொண்டே  இருந்தார்கள். தொண்டர்களை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார் கலைஞர். இருப்பினும் அவரின் இறப்பினை, இழப்பினை யாராலும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்பது தான் உண்மை.

திராவிட முன்னேற்றக் கழகத்தினை தோற்றுவித்த தலைவர்கள் எல்லாம் மறைந்துவிட்டார்கள். ஆனால் கலைஞர் என்றுமே நம்முடன் தான் இருப்பார். அவருக்கு மறைவே கிடையாது என்று ஒரு கடைமட்டத் தொண்டனும் கூட நம்பும் அளவு வாழ்ந்து மறைந்திருக்கிறார் கலைஞர்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் இளமைக் காலம்

திருவாரூர் மாவட்டம் திருக்குவளை கிராமத்தில் முத்துவேலர் – அஞ்சுகம் தம்பதியின் மகனாக ஜூன் 3, 1924ம் தேதி பிறந்தார். இசை வேளாள வகுப்பில் பிறந்த இவரையும் ஆட்கொண்டது சமூக ஏற்றத் தாழ்வுகள். அந்த ஏற்றத்தாழ்வுகளில் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் கருணாநிதி.

அவருடைய சூழ்நிலை அவரை ஐந்தாம் வகுப்பிற்கு மேல் பள்ளிப்படிப்பை தொடரவிடவில்லை. ஆனால் தமிழ் மொழி மீதான பற்று அவரை வசன கர்த்தாவக்கியது. இந்தி திணிப்பு எதிர்ப்பிற்காக குரல் கொடுத்து 13 வயதில் கழகத்தில் சேர்ந்தார் கருணாநிதி. அவருடைய இரத்தத்தில் தமிழ் வாழ்க என்று சுவர்களில் எழுதும் அளவிற்கு அவருக்கு தமிழ் மொழி மீது பற்று.

சுய முன்னேற்ற சிந்தனைகளில் அதிகம் ஈர்க்கப்பட்ட கருணாநிதி ஈ.வெ.பெரியாரை பின்பற்ற தொடங்கினார். அவருடன் இணைந்து கழக வேலைகளை செய்து வந்தார். மிக விரைவிலேயே பெரியாரின் குடியரசு பத்திரிக்கையை மேற்பார்வையிடும் பொறுப்பினைப் பெற்றார் கருணாநிதி.

திராவிட முன்னேற்றக் கழகமும் கலைஞர் கருணாநிதி அவர்களின்  வாழ்வும்

பெரியார் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவருடன் கருத்துகளில் வேறுபட்ட நின்ற அண்ணாதுரை கட்சியில் இருந்து விலகினார். அவர் கட்சியில் இருந்து விலகிய போது அவருடன் கருணாநிதியும் கட்சியில் இருந்து வெளியே வந்தார்.

கருணாநிதி அண்ணாவின் கொள்கைகளால் உருவான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பு பேச்சாளராகவும், நல்ல ஊடகவியலாளராகவும் தன்னை வளர்த்துக் கொண்டார். திமுக, காங்கிரஸ் கட்சியின் மாற்றாக தமிழகத்தில் வேரூன்றியது.

1950களில் பிராமண கொள்கைகளுக்கு எதிராக தங்களின் பிரச்சாரத்தினை திரையின் மூலமாக ஆரம்பித்தார் அண்ணா. தன்னுடைய இரண்டு தம்பிகள் என்று அண்ணா பெருமிதம் கொள்ளும் எம்.ஜி.ஆர் திரைக்கு முன்னே தோன்றினார். அவரின் நடிப்பிற்கு பலத்தினை சேர்க்கும் வசனங்களில் வாழ்ந்தார் கருணாநிதி.

பராசக்தி படத்தையெல்லாம் எப்படி மறப்பது. சிவாஜி கணேசனின் நடிப்பில் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் பிராமண கொள்கைகளுக்கு எதிராக அமைந்திருந்தது. படம் பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரின் நெஞ்சிலும் நீங்காத இடத்தைப் பெற்றார் கருணாநிதி.

ஒரு நல்ல தலைவனை திமுக கண்டு கொண்டது எப்போதென்றால் கல்லக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் தான். இந்தி எதிர்ப்பிற்காக குரல் கொடுத்து ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்தவர் கருணாநிதி. அன்று அவரிடம் இருந்து உதிர்ந்த சொற்கள் தான்  “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு”.

சட்டசபையில் திமுக

1967ல் அமோக வெற்றியில் திமுக ஆட்சியினை கைப்பற்றியது. அண்ணாதுரையின் நம்பிக்கைக்கு பாத்திரமான கலைஞருக்கு போக்குவரத்து இலாக்காவினை ஒப்படைத்தார் அண்ணாதுரை. தனியார் வசமிருந்த போக்குவரத்து துறையை அரசுடமையாக்கினார் கலைஞர் கருணாநிதி .

1969ல் அண்ணாவின் மறைவிற்கு பின்பு கருணாநிதி முதல்வராக பதவியேற்பதற்கு பெரிதும் உறுதுணையாக நின்றவர் எம்.ஜி.ஆர் தான். 1971 தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்றது. அப்போது எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றார் எம்.ஜி.ஆர். ஆனால் உள்கட்சி பூசல் காரணமாக திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் கட்சியில் இருந்து 1972ம் ஆண்டு விலக்கப்பட்டார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

திமுக தலைமை எடுத்த மிகவும் தவறான முடிவு என்பதை அச்சமயம் யாரும் உணரவில்லை. ஆனால் கட்சியில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர் அக்டோபர் 18, 1972ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியினை ஆரம்பித்து அறிவித்தார்.

இந்திரா காந்தி ஆட்சியில் எமெர்ஜென்சியை அறிவித்த போது அதற்கு வெளிப்படையாக தன்னுடைய எதிர்ப்பினை தெரிவித்தவர் கருணாநிதி. அதனை காரணம் வைத்து ஆட்சியை கலைக்க ஏற்பாடுகளை செய்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் ஆட்சியினைக் கைப்பற்றி சுமார் 13 காலங்கள் தொடர்ச்சியாக அரியணையில் அமர்ந்திருந்தார். அவரை யாராலும் நெருங்கவே இயலவில்லை. அவரின் மரணம் வரையிலும் திமுகவினை உயிர்ப்புடன் வைத்திருந்தார் கலைஞர் கருணாநிதி.

எம்.ஜி.ஆரின் மரணத்திற்கு பின்பு அதிமுகவின் பொறுப்புகளை ஏற்று நடத்துவதில் பெரும் சிக்கல்கள் நிலவின. எம்.ஜி.ஆரை பின்பற்றி வந்த ஜெயலலிதா அதிமுகவில் தலைமை ஏற்க தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழந்தன. கலைஞர் ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பினார். ஜெயலலிதாவோ 75 வயது மதிக்கத்தக்க முதியவர் என்றும் பாராமல் கைது வாரண்ட்டும் இல்லாமல் கருணாநிதியை கைது செய்ய உத்தரவிட்டார். அது நாட்டையே உலுக்கிய நிகழ்வாக இன்றும் கருதப்படுகிறது.

இறுதி காலத்திலும் இடைவிடாது தொடர்ந்த எழுத்துப்பணி

கலைஞர் கருணாநிதி இது போன்ற பிரச்சனைகளில் இருந்து வெளிவர யாருடனும் கூட்டணி வைத்திருக்கலாம். ஆனால் அவருடைய கொள்கைகள் மீது அவர் கொண்டிருந்த பற்று அவருக்கு தேசிய அளவில் மதிப்பினைப் பெற்று தந்தது. ஆனாலும் 2ஜி ஊழல் வழக்கில் தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டதை அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

தன்னுடைய மகள் குற்றமற்றவள் என்று நீதிமன்றம் விடுதலை செய்ததை கொண்டாடும் அளவிற்கு அவர் மனநிலை இடம் தரவில்ல. அமைதியாக இருந்தார். ராமானுஜம் என்ற நாடகத்தை எழுதி வந்தார். இறக்கும் தருவாய் வரையிலும் ஒரு போராளியாகவே வாழ்ந்து மறைந்தார் கருணாநிதி.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிற்காக வாஸந்தி அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் 

தமிழில்

நித்யா பாண்டியன்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close