மு.க.ஸ்டாலின் : ஆய்வும், அவநம்பிக்கையும்!

மேடையில் ஒற்றை நாற்காலியில் அவர்மட்டும் அமர்ந்து கூட்டத்தை நடத்துகிறார். இதனால் 'ஆண் செயலலிதா’ என்னும் அவப்பெயரைத்தான் சம்பாதித்து வருகிறார்.

குவியாடி

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான அதிமுக பிளவுபட்டுள்ளது; தலைமை தள்ளாட்டத்தில் உள்ளது. இச்சூழ்நிலையில் வலிமையான எதிர்க்கட்சியான திமுக வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் எனக் கருத்து பரப்பப்படுகிறது. ஆனால், திமுகவின் வெற்றி என்பது கேள்விக் குறியே!

கலைஞர் கருணாநிதி செயல்படும் நிலையில் இருந்திருந்தால் இந்நேரம் ஆட்சி அமைத்திருப்பார் என்கின்றனர் சிலர். தாலினுக்கு (ஸ்டாலின்) எதிராகவும் திறமையற்றவர் என்று கருதும் வகையிலும்தான் இவ்வாறு தெரிவிக்கின்றனர். ஆனால், உண்மை இதுவாயின், சூதுவாதிற்கும் அரசியல் பேரங்களுக்கும் இடமின்றிக் கட்சியை நடத்திச் செல்கிறார் என்று தாலினைப் பாராட்டத்தான் செய்ய வேண்டும். குறுக்கு வழியிலான வெற்றியை விட நேர்வழியிலான தோல்வி பாராட்டிற்குரியதுதானே!

கலைஞர் கருணாநிதி செயல்படும் நிலையில் இருந்திருந்தாலும் ஆட்சி மாற்றம் நடந்திருக்காது. ஏனெனில் இப்பொழுது மத்திய அரசின் கைப்பாவையாகவோ கூட்டாளியாவோ கலைஞர் கருணாநிதி இல்லை. கட்சி மாறுவதால் ஆட்சி கலையும் என்ற உண்மை தெரிந்த அதிமுகவினர் கட்சி மாறிப் பதவி நலன்களை இழக்க விரும்பவில்லை. ஆட்சி கலைந்த பின்னரும் சட்டமன்ற உறுப்பினர்களாக இல்லாத கட்சிமாறிகளால் பயனில்லை என்பதால் திமுகவிலும் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்காது. முன்னரே அங்கே கோலோச்சி வருபவர்களைத் தாண்டி இவர்களால் பதவிகளையோ தொகுதிகளையோ பெறுவது அரிதாகும். இந்தச் சூழலில் ஆட்சியைக் கவிழ்க்கும் வகையில் யாரும் கட்சி மாற மாட்டார்கள்.

தேர்தல் நெருங்கும் நேரமாயின், கட்சி மாறி ஆதாயம் அடையச் சிலர் விரும்புவர். ஆனால், அதுவரை இப்போதைய ஆட்சி நீடிக்குமா என்று தெரியவில்லை. ஒருவேளை பாசகவுடன் இணக்கம் ஏற்படுத்திக் கொண்டு அதிமுக ஆட்சியைக் கலைத்துத் திமுக கைப்பற்றினால், அடுத்த தேர்தலில் தோல்வியைத் தழுவ இதுவே காரணமாக அமைந்துவிடும்.

திமுகவின் தோல்விகளுக்குக் காரணம் முன்பு திமுகவில் ஈடுபாடுகொண்டவர்கள் ஒதுங்கி இருப்பதுதான். குறிப்பிட்ட விகித மக்கள் ஆதரவு திமுகவிற்கு நிலையாக இருந்தாலும் தமிழ்நலம் நாடும் திமுக அன்பர்களும் திமுகவின் கொள்கைச் சறுக்கல்களால் மனம் வருந்தும் தொண்டர்களும் உடன்பாடான போக்கைக் கைவிட்டமையே திமுகவின் வெற்றி வாய்ப்புகளைத் தடுக்கின்றது.

தாலின் மேற்கொள்ளும் பயணங்களும் ஆய்வுகளும் வெற்றிப்பாதைக்கு வழிவகுக்காதா என்று கேட்கலாம். அவர் நடத்தும் கூட்டங்களில் மேடையில் ஒற்றை நாற்காலியில் அவர்மட்டும் அமர்ந்து கூட்டத்தை நடத்துகிறார். இதனால் ‘ஆண் செயலலிதா’ என்னும் அவப்பெயரைத்தான் சம்பாதித்து வருகிறார். வழக்கமான இரண்டாம் நிலைத் தலைவர்கள் அல்லது மூத்த தலைவர்கள் அருகே அமர்ந்திருப்பின் நடுநிலையான ஆய்வு நடைபெறாது என அவர்களை விலக்கி வைத்ததாக விளக்கம் அளிக்கப்படுகிறது. இன்று புறக்கணிக்கப்படுபவர்களால்தான் நேற்று கட்சி வளர்ந்தது என்பதை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். எனினும் எச்சார்புமின்றி ஆய்வு நடத்த எண்ணுவதும் பாராட்டிற்குரியதுதான். அப்படியானால் அவர் கூட்டம் நடைபெறும் ஊரில் உள்ள மூத்த உறுப்பினர்கள் இருவரையும் இளைய உறுப்பினர்கள் இருவரையும் தன் பக்கம் வைத்துக்கொண்டு ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். இதனால் உழைக்கும் தொண்டர்களுக்கு உற்சாகம் ஏற்படும்.

அதிமுக தலைவியை இழந்து பாசகவால் துண்டாடப்படும் சூழலிலும் ஒருவர்கூடத் திமுக பக்கம் வரவில்லை. எனவே, அவர்களை இழுக்கும் முயற்சியில் காலத்தைக் கழித்து ஏமாற்றமுற வேண்டா.

ஊழல் என்னும் களங்கம் திமுகவின் மீது மட்டும் படிந்திருக்க வில்லை. எனவே, அக்கண்ணோட்டத்தில் பார்க்கத் தேவையில்லை. ஆனால், மக்களைக் கவரும் நலப்பணிகளில்தான் திமுக ஈடுபட வேண்டும். ஆனால், மக்களுக்கு திமுக மீது நம்பிக்கை வரவில்லை.

திமுக செய்யும் தவறுகளைத்தான் அதிமுகவும் செய்கின்றது. எனினும் அதிமுகவின் தவறுகளை அதன் இயல்பாகவும் திமுகவின் தவறுகளை நம்பிக்கை மோசடியாகவும் மக்கள் கருதுகின்றனர். இந்த அவநம்பிக்கைதான் திமுக மீதான வெறுப்பு வளர்வதற்குக் காரணமாகும்.

இந்திரா காந்தி நெருக்கடிக்காலக்கொடுமைகளுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், ஈழத்தில் இனப்படுகொலையின்பொழுது கை கட்டி வாய் பொத்திக் காங்கிரசிற்கு ஊழியம் செய்து உடந்தையாக இருந்த தலைவர் அதனை நிலையாமை என்றார். தாய்மண்ணிற்கு உரிய ஈழத்தமிழர்களுக்குச் சிங்களத்தமிழர் எனப் புதுப்பெயர் சூட்டி இனப்பெயர் அழிப்பில் ஈடுபட்டார்.

தமிழ்ச்செம்மொழித் தன்மைக்கு மத்திய அரசின் ஏற்பினைப் பெற்றுத்தந்த பெருமைக்குரிய செயல் செய்தவர், அதனை வளர்ப்பதற்குரிய பணிகளில் ஈடுபடவில்லை. அதன் அமைப்பினைச் சிதைத்து செம்மொழி நிறுவனம் வளரவிடாமல் செய்தார்.

தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என்று நாட்டின் உயர்நீதிமன்றத்திற்குப் பெயர் சூட்டும் நிலையைக் கூடஅவரால் கொண்டுவர இயலவில்லை.

தமிழ், தமிழ் என்று சொல்வி வளர்ந்த கட்சியினர் ஆங்கிலப்பள்ளிகளை வளர்த்தனர். இதனால் ஆட்சியும் ஆங்கிலப்பள்ளிக்குத் தாயாக அமைந்தது.

சில தீர்மானங்கள், மடல்கள் ஆகியவற்றுடன் தமிழ் காக்கும் கடமை முடிந்து விட்டதாக எண்ணியதால் திமுக மக்கள் வெறுப்பிற்கு ஆளாயிற்று. இதனால், திமுக தலைவர்களின் உரைகளால் வளர்ந்த தமிழன்பர்கள் வேறு கட்சிகளுக்குச் சென்றனர்.

தமிழ்த்தேசிய அமைப்புகளில் உள்ள அன்பர்களும் நாம்தமிழர் கட்சியின் தம்பிகளும் திமுகவின் தமிழ்ப்புறக்கணிப்புச் செயல்களால்தான் அங்கே உள்ளனர்.

நேற்று ஈழத்தைக் கேலி செய்த அதிமுக இன்று ஈழத்தை ஆதரிப்பதால் மக்கள் அதனை நம்புகின்றனர். ஆனால், நேற்று ஈழத்திற்காகப் போராடிய திமுக இன்று அதனை அழிப்பவர்களுடன் இணைவதால் மக்கள் அதனை வெறுக்கின்றனர்.

அதிமுகவில் எளிய நிலையில் உள்ளவர்களும் பொறுப்பிற்கு வர முடிகிறது. எளியவர்களும் தொடர்புகொள்ளக் கூடிய தலைமை இருப்பினும் ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்னும் போக்கு திமுகவில் உள்ளதால், எளியவர் உயர்வு பகற்கனவாகிறது. எனவே அதிமுகவினர் தலைமையிடம் கொண்டுள்ள ஈர்ப்பு பொது மக்களாலும் விரும்பப்படுகிறது.

அதிமுக அரசிற்கு எதிரான போராட்டங்களின் பயன்கள் மக்கள் நல அமைப்புகளுக்குச் செல்கிறதே தவிர, திமுகவிற்குச் செல்லவில்லை. மாறாக இந்த அவலங்களுக்கு இதுவரை அமைதி காத்த திமுகவும் ஒருவகைக் காரணம் என்ற எண்ணம்தான மக்களிடம் உள்ளது.

இன்றைய ஆளுங்கட்சி மீதான வெறுப்பினும் மிகுதியாக நேற்றைய ஆளுங்கட்சியான திமுகமீது உள்ளதால், வரும் தேர்தலில் வெற்றி என்பது அதற்குக் கேள்விக் குறியே!

 

 

×Close
×Close