ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர்
Butlers in Tamil Cinemas: தமிழின் சில படங்களில் பட்லர் என்ற பணியை செய்த மனிதர்கள் பாத்திரங்களாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பற்றிய நினைவுகள் சமூக உளவியலில் எவ்வாறு இருந்திருக்கின்றன? அவற்றிற்கும் படங்கள் காட்டிய சித்தரிப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன? என்பவற்றை பார்க்கலாம்.
"நமக்கு சென்னை பட்டணத்துப் பட்லர்களைப் பற்றிய பேச்சில்லை. பண்ணைப் பறையர்கள் பற்றி தான் பேச்சு " என்று ஒரிடத்தில் பாரதியார் குறிப்பிடுகிறார். 1917ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் டி.எம்.நாயர் பேசிய கூட்டமொன்றின் இறுதியில் இரண்டொரு பிராமணர்கள் தாக்கப்பட்டதாகவும் அத்தாக்குதலை பறையர்களில் சிலரே நடத்தியதாகவும் புகார் எழுந்திருந்தது. அந்த சம்பவத்தை கண்டித்து எழுதும்போது தான் மேற்கண்ட கருத்தை பாரதியார் தெரிவித்திருக்கிறார்.
இதில் பட்டணத்துப் பட்லர் , பண்ணைப் பறையர் என்ற இரண்டுச் சொற்களை கையாண்டு இருக்கிறார். அதில் பறையர் வகுப்பினர் நீதிக்கட்சியினர் போன்ற பிராமண எதிர்ப்பு பேசும் 'பிறரால்' பயன்படுத்தப்படுவதாகக் கருதி , அவ்வாறு அவர்கள் பயன்படுத்தப்படாமல் இருக்க இந்துமத அபிமானிகள் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் போது இந்த இரண்டு சொற்களை கையாள்கிறார்.
இந்த சொற்கள் ஒரே வகுப்பினரைக் குறித்தாலும் அவர்கள் இரு வகையினராக இருப்பதாகக் கூறி அதில் பட்லர் என்ற பிரிவினரை அரவணைக்க வேண்டியதில்லை என்ற பொருளில் பேசியுள்ளார். இதன்படி பண்ணை தலித்துகள் மீது பரிவு காட்டும் அவர், பட்லர் தலித்துகள் மீது விலக்கத்தை காட்டுகிறார்.
பட்லர் என்ற பெயர் காலனிய காலத்தில் அழுத்தம் பெற்ற சொல். ஐரோப்பியர் வீடுகளிலும் அரண்மனைகளிலும் அலுவலகங்களிலும் பெரும்பான்மையும் சமையல் வேலையையும் பிற உடலுழைப்பு பணிகளையும் செய்வோரை அச்சொல் குறித்தது. இப்பணிகளில் பெரும்பாலும் அடிநிலை வகுப்பினரே ஈடுபட்டனர். குறிப்பாக பறையர் வகுப்பினர் அதிகமாயும் பிறர் ஓரளவாயும் பணி செய்தார்கள்.
உள்ளுர் சாதி படிநிலை காரணமாக உயர்சாதியினர் வீதிகளிலேயே வர மறுக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் சாதியாச்சாரத்தோடு தொடர்பில்லாத ஐரோப்பியர் வீடுகளின் அடுக்களைகளிலேயே சமைக்கிற வாய்ப்பை பெற்றிருந்தனர். வெள்ளையர் மூலமாக உருவான வாய்ப்புகளில் தயங்காமல் நுழைந்து கொண்ட இந்து உயர் வகுப்பினர் தொட விரும்பாத மாட்டுக்கறி உணவை தொட்டு சமைத்ததால் அதோடு சேர்த்து பிற சமையல் பணிகளையும் மேற்கொண்டவர்களானார்கள் ஒடுக்கப்பட்டோர்.
இவ்வாறு அடைந்த வாழ்வாதாரத்தினால் பிற தலித்துகளை விட பட்லர் தலித்துகள் ஒரளவு வசதி பெற்றவர்களாய் மாறினர். உடை, பேச்சு, உணவு முறை போன்றவற்றில் ஐரோப்பிய தாக்கம் பெற்றனர். ஆங்கிலேயர்களை தினமும் நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு பெற்ற இவர்கள் அவர்களின் கவனத்திற்கு சில விசயங்களை கொண்டுச் செல்லவும் சலுகை பெறவும் முடிந்தது. எனவே உள்ளூர்காரர்களை நம்பி வாழ வேண்டிய பிற தலித்துகளை போலல்லாது இவர்கள் ஒப்பீட்டளவில் தன்னிச்சையாக வாழ முடிந்தது. அதோடு உள்ளூர்காரர்களின் சலுகையை புறந்தள்ளி சீர்திருத்த முயற்சிகள் சிலவற்றை உருவாக்க இந்த வாழ்க்கை முறை உதவியது. அதாவது உயர் வகுப்பினரின் கருணையை பெற்று அவர்களுக்கு ரட்சகர் என்ற பிம்பத்தை தருபவர்களாக அவர்கள் இல்லை. இதற்கு அவர்களின் அதிகாரமட்டத் தொடர்பும் 'புதுப்பணக்கார' வாழ்வும் தான் காரணம் . இது அவர்கள் மீது உள்ளூர்காரர்களிடையே ஒருவித ஒவ்வாமையை உருவாக்கியிருக்கும் . அப்போக்கிற்கு பாரதியே தப்பவில்லை என்பதை தான் மேற்கண்ட அவரின் கூற்று காட்டுகிறது.
பட்லர் முறை, அதில் பங்கெடுத்த குழுவினர், ஏற்பட்ட மாற்றங்கள் என்று விரிவாக ஆராய இத்தலைப்பில் இடமிருக்கிறது. தமிழ் தலித் முன்னோடிகளுள் ஒருவரும் இந்து அடையாளத்திற்கு மாற்றாக பெளத்தத்தை முன்மொழிந்தவருமான அயோத்திதாசரின் தாத்தா, தந்தை ஆகியோர் பட்லர் வாழ்வு மேற்கொண்டவர்கள். அவரின் தாத்தா கந்தப்பன், ஜார்ஜ் ஆரிங்டன் என்ற ஆங்கிலேய அதிகாரியிடம் பட்லராய் பணிபுரிந்த போது குறள், நாலடி ஏடுகளை பதிப்பிக்கும் காரணத்திற்காக எல்லீஸுக்கு கொடுத்தார் என்பது பரவலாக அறியப்பட்டிருக்கும் தகவல். அயோத்திதாசரின் உருவாக்கத்தில் இந்த பட்லர் வாழ்வு தந்த வாய்ப்புகளின் தொடர்ச்சியும் இருந்திருக்கிறது.
பட்லர்கள் பற்றி சமூக உளவியலில் பரவியுள்ள எதிர்மறை சித்திரங்களுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் இரண்டு காரணங்கள் குறிப்பிடத்தக்கவை. அவர்களில் பெரும்பான்மையோர் அடிநிலை வகுப்பினர் என்பது முதல் காரணம். உள்ளூரில் மறுக்கப்பட்ட வாழ்வாதாரத்திற்கு மாற்றாக வெள்ளையரிடம் அதிலும் அவர்களின் வீடுகளிலேயே நுழைந்து பணியாளர்களாய் மாறி வசதி படைத்தனர் என்பது உள்ளூர் சமூகங்களுக்கு உளவியல் உறுத்தலாக இருந்திருக்கும். இரண்டாவதாக அவர்கள் வெள்ளையர் மூலம் பெற்ற பொருளாதார வசதி மற்றும் வாழ்க்கை பாணி ஆகியவற்றை உள்ளூரில் பொருத்தி கொள்கிறபோது ஏற்படும் முரண். புதிய வாழ்க்கை முறை அவர்களிடையே வெடாசிக்கிற போக்கை உருவாக்கிவிட்டதாக கருதினர். இவையே அவர்கள் மீதான ஒவ்வாமையாக மாறியிருந்தன. மரபிலிருந்து விடுபட்டு நவீன வாழ்வு உருவாகும் போது, மரபு நவீனத்தை எதிர்கொள்ளும் முறையே இது. தலித்துகள் மீதான இந்த ஒவ்வாமையை அவர்களின் மேனாமினுக்கித்தனம் மீதான கிண்டலாக மாற்றி பொதுசமூகம் அமைதி கண்டது எனலாம்.
பட்லர்கள் பற்றி எதிர்மறை பார்வைகள் ஆங்கிலேயர் காலத்தில் மட்டுமல்லாது அவர்களுக்குப் பின்னரும் உள்ளூரில் தொடர்ந்தன. இப்போதும் ஆங்கிலத்தை அரைகுறையாக பேசுபவரை நோக்கி "பட்லர் இங்கிலீஷ்" என்று சொல்லும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. அதாவது முறையாக படிக்காமல் ஐரோப்பியர் வீடுகளில் வேலை செய்யும்போது வேலையின் தேவைக்கேற்ப இங்கிலீஷை, பேச்சாக மட்டும் பழகிக்கொண்டு பட்லர்கள் பயன்படுத்தினர். எனவே அந்த இங்கிலீஷ் தப்பும் தவறுமாக இருக்கும். அந்த சொல் இன்றளவும் தவறான ஆங்கில உச்சரிப்பை குறிப்பிடுவதற்கான அடையாளமாக நீடிக்கிறது.
கதைகளில் பொதுவாக வேலைகாரர்களை பொய் சொல்பவர்களாக , கோள் சொல்பவர்களாக, பேராசைக்காரர்களாக, திருடர்களாக காட்டும் போக்கு இருந்திருக்கிறது. ராமாயணத்தில் பணியாளரான கூனியின் சதியே பிரச்சினைக்கு காரணமாகிறது. அதனால், பலவேளைகளிலும் நகைப்புக்குரியவர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். இதன்படி சினிமாக்களிலும் பெரும்பாலும் வேலைக்காரர்களை எதிர்மறையாகவே சித்தரித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே சினிமாக்களில் இடம்பெற்ற பட்லர்கள் பற்றிய சித்தரிப்புகளும் இடம்பெற்றுள்ளன. அவர்கள் ஏதோவொரு வகையில் கேலிக்குரியவர்களாக காட்டப்பட்டுள்ளனர். இத்தகைய கேலிகளில் குறிப்பாக அவர்களின் புதிய பணக்காரத்தனம், பேராசை, தவறான ஆங்கில உச்சரிப்பு (பட்லர் இங்கிலீஷ்), வெடாசி போன்ற அம்சங்கள் தவறாமல் இடம்பெற்றன. இவ்வகைப் படங்கள் எஸ்டேட் பின்புலத்தை கொண்டவையாக உள்ளன.
ஆங்கிலேயர்கள் இந்திய சீதோஷ்ண நிலையை சமாளிக்கும் பொருட்டு மலைப்பகுதிகளை வசிப்பிடங்களாக மாற்றினர். ஊட்டி, கொடைக்கானல் போன்றவை அவ்வாறே புதிய நகரங்களாக உருவாயின. அதற்காக அங்கெல்லாம் வீடுகள், தேயிலை எஸ்டேட்டுகள் ஏற்பட்டன. இந்நகரங்களை கட்டமைப்பதற்கு மட்டுமின்றி தேயிலை தோட்டங்களிலும் வீடுகளிலும் பணிபுரிவதற்கும் பணியாளர்கள் தேவைப்பட்டனர். இதற்காக சமவெளிகளிலிருது அடிநிலை வகுப்பினரே பெரும்பான்மையும் வந்தனர்.
அவர்களிலிருந்தே பட்லர்களும் உருவாயினர். சென்னை போன்ற அரசியல் தலைநகரங்களிலிருந்து வெளியேறி வருடத்தின் சில மாதங்கள் வரையிலும் இந்த புதிய குளிர்பிரதேசங்களில் நிர்வாக பணிகள் நடைபெற்றிருக்கின்றன. அப்போது அதிகாரிகளோடு வீட்டு பணியாளர்களும் கட்டோடு வந்து வாழ்வதுண்டு. இந்த பின்னணியில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் முயற்சிகளுக்கு இந்த குளிர் பிரதேசங்கள் காரணமாகியும் இருக்கின்றன. ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் ஆகியோரின் தொடக்ககால அரசியல் முயற்சிகள் ஊட்டியிலேயே கால் கொண்டிருந்தது என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பின்னணியிலேயே பின்னாளில் பட்லர்கள் வாழ்வை பிரதிபலித்த திரைப்படங்களும் எஸ்டேட் தொடர்பிலான படங்களாக அமைந்தன. பட்லர்கள் என்போர் சமையலாளர்களாக இருந்திருப்பினும் மற்ற வேலைகளான காவலாளி , தோட்ட பராமரிப்பு, வாகனம் ஓட்டுதல் போன்ற பணிகளையும் இணைத்தோ தனித்தோ செய்தனர். ஒரு கோடை முடிந்து அடுத்த கோடைக்கு உரிமையாளர் திரும்பி வரும்வரையிலும் வருடம் முழுவதும் பராமரிப்பவர்களாக இவர்களே இருந்தனர். பட்லர் என்பதே முதன்மை பணியாக இருந்ததால் மற்ற பணிகளை செய்பவர்களும் நாளடைவில் அவ்வாறே பொது நிலையில் குறிப்பிடப்பட்டனர்.
திரைப்படங்களும் சமையலாளர், பராமரிப்பாளர், வாகன ஓட்டி என்று எல்லாமுமாகவே இவர்களை சித்தரித்தரித்து இருக்கின்றன. ஆனால், அவர்களைப் பற்றிய குணாம்சங்களை சித்தரிக்கும் போது பட்லர்களின் அடையாளமாய் பொதுபுத்தியில் நிலவிவந்த பண்புகளையே பொதுவாக்கி காட்டினர்.
முதலில் மூன்று படங்களின் சித்தரிப்புகளை எடுத்துக் கொள்ளலாம். அன்பே வா (1966), வசந்த மாளிகை (1972) இதயக்கனி (1975) என்பவையே அப்படங்கள். மூன்றிலுமே மலை வாசஸ்தலம், எஸ்டேட் , முதலாளி, பணியாளர்கள் பின்னணியுண்டு. மூன்றிலுமே பட்லர் சித்தரிப்பு முதன்மை கதையோடு தொடர்புடையவை அல்ல. பெரும்பாலும் நகைச்சுவை பாத்திரங்கள். அத்தகைய நகைச்சுவை அவர்களுடைய நடை உடை பேச்சு ஆகியவற்றின் எதிர்மறையிலிருந்து உருவாகுபவை.
வசந்த மாளிகை படத்தில் அழகாபுரி ஜமீன் என்ற மலைவாழிட எஸ்டேட். அங்குள்ள அரண்மனை பணியாளர்கள் மூவர் பட்லர் நிலையில் உள்ளனர். வி கே ராமசாமிக்கு பட்லர் பக்கிரி பாத்திரம். அவரொரு வெடாசிக்கிற மனிதர். இந்தியாவில் பொறந்தேன், இங்கிலாந்தில் வளர்ந்தேன், பாரின் ரிட்டன் என்று வாய் திறக்கும் போதெல்லாம் 'பெருமை' பீற்றிக் கொள்பவராக இருக்கிறார். தப்பாக ஆங்கிலத்தில் பேசுகிறார். அரண்மனை வாரிசான நாயகனிடம் அவ்வாறே அவர் பெருமையோடு அறிமுகமாகிறார்.
அவருடைய இந்த பீற்றலையும் ஆங்கிலத்தையும் ஒவ்வாமையோடு எதிர்கொள்ளும் அவன் "உன் பேச்சே சரியில்லையே" என்கிறான். மேலும், “ஒழுங்கா இருக்கணும்னா என்ன செய்யனும் என்று கேட்டு வாயை மூடிக்கிட்டு இருக்கணும்” என்கிறான். இந்த சித்தரிப்பை கவனிக்கும் போது அதிகம் பேசுபவர்கள், தப்பாக ஆங்கிலம் பேசுபவர்கள், பெருமை பீற்றுபவர்கள் என்ற சித்திரம் பட்லர் பற்றியதாக இருப்பதை பார்க்கிறோம். இவை ஒவ்வாமையாகவும் கட்டுப்படுத்தப்பட வேண்டியதாகவும் கூறப்படுகின்றன. இவை பட்லர்களுக்கு கிடைத்த புதுப் பணக்காரத்தனத்தால் விளைந்து சமூகத்தளத்தில் புழங்கி வந்தவற்றின் பிரதிபலிப்பு எனலாம்.
பட்லர் பக்கிரியோடு பஞ்சு (நாகேஷ்), முத்தம்மா என்ற மற்ற பணியாளர் பாத்திரங்களும் உண்டு. முத்தம்மாவை அடைவதற்காக பஞ்சுவும் பக்கிரியும் போட்டி போடுகிறார்கள். நல்ல சாப்பாடு கிடைத்தாலே வழிக்கு வருபவளாக அவள் காட்டப்பட்டிருக்கிறாள். பேராசை, குடிப்பழக்கம், தேவைக்காக அணி மாற்றம், தவறுகளுக்கு துணை போகிறவர் என்றெல்லாம் அவர்கள் காட்டப்பட்டுள்ளனர். அதே வேளையில் இவையெல்லாம் நகைச்சுவை பகுதிகளாக அமைகின்றன.
இதயக்கனி படத்தில் எஸ்டேட் முதலாளி (எம்ஜிஆர்) குடியிருப்பில் ஒரு பணியாள் பாத்திரம். வழக்கம் போல் சற்று காமெடி கலந்த வெடாசிக்கிற பாத்திரம். அவருடைய புனைப்பெயர் ஐசரி. ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்காமல் தமிழோடு கலந்து சொல்லுவதால் அதுவே அவர் பாத்திரப்பெயர். சொன்ன நேரத்தில் , சொன்ன வேலையை செய்யாமல் தூங்குகிறவன். மற்றவர் செய்ததை தான் செய்தது என்று சொல்லிக் கொள்கிறவன்.
அன்பே வா படம் தான் இந்த வகை சித்தரிப்பின் உச்சம். தமிழகத்தை சேர்ந்தவருக்கு மலை வாழிடமான சிம்லாவில் ஒரு அரண்மணை போன்ற ஐரோப்பியர் பாணி வீடு இருக்கிறது. உரிமையாளர் தமிழகத்தில் இருப்பதால் வயதான பணியாளரான கிருஷ்ணய்யா என்பவர் அதை பராமரித்து வருகிறார். வயதான மனைவி, பருவ வயதில் மகள், மச்சான் ராமய்யா போன்றோர் அவருடன் உள்ளனர்.
முதல் காட்சியில் காரில் ஒரு குடும்பம் வந்து இறங்குகிறது. காரிலுள்ள மம்மியை இறக்கச் சொல்கிறார்கள். ஆங்கிலத்தை புரிந்து கொள்ளாத கிருஷ்ணய்யா மம்மியை அம்மி என்று புரிந்து கொள்கிறார். மேலும் உரிமையாளர் இல்லாத காலத்தில் தாங்களே உரிமையாளர் போல் நடந்து கொள்வதோடு, அந்த உரிமையாளருக்கு தெரியாமல் பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டையும் அறைகளையும் வாடகைக்கு விட்டு பிழைக்கிறார்கள். இவர்களும் இவர்களின் செயல்பாடுகளும் தாம் படத்தின் நகைச்சுவைப் பகுதிகள்.
இவ்வாறு ஆங்காங்கு சில காட்சிகள், சில உதிரி பாத்திரங்கள் என்று இருந்து வந்திருந்தாலும் தமிழ்ச் சினிமாவில் இதனை முழு பின்னணியாகக் கொண்டு வந்த படம் என்று கே.பாக்யராஜ் இயக்கி நடித்த டார்லிங் டார்லிங் டார்லிங் ( 1982 ) என்ற படத்தைக் கூற முடியும்.
அன்பே வா படத்தின் ராமையாவாக நடித்த நாகேசின் நகைச்சுவை காட்சிகளே இங்கு முழுபடத்திற்கான கதையாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் இது பட்லர் கதையோ எஸ்டேட் கதையோ இல்லை. மாறாக காதல் கதை. அதற்காக இப்படம் பட்லர் அல்லது பட்லர்களை ஒத்த பணியாளர் வாழ்வை கதைக்கான பின்புலமாக கொண்டிருக்கிறது. இந்த அளவிற்கு பட்லர் பின்புலத்தை கொண்ட படம் வேறில்லை.குறிப்பாக தமிழில் முதன் முறையாக பட்லரை ஒத்த பணியாளரின் மகன் நாயகனானது இப்படத்தில் தான்.
ஊட்டியில் பங்களா வைத்திருக்கும் பணக்காரர் ஒருவர் தன் மகளோடு வெளிநாட்டில் வசிக்கிறார். ஆறு மாதத்திற்கு ஒரு முறை வந்து சில நாட்கள் தங்கி விட்டு சென்று விடுவார். எனவே அந்த வீட்டை நிரந்தரமாக பணியாளர் சிங்காரம் கவனித்து வருகிறார். வாட்ச்மேன்,சமையலாளி என்று எல்லாம் அவரே. அவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகள் ஊட்டிக்கு சுற்றுலா வருவோருக்கு குதிரையேற்றம் செய்து சிறிதாக சம்பாதிக்கிறார். மகன் ராஜா பங்களா முதலாளி வரும் போது கார் ஓட்டுவான். ராஜாவே பட நாயகன். அவன் பால்யவயதாக இருக்கும் போது முதலாளி மகள் ராதா இங்கேயே படித்தாள். ராஜாவும் அதே பள்ளியில் படித்தான். அப்போது அவள் மேல் ஏற்பட்ட பிரியம் காரணமாக அவள் வெளிநாடு போய் விட்ட இந்நாள் வரையிலும் அவள் திரும்பி வந்து பழைய அன்பை காட்டுவாள் என்ற எதிர்பார்ப்பிலேயே காலம் தள்ளி வருகிறான். அவள் பெரியவளாகி வந்து பங்களாவிலேயே தங்குகிறாள். ஆனால், அவள் சிறு வயது அனுபவங்கள் சிறுவயதிற்கானவை என்று கருதி இவன் மீது எந்த தனிப்பட்ட ஈர்ப்பும் இல்லாமல் இயல்பாக இருக்கிறாள்.
இந்த முரண் கதையில் ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. பிறகு இவனுடைய வெகுளித்தனமான அன்பை புரிந்து கொள்வதற்கான சம்பவங்களை பிரதி கட்டமைக்கிறது. இறுதியில் அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட பணக்கார மாப்பிள்ளையை விட ஏழையான ராஜாவே அன்பு மயமானவன் என்று கருதும்படி பிரதி அவளை விரட்டுகிறது. இதில் வில்லன் என்று யாருமில்லை. ராதாவின் பணக்கார தந்தை, ராதாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையின் தந்தை ஆகியோரும் ஏழையான ராஜாவின் அன்பே சிறந்தது என்று முடிவெடுத்து இருவருக்கும் வழிவிடுகிறார்கள்.
இந்த கதையாடல் அதுவரை தமிழ் சினிமாவில் கேலிக்குரியதாகவும் துணுக்காகவும் காட்டப்பட்டு வந்தோரை மதிப்புமிக்கதாக காட்டியது என்பதில் மறுப்பில்லை. பணக்காரர்களை விட உழைக்கும் ஏழைகள் நலன் முக்கியம் என்று கருதுவது நவீன அரசியல் பரவலான காலக்கட்டத்தின் புரிதல். அவர்கள் சார்பாக நிற்பதே அறம் என்று கருதப்பட்ட லட்சியவாத காலக்கட்டத்தின் தொடர்ச்சி இது. ஏழைகளாய் இருந்தால் நல்லவர்களாய் இருப்பார்கள் என்பது இதன் நம்பிக்கை.
பட்லர் வாழ்வை கதையாடலில் மேன்மையானதாக இப்படம் காட்டியிருக்கிறது என்பது உண்மை. அதேவேளையில் அவர்கள் மீதான அதுவரையிலான பொதுப்புத்தியை மாற்றாமல் அவற்றை அப்படியே பிரதிபலித்து அதன் மீது ஒரு முடிவை இப்படம் வைக்கிறது என்றே சொல்ல வேண்டும். படத்தின் முடிவு பணியாளர்கள் மீதளிக்கும் சாதகமான பார்வையை ,படத்தின் முழு சித்தரிப்புகள் தரவில்லை.
பங்களா வாட்ச்மேனான நாயகனின் அப்பா ஒரு வெடாசி பாத்திரமே. முதலாளி இல்லாத காரணத்தால் முதலாளி அணியும் கோட் சூட், ஷூ, புகையிலை பிடிக்கும் பைப் போன்றவற்றை சூடிக்கொண்டு தானே முதலாளி போல நடந்து கொள்கிறான். அதோடு தப்பான உச்சரிப்போடு ஆங்கிலம் பேசுகிறார். பேராசை கொண்டவன். முதலாளி பெண்ணை மகன் காதலிப்பதை அறிந்து சீக்கிரம் மேலுக்கு வரும் வழி அதுவே என்று அற்பமாக மகிழ்பவன். பணக்காரி மருமகளாய் வருவாள் என்று சொல்லி சேட்டுவிடம் வட்டிக்கு பணம் பெறுகிறான்.
இதே போலவே அவன் மகள் குதிரையேற்ற வியாபாரத்தின் போதும், அவன் மகனான நாயகன் முதலாளி மகளின் தோழிகளிடமும் பட்லர் இங்கிலீஷே பேசுகிறார்கள். இவ்வாறு படம் முழுக்க இவர்களின் நடைமுறைகளை சித்தரிக்கும் போது முந்தைய படங்களின் சித்தரிப்புகளையே பிரதி பிரதிபலித்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் நகைச்சுவை நடிகர்களாய் அறியப்பட்டவர்களையே பட்லர் பாத்திரங்களில் நடிக்க வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது. பட்லர் கேரக்டரில் கல்லாபெட்டி சிங்காரம் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டு, சேதுபதி ஐபிஎஸ் ஆகிய படங்களில் பட்லர்களையே நகைச்சுவை பாத்திரங்களாய் (ஜனகராஜ் , கவுண்டமணி) காட்டியுள்ளனர். நாயகனான பாக்யராஜ் பாத்திரமே கூட அப்பாவித்தனம் என்ற பெயரில் நகைக்கத்தக்க காரியங்களையே செய்கிறது. பாக்யராஜுக்கு வெள்ளந்திதன பிம்பத்தை பெற்றுத் தந்ததில் இப்படம் முக்கியமானது.
இதன்படி பாக்யராஜ் என்னும் பிம்பத்திற்கான அப்பாவி முகம் கிடைப்பதற்கேற்ற சமூகக் கதையாக கருதப்பட்டே பட்லர் பின்னணி கொண்ட இக்கதை தெர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நாயகன் முட்டாள்தனமாக செய்வதையெல்லாம் அவனின் இயல்பான-வெகுளித்தனமான அன்பாகவும், அதை புரிந்து கொள்ளாத முட்டாளாக நாயகியையும் பார்வையாளர்களிடம் காரணமே இன்றி பிரதி ஒப்புவிக்கிறது. நாயகன் மீது பார்வையாளர் பரிவு கொள்ள வேண்டுமென்பதற்காக நாயகியை மணம் செய்து கொள்ளப் போகிற மாப்பிள்ளையை கெட்ட பண்புள்ளவனாக காட்டி, அவனுக்காக ஷூ பாலீஷ் போட்டு வாந்தியை அள்ளுவது மூலம் அவளுக்கு நாயகன் மீது அனுதாபத்தை உருவாக்கி காதலில் விழச்செய்கிறது பிரதி. இது நாயக பிம்பத்துக்காக கருணையை உருவாக்குகிற கதையாடல். எனவே ஒரு காதல் கதைக்கான பின்புலம் என்ற அளவிலேயே இந்த படத்தின் பட்லர் வாழ்வு நின்று போய்விட்டது என்பதையே நாம் இங்கு பார்க்கிறோம்.
பட்லர்களை இழிவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்டு இப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது இதன் பொருளல்ல. இன்னும் சொல்லப்போனால் பட்லர் வாழ்க்கைக்கு பின்னால் சாதிய பின்புலம் இருக்கிறது என்பது தெரியாமல் வழக்கமான சித்தரிப்பாகக் கருதியும் இப்பாத்திரங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம். வில்லன் போன்ற முற்றிலும் எதிர்மறை பாத்திரங்களாக இவர்கள் சொல்லப்படவில்லை. அரிதான சில இடங்களில் சோரம் போக வாய்ப்பிருந்தும் சோரம் போகாத சுய மதிப்பு கொண்டவர்களாகவும் காட்டப்பட்டிருக்கின்றனர். அதேவேளையில் இக்காரணங்களினாலேயே இச்சித்தரிப்புகளில் சாதிய உளவியல் இல்லை என்று கூறிவிட முடியாது. அவர்களை கேலிக்குரியவர்களாக காட்டியிருக்கும் சித்தரிப்புகளில் சாதியத்தின் மேல்கீழ் ஏற்றத்தாழ்வு கருத்தியல் வேறு வகைகளில், வேறு பெயர்களில் ஊடாடி கிடக்கிறது. சாதி நேரடியாகவோ, நன்கு திட்டமிட்டோ தான் செயல்படும் அல்லது வெளிப்படும் என்பதில்லை. நம் வாழ்வோடு சாதியம் இயல்பாக கலந்துவிட்ட நிலையில், சாதிய சமூகத்தில் புழங்கும் ஒருவனிடம் அது அவனறியாமலேயே கூட வெளிப்படும். பட்லர் என்ற அடையாளம் இழிவாக மாறியதற்கான 'வரலாற்றுக்காரணம்' காலப்போக்கில் மறைந்து இன்றைக்கு அவை கேலியாக மிஞ்சியிருக்கலாம். ஆனால் அந்த கேலி சாதிய மேட்டிமைபார்வையிலிருந்து உருவாகி தொடர்பவை என்பது தான் இங்கு முக்கியமாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.