Advertisment

சி.எஸ். சேஷாத்ரி - மேதமையும் நடைமுறைத் தன்மையும் இயைந்த முரணியக்கம்

தான் உருவாக்கும் மாணவர்களின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் அதிர்வுகளை சென்னை கணித நிறுவனம் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கும். பலரது சந்தேகங்கள், ஊக்கமழித்தல்களை மீறி, அதை செங்கல் செங்கலாக கட்டி எழுப்பியதில் சேஷாத்ரியின் பங்களிப்பு வரலாற்றில் நிலைத்திருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mathematician cs seshadri, cs seshadri, சிஎஸ் சேஷாத்ரி, cs seshadri the paradox of wisdom and practicality, கணித மேதை, சிஎஸ் சேஷாத்ரி, cs seshadri tribute article, சென்னை கணிதவியல் நிறுவனம், chennai mathematical institute, cmi, tharamani cmi

ரோஸாவசந்த், கணிதவியலாளர்

Advertisment

உலகின் முக்கிய கணிதவியலாளர்களில் ஒருவரான சி. எஸ். சேஷாத்ரி ஜூலை, 17 அன்று இரவு இயற்கை எய்தினார். ஐம்பது ஆண்டுகளை கடந்த தொடர் பங்களிப்புகளின் மூலமும், பல திருப்பு முனை முடிவுகள் மூலமும் உலக கணித ஆய்வை பாதித்து வந்தவர், பல்வேறு விருதுகளை பெற்றவர், உலக கணித மேதைகளால் மதிக்கப் படுபவர், பல கணிதவியாலாளர்களை உருவாக்கியவர், பலருக்கு ஆதர்சமானவர். இதோடு கற்பிப்பதில் ஒரு ஆழமான மாற்றத்திற்கு அடிகோலி, இந்திய (கணிதம் சார்ந்த) கல்வித்துறையையும் தீவிரமாக பாதித்து வருபவர் சேஷாத்ரி. இந்த பாதிப்புகள் இன்னும் தீவிரமான விளைவுகளுடன் எதிர்காலத்தில் தொடரப் போகின்றன.

அவரது ஆய்வு சாதனைகளுக்கு ஆதாரமாக சுமார் 1700 பக்கங்களை தாண்டும் அவரது ஆய்வுத்தாள்களின் தொகுப்பு உள்ளது. அவரது கல்வித்துறைப் பங்களிப்பின் நிரூபணமாக, இந்தியாவின் எல்லா பகுதிகளில் இருந்தும், கணித ஆர்வம் கொண்ட மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற உழைக்கும் ஆதர்ச இடமாக, ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட சென்னை கணித நிறுவனம் (CMI) சிறுசேரியில் நிலை கொண்டிருக்கிறது.

காஞ்சிவரம் எஸ் சேஷாத்ரி 1932ம் ஆண்டு, பிப்ரவரி 29 அன்று பிறந்தார். லீப் இயர் எனப்படும் நான்கு வருடத்திற்கு ஒரு முறை தோன்றும் மிகுநாளாண்டில் மட்டுமே வருவது பிப்ரவரி 29. இதன் காரணமாக பிப்ரவரி 28 அவரது பிறந்த நாளாக கருதப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிக் கல்வியை முடித்து, சென்னை லயோலா கல்லூரியில் பிஏ பட்டத்திற்கு சேர்ந்தார். எல்லா சாதனையாளர்களுக்கும் தூண்டுதலான பொறிகள் இளம் வயதில் சிலரால் பற்ற வைக்கப்படுகிறது. சேஷாத்ரி தனது சிறு வயது கணித ஆர்வத்திற்கு தனது சொந்த மாமாவை காரணமாக சொல்கிறார். பின் லயோலோ கல்லூரியின் ஃபாதர் ரசீனை, நவீன கணிதம் சார்ந்த தன் இளவயது விழிப்புணர்வை உருவாக்கியதிலும், ஆய்வு மனப்பன்மையை விதைத்ததற்கும் காரணமாக சொல்கிறார்.

அதன்பின். மும்பையின் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் அவரது ஆய்வு வாழ்க்கை தொடங்குகிறது. கணிதத்தில் ஆய்வு என்பது அகவயமான சிந்தனைப் பயணம் மட்டுமின்றி, மற்றவர்களுடன் இணைந்து உரையாடி கூட்டுச் சிந்தனையை வளர்தெடுப்பதையும் அடக்கியது. அந்த வகையில் சேஷாத்ரி இறப்பதற்கு சில நாட்கள் முன்னால் வரை, கணிதம் சார்ந்த தீவிர உரையாடலில் இருந்ததாக அவருடன் விவாதித்துக் கொண்டிருந்தவர்கள் கூறுகிறார்கள்.

தூய கணிதத்தில் ஆய்வு என்பது மிக தனிமை தேவையுறும் வாழ்வை கோருகிறது. அதில் பெருஞ்சாதனைகள் செய்த மேதைகள் அந்நியப்பட்டு, நடைமுறை வாழ்வை கையாளத் தெரியாமல் நடந்து கொள்வது உலக வழமை. ஆனால், மேதைத்தனத்துடன் பெருஞ்சாதனைகள் செய்த சேஷாத்ரி, மிகுந்த அர்பணிப்பும், நடைமுறை யதார்த்தம் குறித்த புரிதலும், தொலை நோக்கும் கொண்ட செயலான ஒரு கல்வி நிறுவனத்தை அடித்தளதில் இருந்து தொடங்கி, அதன் இயக்குனர் பணியை தனது அறுபது வயதில் மேற்கொள்கிறார். இந்த நிறுவனம் ஏராளமான ஆரம்ப சிக்கல்களை சந்தித்து, அரசாங்கம் மற்றும் தனியார் பெரு நிறுவனங்களின் நிதி உதவியுடன் உருவாகி, பல்வேறு நெருக்கடிகளை கடந்து பரிணமித்து வளர்கிறது. இதையெல்லாம் நிர்வகிக்க, பல்வேறு தொடர்புகளை பேணி, அதிகார மையங்களுடன் உறவாடி காரியங்களை சாதிக்கும் ஒரு தொழில் முனைவோனின் திறமை இன்றியமையாததாகிறது. வேறு பலரின் உதவிகளுடன் இந்த நடைமுறை பணியையும் வெற்றிகரமாக சாதித்த வகையில், சேஷாத்ரியின் முற்றிலும் வேறான இரு ஆளுமைகள் வரலாற்றில் நிலை கொள்கிறது.

இன்றய நவீன அறிவியலின் கருத்தாக்கங்களை, அறிவியலின் மொழியான கணிதத்தின் துணையின்றி, கறாரக விளக்குவது கடினம்; ஆனாலும், குண்ட்ஸாகவாவது நாம் பேசிக்கொள்ளும் மொழியில், துறை சாராதவர்களுக்கு மேலோட்டமான சில அறிவியல் விளக்கங்களை தர இயலும். ஆனால், தூய கணிதத்தின் கருத்தாக்கங்களை, அதன் கறாரான சட்டகத்தில் கணிதத்தின் தர்க்க மொழியின்றி எதையும் விளக்குவது சாத்தியமில்லை. இதன் காரணமாக - Number theory என்ற எண்ணியல் தவிர- நவீன கணிதத்தில் நடப்பவை துறைசாராதவர்களுக்கு அர்த்தமற்ற வார்த்தைகளாகவே எஞ்சுகின்றன. என்னால் இயன்றவரையில், கணிதப் பெயர்சொற்கள் இன்றி சிலவற்றை விளக்க முயல்கிறேன். அவை எடுபடாமல் போகும் சாத்தியமும் உள்ளது.

சேஷாத்ரி ஒரு முன்னோடியாக, அடிப்படையானதும், புரட்சிகரமானதுமான பங்களிப்புகளை நிகழ்த்தியது அல்ஜிப்ராயிக் ஜாமிட்ரி என்கிற கணிதத் துறையில்; அது வடிவியல் சாத்தியங்களை அருவப்படுத்தும், மற்ற கணித கருத்தாக்கங்களையும் பொதுமைப்படுத்தி அந்த சட்டகத்தில் விவாதிக்கும், கணித மொழியின் ஒரு உச்ச சாத்தியம் எனலாம். நவீன கணிதம், கணங்களை அடிப்படையாக கொண்ட தர்க்கவியலால் ஒரு மொழியை உருவாக்கி, அந்த மொழியில் பல்வேறு வகைமைகளை வரையறுக்கிறது. உதாரணமாக அர்ஜீப்ரா என்கிற வார்த்தையை அனைவரும் பள்ளியில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், நவீன கணித்தத்தில் அல்ஜீப்ரா என குறிக்கப்படுவது ஒரு வகைமை. அதன் உறுப்புகள் அந்த வகைமையின் அமைப்பு வரையறைகளை பூர்த்தி செய்பவை. ஒரு வகைமையின் உறுப்புகளை, வேறு ஒரு வகைமையின் உறுப்புகளுடன், ஒன்றுக்கு கறாராக ஒன்று என்று, கண்டிப்பாக எல்லாவற்றையும் பொருத்திப் பார்க்கும் வழிமுறையை கண்டடைவது முக்கியமான கணித வினாவாகும். அவ்வினாவை தீர்ப்பது, வெடித்து கிளம்பும் தீவிர பாதிப்புகளை உருவாக்குவதுடன், பல புதிய துறைகளையும் உருவாக்குகிறது. பொதுவாக கணித ஆராய்ச்சி என்பது குறிப்பிட்ட துறைகளில் பங்களிப்பது என்பதாகவே பரவலாக இருக்க, ஒரு சில மேதைகளே, முற்றிலும் வேறான இரு துறைகளை, சற்றும் எதிர்பாராத தொடர்புகளை நிறுவி, ஒரே கருத்தாக்கங்களை வேறு வேறு வகைமைகளுக்கான சட்டகத்தில் வெளிபடுத்தி புதிய பாதைகளை அமைக்கின்றனர்.

சேஷாத்ரி - நரசிம்மன் தேற்றம், கிளைகள் கொண்ட ஒரு சரவெடியைப் போல, பல்வேறு பாதிப்புகளை அவ்வாறு ஏற்படுத்தியது. இந்த பங்களிப்பிற்கு, கணிதத்தின் நோபல் என்று அழைக்கப்படும் ஃபீல்ட்ஸ் விருது அன்று அளிக்கப்பட நியாயங்கள் இருந்தன. ஆனால், அதன் முக்கியத்துவம் தாமதமாக உணரப்பட்டது. இது தவிர அல்ஜீப்ராயிய வடிவியலின் முன்னோடியாக சேஷாத்ரி உருவாக்கிய பல திருப்புமுனை முடிவுகள், அடிமரமாக நின்று, அந்த துறையின் பல்வேறு கிளைகளை உருவாக்கியது. பிரான்சிலும், மீண்டும் மும்பை டாடா அடிப்படை ஆராய்சி நிறுவனத்திலும் இருந்தவாறு இந்த முடிவுகளை அவர் தன் சக ஆய்வாளர்களுடன் நிறுவினார். இவ்வாறாக மும்பையின் டாடா அடிப்படை ஆய்வு நிறுவனத்தை ஒரு முன்னோடி நிறுவனமாக உருவாக்கியதில் முக்கிய பங்காற்றினார்.

பின் தனிப்பட்ட காரணங்களால் சென்னை வந்த சேஷாத்ரி தரமணியில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் (மேட் சயின்ஸ்) சேர்ந்தார். மேதைகள் புழங்கும் அறிவுத்துறையும் அகங்காரம் சார்ந்த சர்ச்சைகளுக்கு விதி விலக்கானது அல்ல. ஆனால் அதன் விளைவுகள் படைப்பூக்கத்துடன், அறிவுலகிற்கு மேலும் பயன்படும் வகையில் வெளிபடும் என்பதற்கு, சேஷாத்ரிக்கும் ஜார்ஜ் சுதர்சனுக்குமான மோதல் ஒரு வரலாற்று சாட்சி.

அன்றைய பத்திரிகைகளில் வெளிவந்த சர்ச்சையான சம்பவங்களுக்கு பின், சேஷாத்ரி கணித அறிவியல் நிறுவனத்திலிருந்து விலகி, தனக்கேயான கல்வி நிறுவனத்தை, ஸ்பிக் நிறுவனத்தை சேர்ந்த முத்தய்யாவின் நிதி உதவியுடன் தொடங்குகிறார். ஆராம்பத்தில் ஸ்பிக் ஃபவுண்டேஷன் என்று அழைக்கப்பட்ட இந்த நிறுவனம், பின்னர், ஸ்பிக்கின் உதவிகள் நெருக்கடிகளுக்கு உள்ளான பின், 1998இல் சென்னை கணித நிறுவனமாக பெயர் பெற்று, இந்திய கல்வித்துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது. இதை புரிந்து கொள்ள இந்திய பல்கலை கழகங்களுக்கும் இந்திய உயரடுக்கு கல்வி நிறுவனங்களுக்கும் நிலவும் வித்தியாசங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய பல்கலைக்கழகங்களில், மற்ற துறைகளில் ஆய்வுகள் நிகழ்ந்தாலும், கணிதத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட எதுவுமே நிகழவில்லை என்று சொல்லும் அளவிற்கு - சில விதி விலக்குகள் தவிர - போலியான ஆய்வுகளே நிகழ்கின்றன. இது ஜப்பான், அமேரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கும், இந்தியாவிற்குமான முக்கிய வேறுபாடு ஆகும். இந்தியாவில் பொருட்படுத்தத் தக்க தீவிரமான கணித ஆய்வுகள் டாடா ஆய்வு நிறுவனம், மேட்சயின்ஸ், இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI) போன்ற உயரடுக்கு நிறுவனங்களிலேயே நிகழ்ந்தன. முன்னேறிய நாடுகளிலோ, இதை விடவும் சிறந்த ஆய்வுகள் அந்தந்த பல்கலை கழகங்களிலேயே நிகழ்ந்தன. இந்நிலையில், இளங்கலை, முதுகலை பயிலும் இந்திய மாணவர்கள் ஆராய்ச்சியாளர்களால் அன்றி, வெறும் ஆசிரியத் தகுதி மட்டுமே கொண்டவர்களால் கற்பிக்கப்படுகின்றனர். இதன் இன்னொரு பக்கமாக, இந்திய உயரடுக்கு கல்வி நிறுவனங்களில் ஆய்வு செய்பவர்கள், ஆய்வு செய்வதை மட்டுமே பணியாக கொண்டு, கற்பிக்கும் பணியை தவிர்த்து வந்தனர்.

இந்த யதார்த்தத்தில், இந்தியாவின் முதல் தர ஆய்வாளர்களால், இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் கற்பிக்கபடும் சூழலை, அவர்கள் இயல்பாக துறை வல்லுனர்களுடன் விவாதிக்கும் சூழலை சென்னை கணித நிறுவனம் உருவாக்கியது. இதற்கு முன்பு அத்தகைய ஒரு சூழல் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் மட்டுமே இருந்தது. ஆனால், அவை புள்ளியியலும், கணிதமும் கலந்த ஒரு பாடத் திட்டமாக இருந்தது. அமேரிக்கா போன்ற நாடுகளில், ஃபீல்ட்ஸ் பதக்கம் வென்ற கணித மேதைகள், பல்கலை கழகங்களில் ஆரம்ப நிலை மாணவர்களுக்கு அடைப்படை பாடங்களை போதிப்பது, CMI தொடங்க தனக்கு உந்துதலாக இருந்ததாக சேஷாத்ரி கூறுகிறார்.

கணிதமும், கணினியியலும், பின்னர் இயற்பியலும் கலந்த, முதல் தர ஆராய்சியாளர்களால் கற்பிக்கபடுவதாக சென்னை கணித நிறுவனம் (CMI) திகழ்கிறது. இன்று CMIயில் நுழைவதையே லட்சியமாக கொண்ட மாணவர்கள் இந்திய அளவில் ஆயிரக்கணக்கில் வருடந்தோறும் உருவாகி வருகின்றனர். ஐஐடி போன்ற உயர்தர தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றும், அதை விடுத்து, CMIஐ தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் கடந்த பல ஆண்டுகளாக பெருகி வருகின்றனர்.

ஹார்வர்ட் போன்ற உலகின் முக்கிய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடக் கூடிய தரத்துடன் சென்னை கணித நிறுவனத்தில் கல்வி கற்பிக்கப்படுகிறது. அதில் பயின்ற மாணர்கள் உலகின் ஆகச் சிறந்த பல்கலை கழகங்களிலும், ஆராய்சி மையங்களிலும், பெரு நிறுவனங்களிலும் பணியில் அமர்ந்துள்ளனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழத்தில் CMI குறித்த அறிதல் சிறிய அளவில் கூட இல்லை. பத்து வருடங்கள் முன்னால் “நான் சென்னை மேதமேடிகல் இன்ஸ்டிடியூட்டில் வேலை பாக்கறேன்” என்று சொன்னால், அது ஏதோ பரிட்சையில் ஃபெயிலான மாணவர்களுக்கான கோச்சிங் செண்டர் என்று நினைத்து என்னிடம் பேசிக் கொண்டிருந்தனர். இன்று அந்த நிலை சற்று மாறியிருந்தாலும், கல்கத்தா போன்ற நகரத்தின் கல்லூரிகள் அனைத்திலும், மாணவர்களுக்கு ஒரு ஆதர்சமாக CMI இருப்பதை போன்ற நிலை இங்கே வர இன்னும் பல ஆண்டுகளாகலாம். இதற்கு கணிதம், இயற்பியல் போன்ற ஆதார பாடங்களை விட, பொறியியல் படிப்பின் மீது இங்கு நிலவும் மோகம்தான் முக்கிய காரணம்.

ஆனால், தான் உருவாக்கும் மாணவர்களின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் அதிர்வுகளை சென்னை கணித நிறுவனம் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கும். பலரது சந்தேகங்கள், ஊக்கமழித்தல்களை மீறி, அதை செங்கல் செங்கலாக கட்டி எழுப்பியதில் சேஷாத்ரியின் பங்களிப்பு வரலாற்றில் நிலைத்திருக்கும். அதே நேரம் எல்லா இந்திய இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமத்துவம் சார்ந்த செயல்பாட்டில், CMI பயணிக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் உள்ளது. அதற்கான கொள்கைகளும், இட ஒதுக்கீடும் கொள்கையளவில் நடைமுறையில் இருந்தாலும், நிஜமான பிரதிநிதித்துவம் அமைய, இன்னும் பல அணுகுமுறை மாற்றங்களை எதிர்காலம் நிர்பந்திக்க வேண்டியுள்ளது.

ஒரு கணித மேதை, உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடக்கூடிய தரத்துடன் ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்கி தன் தொலை நோக்கில் வெற்றி பெற்றவர் என்பதோடு, அவரது முற்றிலும் மறுபக்கமாக இருப்பது சேஷாத்ரி ஒரு சிறந்த கர்நாடக இசை பாடகர் என்பது. அவர் பாடப்போகிறார் என்கிற ஒரே காரணத்திற்காக விழா நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் பாடுவதை நேரில் ஒருமுறை கேட்டு சிறந்த பாடகர் என்று உணர்ந்திருக்கிறேன்.

அவருடைய விவாதிக்கும் குணத்திற்கு எடுத்துக்காட்டாக இரண்டு சம்பவங்களை என்னால் கூற முடியும். தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் நடக்கும் கணித ஆய்வுகள் பெரும்பான்மை டுபாக்கூரானது என்பதை சொல்லியிருந்தேன். அவ்வாறான முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் CMIக்கு விண்ணப்பித்திருந்தார். அவரை உரை நிகழ்ந்த அழைத்து, அதற்கு எல்லோருமே கூடியிருந்தனர். நான் மதிய உணவு நேரத்தில் அந்த மாணவருடன் பேசி நடக்கவிருக்கும் பேரவலத்தை முன்னரே உணர்ந்து கொண்டேன். அவர் பேச துவங்கிய ஐந்து நிமிடங்களிலேயே அதை கேட்டுக் கொண்டிருப்பதன் அபத்தம் எல்லோருக்கும் விளங்கிவிட்டது. வந்தவரை அவமானப்படுத்த கூடாது என்றே அனைவரும் பொறுமையுடன் அமர்ந்திருந்தோம். ஆனால், சேஷாத்ரி மட்டும் அரை மணி கழிந்த பின்னும் அந்த மாணவரிடம் சில கேள்விகளை தொடர்ந்து கேட்டு, பொறுமையுடன் விளக்கங்களை பெற்றுக் கொண்டிருந்தார். இந்த உரையாடும் தன்மையை எப்படி எடுத்துக் கொள்வது என்பது எனக்கு மிக குழப்பமாகவே இன்றும் உள்ளது.

சென்ற வருடம், அமேரிக்க அரசியல் கோட்பாட்டுப் பேராசிரியர் ஒருவர் மார்க்சியம் குறித்து இரண்டு மாத பாடம் ஒன்றை நடத்தினார். சேஷாத்ரி மார்க்சிய சார்புடையவர் அல்லர். ஆனாலும், எல்லா வகுப்புகளிலும் அமர்ந்திருந்ததுடன், எல்லா விவாதங்களிலும் ஆர்வமாக கலந்துகொண்டார். சில மார்க்சிய எதிர்ப்பாளர்கள் போல விதண்டாவாதம் எதையும் அவர் செய்து கொண்டிருக்காமல், மார்சிய கோட்பாடுகளை புரிந்து கொள்ளவே முயற்சித்தார். ஒரே ஒரு வகுப்பில் (முதலீட்டியத்தால் நிர்ணயிக்கப்படும்) அறிவியல் குறித்த பல மார்க்சிய விமர்சனங்களின் போது மட்டும், அதை மிக தீவிரமாக எதிர்த்து வாதாடினார். எல்லாம் அறிவியல் வெளிச்சத்தில் மட்டுமே பார்க்க வேண்டியது என்ற அறிவியல் மீதான அவரது தீவிர நம்பிக்கையை அது வெளிபடுத்தியது.

ஆதர்ச மேதையாக, கல்வியாளராக, விவாதிக்கும் வாதிடும் கலாச்சாரம் கொண்ட சக பயணியாக இருந்த சேஷாத்ரிக்கு என் அஞ்சலிகள்.

(இந்த கட்டுரையை எழுதியவர் ரோஸாவசந்த் ஶ்ரீனிவாசன் வசந்த் என்ற பெயரில் அறியப்படுபவர். சென்னை கணித நிறுவனத்தில் பணிபுரிகிறார்.)

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment