Advertisment

பாப்பாத்தியும் சேட்டும்

மக்களைப் பொறுத்தவரையில் தாங்கள் அடைய விரும்பும் தகுதியை குறிக்க, பொருளாதார மேம்பாட்டை அடைய மொழி போன்ற அடையாளங்களை தடைகளாக கொள்வது இல்லை என்றே சொல்லவேண்டும். நம் உள்ளூர் கோயில்களில் போலீஸ்காரன் காவல் காப்பது போன்ற சிலைகள் குதிரைகள், துப்பாக்கி போன்ற பாதுகாப்பு கவசங்கள் சிற்பங்களாக உண்டு. வெள்ளைக்காரன் கதை கூட இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mariyamman, pappathi amman, karumariyamman, renugamba, மாரியம்மன், பாப்பாத்தி அம்மன், கருமாரியம்மன், ரேணுகாம்பாள், tamil deities, mariyamman deities, setu, சேட்டு, மார்வாடி, tamil nadu cultural study, tamil nadu people name study, people cultural study

mariyamman, pappathi amman, karumariyamman, renugamba, மாரியம்மன், பாப்பாத்தி அம்மன், கருமாரியம்மன், ரேணுகாம்பாள், tamil deities, mariyamman deities, setu, சேட்டு, மார்வாடி, tamil nadu cultural study, tamil nadu people name study, people cultural study

ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர்

Advertisment

கடந்த தலைமுறை வரையிலும் நம் சமூகத்தில் பெருவாரியான பெண்களுக்கு சூட்டப்பட்டு வந்த பெயர்களுள் ஒன்று பாப்பாத்தி . குறிப்பாக எளிய அடித்தள சமூகக் குழுக்களில் இப்பெயர் பரவலாக சூட்டப்பட்டிருக்கின்றன. பாப்பாத்தி என்ற பெயர் சாதியோடு தொடர்புடையது. பிராமண வகுப்பினரில் பெண் பாலினரை குறிக்கும். ஆனால், இக்காரணத்திற்காக மக்களால் சூட்டுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை அது சாதிப்பெயர் அல்ல. ஒரு பெயர் மட்டுமே. அதிலும் சாமியின் பெயர்.

பெரும்பாலும் கருப்பு நிறம் உடையவர்களாக உள்ள குடும்பங்களில் கறுப்பிற்கு மேம்பட்டு சிவந்த நிறத்தில் பெண் குழந்தை பிறந்தால் அது சற்றே புதுமையானது; வழக்கமான நிறத்திலிருந்து வேறுபட்டது. உள்ளூரின் வழக்கமான நிறத்திலிருந்து வேறுபட்ட நிறத்தினரோடு ஏற்படும் தொடர்பு, அவர்கள் அதிகாரத்தோடு / புனிதத்தோடு தொடர்புடையவர்களாக உள்ள பட்சத்தில் அவர்தம் அடையாளங்களை வழி காட்டுவதாகவோ ஏக்கமாகவோ கருதி தழுவிக் கொண்ட செயல் முறையாகவும் தான் இதனைப் பார்க்க வாய்ப்பிருக்கிறது. இப்பார்வை சரிதானா? என்ற கேள்வியை ஒருபுறம் வைப்போம். எனவே நிறத்தில் சிவந்தவரை "பாப்பாத்தி மாதிரி இருக்காளே" என்று கூறும் போக்கு எழுந்திருக்கலாம்.

அதனால் இப்பெயர் பார்ப்பன சமூகத்தை விட பிற குழுக்களில் தான் அதிகம் சூட்டப்பட்டிருக்கிறது. இங்கு நமக்கு வேறு ஒரு கேள்வி எழ வேண்டும். அடித்தள சமூகங்களில் சிவப்பாக ஆண் குழந்தை பிறந்து பாப்பான் என்ற பெயர் சூட்டப்படுகிறதா? இதற்கு பதில் இல்லை என்பதே. இவ்விடத்தில் தான் இப்பெயர் நிறம் என்பதைத் தாண்டி சாமி பெயரில் அதிலும் பெண் தெய்வத்தில் சென்று நிற்கிறது. அதாவது இப்பெயரை சாமியின் பெயராக சூட்டப்படுவதே பெரும்பான்மை.

பாப்பாத்தியம்மன் என்ற பெயரில் அம்மன் தெய்வம் இருக்கிறது. பாப்பாத்தி, பாப்பம்மாள், பாப்பார மாரியம்மன் என்ற பெயர்களில் மக்கள் வணங்குகின்றனர். சாமியின் பெயரை சூட்டுவது பெருவாரியான மக்களின் வழக்கமே. இவை அம்மனின் அருள், அம்மனை வேண்டுதல் என்று எவையாகவும் இருக்கலாம். அவை அப்படியே மனிதர்களுக்கும் நீட்டிக்கப்பட்டு இருக்கலாம். மாரியம்மனை போலவே கருணை கொண்டோரை/வழிகாட்டுவோரை காணும்போதும் அப்பெயரை சூடிக் கொண்டிருக்கின்றனர். சான்றாக பார்ப்பன வகுப்பிலிருந்து கிறித்துவராக மாறிய கிளாரிந்தாவை மக்கள் பாப்பாத்தி என்றும் அவர் வெட்டிய கிணற்றை பாப்பாத்தி கிணறு என்றும் அழைக்கும் தென்மாவட்ட சான்று ஒன்று இருக்கிறது. நிறத்தால் மட்டுமல்ல செயலால் பண்பால் தங்களிடம் இருந்து வேறுபட்டு நின்று அதன்வழி மேலானவராக இருப்போரையும் இப்பெயரால் அழைக்கும் வழக்கம் தோன்றிவிட்டது என்றும் கருதலாம்.

அம்மனை பாப்பாத்தி என்று தனித்தோ, பாப்பாத்தி மாரியம்மன் என்ற ஒட்டுடன் சேர்த்தோ மக்கள் வழிபடுகின்றனர். மாரியம்மனை அவளின் அருள்தரும் கருணைக்காக கூட இப்பெயரால் அழைத்திருக்கலாம். இவ்விடத்தில் மாரியம்மனை நிறத்தோடு தொடர்புபடுத்தும் மற்றொரு பெயரும் இருப்பதை பார்க்கலாம். அதாவது கரியமாரியம்மன் கருமாரியம்மன் என்றோ சில இடங்களில் கரியகாளியம்மன் என்றோ அம்மன் பெயர்கள் உண்டு. பாப்பாத்தி மாரியம்மன் கருமாரியம்மன் என்ற இரண்டு பெயர்களும் இரண்டு மாரியம்மனை காட்டுகின்றன. மாரியம்மனின் நிறத்தில் கருப்பை உறுதிப்படுத்துகின்றன. பாப்பாத்தி என்பது வெளுப்பின் (சிவந்த) குறியீடு என்றால் கரிய என்பது கறுப்பின் குறியீடு. இவ்விடத்தில் நிறம் மட்டுமல்ல நிறத்தோடு தொடர்புடைய சாதியும் ஊடாடுகிறது. இதை அறிய மாரியம்மன் பற்றிய கதைக்குச் செல்ல வேண்டும்.

ஜமதக்கனி முனிவரின் மனைவி ரேணுகாம்பாள். கந்தர்வர்களால் அவள் களங்கப்பட்டால் என்று கருதிய ஜமதக்கனி தன் மகன் பரசுராமனை அழைத்து தாயை கொல்லும்படி ஆணையிட்டான். தான் கேட்கும் வரத்தை தந்தால் கொல்வதாகச் சொன்னான். முனிவர் ஒப்புக்கொண்டார். தாயின் தலையை வெட்டி விட்டு திரும்பிய பரசுராமன், தன் தாய் உயிரோடு வேண்டும் என்று வரம் கேட்டான். ஏற்கனவே ஒப்புதல் கொடுத்துவிட்டதால் அவன் கேட்ட வரத்திற்கு இணங்கினார் முனிவர்.

வெட்டப்பட்ட ரேணுகாம்மாளின் தலையையும் உடலையும் ஒட்டவைத்தால் உயிர் பெறுவாள் என்று கூறி அவனை அனுப்பினார். சென்று ஒட்ட வைத்த போது அவள் அவ்வாறே உயிர் பெற்று எழுந்தாள். ஒட்டவைத்து விட்ட பின்பு பார்த்தால் ரேணுகாம்பாள் தலை முன்பு வெட்டப்பட்ட தலையாக இல்லை. ஒரு பறையர் வகுப்பினன் தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு வெட்டியெறிந்த தலை அது. அதாவது பறையர் குலப் பெண்ணின் தலையையும் ரேணுகாம்பாள் என்ற பார்ப்பனப் பெண்ணின் உடலையும் ஒட்டவைத்து உயிர்பெற வைத்துவிட்டான். அதற்கு பின்பு அவள் மாரியம்மன் ஆகவும் ரேணுகாம்பாள் ஆகவும் வணங்கப்படுகிறாள். இக்கதை புராணத்தில் இருந்தாலும் வழக்காறுகளில் பகுதிக்கு ஏற்ப காலத்திற்கேற்ப மாறுபாடு கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. சில வழக்கங்களில் பறையர் என்பதற்கு பதில் அருந்ததியர் வண்ணார் பெண்ணின் தலையாகவும் இது சொல்லப்படுவதுண்டு. மேலும், இதே வடிவில் கதையாக சடங்காக கூத்தாக வழங்கிவருகிறது.

இக்கதையின்படி மாரியம்மனில் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் ரேணுகாம்பாள். மற்றொருவர் மாரியம்மன். ஒருவர் புராண பெண்தெய்வம். மற்றொருவர் உள்ளூர் வழக்கிற்கான பெண்தெய்வம். உள்ளூர் வழக்கை புராண மரபோடு இணைக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது இக்கதை உருவாகியிருக்கலாம். உள்ளூர் மாரியோடு புராண ரேணுகா இணைந்திருக்கலாம். இணைக்கப்பட்ட பிறகு இந்த கதை வடிவம் பரவியிருக்கிறது.

கதையின்படி ரேணுகாம்பாள் பார்ப்பனர். தலையையுடையவர் பறையர் குலப்பெண் . மாரியம்மனில் இரண்டு சாதியும் கலந்திருக்கிறது. காலப்போக்கில் இக்கதையில் பறையரே பார்ப்பனர் ஆகவும் பார்ப்பனரே பறையராகவும் மயங்கியிருக்கலாம். அதன்படி மாரியம்மனை பாப்பார மாரியம்மன், கருமாரியம்மன் என்று வழங்கும் வழக்கு உருவாகியிருக்கலாம். ஆனால், ஒன்று கலந்து இன்றைய பொது அடையாளம் உருவாவதற்கு முன்பு இரண்டும் வேறுவேறு அடையாளங்களில் வழங்கியிருக்கலாம். அந்தப் பண்பை இப்போதும் மங்கலாக பார்க்கலாம். எனவே இப்பெயர் சூட்டலை அடித்தள மக்களின் ஏக்கமாக மட்டும் பார்க்க முடியாது .

அதாவது கருமாரியம்மன் என்றழைக்கப்படும் இடங்களில் பாப்பார மாரியம்மன் பெயர் இருப்பதில்லை. பாப்பார மாரியம்மன் பெயர் இருக்கும் இடத்தில் கருமாரியம்மன் பெயர் இருப்பதில்லை. பாப்பார மாரியம்மன் என்ற பெயரில் அம்மனில் இணைந்த பார்ப்பன அடையாளத்திற்கும், கருமாரியம்மன் என்ற பெயர் அம்மனாக இருந்த பறையர் அடையாளத்திற்கும் உரியது.

அதனால்தான், தலை மட்டும் இருக்கும் சிலையை கருமாரியம்மன் என்கிறோம். கதையில் தலைதான் பறையர் பெண்ணுடையது. (சில கதை வடிவங்களில் தலை ரேணுகாம்மாளுடையது) சிலையின் நிறமும் வேறு வண்ணத்தை அடிக்காமல் கருப்பாகவே விடப்படுகிறது. எனினும் இந்த கதை கூறுகள் எல்லாம் இப்போது மங்கிவிட்டன. மக்கள் நினைவில் துல்லியமாக இருப்பதில்லை. பெயருக்கு முன் செயலையும், பண்பையும் ,கோயில் கொண்டிருக்கும் ஊரையும் கொண்டு விளங்கினாலும் (முத்துமாரியம்மன், ஏழைகாத்த மாரியம்மன், சமயபுர மாரியம்மன் ) மொத்தத்தில் அவள் மாரியம்மனாகவே அறியப்படுகிறாள். இந்தப் பின்னணியில்தான் பாப்பாத்தி என்ற பெயர் சாமியின் பெயராக மட்டுமே கருதப்பட்டு சூட்டப்பட்டுள்ளது . கருமாரியம்மன் பெயரிலேயே அதிகம் கோயில்கள் இருக்கின்றன. ஆனால் பெயரைப் பொறுத்தவரையில் பாப்பாத்தி என்ற பெயர் மட்டுமே உண்டு. கருமாரியம்மன் பெயரிலான கோயிலும் , பாப்பாத்தி என்ற பெயரும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் மத்தியிலேயே அதிகம் பார்க்க முடிகிறது. நிறத்தைக் குறிக்கும் கருமாரியம்மன் என்பதை பெயராக சூட்டாமல் பாப்பாத்தி என்ற பெயரை மட்டும் சூட்டியிருக்கிறார்கள்.

சேட்டு:

பாப்பாத்தி என்ற பெயரின் தொடர்ச்சியிலேயே சேட்டு என்ற பெயரும் இருக்கிறது. வட தமிழ்நாட்டில் ஆண்களுக்கு மட்டும் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பாப்பாத்தி என்ற பெண்பால் பெயருக்கு இணையாக ஆண்பால் பெயர் இல்லாதது போல், சேட்டு என்பதற்கு பெண்பால் பெயர் இல்லை. பாப்பாத்தி பெயர் போல புராணம் போன்ற மரபின் தொடர்பும் இப்பெயருக்கு இல்லை. மிகவும் பிற்காலப் பெயராக தமிழ்ச் சமூகத்தில் இது இடம் பெற்றுள்ளது. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பெருகியிருக்கிறது. 1989 ஆம் ஆண்டு செங்கம் தொகுதியில் ஜனதா தளம் சார்பாக வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவரின் பெயர் சேட்டு. இந்த பெயர் இங்கு எவ்வாறு உருவாகி இருக்க வேண்டும்?

சேட்டு என்றால் வடநாட்டு மார்வாடிகளைக் குறிக்கும் பெயராகவே நம் நினைவுக்கு வருகிறது.

இப்பெயர் வடக்கின் தொடர்பினால் முளைத்த பெயர் தான். ராஜஸ்தான் பகுதியில் இருந்து தமிழகத்திற்கு வணிகம் காரணமாக வந்து இன்றுவரை வாழ்ந்து வரும் மார்வாடிகளை குறிக்கும். ஆரம்பத்தில் சென்னையில் கால்கொண்டு படிப்படியாக தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வரை கால் பரவினர். இதன்படி இப்பெயர் உள்ளூர் அல்லாத சாதியோடு தொடர்புடைய பெயரே.

சேட்டுகள் சாதாரண தமிழர் நிறத்திலிருந்து நிறத்தால், பணத்தால், அதிகாரத்தால் மேலிருப்போரேயாவர். நேரடியாக சொல்வதென்றால் வளமையின் குறியீடு. எனவே இப்பெயர் சாதி பெயரில் தொடங்கினாலும் நாளடைவில் அதிலிருந்து மாறி ஒரு குறிப்பிட்ட நிலையை அல்லது தகுதியை குறிப்பதற்கான சொல்லாக மாறி இருக்கிறது. சேட்டு போல இருக்கணும் ,சேட்டு போல ஆயிடனும் என்பதே அத்தகுதிகள். இதை புரிந்து கொள்ள இன்னொரு சான்றையும் பார்க்கலாம். மார்வாடிகள் வடக்கே இருந்து தெற்கே வந்ததுபோல தமிழர்களும் தெற்கே இருந்து வடக்கே சென்றார்கள். ஒரு வருகை முதலீட்டை செலுத்தி வருவாயை பெருக்க, மற்றொரு பயணம் வாழ்வாதாரத்தை தேடிச் செல்வதாக அமைந்தது. இரண்டும் ஒன்றல்ல என்றாலும் இப்பெயர் இங்கு நிலைபெற்றதில் இரண்டுக்கும் இடமிருக்கிறது.

மும்பையில் சேட்டு என்ற பெயர் பரவலாக இருக்கிறது. பாய் ,சேட், அண்ணா போன்ற சொற்கள் சாதியாக இல்லாமல் தகுதியை குறிப்பதற்கானதாக இருக்கின்றன. இவ்வாறு இச்சொல் சாதிப் பெயரிலிருந்து உருவாகி இருந்தாலும் அதிலிருந்து விலகி குறியீட்டு அளவிலானதாக உறைந்துவிட்டது. சேட்டு என்பது முதலாளி போன்றோரைக் குறிக்கிறது. பாப்பாத்தி என்பது தலைமையை குறிப்பது போல சேட்டு உடமையை குறிக்கிறது. மும்பையில் ஒரு கடையை வாடகைக்கு விடும் சிறு முதலாளி கூட சேட்டு என்றாகி விடுவார். தமிழர்கள் வடக்கே சென்று நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன எனவே அங்கிருந்தும் இப்பெயர் வந்திருக்கலாம். எளிய மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு துரை, சாமி, ராஜா, கோடீஸ்வரன் போன்ற பெயர்களை சூட்டி இருக்கின்றனர். இல்லாதவர்கள் இப்படி இருக்க வேண்டும் என்பதற்காக இருப்பவர்களின் அடையாளங்களை சூடுவது ஒரு உளவியல். அவற்றில் பெயர் முதன்மையானது. இப்படி இருக்கணும் என்று தலைமைத்துவத் தகுதியை விரும்பி சேட்டு என்ற பெயரை சூட்டியுள்ளனர். இப்போதும் ஒருவரின் அதீத நிறத்தை, பவிசை சொல்லுவதற்காக ‘சேட்டுவூட்டு புள்ள மாதிரி’ என்று சொல்லும் வழக்கம் எளிய மக்களிடம் இருக்கிறது.

மக்களைப் பொறுத்தவரையில் தாங்கள் அடைய விரும்பும் தகுதியை குறிக்க, பொருளாதார மேம்பாட்டை அடைய மொழி போன்ற அடையாளங்களை தடைகளாக கொள்வது இல்லை என்றே சொல்லவேண்டும். நம் உள்ளூர் கோயில்களில் போலீஸ்காரன் காவல் காப்பது போன்ற சிலைகள் குதிரைகள், துப்பாக்கி போன்ற பாதுகாப்பு கவசங்கள் சிற்பங்களாக உண்டு. வெள்ளைக்காரன் கதை கூட இருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Art And Culture
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment