மகாத்மா காந்தி இந்தியாவின் கை விளக்கு

Mahatma Gandhi 150th birth anniversary celebration: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளில் இன்றும் என்றும் காந்தியின் தேவை இருப்பதாகப் பலரும் பேசுகிறார்கள்... எழுதுகிறார்கள்... விவாதிக்கிறார்கள். ஆனால், அவரை சிக்கெனப் பற்றித் தொடரத்தான் ஒருவரும் முன்வருவதாகத் தெரியவில்லை.

By: Updated: October 1, 2019, 11:59:43 PM

பாலாஜி எல்லப்பன், கட்டுரையாளர்
Mahatma Gandhi 150th birth anniversary celebration: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளில் இன்றும் என்றும் காந்தியின் தேவை இருப்பதாகப் பலரும் பேசுகிறார்கள்… எழுதுகிறார்கள்… விவாதிக்கிறார்கள். ஆனால், அவரை சிக்கெனப் பற்றித் தொடரத்தான் ஒருவரும் முன்வருவதாகத் தெரியவில்லை.

இந்திய வரலாற்றில் காந்தியின் வருகை பல மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது. இந்தியாவில் மகாத்மா காந்தியின் வருகைக்குப் பிறகுதான் இந்தியா முழுவதும் வெகுஜன மக்கள் திரள் போராட்டம் என்ற ஒன்று வருகிறது. அதற்கு முன்பு அது ஏதேனும் ஒரு சமூக குழுவின் மக்கள்திரள் போராட்டமாக மட்டுமே இருந்தது. காந்தி ஒவ்வொரு போராட்டத்தையும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்ப்பதற்காக மட்டுமில்லாமல் மக்களை ஒருங்கிணைக்கும் வடிவமாகவும் அதை மாற்றினார்.

காந்தி ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருந்தார். மாறிக்கொண்டே இருந்ததால்தான் அவரை யாரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை. அவருடைய சத்திய சோதனை (The Story of My Experiments with Truth) என்ற புத்தகத்தின் தலைப்பில் இருந்தே காந்தியைப் புரிந்துகொள்ள முடியும். காந்தி தான் அறிந்த இந்திய மரபின் சத்தியம், ஆன்மீகம் யாவற்றையும் தன் வாழ்க்கையில் நடைமுறையில் கடைபிடித்து பரீட்சித்து பார்த்தார். அதில் வெற்றிகள் இருக்கலாம், விமர்சனங்கள் இருக்கலாம், நிராகரிப்புகள் இருக்கலாம்,  குழப்பங்கள் இருக்கலாம். ஆனால், நவீன இந்திய வரலாற்றில் அப்படி ஒரு வாழ்க்கைமுறையை பொதுவில் யாரும் முயற்சி செய்யவே இல்லை. அது தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு அவசியம் இல்லாமல் போகலாம். ஆனால், காந்தி அதன் மூலமாகத்தான் உலகம் முழுவதற்கும் சத்தியத்தை போதனை செய்தார்.

காந்தி தனது வாழ்வில் சத்தியத்தை பரீட்சித்துப் பார்த்ததால்தான் அவர் காலம்தோறும் மாறிக்கொண்டே இருந்தார். இன்னும் மாறிக்கொண்டே இருக்கிறார். ஒரு அறிவியல் கோட்பாட்டை ஆய்வுகள் மூலம் நீரூபிப்பது போல, அவர் சத்தியத்தை தனது வாழ்க்கையில் பரீட்சித்து உலகுக்கு நிரூபனம் செய்திருக்கிறார். நிரூபனம் செய்துவிட்டால் மட்டும் போதாது அது தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதனால்தான், காந்தியை யாரும் முழுமையாக கைப்பற்ற முடியாமல் சூடுபட்டு பதறி  விலகுகிறார்கள். அல்லது காந்தியிடமிருந்து விலகலைத் தொடர்கிறார்கள்.

காந்தியை விமர்சிப்பவர்கள் பலரையும் நெருங்கிப் பார்த்தால் அவர்கள் காந்தியைப் பற்றி எதையும் சுயமாக படித்து தெரிந்திருக்க மாட்டார்கள். அவர்கள் கூறும் கருத்தை யாரோ கூற கேட்டிருப்பார்கள். அல்லது காந்தியைப் பற்றி பிறர் எழுதியதைப் படித்திருப்பார்கள். பெரும்பாலான காந்தி விமர்சகர்கள் காந்தியைப் பற்றி காந்தி எழுதியதை நேரடியாக படித்திருக்கவே மாட்டார்கள். ஆனால், காந்தியை விமர்சனம் செய்வார்கள். இப்படித்தான் காந்தியின் மீதான வெறுப்பு விமர்சனம் பரவியிருக்கிறது. காந்தி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால், அந்த விமர்சனங்கள் அவரைப் பற்றி தெரிந்துகொண்டு வைக்கப்பட வேண்டும் அல்லவா.

காந்தியின் அஹிம்சை என்பது பெருப்பாலும் வெறும் வார்தையாக குறுகிய அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படுகிறது. அவருடைய அஹிம்சை பரந்த பொருள் கொண்டது.  அதே போல, காந்தியின் தோற்றம், அவரது அன்றாட வாழ்க்கை எளிமை என்பதாகவே மிகவும் குறுக்கி எளிமைப்படுத்தப்படுகிறது. காந்தியின் எளிமை என்பது மத்திய காலத்திற்கு கொண்டு செல்வது அல்ல. அது நவீன நுகர்வுக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. மனிதனின் தேவைகளில், வேலைகளில் மற்றொரு மனிதனை சுரண்டுவதை தடுப்பது. ஆதிக்கத்தை அறத்தின் வலிமையோடு எதிர்ப்பது. லட்சிய வாழ்க்கையை வாழ்ந்த காந்தி தனது ஆசிரமத்தில் அனைத்து தரப்பு மக்களையும் இணைத்து ஒன்றாக வாழ்ந்ததன் அல்லது வசிக்கச் செய்ததன் மூலம், இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் ஒரு கம்யூன் சமூகமாக வாழ முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்தவர் காந்தி. ஒரு லட்சிய சமூகத்தை தற்காலிகமாகவேனும் உருவாக்கிப் பார்த்தவர்.

இன்று அரசை எதிர்த்தோ அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்தை எதிர்த்தோ மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் பெரும்பாலும் மாவோ கூறிய வாசகங்களை முன்மொழிவதைப் பார்க்க முடிகிறது. “நாமெடுக்கும் ஆயுதத்தை நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.” என்று கூறி ஒடுக்கப்படும் நிறுவனத்தின் வழியிலேயே எதிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அவை எல்லாமே தோல்வியில் முடிந்திருக்கிறது என்பதற்கு நிகழ்கால சம்பங்கள் நிறைய உள்ளன. இவர்கள் எல்லொரும், பிரிட்டிஷ் துப்பாக்கிகளுக்கு எதிராக எந்த ஆயுதமும் இன்றி நெஞ்சுரத்தோடு போராடிய காந்தியின் இயக்கத்தை மறந்துவிட்டார்கள். அல்லது அவர்களால் அதை கைக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், அது போராட்ட வடிவம் அல்ல வாழ்க்கைமுறை.

காந்தியின் மீதான மற்றொரு விமர்சனமும் கிட்டத்தட்ட நூற்றாண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தியை அவருடைய சம காலத்தில் கடுமையாக விமர்சித்தவர் பாபாசாகேப் அம்பேத்கர் என்றால் அது மிகையல்ல. உண்மையில் காந்தியை விமர்சிப்பதற்கான எல்லா நியாயமும் தகுதியும் அம்பேத்கருக்கு இருந்தது. பிரிட்டிஷ் அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கிய இரட்டை வாக்குரிமையை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் விரதம் இருந்தார். அது தாழ்த்தப்பட்ட மக்களை இந்திய பொதுச்சமூகத்தில் இருந்து நிரந்தரமாக பிரித்துவிடும் என்று கூறினார். அதன் முடிவில் பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது. அதற்கு மாற்றாக தனித்தொகுதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. செப்டம்பர் 24 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் ஏதாவது மூலையில் ஒரு துண்டுப் பிரசுரம் ஒட்டப்படும் அதில் “இன்று தாழ்த்தப்பட்டவர்களின் கழுத்து அறுக்கப்பட்ட நாள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த விமர்சனத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால், காந்தி இந்த விமர்சனங்களுக்கு எல்லாம்  தனது செயல்பாட்டின் மூலம் பதில் அளித்தார். காங்கிரஸில் உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டார்கள். அரசியல் அமைப்பு வரைவுக்கு அம்பேத்கரை பரிந்துரைத்தார். காந்தி ஹரிஜன் சேவா சங்கத்தின் பணிகளை தீவிரமாக்கினார். சமூக  அடுக்கில் உயர் மட்டத்தில் இருந்தவர்களை நோக்கி ஹரிஜன மக்களுக்காக பணியாற்ற அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று ஆயிரக் கணக்கில் இளைஞர்கள் ஹரிஜன மக்கள் சேவைக்காக வந்தார்கள். அவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். ஒருவேளை ‘காந்தி பிரிட்டிஷ் அரசின் இரட்டை வாக்குரிமையை எதிர்க்காமல் இருந்திருந்தால் இந்த பொதுச்சமூகம் அதை அமைதியாக ஏற்றுக்கொண்டிருக்குமா என்ன?’ தாழ்த்தப்பட்டவர்களுக்காக பொதுச் சமூகத்திடம் பேசி அவர்களின் மனங்களை மாற்றியவர் அவர்.

காந்தியின் மறைவுக்குப் பிறகும் காந்தி காலத்து காந்தியர்களின் அர்ப்பணிப்பு மிக்க ஹரிஜன மக்கள் பணி தொடர்ந்தது. அவர்கள் மறைந்த பிறகு அதுவும் மறைந்துவிட்டது. இன்றும் காந்தியர்களின் ஒப்பற்ற மக்கள் பணி தலித்துகளால் நினைவுகூரப்படுகின்றனர். தமிழகத்தில் வைத்தியநாத அய்யர், ஆனந்த தீர்த்தர், லட்சுமன அய்யர், என்.எம்.ஆர்.சுப்புராமன், டி.எஸ்.எஸ்.ராஜன் ஆகியோர் இன்றும் அவர்களின் பணிகளுக்காக தலித் மக்களால் நினைவுகூரப்படுகின்றனர்.

காந்தியிடம் எப்போது எதிர்தரப்புடன் நேரடியாக நேருக்குநேர் உரையாடும் துணிவும், தாராள மனமும் இருந்தது. வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் போது அங்கே சென்று நம்பூதிரிகளுடன் வாதிடுகிறார். பிரிட்டிஷ் அரசோடும் அவர் அப்படிதான் நேரடியாக பேசுகிறார்.

இன்று இந்திய அரசியலும் இந்திய அரசாங்கமும் காந்தியிலிருந்து விலகி வெகுதொலைவு சென்றுவிட்டது. கண்ணுக்கெட்டியவரை இந்தியாவில் காந்தி காலத்து காந்தியர்களைப்போல தற்போது ஒரு காந்தியவாதியும் தென்படவில்லை. காந்தியின் பரிணாமத்தில் அவர் நல்ல பல முகங்களைக் கொண்டிருந்தார். இப்போது உள்ள காந்தியர்கள் அதில் தனக்கு வசதியான ஒரு முகத்தை எடுத்து வைத்துக்கொண்டு தன்னை காந்தியர்கள் என்று சொல்லிக்கொள்கின்றனர். காந்திய நிறுவனங்கள் பள்ளி, கல்லூரி நடத்துதல் என்று அரசை, சமூகத்தை தொந்தரவு செய்யாத பாதுகாப்பான வேளைகளில் மட்டுமே ஈடுபடுவதை விரும்புகின்றனர். உண்மையில் காந்தியும் காந்தியர்களும் யாரையும் சலனப்படுத்தாத வேலைகளைச் செய்தவர்கள் அல்ல. இன்று காந்தியைப் பேசுவதால் உடனடியாக எந்த அரசியல் ஆதாயமும் இல்லை என்று அரசியல் கட்சிகள் அவருடைய பிம்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவரை கைவிட்டு வெகுநாளாகிவிட்டது. இருள் சூழ்ந்த அரசியல்வானில் உண்மையில் அனைவருக்கும் காந்தி ஒரு எளிதில் கிடைக்கும் கைவிளக்கு அவரை நீங்கள் தொடர்ந்து கொண்டு செல்வீரானால் அவர் உங்கள் கைகளில் சூரியனாக ஒளிர்வதை பார்க்க முடியும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Mahatma gandhi 150th birth anniversary around the darkness of political world gandhi is lantern lamp of hand

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X