கழகம்... கலகம்! மு.க.அழகிரியை மீண்டும் சேர்ப்பது லாபமா?

மு.க.அழகிரி விஷயத்தில் முக்கியமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவரது முடிவு, திமுக.வுக்கு சாதகமாக மாறுமா?

ரவீந்திரன் துரைசாமி

மு.க.அழகிரி என்றாலே மறைந்த திமுக தலைவரின் முரட்டு மகனாக ஒரு பிம்பம் நமது மனதில் ஊறியிருக்கிறது. பெரிதாக அரசியல் வியூகம் இல்லாதவராகவும் அவரை அடையாளப்படுத்தி வைத்திருக்கிறார்கள். தனது தந்தை கருணாநிதியுடன் நேரடியாக சென்று இவர் தகறாறு செய்ததாக, கருணாநிதியே அளித்த ஒரு பேட்டி அதற்கு அழிக்க முடியாத சாட்சியாகவும் அமைந்தது.

ஆனால் அரசியலை ஊன்றிக் கவனிப்பவர்கள், மு.க.அழகிரியை அப்படி வெகு சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. ஆட்சி-அதிகாரம் கையில் இருந்த போதுதான் அழகிரி கள அரசியலில் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் என்கிற விமர்சனம் வெகு இயல்பாக பொதுத் தளத்தில் பரவியிருக்கிறது.

அது எவ்வளவு தவறான விமர்சனம்? என்பதை பிறகு சொல்கிறேன்! அதற்கு முன்பாக அழகிரியின் அரசியல் வியூகத்திற்கு அண்மை உதாரணம், ‘மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்கத் தயார்’ என ஒரு ‘யார்க்கரை’ இரு தினங்களுக்கு முன்பு வீசியிருப்பதை குறிப்பிடலாம்! அதே பேட்டியில், ‘கலைஞர் இருந்தபோதே நான் ஒருபோதும் பதவியை கேட்கவில்லை’ என்றும் கூறியிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக, ‘எனது ஒரே தலைவர் கலைஞர்தான்’ என கூறி வந்த அழகிரி, இப்போது பல்டி அடித்துவிட்டதாக சிலர் நினைக்கலாம்! அதையே கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்! கருணாநிதி இருந்தவரை, திமுக.வில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் உதிர்த்த வார்த்தைகள்தான் அவை!

கருணாநிதி மரணமடைந்த சூழலில், திமுக பொதுக்குழு மு.க.ஸ்டாலினை தலைவராக தேர்வு செய்துவிட்ட நிலையில், எதார்த்த சூழலை உணர்ந்து தனது தம்பியின் தலைமையை ஏற்கத் தயார் என அழகிரி கூறியிருக்கிறார். சரி, எதற்காக அழகிரி இதை சொல்ல வேண்டும்?

அதில்தான் சூட்சுமம் இருக்கிறது! திமுக நிர்வாகிகளில் தொண்ணூற்றி ஒன்பதே முக்கால் சதவீதம் பேரும் மு.க.ஸ்டாலின் பக்கம்தான் இருக்கிறார்கள். மு.க.அழகிரி குறி வைப்பதோ தொண்டர்களை! குறிப்பாக செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி நடத்தவிருக்கும் பேரணியை வெற்றிகரமாக நடத்திக் காட்ட வேண்டும். தனது திட்டப்படி தொண்டர்கள் கூட்டத்தை திரட்ட வேண்டும்.

அப்படியானால் திமுக.வுக்கு எதிரியாக தன்னை வெளிப்படுத்தக் கூடாது. பதவி ஆசை இல்லாதவனான, சாதாரணத் தொண்டராக இருந்து பணியாற்றத் தயாராக இருப்பவனாக தன்னை முன்னிறுத்த வேண்டும். ‘தலைவரின் மூத்த மகன், தனது தம்பியின் கீழ் இருந்து பணியாற்றத் தயார் என அறிவித்திருக்கிறார். அவரை சேர்த்தால் என்ன தப்பு?’ என கருணாநிதியின் அனுதாபிகளை பேச வைக்க வேண்டும்.

ஆ.கே.நகரில் 3-வது இடத்திற்கு சென்று அவமானப்பட்ட நாம் (திமுக.வினர்), திருப்பரங்குன்றத்தில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் அல்லது நடிகர் விஷாலுக்கு கீழே போய்விடக்கூடாது. அதற்கு மு.க.அழகிரியின் உதவியை நாம் பெற்றுக் கொள்வதில் என்ன தப்பு?

ஜெயலலிதாவை குமாரசாமி விடுதலை செய்ததும் பட்டாசு வெடித்த கருப்பசாமி பாண்டியனை கட்சிக்குள் சேர்க்கும்போது தலைவரின் மகனுக்கு அந்த உரிமை இல்லையா? இக்கட்டான காலகட்டத்தில் தேமுதிக.வுக்கு சென்ற முல்லைவேந்தனை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும் நமது கட்சி, ‘பதவியே வேண்டாம்’ என கூறிய பிறகும் அழகிரியை ஏன் ஒதுக்க வேண்டும்?

இப்படியெல்லாம் தொண்டர்கள் மத்தியில் அனுதாபம் பெறும் வியூகம்தான், அழகிரியின் அண்மை கால பேட்டிகள்! திமுக பொதுக்குழு மு.க.ஸ்டாலினை தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து கேட்டதற்கு, பழைய அழகிரியாக இருந்தால் போட்டுத் தாக்கியிருப்பார். ஆனால் இப்போது, ‘நான் திமுக.வில் இல்லை. நான் எப்படி கருத்து சொல்ல முடியும்?’ என பதுங்குகிறார்.

ஆக, தொண்டர்கள் மத்தியில் அனுதாபம் பெற்று மு.க.ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுப்பதுதான் அழகிரியின் வியூகம்! சரி.. இதை மு.க.ஸ்டாலின் அலட்சியப்படுத்தினால் என்ன நடக்கும்?

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள் கூப்பிடும் தொலைவில் இருக்கின்றன. இவற்றில் திருப்பரங்குன்றம் நிலைமை, திமுக.வுக்கு மகிழ்ச்சி தரத்தக்க வகையில் இல்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சட்டமன்றத் தொகுதியில் பாஜக அணியில் போட்டியிட்ட வைகோவை விட திமுக குறைவான வாக்குகள் பெற்றதை மறந்துவிடக்கூடாது.

இங்கு சமூக ரீதியான சில அணி திரட்டல்கள் மூலமாக மட்டுமே திமுக தனது வாக்குகளை அதிகரிக்க முடியும். மற்றபடி திமுக.வுக்கான பாசிட்டிவ் வாக்குகள் இங்கு குறைவு! இதற்கு கடந்த கால புள்ளிவிவரங்கள் பலவற்றை உதாரணமாக குறிப்பிட முடியும்.

எனவே மதுரை வட்டார சமூகச் சூழலை நன்கு உணர்ந்த மு.க.அழகிரியால் இங்கு சில ஜித்து வேலைகளை செய்ய முடியும். இங்குதான், ‘ஆட்சியில் இருந்தால்தான் அழகிரியால் எதையும் செய்ய முடியும்!’ என்கிற விமர்சனத்திற்கு பதில் கூற விரும்புகிறேன்.

2001-ல் தேர்தலில் போட்டியிட முடியாமல் ஆன ஜெயலலிதா, பின்னர் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அரசியல் ரீதியாக வலுவாக இருந்த ஜெயலலிதாவை, அதிமுக கோட்டையில் திமுக எதிர்கொண்ட தேர்தல் அது!

அந்தத் தொகுதியில் அப்போது கணிசமான வாக்கு வங்கியை வைத்திருந்த மதிமுக.வும், புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமியுமே அங்கு களம் இறங்கினார்கள். இவர்கள் இருவரும் பிரிக்கிற வாக்குகள் திமுக.வுக்கு நெருக்கடியை கொடுக்கும், திமுக 3-வது இடத்திற்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் வந்தன.

ஆனால் அதிமுக.வுக்கு வாக்களிக்கும் சமூகத்திற்கு எதிரான நிலையில் இருந்த சமூகங்களை ஒருங்கிணைக்க அழகிரி எடுத்துக்கொண்ட முயற்சி அப்போது பெரும் பலன் கொடுத்தது. மதிமுக.வும், டாக்டர் கிருஷ்ணசாமியும் முந்தைய தேர்தல்களில் பெற்ற வாக்குகளைவிட மிகக் குறைவாக பெற்றனர். அதிமுக.வுக்கு வலிமையான எதிர்க்கட்சி திமுக.தான் என்பதை அதிமுக கோட்டையில் அப்போது அழகிரி நிரூபித்தார்.

ஆண்டிப்பட்டியில் அப்போது நடந்த தேர்தலையும், அண்மையில் கடந்து போன ஆர்.கே.நகர் தேர்தலையும் சற்றே ஒப்பிட்டுப் பாருங்கள்! ஜெயலலிதா இருந்தபோது வலிமையான எதிர்க்கட்சியாக தன்னை நிரூபித்த திமுக, டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் டெப்பாசிட் இழந்திருக்கிறது.

ஒருவேளை அழகிரியை புறக்கணித்து, திருப்பரங்குன்றத்தில் திமுக பெரும் தோல்வியை பெற்றால் அழகிரி மீதான அனுதாபம் தொண்டர்கள் மத்தியில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அது ஸ்டாலினுக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கலாம்!

சரி, திருவாரூர் மட்டும் திமுக.வுக்கு ‘கேக்வாக்’ போல இருக்குமா? 1962-ல் தமிழகத்தில் 50 தொகுதிகளை திமுக ஜெயித்திருந்தபோது, திருவாரூர் தொகுதியில் அந்தக் கட்சி 4-வது இடம்! காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சுதந்திராக் கட்சி ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில்தான் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரை உள்ளடக்கிய திமுக வந்தது.

இதிலிருந்து நான் சொல்ல வருவது, அங்கும் திமுக.வுக்கு பாரம்பரிய அல்லது பாசிட்டிவ் வாக்குகள் கிடையாது. 1967-ல் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சர் ஆனபிறகு தனது ஊரில் கட்சியை வளர்க்கிறார். எப்படி வாண்டையார் குடும்பத்திற்கு, ஆண்டி அம்பலம் குடும்பத்திற்கு என சில தொகுதிகளில் செல்வாக்கு இருக்கிறதோ அதைவிட மிக அதிகமாக கருணாநிதி குடும்பத்திற்கு திருவாரூர் தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது.

மீண்டும் சொல்கிறேன்… அது கட்சி வாக்கு அல்ல! கருணாநிதி குடும்பத்திற்கான வாக்கு! அதனால்தான் கடந்த தேர்தலிலும் கருணாநிதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அங்கு ஜெயிக்கிறார். ஒருவேளை திருவாரூரில் அழகிரியே நேரடியாக தேர்தலில் போட்டியிட்டால்? திருப்பரங்குன்றத்திலும் தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை களம் இறக்கினால்? இரு தொகுதிகளிலுமே திமுக நெருக்கடிக்கு உள்ளாகும் என்பது மறுக்க முடியாத உண்மை!

ஆர்.கே.நகரில் டெப்பாசிட் இழந்த திமுக, திருப்பரங்குன்றம்-திருவாரூரில் வெற்றி பெறாத பட்சத்தில் ஸ்டாலின் தலைமை மீது விமர்சனங்களை தவிர்க்க முடியாது. குறிப்பாக திருப்பரங்குன்றத்தில் 3-வது அல்லது 4-வது இடத்திற்கு போய்விட்டால் பெரும் விமர்சனங்கள் எழும்!

புதிதாக தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கும் மு.க.ஸ்டாலின், வெற்றியுடன் தனது தேர்தல் கணக்கைத் தொடங்கவே விரும்புவார். இந்தப் புள்ளியில்தான் மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் அவர் சேர்ப்பாரா? என்கிற கேள்வியும் நீண்டு கொண்டிருக்கிறது.

சரி, அழகிரியை இணைத்துவிட்டால், திமுக.வின் மொத்தப் பிரச்னைகளுக்கும் தீர்வு வந்துவிடுமா? என்றால், அதுவும் மு.க.ஸ்டாலின் தலைமையை பலவீனப்படுத்துகிற அம்சம்தான்! இப்போது பதவி வேண்டாம் என்கிற அழகிரி, எத்தனை நாட்களுக்கு அமைதியாக இருப்பார் என்கிற கேள்வியும் இருக்கிறார்.

ஒருவேளை அழகிரியை இணைக்காமல், திருப்பரங்குன்றம்-திருவாரூரில் திமுக ஜெயித்துவிட்டால்? அழகிரி விவகாரம் இதோடு ஓய்ந்துவிடும்! எனவே அழகிரி விஷயத்தில் மிக முக்கியமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவரது முடிவு, திமுக.வுக்கு சாதகமாக மாறும், பாதகமாக மாறுமா? என்பதை காலம் சொல்லும்.

(கட்டுரையாளர், வழக்கறிஞர் –  நேர்மறையான சமூக நீதியை முன்னிறுத்தும் செயல்பாட்டாளர் – அரசியல் விமர்சகர்)

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close