மருத்துவக் கல்வி: மோடி அரசின் முரண்பாடு

மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க, தரத்தை உறுதி செய்ய, இடங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த என அதிக அதிகாரம் பொருந்திய அமைப்பு இந்திய மருத்துவ கவுன்சில்.

இரா.குமார்

தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டுமானால், மருத்துவக்கல்வியில் சேருவோரின் தரமும் உயர்த்தப்பட வேண்டும் என்று சொல்லி நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது மோடி அரசு. ஆனால் இப்போது, மருத்துவக் கல்லூரிகளின் தரத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகள் சுதந்திரமாக செயல்படலாம் என்ற நிலையை உருவாக்கும் மசோதாவை நிறைவேற்றத் துடிக்கிறது அதே மோடி அரசு.

இந்திய மருத்துவக் கல்வியை கட்டுப்படுத்த, வழிகாட்ட, நெறிமுறைப்படுத்த இருந்த அமைப்புதான் இந்திய மருத்துவக் கவுன்சில். மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க, தரத்தை உறுதி செய்ய, இடங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த என அதிக அதிகாரம் பொருந்திய அமைப்பு இது.

இந்த அமைப்பின் நிர்வாகிகளையும் தலைவரையும் டாக்டர்கள் தேர்ந்தெடுகத்தனர். இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் கேதான் தேசாய் ஊழல் செய்து, சி.பி.ஐ.யிடம் சிக்கி, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து, இந்திய மருத்துவக்கவுன்சில் கலைக்கப்பட்டது. இப்போது இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, “தேசிய மருத்துவ ஆணையம்” அமைக்கப்படும்போது, அதன் தலைவரை மத்திய அரசு நியமிக்கும். இதன் நிர்வாகக் குழுவில் மிகக் குறைந்த எண்ணிகையில்தான் டாக்டர்கள் இடம் பெறுவார்கள். பெரும்பான்மையானவர்கள் அரசால்தான் நியமிக்கப்படுவார்கள்.

அரசு நினைத்தால்தான் இனி எதுவும் நடக்கும் என்பதற்கான வழி தான் இது. மருத்துவக் கல்வியில் அரசு தலையிட்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

தனியார் மருத்துவக் கல்லூரியை இதுவரை இந்திய மருத்துவக் கவுன்சில்தான் தொடர்ந்து ஆய்வு செய்து தரச்சான்றிதழ் வழங்கி வந்தது. மருத்துவக் கல்லூரியின் தரம் குறைவாக இருந்தால், அந்த ஆண்டு மருத்துவ சேர்க்கை நிறுத்தப்படும். (தமிழகத்தில் கடந்த ஆண்டு இது போல் சில கல்லூரிகளின் சேர்க்கை நிறுத்தப்பட்டது).

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டால், இது போன்ற தரச் சோதனை நடக்காது. அப்படி நடந்தாலும் அது தனியார் அமைப்பின் மூலம் நடத்தப்பட்டு அறிக்கை வாங்கப்படும். தரம் குறைவாக இருந்தாலும் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படாது. அபராதம் மட்டுமே விதிக்கப்படும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களின் கட்டண விவகாரங்களில் மாத்திரமே தேசிய மருத்துவ ஆணையம் தலையிடும். சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தடை இருக்காது.

ஏற்கனவே தனியார் மருத்துவக் கல்லூரிகள் மருத்துவ சேர்க்கைக்கு “நன்கொடை” என்ற பெயரில் திருட்டுத்தனமாகப் பெற்று வந்தத் தொகையை அரசு அங்கீகாரத்துடன் பெறுவதற்கான வழியை “நீட்” தேர்வு மூலம் திறந்து விட்டார் மோடி.

இப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள “நீட்” நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்படும். நீட்டில் தேறி, மருத்துவக் கல்வியை படித்து, முடித்து வெளியில் வந்தால், மருத்துவராகப் பணியாற்ற ஒரு தகுதி தேர்வு “Exit exam” எழுத வேண்டும். அதுவே முதுநிலைக் கல்விக்கு சேரவும் பயன்படுத்தப்படும்.

ஆனால், தகுதித் தேர்வு எழுதாமலே மருத்துவராகப் பணியாற்ற சிலருக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு வழங்கப்படுகிறது. நிர்வாகக் குழுவில் அரசால் நியமிக்கப்படுபவர்களே அதிகம் இருப்பார்கள் என்பதால், அரசியல் சிபாரிசு காரணமக, தகுதித் தேர்வு எழுதாமலே மருத்துவராகப் பணியாற்ற சிலருக்கு அனுமதி வழங்கப்படலாம்.

மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்துவதாகச் சொல்ல்லி, நீட், எக்சிட் தேர்வுகள் மூலம் தகுதியான மருத்துவத் துறை மாணவர்கள் ஒருபுறம் கசக்கிப் பிழியப்படுகின்றனர். ஆனால், இன்னொருபுறமோ, அலோபதி மருத்தவம் படிக்காதவர்களும் அலோபதி சிகிச்சை அளிக்க வழி செய்கிறது அரசு. ஆம்; ஆயுர்வேதம், ஹோமியோபதி படித்தவர்களுக்கு, நீட், எக்சிட் தேர்வுகள் எல்லாம் கிடையாது. அதுமட்டுமல்ல, ஆயுர்வேதம், ஹோமியோபதி படித்தவர்களுக்கு, அலோபதி மருத்துவத் துறையின் கதவுகளை எளிதாகத் திறந்துவிட மோடி அரசு துடிக்கிறது.

இதற்கான தனி மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இதன்படி, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலும், தேசிய மருத்துவ ஆணையமும் கூடி ஒரு தேர்வை (Bridge exam) நடத்தும். அதை எழுதி விட்டால், ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவர்கள், நோயாளிக்கு அலோபதி மருந்துகொடுத்து சிகிச்சை அளிக்கலாம்.

இரண்டு கவுன்சிலிலும் அரசால் நியமிக்கப்பட்டவர்கள் தான் இருப்பார்கள், மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள். அரசு விருப்பப்படி தேர்வு நடக்கும். அரசு விருப்பப்படி மருத்துவத் துறை கந்தல் கோலமாகும்.

பாபா ராம்தேவ் ஆயுர்வேதக் கல்லூரி நடத்துவார். அதில் படித்து விட்டு bridge exam எழுதி விட்டு, மருத்துவம் பார்க்க ஆட்கள் வருவார்கள். மருத்துவத் துறையை இப்படி ஒரு மோசமான நிலைக்குத் தள்ளும் இந்த மசோதவுகு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக எம்.பி.க்கள் சிலரே எதிர்ப்பு தெரிவித்தனர். டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, மத்திய அரசு ஒரு அடி பின்வாங்கியுள்ளது. இந்த மசோதாவை, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக, குழுவின் பரிந்துரை கோரப்பட்டுள்ளது. நிலைக்க்குழுவின் பரிந்துரை பெறப்பட்டு, மசோதா நிறைவேற்றப்படுமானால், மருத்துவத்துறை அரசியல் மயமாகும். சீர்கெட்டுப்போகும் என்பதை சொல்லவே தேவையில்லை.

×Close
×Close